தோற்பை
என்னைப் பற்றி வாசகர்களில் எவருக்காவது ஞாபகம் இருக்குமா என்று எனக்குத் தெரியாது; ஆனால், என்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ளப் பெரிதாக ஏதுமில்லை. ஆ(தலி)னால், ஆரம்ப எழுத்தாளன் என்றோ அல்லது குறைந்த பட்சம், எழுத்தாளன் ஆகி அச்சிலோ அல்லது வாசகர் மனதிலோ பதிவுசெய்து கொள்ளாத எழுத்தாளன் என்று அறிமுகப்படுத்திக்கொள்கின்றது வசதியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதற்காக, நான் எழுத்தாளன் என்பது எவருக்குமே தெரியாது என்றோ, என் படைப்புகள் எவராலும் வாசிக்கப்படுவதில்லை என்றோ அர்த்தப்படாது; என் மனைவி எனக்காக வாசிப்பதுண்டு; என்னைப் போலவே தம் எழுத்துகளுக்கு அங்கீகாரம் தேடும் சக ஆரம்பப்படைப்பாளிகள் இரண்டு மூன்று பேர் வாசித்துவிட்டுக் கருத்துக் கூறியதுண்டு; நான்தான் இதை எழுதியது என்பதைத் தெரிந்தோ தெரியாமலே ஓரிரண்டு சிறு பத்திரிகைகளிலே வாசித்துவிட்டு என்னிடம், "வேண்டுமென்றே புரியாமல் எழுத முயலும் குழந்தை" என்று சலித்துக்கொள்ளும் சிறுவட்ட இலக்கியப்படைப்பாளிகள்-திறனாய்வாளர்கள் வாசித்ததுண்டு; நானும்கூட ஏன் என் எழுத்து புரிந்துகொள்ளப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ள திரும்பத்திரும்ப வாசித்துக்கொள்வதுண்டு. அதனால், என் எழுத்துக்கள் வாசிக்கப்பட்டவையும் மேலும் மேலும் மீள்வாசிப்புக்கு உட்பட்டவையும் என்று நான் தயக்கமின்றிக் கூறலாம் என்று எண்ணுகின்றேன்.
இனி நான் எவ்வளவு தூரம் ஆரம்ப எழுத்தாளன் என்ற பதத்துக்குப் பொருந்தமாவேன் என்று எனக்குத் தெரியாது. நான் எழுதத்தொடங்கியது, என் எட்டுவயதிலே என்று நினைக்கின்றேன். நாற்பது வயதுக் கடவுள் நம்பிக்கை அற்ற ஆரம்ப எழுத்தாளர்களும்கூட, எட்டுவயதிலே கடவுளின் கருணையைப் பற்றியும் அதில் எனக்கு இவ்வளவு பங்கு வேண்டும் என்றும் பேரம் பேசி, இருபது வயதிலே காதல்கவிதை எழுதுகின்றவனின் மனவளர்ச்சியுடன் எழுதக்கூடும். அகில எழுத்துத் தரத்தினைப் பற்றி எண்ணம் காணாது பார்த்தால், அதுவும் எழுத்தென ஆகக்கூடும். அப்போது எழுதப்பட்டவற்றை நான் சேகரித்து வைத்துக்கொள்ள முயன்றதுண்டு. எழுத்தென்ற அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென்றால், ஒரு பத்திரிகையிலே பதிவு செய்யப்படவேண்டும் என்ற உணர்வினை, எனக்குத் தெரிந்து அப்போது எழுத்தாளராக முனைந்தவர்கள் செய்துகொண்டிருந்தது எனக்குத் தெரியும்; அதன் காரணமாக, ஏதோ பூவினது பெயரிலே, என்னை ஆசிரியராகக் கொண்டு முதல்முதலிலே ஒரு கையெழுத்துப்பத்திரிகை தொடங்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அது எழுத்தின் தரத்திலும் விட எண்ணிக்கை முக்கியமானது என்றமாதிரி, புரிந்துகொண்ட வயது. அதற்கு என்னைக் குற்றம் சொல்லிவிடமுடியாது என்று இன்றைக்கும் கருதுகின்றேன். ஆனால், என் அந்த எழுத்துக்களைக் கொண்ட பத்திரிகைகளை எல்லாம் என் இருபத்துமூன்று வயதிற்குப் பிறகு பாதுகாத்துவைக்கமுடியாததற்கு என் கருத்திலே மாற்றத்தை ஏற்படுத்திய அந்த இளம் பெட்டிக்கடை எழுத்தாளரையே நான் குற்றம் சுமத்தமுடியும்; அவரும் அவர்வட்டத்துக்கு அப்பால் அதிகம் எழுதினார் என்று கூறமுடியாது; சொல்லப்போனால், எழுதமறுத்துவிட்டார் என்றே கூறவேண்டும்; அதனால், அறியப்படாதவராகவே போய்விட்டார்; அவரினை முதலிற் சந்தித்த அன்றிரவு, ஆவணப்படுத்திய என் கையெழுத்துப்பிரதிகளைக் கிழித்து ஒவ்வொன்றாய் எரித்தேன். என் ஒரு நாட்குளிரையேனும் தணித்து உடலைச் சூடேற்ற என் எழுத்துக்கள் எனக்குப் பயனாக இருந்தனவே என்ற அளவிலே எனக்குத் திருப்தி உண்டு. அறியப்படாத அவர், அறியப்படமுன்னரும் அதிகம் படைக்கமுன்னரும் அழிந்துபோனதுபற்றி எனக்கும் வேறு சில இன்னமும் எழுத்துமுயற்சிப்பாளருக்கும் வருத்தம் இன்னமும் நிறையவே உண்டு; அவருக்கு இருக்கும்காலத்திலேயே அப்படிப்பட்ட கவலை இருக்கவில்லை;. என்னுடைய எழுத்துக்களை எரித்த மறுநாளிலிருந்து அவரினதும் அவர் அறிமுகப்படுத்திய எழுத்துக்களினையும் தேடித் தேடி வாசிப்பதே எம்மிற் சிலருக்குத் தொழிலாகிப் போனது. நாங்கள் வாசிப்பது அதிகரிக்க அதிகரிக்க, எழுதுவதுகுறைந்து கொண்டே போனது. ஆனால், தீவிரமாக் வாசிப்பது, எழுதுவதிலும்விட மிகவும் அதிகப்படியான படைப்புத்தன்மை வாய்ந்தது என்ற மெய் உணர்வு மெல்ல மெல்ல உள்ளே விழுதூன்றிப் படியத்தொடங்கியது.
