Monday, January 24, 2005

அறைச்சி

வழக்கம்போல கதவு அதிர அதிரத்தான் கிழவி அறைக்குட் போனது. ஓரிரண்டு ஆண்டுக்காலமாக அறை தன்னிலே ஆத்திரமாக இருக்கிறது என்று தெரிந்தும் கிழவிக்கு உள்ளே போகாமல் இருக்கமுடிவதில்லை. அறைச்சி முதுகைச் சிலிர்த்துக்கொண்டு பொருக்குகளை உதிர்த்துக் கொட்டினாள்; பின், பல்லை நெருமிக்கொண்டு, "குமரி, பாரடி அவளுகளின்ரை மேனி மினுக்கையும் என்ரை சிரங்குத்தோலையும்" - அவள் காலை உதைத்தபோது, முதல்நாட்காலை பாடசாலைக்குப் போகும் குழந்தையின் வீரிட்ட அழுகையும் சேடம் இழுக்கையிலே வாயைத்திறந்து வில்லங்கத்துக்குப் பாலைப் பருக்கிறபோதும் மறுத்து கடைவாயாற் கழிக்கும் கிழவியின் வறட்டுப்பிடிவாதமும் வெளிப்பட்ட உதையிலே ஒன்றாகத் தெரிந்தன. கிழவி, வழக்கம்போல இதனாலே பாதிக்கப்படாது மழைக்கு ஊறிய சுவராக அந்த உதையையும் தன் சுருங்கிய மார்பிலே உறுஞ்சிக்கொண்டு நின்றது; அவளுக்கும் அத்தனை வயதில் அடித்திருந்த வண்ணம் அதிகமாகவே மங்கித்தான் போயிருந்தது; கூடவே காரை வேறு பெயர்ந்து கிடந்தது. தலைக்கூரை மட்டுமல்ல, மொத்தமாய் முழுக்கிழவியுமே இத்தனை நாட்களாய் விட்டுவிட்டு அடிக்கும் புயல்களுக்குப் பராமரிக்காமலே சிதம்பிப் போய், இன்றைக்கா நாளைக்கா விழுவேன் என்றிருந்தது.

கிழவிக்கு, கிழட்டு அறைச்சியின் விரல்சுட்டிய பக்கத்து அறைகளைப் பார்க்கத்தேவையில்லை; அறைக்கிழடியின் மனக்குறை, சடப்பொருளாக இருந்தாலுங்கூட கிழவிக்கும் தெரியும். தன் வயதொத்த மிகுதி அறைக்கிழவிகள் எல்லாம் வெண்சுதையும் மேற்பூச்சும் முகட்டுவகிட்டுப்பிரிப்போடும் அலங்காரப்பொலிவோடு கிடக்கிறபோது, ஏன் தான் மட்டும் அலங்கோல மூளியாக மூக்கை வெயில் காண உறுஞ்சியும் மழை காணச் சிந்தியும் கரப்பான் பூச்சியும் நத்தையும் ஓடியும் ஒட்டியும் கிடக்க வேண்டும் என்பதை அறைச்சி கேள்வியாகத்தான் கேட்பாள் - பதில் தனக்கே தெரிந்தபோதும். யார் முந்தி யார் பிந்திப் பிறந்தார்கள் என்று சரியாகத் தெரியாதபோது, கிழவிக்கும் அறைச்சிக்கும் வயதிலே அந்தனை வித்தியாசம் இருக்கமுடியாது; கிழவிகூடச் சுவராகிப்போகும் வரைக்கும் தானும் அந்த அறையை, 'குமரி' என்று கூப்பிட்டுக்கொண்டிருந்ததுதான்..... எல்லாம்...எல்லாமே உடல் விறைத்து உள்ளங்கம் மேலோடு எல்லாமே கற்சுவராகிப் போகமுன்தான். தான் எப்போது சுவரானது என்று அவளுக்கும் தெரியவில்லை; அறைச்சிக்கும் கூடத்தான். உச்சந்ததலையிலிருந்து உட்பாத வெப்பாணி வரை மெல்லமெல்லத்தான் கல்லுப்பத்திப்போனது. ஒவ்வொரு உயிர் இழப்புக்கும் இடவிழப்புக்கும் கல், கிழவி சிரமிருந்து நிலம் நோக்கிக் கீழிறங்கிக் கொண்டு வந்தது என்பது அறைக்குச் சுரணையில் இருந்தது.

நாற்சார்வீடு; இருபதுகளிலே கிழவியின் பேரன், இந்தவூருக்குச் சுருட்டுவியாபாரமாக வந்து குடியேறி, கூடவே கமம் இரண்டுபோகம் செய்யத்தொடங்கின காலத்திலே கட்டியது; ஆரம்பத்திலே பீலியோட்டு வீடு, பிறகு ஒட்டிசுட்டான் தட்டையோடு கொஞ்சமாகவும் அஸ்பெஸ்டஸ் தகடு கொஞ்சமாகவும் முன்னாலே மாறிப்போனது. அண்மையிலே, கிழவியின் மூத்தமகள், வெளிநாட்டிலிருந்து காசு அனுப்பியிருந்தாள்... அஸ்பெஸ்டஸ் தகடு, சுவாசப்புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்பதால், கழற்றிவிட்டு, திரும்பவும் பீலியோட்டையே காற்றோட்டமாக இருக்கும் என்பதாலே போடும்படி காரணம் சொல்லியிருக்கிறாள்; ஊரிலேயே இருக்கும் மற்ற மகள், அக்கா சொன்னதைச் செய்தே ஆகவேண்டும் என்கிறாள்; விஞ்ஞான ஆசிரியை; சொல்லத்தான் தோன்றும்; கிழவிக்கென்றால் சுவாசத்தின் தூய்மை, அவளின் அவர், எழுபதுகளின் ஆரம்பத்திலே 'அமெரிக்கன் பஷனி'லே வீட்டின் முகத்தை இளக்கி அழகுச்சிகிச்சை செய்ய, இரவோடு இரவாக பாரவண்டியிலே கொண்டுவந்திறக்கின அஸ்பெஸ்டஸ் தகட்டிலேதான் கிடக்கிறது என்றது மாதிரித் தோன்றுகின்றது. மிகுதி முன்னறைகளின் சுவர் வண்ணத்திலிருந்து, தொங்கும் படங்கள் வரை எவ்வளவோ மாறிக்கொண்டே போய்விட்டது. மகளின் எண்ணப்பாங்கு, முகப்பிலே இருந்து, உள்ளுக்கும் மெல்லமெல்லப் பரவியும்தான் போய்விட்டது.

நெல்லுச்சாக்குகளின் மணம் இப்போதும் நாசிக்குள்ளே அடித்துகொண்டிருக்கிறது, மலசலகூடத்துக்குக் கிட்டின அறையிலிருந்து... வாழைக்குலைகள் அழுகின மணம்கூடச் சிலவேளை சேர்ந்து அடிக்கும். அடிக்கடி கிழவி அந்த அறைக்குள்ளேயும் எட்டிப்பார்க்கும்... மகன் நெல்லுப்போட்டிருக்கும் பெரிய தார்க்கலன்களுக்குள் ஒளித்திருக்கின்றானா என்று..ஓரிரண்டு அங்குமிங்கும் பிய்தெடுக்கப்பட்டு அரைப்பழமாய்