பதினைந்து வயதுமுதல் இருபத்துமூன்று வயதுவரை நான் எழுதியவற்றினை எழுத, நான் தேவையில்லையென்பதையும் அதற்காகவே இரவும் பகலும் ஆலைகளாகத் தொழிற்படும் கைநேர்த்திகொள் எழுத்தாளர்கள் இருக்கின்றார்கள் என்பதையும் நான் அறிந்து கொண்டதும் அப்போதுதான். அதை வாசிக்கக்கூடி நான் தேவையில்லை, அதற்கென்றே இன்னும் எத்தனையோ பேர் வரிசையிலே எழுத்துக்கள் பதித்த மை காயும்வரைக்கும் காத்திரப் பொறுமையில்லாத வாசகர்கள் இருக்கின்றார்கள் என்பதையும் அறிந்தபோது, இன்னமும் எனது வாசிப்புக்கான எல்லைகளை சாவகசமாக துண்டங்களாக்கும் கோடு வகுத்துக்கொள்ளக்கூடியதாக இருந்தது. ஆனால், அதற்காக துவிச்சக்கரவண்டிதிருத்துமிடங்கள், முடி அலங்கரிக்கும் நிலையங்கள் போன்ற இடங்களிலே கையிலே கிடைக்கும் எழுத்துக்களைத் தூக்கியெறியும் வழக்கம் என்னிடம் இருக்கவில்லை. இன்றைக்கும் கூட அது பழக்கப்படவில்லை. கருத்துக்களை எங்கிருந்தும் பெறலாம் என்று நினைத்துக்கொண்டேன். கூடவே, நான் அர்த்தமற்றவைகளாக எண்ணிக்கொள்ளும் எழுத்துக்களின் பரிச்சயம் இருப்பது எனக்கு நிரம்பிய அர்த்தத்தினைத் தரக்கூடும் என்பதினால் அவற்றினை வாசிக்கமுயன்றது என் இளம் எழுத்தாள வழிகாட்டிக்குப் பிடித்தமானதாக இருக்கவில்லை.
நாங்கள் பெருமளவு விடயங்களிலே கருத்தொன்றி இருந்தாலும் சிறிய அபிப்பிராயத்துகளுக்காக பொறிபட்டு முரண்டிக்கொண்டோம்; எழுத்தாளனின் கருத்துத்தான் முக்கியமே ஒழிய அது சொல்லப்படும் இடம் எது என்பதில்லை என்பது என் வாதம்; அவர் மாறாக, "நீ எழுதுகின்ற இடத்துக்கேற்ப, உன்னைப் பற்றிய சுய அடையாளத்தை இழந்துவிடுவாய்" என்று கொண்டு நிற்பார். நான், "பேசுகின்ற வாசகரோடு அவரின் எதிர்பார்ப்புக்கேற்ப ஊடாடி கருத்தைப் பதியவைக்கின்றதே மகிழ்வூட்டும் கலையின் நோக்கு" என்பதுவாகப் பிடிவாதம் பிடிப்பேன்; "வாசகனுக்காக தன் எழுத்திலே இறங்கிப்போகும் படைப்பாளி, தரகுக்கூலிக்குச் சந்தையிலே மாடு விற்க மட்டுமே உதவக்கூடும்" என்று மறுத்துகொண்டிருப்பார்.
அவரின் மனவுறுதி எனக்கு இல்லையே என்று நான் சிலவேளைகளில் இன்றும் வருத்தம் கொள்வதுண்டு... குறிப்பாக, தமக்கு இத்தனை நாட்களுக்குள்ளே இந்த விடயம்பற்றி ஓர் ஆக்கம் வேண்டும் என்கிற பத்திரிகாசாரியர்களிடம், ஏனோ தானோ என்று இருக்கும் இடத்திற்கேற்ப கட்டிடம் எழுப்பும் கொத்தனார் போல அந்தக்காலங்களிலே நான் எழுதிக்கொடுத்த படைப்புகளைப் பற்றி எனக்குப் பெருமையில்லைத்தான்; ஆனால், அவை மட்டும்தான், இன்று என்னை எழுத்தாளன் என்று ஓரிரண்டுபேர் அறிந்துவைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றால், அதற்கும் காரணமாகும். எனக்கு எழுதவேண்டும் என்று தோன்றி எழுதப்பட்ட எழுத்துக்களை என்னைத் தவிர, எவருமே அங்கீகரித்ததில்லை; ஆனால், அப்படியான எழுத்துக்களை ஆசிரியர்களை வற்புறுத்தியும் பதிப்பிக்கவேண்டாம் என்று என் குருவானவர் இறப்பதற்குக் கொஞ்ச நாட்கள் முன்னர், பிரசுரிக்கப்படுவதற்கேற்ப நுட்பமும் கலைநுணுக்கமும் இல்லை என்று திரும்பி வந்த ஒரு கதையைப் பற்றி நான் வருத்தப்பட்டுக்கொண்டபோது கூறியிருக்கின்றார். அவை, ஒன்றிலே உண்மையிலே அளவுக்கதிகமாகத் தன்வயப்பட்டு சுயமகிழ்வுந்தலுக்காக எழுதப்பட்டிருக்க வேண்டும், அல்லது எமது இலக்கியவட்டத்திலே அதைப் பற்றிய புரிதலுக்கும் நயத்தலுக்குமான பக்குவம் பூரணப்படவில்லை என்று எனக்கு ஆறுதல் கூறினார். ஆனால், ஒருகாலத்திலே அவை புரிதலுக்குள்ளாகும்போதோ அல்லது அவ்வாறு காண்பிக்கப்படும்போதோ, அது அந்த நேரத்திலே எழுத்தாளன் என்ற அளவிலோ வேறெந்தக் காரணத்துக்காகவோ எனக்கு இருக்கும் பெயருக்குத்தானா என்பதிலே அவதானமாக இருக்கவேண்டும் என்றும் எச்சரிக்கைப்படுத்தினார்.என் எழுத்துக்கள், ஹிட்லரின் ஓவியமாக, மிகப்பெறுமதியுடன் எப்போதாவது விற்கப்படுவதிலே எனக்கு ஆசையுண்டா என்று அவரின் முப்பத்தைந்து வயதிலே கேட்டபோது, வெட்கத்துடனும், அதே வேளையிலே பதட்டத்துடனும் உடனடியே நான் என் இருபத்து ஏழாம் வயதிலே மறுத்தேன்.
இன்றும் எனது பெட்டி ஒன்றின் அடியிலே உறங்கும் அவரது பல எழுத்துக்கள் அவரின் பத்துவருட கால இறப்புக்குப் பிறகும் இன்னமும் பிரசுரிக்கப்படாமலே கிடக்கின்றன. இன்றைக்கு, அவரின் வாழ்காலத்திலே பதிப்பிக்கப்பட்ட இருபதற்கும் குறைவான சிறுகதைகளும் அதன் இருமடங்கு எண்ணிக்கை அளவினாலான கவிதைகளும் மீள மீள வாசிக்கப்பட்டு, உதாரணப்படைப்புகளாகச் சிலாகிக்கப்படும்போது, பெட்டிக்குட் தூங்கும் தன் எழுத்தின் திருப்தியாக அவர் கருதிய படைப்புகள் என் கண்களுக்கு, வான் கோவின் 'ஐரிஸ்கள்' ஓவியமாக மட்டும்தான் தெரிந்தன. அவர் தன் காதை வெட்டிக்கொள்ளவில்லை; ஆனால், தினம் ஒரு பெட்டிக்கடையின் வருமானத்தினை நம்பி, குடும்பத்தையும் புத்தகங்களையும் எழுத்தையும் வளர்ந்துவந்தது அதை விட தன்னைத் தானே வெட்டிக்கொள்ளும் செயலாகும் என்று சொன்னபோது, நான் புத்திசாலித்தனமாக, மாவட்ட நீர்வழங்குசபையிலே ஆரம்பப் பொறியியலாளனாகச் சேர்ந்திருந்தேன். வருடத்திலே எப்போதாவது ஒருமுறை என்னிடம் அவரின் மனைவியோ தாயாரோ தயங்கித் தயங்கிக் கடன் கேட்கும்போது, எனக்கு மிகவும் வேதனையாக இருக்கும்; நானே அவரின் தேவையை அறிந்து கொண்டு உதவி செய்யுமளவுக்கு, தன்னை என்னிடம் கூட வெளிப்படையாக வைத்துக் கொள்ளாத மனிதராக இருக்கின்றாரே என்று. கடன்கேட்கும் அவரின் குடும்ப உறுப்பினர்கூட, அவருக்குத் தெரியக்கூடாது என்பதை வற்புறுத்திவிடுவார்கள்; பிழைக்கத்தெரியாதவன் என்று எல்லா மனைவிகளும் நண்பர்களும் கருதும் ஆரம்பஎழுத்தாளராகவே அவரினைப் பற்றிய படிமம் இருக்கின்றதே என்று எனக்கு மிக மனவருத்தம்; கடைசி நேரத்திலே, அவரின் சிறுநீரகக்கோளாறு காரணமாக, செயற்கைமுறையிலே உடற்கழிநீர் வெளியேற்றம் அவருக்கு நிகழ்ந்துகொண்டிருந்தபோது, வைத்தியசாலையில் அவரைச் சந்திக்க நான் சென்றிருந்தபோது, ஏதோ சிறுசெலவுக்குப் பணம் நான்தான் தந்திருந்தேன் என்கின்றதை அவரின் சிறுமகள் அவரிடம் பதட்டத்திலே நான் இருக்கும்போதே கூறிவிட்டாள். அவர் என்னைக் கொஞ்ச நேரம் உற்றுப்பார்த்தார்; மகளைத் திட்டவுமில்லை; பின்னர், கட்டிலுக்கு அருகிலே உணவுப்பொருட்கள், நோயாளிபற்றிய வைத்தியவிபரங்கள் வைக்கும் மேடையுடன் கூடிய அலுமாரியின் மேல் இழுப்பறையைத் திறந்து ஒரு பழைய தோற்பையிலிருந்து எடுத்து, "இவை பதிப்பதற்கல்ல" என்று தந்தவைதான் அவரின்இந்த எழுத்துக்கள். எரிப்பதற்கு என்று நம்பிக் கொடுக்கப்பட்டவையே, பதிக்கப்பட்டு எரிக்கவென்றே எழுதிய எழுத்தாளனுக்கு அழியாப்புகழ் கொடுத்ததைக் கேள்விப்பட்டவன்தான் நான். ஆனாலும், எனக்கு அவற்றினை புரியமறுத்த மீள்வாசிப்பாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் வாழும்போது அவரை ஏற்றுக்கொள்ளாத வாசகர்களுக்கும் சில்லறை சேர்க்கக்கொடுப்பது, அவருக்கு அவமரியாதை என்றே இப்போதுக்குக் கருதிக்கொள்கின்றேன்.
அவரின் அந்த எழுத்துக்களின் எல்லாக் கருத்துக்களுடனுமோ அல்லது தரப்பட்ட வடிவங்களுடனுமோ அல்லது சொல்லப்பட்ட நோக்குகளுடனுமோ எனக்கு முற்றிலும் உடன்பாடு என்று சொல்லமுடியாது; சொல்லப்போனால், சிலவற்றினைப் புரிந்துகொள்ள இன்னமும் எனக்குத் தளர்ச்சி தரும் சில இரவுநேரங்களிலே கட்டிலின் தலைமாட்டருகு விளக்கு வெளிச்சத்திலே நான் போராட வேண்டித்தான் இருக்கின்றது; பெரும்பாலும், அத்தகைய முயற்சிகளின்பின்னர், என் இயலாமையிலே தோல்வியுற்று மேலும் சோர்வுடனேயே விளக்கை அணைக்கின்றேன். ஆனாலும், அவற்றினை நான் எந்த மொழியிலென்றாலும் அம்மொழிக்குரிய அதியுயர் இலக்கியப்பரிசு பெற்ற எழுத்திலும் விட உயர்வானதாகக் கருதுகின்றேன்; அந்த எழுத்துக்கள், என்னை அவர் கண்ணியப்படுத்தியதைக் காட்டி பெருமை செய்த எழுத்துக்கள் என்பது ஒரு காரணமென்றாலும்கூட, அது இரண்டாம் பட்சமே. முதன்மை பெறுவது, அந்த எழுத்துக்கள் எதுவுமே வாசிப்போர் தொகைக்காகத் தன்னை இழந்து போக எழுதப்பட்டவை அல்ல என்பதிலும் தன்னை உணர்த்திக்கொள்ள வாசகரைப் புறக்கணித்த எழுத்துக்கள் என்கின்றதுதான். எத்தனையோ கலைத்துலாக்கோல்களிலே அவை தரமற்றவையாகக் கூட இருக்கலாம்; ஆனால், இலக்கியத்தராசுகளின் மறுபக்கப்பாத்திர எடைக்கற்களின் திணிவுகளைக் கருதி அவர் எழுதவில்லை என்பதாக எனக்குத் துல்லியமாகத் தெரிந்தது. கருத்தை வெளிப்படுத்த, இடத்திற்கேற்ற நடைபோடுவது பற்றி எனக்கும் அவருக்கும் ஒருமுறை பெரியவாக்குவாதமே அவரின் நண்ப எழுத்தாளர் ஒருவரின் வேற்றுநாட்டுப்பத்திரிகையிலே வெளிவந்த என் ஒரு சிறுகதைக்கான வாசகரொருவரின் பதிவுசெய்யப்பட்ட எதிர்வினையின்போது ஏற்பட்டுவிட்டது.
அது, ஒரு புத்தகம் அதை ஒரு பழையபுத்தகநிலையத்திலிருந்து, அதை வாசித்தே ஆகவேண்டுமென்று, பல இடங்களிலே தேடி வாங்கிய பல்கலைக்கழகமாணவனோடு எத்தனை வருடகாலம் வாசிக்கப்படாமலே அவன் போகுமிடமெல்லாம் கூடவே எடுத்துச் செல்லப்படுகின்றது என்பதைப் பற்றிய ஒரு கதை. அவன் அதை ஒவ்வொருநாளும் இன்றிரவு வாசிப்போம் என்று தன்னருகிலே வைத்துக்கொண்டு, கடைசியிலே ஏதோ ஒரு காரணத்தினாலே வாசிக்காமலே விட்டுவிடுவான். புத்தகம் ஒருநாளைக்கு அவனின் நீர்க்கோப்பையைத் தாங்கும் தட்டாகின்றது; மறுநாள் அதன் மூடியாகின்றது; பின்னொருநாள், காதிற்கு அருகிலே பறக்கும் நுளம்பை அடித்துக்கொள்ளப் பயன்படுகின்றது; பல தடவை தன் ஆத்திரத்தினைக் காட்ட விசிறி எறியக்கூடப் பயன்படுகின்றது; இப்படியாக அதன் நிறமும் உருவும் சிதைந்துகொண்டே போகின்றது; இறுதியிலே, அவனுக்குத் திருமணம் ஆகின்றது. ஒரு நாள் மனைவி எதேச்சையாக அதை அவனின் தலைக்கண்மையிலே இருக்கும் புத்தகங்களுக்கிடையே கண்டெடுத்து, கணவனிடம் அதே நூலின் புதிய பிரதி ஒன்றை வாங்கிக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு, அதன் தோற்றம் காரணமாக வெளியே எறிந்துவிடுகின்றாள். அன்றிரவு, மனைவிக்கு அண்மையிலே படுத்திருக்கும் கணவனுக்கு ஏதோ மிக அண்மித்த ஆத்மா ஒன்றை இழந்துவிட்டதான சங்கடமான உணர்வு தோன்றுகின்றது. கடைசியிலே அந்தப் புத்தகம் அதனை வாங்கியதற்காக, தனக்கு எந்தெந்த நேரங்களிலே எவ்வாறு பயன் தந்திருக்கின்றது என்பதை நினைத்துக்கொண்டு, எந்தப்படைப்புக்கும் அதன் படைப்பாளியின் நோக்குக்கு அப்பாலும் அவன் அறியாத பல பயன்பாடுகள் உண்டு என்று எண்ணிக்கொண்டு நித்திரையாகிப் போய்விடுகின்றான்.
நான் அவருக்குக் காட்டமுன்பே இந்தக்கதையை வேறு இரு பத்திரிகைகளுக்கு அனுப்பி, ஓரிடத்திலிருந்து, அது பற்றிய முடிவேதும் வராதும், மற்றைய இடத்திலிருந்து கதைக்கு வலுவான மையக்கருவில்லை என்றும் ஒரு சிறுகதைக்குரிய தொடக்கம், வளர்ச்சி, முடிவு என்ற அமைப்புருவிலே வாசகர் ஈடுபாடுகொள்ளக்கூடிய அளவுக்கு மாறுதல் செய்து அனுப்பும்பட்சத்து, தாங்கள் மீள்பரிசீலனை செய்வதாகவும் கூறியிருந்தார்கள். அதன் பின்னரே, இந்தக்கதையில் எப்படி மாற்றங்கள் செய்யலாம் என்பதை அறிந்துகொள்ளும்முகமாக, அவரிடம் கதையைக் காட்டி ஆலோசனை கேட்டேன். அவர் பொதுவிலே இன்னோர் எழுத்தாளனின் குழந்தைக்கு 'இப்படி சிகையலங்காலரம் செய், கண்ணுக்கு இந்த நீளத்திற்கும் இந்தத்தடிப்பத்துக்கும் மைதீட்டு' என்று சொல்கின்ற ஆளில்லை; சொல்லப்போனால், அப்படியான அத்துமீறிய மூக்குநுழைப்பினை மிகவும் வன்மத்துடன் வெறுக்கின்றவர். எதையும் தன் ஈடுபாட்டுக்குரியபடி இவ்வாறே இருக்கின்றது, ஆனால், அது தன் தனிப்பட்ட அபிப்பிராயம் மட்டுமே என்றும் தான் தவறாகக்கூட இருக்கலாம் என்றும் சொல்லிக் கொள்கின்றனர். அதே நேரத்திலே, அவர் மிக இலகுவிலே ஒரு படைப்பினைப் பார்த்தவுடன், பிடித்திருக்கின்றது என்று சொல்கின்றவரல்ல. அப்படிப்பட்ட அவர் உற்சாகத்துடன், "எந்த ஆசிரிய மடையன் திருத்தம் சொன்னான்?" என்று கேட்டார். நான் பத்திரிகையின் பெயரைச் சொன்னேன். "மடைப்பயலே, உன்னை யார் அந்த மாட்டுத்தரகனிடம் பல்லைக்கொண்டு போய்க் காட்டச்சொன்னார்கள்?" என்று ஆத்திரமும் வேடிக்கையாகவும் கத்தினார். அவர் ஒருநாளூம் எவரையும் இழிவாகப் பெயர் சொல்லி அழைக்காத ஆள்; மடைப்பயல் என்று என்னை அன்றைக்கு அவர் அழைத்தபோது, ஏற்பட்ட என் எழுத்தைப் பற்றிய பெருமிதமும் படைப்பாளித்திமிரும், இன்றைக்கு என் எழுத்துக்களின் மேலே தம் உண்மையான கருத்தை முகம்பாராது சொல்வதாக நான் கருதும் ஓரிரு சிலரிடமிருந்து கிடைக்கும் பாராட்டுகளிற்கூட எனக்குக் கிடைப்பதில்லை. அவரிடமிருந்துதான், குறிப்பிட பல பத்திரிகை சஞ்சிகைகள் நடத்தும் தொழிலை நானும் "மாட்டுவர்த்தகம்" என்று என்று சொல்லும் பழக்கம் எனக்குத் தொற்றியது. எனக்குச் சொன்ன மடையன் நானாகவே இருக்கும்போது இதில் நான் என்ன சொல்ல இருக்கின்றது? நான் பதில் சொல்லாமல் முழித்தேன். கெக்கட்டமிட்டுச் சிரித்தார்; "இ·து ஓர் அருமையான நெகிழ்ச்சி பொருந்திய கருத்தோடு கூடின பால்மடி எழுத்தடா, தடிமாடா; இதைப் போய் அநியாயமாக அந்த இறைச்சிக்கடைக்காரனிடம் கிலோக்கணக்கிலே எழுத்துக்கு இரண்டு காசு என்று விற்கப்பார்த்தாயே!?.... அந்த அடிமாட்டுத்தரகனிடம், பேசாமல் கொடுமைக்காரக் கணவனிடருந்து விவாகமுறிப்புக்கேட்டு ஓடும் மனைவி, சாதி மதம் காரணமாக சேரமுடியாத காதலர்கள்; இப்படி ஏதாவது ஒரு சப்பித்துப்பிய கரும்புச்சக்கையை அரைத்துச் சீனியென்று கொண்டுபோய்க் கொடுத்துப்பார்.. கண்டதைக் காணாதவன் போல புறங்கையையும் வழித்து நக்கிநக்கித்தின்பான். மடையா மடையா!! உன் நல்ல காலம்.. கதை திரும்ப உன் கைக்கு அச்சேற்ற இயலாது என்று வந்திருக்கின்றது." ஓங்கி முதுகிலே அவர் அறைந்தபோது, கடற்கரையிலே சுற்றியிருந்த சிலர் உற்றுப்பார்த்தது தெரியவில்லை. சூரியனுக்கும் கடலுக்கும் இடையிலே நான் இருப்பதாகத் தெரிந்தது. "இனி இப்படியான பத்திரிகைகளுக்கு அனுப்பாதே" என்று சொல்லிவிட்டு தானே வாங்கி, அண்டைநாட்டிலிருக்கும் அவரின் சிறுகதைக்கேமட்டுமான ஏட்டு நண்பரிடம் அனுப்பிவைத்தார். கிட்டத்தட்ட, ஆறுமாதங்களின் பின்னர், அப்போதுதான் கொஞ்சம் பிரபலமாகிக்கொண்டிருந்த நவீன ஓவியர் ஒருவரின் படத்துடன், எனது கதை கையிலே கிடைத்தது. அது கையிலே கிடைத்த இரண்டு மூன்று நாட்களுக்குள், எறும்புப்புற்று ஒன்றின் வளர்ச்சியையும் தேய்வினையும் பற்றி அந்தப்புற்று எழும்பும் வீட்டிலே இருக்கின்ற குடும்பத்தினரின் வாழ்க்கையோடு ஒத்துக்காட்டி ஒரு கதை எழுதிக் கொண்டு அவரிடம் கருத்துக் கேட்கப்போனேன்; "எப்படி திடீரென இதை எழுத வேண்டுமென்று தோன்றியது?" - புகையிலையை மென்று கொண்டு வாடிக்கையாளர் ஒருவருக்கும் தேயிலை மடித்துக்கட்டிக்கொண்டு கேட்டபோது, நான் அவரின் பெட்டிக்கடைக்கதிரையிலே இருந்து கொண்டு பொருள் வாங்க வந்தவரிடம் பணத்தினைப் பெற்று மேசை இழுப்பறைக்குட் போட்டுவிட்டு, ஓர் இனிப்பினை எடுத்து மென்று கொண்டிருந்தேன். அந்தப் பத்திரிகையிலே புத்தகமும் மாணவனும் பற்றிய கதை வெளியானதன் வெற்றியின் உந்துதலே இந்தக்கதையை எழுதவைத்தது என்பதைச் சொல்லி அதற்கு அவருக்கு நான் நன்றி உள்ளவனாக இருக்கின்றேன் என்றும் கூறினேன். "இதையும் உடனே அனுப்பப்போகின்றாயா?" என்று முகத்திலே அடித்ததுமாதிரிக் கேட்டார்; கொஞ்சம் உற்சாகம் வடிய, அவர் வாசித்தபின்னரே அவர் சொல்லும் கருத்தைப் பொறுத்து அனுப்ப விழைகின்றேன் என்கிறமாதிரிச் சொன்னேன். கிட்ட வந்து, என் கண்களை உற்று நோக்கி நிதானமாகச் சொன்னார்" "உயிர்ப்பான கதை என்பது முன்பெழுதிய கதை ஒன்று பதிப்பிக்கப்பட்டதைக் கண்ட உற்சாகத்திலே மட்டும் வராது; அதற்கு அந்தக்கதையை அதனளவிலே எழுதவேண்டுமென்ற உள்ளிட உந்தலிலே இருந்து வரவேண்டும்; நான் வாசிக்காமலே சொல்கின்றேன்..... இந்தக்கதையை, ஒரு கிழமைக்கு வீட்டிலே கொண்டுபோய் மூடி வைத்தபின், எடுத்து வாசித்துப் பார்த்துவிட்டு வந்து உனக்கு என்ன தோன்றுகின்றது என்பதை எனக்குச் சொல்." தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு வீட்டுக்குப் போய் ஒரு கிழமை நவராத்திரியிலே விளக்குக்கு முன்னால் கும்பம் வைப்பது போல வைத்து, ஆயுதபூசையும் கடந்தபின் எடுத்து வாசித்தேன். அதே கதையை எறும்புக்குப் பதிலாகப் புத்தகமும் குடும்பத்துக்குப் பதிலாக மாணவனையும் வைத்து ஏற்கனவே எழுதியிருந்த உணர்வு தெளிவாகத் தெரிந்தது; பேசாமல், கிழித்துப் போட்டுவிட்டு, அன்று மாலை அவரிடம் வேலை முடிந்து வருகையிலே சென்றேன். நடந்ததைச் சொல்ல, "நீ தரமானது என்று கருதும் பத்திரிகைக்கு - குறிப்பாக உன் நண்பர்கள் நடத்தும் பத்திரிகைகளுக்கு- படைப்புகளை அனுப்புகையிலே, உனக்கு உன் கதை தரமானது என்று பட்டால் மட்டுமே அனுப்பு; மிகுதிப்படி, அவர்களை உன் படைப்புக்கன்றி, உனக்காக என்று கதையைப் போட்டு இருபகுதியாருக்கும், கூடவே படைப்பிலக்கியத்துக்கும் அவமானத்தை உண்டு பண்ணாதே; அதனால், உன்னளவிலே உன் எழுத்தின் தரத்தைக் கண்டு கொள்ள, ஓரிரண்டு வாரம் எழுத முன் சிந்தனையை ஊறப்போடு, நீருக்கும் ஆகாரத்துக்கும் மலமூத்திரத்துக்குமாய் வேண்டி நிறுத்தாமல் எழுது, எழுதியபின் எழுதியதை ஊறப்போடு.. ஊறப்போட்டதை அந்த எழுத்துக்கான உன் உத்வேகம் வடிந்தபின்னர் வாசி; அப்போதும் அ·து எழுத்துத்தான் என்று உனக்குப் பட்டால், அ·து எழுத்துத்தான்; எந்தக்கொம்பன் யானையிலேறிக் கொம்பூதி வந்து நின்றாலும், அவனுக்கென்று சூரன் தலையைக் கழற்றி சிங்கமுகன் சிரமாய் மாற்றி, புதிய வால் சேர்த்துக் கொள்ள ஒப்புக்கொள்ளாதே; பதிக்கவேண்டாதுபோனாலும், உன் பெட்டிக்குள்ளேயே ஓர் அட்சரமேனும் எழுத்திலே பிசகாமற் தூங்கிக்கிடக்கட்டும்" என்றார்.
இத்தனைக்குப் பிறகு, என் கதையை வெளியிட்ட பத்திரிகையிலே, என் கதைக்கு எதிர்வினையாக அடுத்தமுறை ஒரு வாசகர், அது மிகவும் என் பிரதேசப்பேச்சு வழக்கிலே இருப்பதாகவும் எல்லோருக்கும் புரியும்படியான மொழிநடையிலே எழுதியிருந்தால் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருத்துக்கூறியிருந்தார். இன்னொரு நான் மதிக்கும் பிரபல எழுத்தாளரே, ஒரு பக்கத்தை மட்டுமே மூச்சுப்பிடித்துக்கொண்டு தன்னாலே வாசிக்கூடியதாக இருந்தது என்றும் கருத்துச் சொல்லியிருந்தார். நான் மிகவும் சோர்ந்துபோனேன். எனது மொழிநடையை மாற்றி எழுதியிருக்கலாமோ என்று வருத்தப்பட்டுக்கொண்டேன்; அப்படி மாற்றி எழுதுகின்றது எனக்கு அவ்வளவு சிக்கலான காரியம் இல்லை என்பது எனக்குத் தெரியும்; எனது வழிகாட்டி சிரித்தார்; "பைத்தியக்காரா, இதற்குப் போய்க் கவலைப்பட்டுக்கொண்டிருந்தால் எப்படி? இவனைப் போன்ற வாசகர்களுக்கு போன எழுபது ஆண்டுகளாக அச்சிலே வரும் ஒரு குறிப்பிட்ட மணிப்பிரவாள நடைமட்டும்தான் அவனது மொழி, மிகுதி பக்கத்துவீட்டுக்காரன் பேசுவதுகூட எல்லாம் உடைத்து உணரமுடியாத கருங்கல்மாமலை; இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொண்டு இவர்களுக்காக உன் எழுத்தை இளக்கி வளைக்கப் போகின்றதிலும் விட, வீதிவிபச்சாரத்துக்குப் பெண்பிடித்துக் கொடுப்பது உனக்குப் பயனான செயல். எந்தக்காலத்திலும், உன் எழுத்தின்மீதுள்ள ஏச்சுக்களையும் உன் மீதுள்ள பாராட்டுக்களையும் பற்றிக் கவனமாக இரு.. அவை மட்டும்தான் உன் எழுத்துக்குச் சரியான அளவுகாட்டிகள். பிரபல எழுத்தாளர், மூச்சைப் பிடித்துக் கொண்டார் என்கிறார்... இருந்துபார்... கொஞ்சம் நீ வளர்ந்தால், உன் வளர்ச்சியை ஆரம்பத்திலேயே இனம் கண்டு கொண்டவர் தானாகத்தான் இருந்தார் என்றும் சொல்லக்கூடும். நாளைக்கு அவரே அதே நடையில் எழுதினால், உன்னைக் குறைகூறிய வாசகன் அதுதான் மொழிக்குப் புத்துயிர்ப்பூட்டிய நடை என்றும் கூறுவான்; சிறிதோ, பெரிதோ, இந்த எழுத்துலகிலே, நீ என்ன எழுதுகின்றாய் என்பதைப் பார்க்கின்றவர்கள் இல்லையெனக் கூற மாட்டேன்; ஆனால், குறைவு; ஆனால், எழுத்துப்பரப்பிலே உன் பெயரின் பிரகாசம் என்ன என்று பார்க்கின்றவரே அதிகம்.. பெயர்ப்பிரகாசத்துக்காக, உன் எழுட்தின் உயிர்ப்பையும் துடிப்பையும் மங்க வைத்துக்கொள்ளாதே. பலரின் உற்சாகமான பாராட்டுக்கிடைக்காமல் இருப்பதும் குறைகூறலும் கருத்துக்கள் வெளிவராமலே இருப்பதுவும் உனது எழுத்து எந்தவளவுக்கு நீ தரமாக எழுதிக்கொண்டிருக்கின்றாய் என்பதற்கு ஓர் அறிகுறி. உன் படைப்பு கிணற்றில் போட்ட கல்லாயிருப்பதும் எழுத்துலகிலே உனக்கான இடத்தை நீ பிடித்துவிட்டாய் என்பதற்கான ஒரு நல்ல அறிகுறி; எழுத்தாளனுடன் கூட்டுச்சேர்ந்து தனது தேடுதலுடனும் புரிதலுடனும் படைப்பை ரசனை செய்யமுடியாத சோம்பேறிகளுக்காக நீ படைக்காததையிட்டு என்றைக்கும் கவலைப்படாதே; விருப்பமானால், பெருமைப்படு."
எழுத்து எனக்கோ தனக்கோ சாப்பாடு போடவில்லை என்பதால், மற்றவர்களுக்காக இளக்கிக்கொள்ளாமல் நாங்கள் எழுதவேண்டும் என்று எண்ணும் இவரின் படைப்புகள் ஏன் எண்ணிக்கையிலே நாற்பதுக்குள் நின்றன என்று அன்றைக்குத்தான் நான் தெரிந்துகொண்டேன். ஆயினும், அன்றைக்குச் சோர்வுடனேயே வீட்டுக்குப் போனேன். அன்றிரவுமுழுவதும் வெறிபிடித்தவன் போல காலைபோட்ட ஆடைகளையும் மாற்றாது இருந்து எழுதினேன்.... அது கதையாக இருக்கமுடியாது என்று எழுதும்போதே எனக்குத் தோன்றியது. மறுநாள், அவரிடம் போனபோது, இரவு நான் ஒழுங்காகத் தூங்கினேனா என்பதைக் கேட்டார்; இல்லை, கிறுக்கித் தள்ளினேன் என்பதைச் சொன்னேன். "எங்கே காட்டு" என்றபோது, பையிலே கிடந்ததை எடுத்துக் கொடுத்தேன். துள்ளிச் சொன்னார், "மடையா, நீ கதையிலே மட்டும்தான் காலை வைத்து ஏறப்பார்க்கின்றாய் என்று நினைத்தேன்; இப்போது கவிதையிலே கையை வைக்கப் பார்க்கின்றாய்; நீயே வாசித்துப்பார்" - என்னிடமே தந்துவிட்டார்; சிறுவயதிலே எழுதிய கடவுளின் கருணையிலிருந்து எனக்கான பங்கினைப் பாகம்பிரித்துத் தரச்சொல்லிக் கேட்டபின்னர் நான் கவிதையென்ற பெயரிலே ஏதும் வித்தை செய்யத் துணியவில்லை. அதனால், அவர் என் சோர்வினை விலக்க இப்படி ஒரு முயற்சி எடுக்கின்றார் என்று எண்ணிக்கொண்டு நான் அதை உடனே மீண்டும் வாசிக்கவில்லை. கதை வேறொரு திசையிலே, "என்ன செய்தாலும், சொந்தமாக ஒருவன் தானே நடத்தும் பத்திரிகையிலே, பதிப்பகத்திலே தன் படைப்புகளைப் போடக்கூடாது; அ·து அவன் எழுத்தின் தகுதியை நிர்ணயிக்கவிடாது குழப்பம் செய்யும்" என்பது பற்றிப் போய்விட்டது. பிறகு, ஓரிரு வாரங்களுக்குப் பின்னால், ஒருநாள், நகரசபைத் தண்ணீர்த்தொட்டியினைப் பெரிதுபடுத்துவது பற்றிய அமைப்பிலே கணிப்புகள் செய்துகொண்டிருந்தபோது, பென்சிலைத் தேடியபோது, காற்சட்டைப்பையிலிருந்து என் அந்த இரவுக்கிறுக்கல் கையிலே வந்தது. எடுத்து, சும்மா வாசித்துப்பார்த்தேன். மூன்றாம் மனிதன், ஒருவன் அழகுறச் செதுக்கிய சிற்பத்திலே இலயித்துப்போன உணர்வு. இத்தனை கோவையாக என்னுள்ளிருந்து படிமங்களும் சொற்கோவையும் வந்துவிழுந்திருக்கமுடியாது என்று மீண்டும் ஒருமுறை வாசித்துப் பார்த்தேன். எனது கையெழுத்துத்தான்; அதுவும், கவிதையோ வேறென்ன பெயரதற்கோ, ஓர் இலயத்துடன், ஆற்றுநீர்ச்சுழி சுழல்தல்போல என்னை உள்ளே இழுத்துக்கொண்டது. நான் ஒன்றும் அத்துணை எழுத்துவன்மை இல்லாதவன் இல்லை என்று ஒரு நம்பிக்கை வந்தது.
அதன்பிறகு, அவர் சிறுநீரக்கோளாற்றினால் இறந்து போனார்; இறந்தபோதும், ஆரம்ப எழுத்தாளராகவே இறந்தார்; எழுத்துக்கான அரசாங்க விருதுகள் அவரின் வாழ்காலத்திலோ இறப்பின்பின்னரோ அவருக்குக் கிடைக்கவில்லை; அவரும் அதற்காக எழுதவில்லை; அவர் நோய்வாய்ப்பட்டிருந்த காலத்திலே ஊருக்குள்ளே இருந்த சிறுபடைப்புவிரும்பிகள் அவருக்குப் பொன்னாடை போர்த்தி ஒரு சிறிய விழா எடுத்துக் கௌரவித்து ஒரு முகப்புப்பெயர் அவருக்கு அளிக்க விரும்பிச் சென்று அனுமதி கேட்டார்கள்; 'இரண்டு யானைகள்' நெருப்புப்பெட்டிகளை ஒரு கதிரையின் மேலேறி தட்டிலே அடுக்கிக்கொண்டிருந்தவர் திரும்பி நிதானமாகக் கேட்டார்; "என்னையும் இதுவரைக்கும் நான் எழுதியதையும் அவமதிக்கிறது என்பதுதான் உங்களுக்கு இப்போது இருக்கும் அவசரத்தேவை என்றால், நானென்ன சொல்ல இருக்கின்றது?" போனவர்கள் அதே வேகத்திலே ஆளையாள் முகத்தைப் பார்த்துக்கொண்டு திரும்பிவந்தோம். அவரது வெளிவந்த எழுத்துப்படைப்புகளையும் தொகுப்பாக -என்னையும் உள்ளடக்கி- எவரும் வெளிவிடவில்லை; நான் கல்யாணம் செய்து கொண்டு அமெரிக்கா வந்துவிட்டேன்; வரும்போது அவரின் தோற்பையையும் படைப்புகளையும் கூடக் கொண்டு வந்தேன். நான் எழுதுவதிலே எது தரமானவை என்று அறிவதற்காக அன்றி, எது தரமற்றது என்பதை இலகுவிலே அறிந்துகொண்டு என்னதை அச்சுக்கு அனுப்ப முன்னர் கிழித்துப்போட.. என் மனைவி சொல்கின்றது போல, நானும் இன்னும் ஆரம்ப எழுத்தாளன்தான்; எந்தப்பத்திரிகைக்கும் எழுத்துக்களை இதை என் உள்ளார்ந்த முழுத்திருப்தியுடன் அனுப்பலாம் என்றாலன்றி அனுப்புவதில்லை; தெரிந்தவர்கள் என் எழுத்துக்களைத் தமது வெளியீட்டுக்குக் கேட்டுக்கும்போது, மாட்டுவர்த்தகம் செய்ய நான் விடுகின்றதில்லை; அவர்கள் கேட்டுவிட்டார்களே என்று எழுதுவதில்லை; நான் எனக்குத் திருப்திக்கு எழுதியதை எனக்காக அல்ல, ஆனால், அந்த எழுத்தின் தன்மைக்காக ஏற்றுக்கொள்கின்றார்களா என்று மட்டுமே கேட்டுக்கொள்கின்றேன். இதற்காக, மனமுதிர்ச்சியில்லாதவன், பைத்தியக்காரன், தலைக்கனம் பிடித்தவன் போன்ற காரணப்பெயர்கள் என் வழிகாட்டிக்கு இருந்ததுபோலவே என் பெயர் முன்னும் பொதிந்திருப்பதை அறிவேன்.
நான் இன்னமும் ஓர் ஆரம்ப எழுத்தாளன் ஆக இருக்க இதுதான் காரணம் என்கின்றாள் என் மனைவி; அப்படியிருப்பதால், எனக்கொன்றும் சேதமில்லை என்றே படுகின்றது. இதுவரை எத்தனை அச்சிலேற்றியிருக்கின்றேன் என்பதினை இட்டு என் மனைவி கேட்கும்போது, பெட்டிக்கடைக்காரரின் குரல், "மடையா, மடையா!! கழுதைதான் பொதிசுமக்கும்; குதிரையோ ஆள் சுமக்கும்" என்று பலமாகச் சிரித்தபடி கத்துகின்றது கேட்கின்றது. நான் அவளை ஆத்திரத்துடன் விமர்சிக்கப் போகின்றதில்லை. "பெட்டிக்கடைக்காரர் என்னை எழுத்துச்சம்பந்தப்பட்ட அளவிலே ஆற்றாமையாக ஆக்கிவிட்டுப்போய்விட்டார்; அநாவசியமாக, அதிகம் வெளியிலே தலையினை நீட்டுகின்ற ஆள் நானில்லை" என்று நான் சொல்லும்போதெல்லாம் என் மனைவி சிரிக்கின்றாள். இவனது எழுத்துத்தான் இ·து என்ற எதிர்பார்ப்புருவோடு வாசிக்காமல் படைப்பின்மீதான உண்மையான எதிர்வினையைக் காணும் நோக்கத்தோடு நிலைப்பட்ட பெயரின்றி நானெழுதுவதால், பொதுவில் அதிகம் வாசிக்காத என் தாயாருக்கு ஆக்கியோனை அடையாளம் தெரியாமல், என் முன்னேயே "இதை எழுதியவனுக்கு மண்டைக்கோளாறு" என்று என்று சொல்கின்றாள்; எனக்கு இந்தப்பாராட்டு இனிமையாக இருக்கின்றது; அதைக் கண்ட மனைவி உண்மையாகவே என் தாயார் சொன்னதை என்னிற் காண்கின்றாள்.
அவரது அச்சேறாத தோற்பை எழுத்துக்களைப் தொகுப்பு நூலாகப் பதிப்பிக்கும் தகுதி எனக்கு வந்துவிட்டது என்று என்றைக்கு என் எழுத்து எனக்கு உணர்த்துகின்றதோ, அன்றைக்குத்தான் நான் ஓர் அசுரபலத்துடன் என் மொழியை உலுக்கி, புதியதோர் பாய்ச்சலுடனான எழுத்தைப் பிறப்பித்த முழு எழுத்தாளனாவேன் என்று வலுவாக என்னுள்ளே உணர்கின்றேன்.
அதுவரை, என்னைப் பற்றி வாசகர்களில் எவருக்காவது ஞாபகம் இருக்குமா என்று எனக்குத் தெரியாது; ஆனால், என்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ள பெரிதாக ஏதுமில்லை. ஆ(தல்¢)னால், ஆரம்ப எழுத்தாளன் என்றோ அல்லது குறைந்த பட்சம் எழுத்தாளன் ஆகி அச்சிலோ அல்லது வாசகர் மனதிலோ பதிவுசெய்து கொள்ளாத எழுத்தாளன் என்றோ என்னை அறிமுகப்படுத்துக்கொள்கின்றது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
'00. ஏப்ரில் 12, புதன் 01:53 மநிநே
3 பினà¯à®©à¯à®¤à¯:
நெகிழ்ந்து போய்விட்டேன்
அன்புடன்
மீனா.
-/ர
எத்தனை முறை படித்திருப்பேன் என்று எனக்கே தெரியாது. இருந்தும் இன்றைக்கும் அதே ஆர்வத்துடன் இன்னொரு முறை படித்தேன். இன்னொரு முறை படிக்கக் கொடுத்ததற்கு நன்றிகள். - கழைக்கூத்தாடியை வியக்கும் நாடோடி :)
வெங்கட், மீனா நன்றி.
Post a Comment
<< Home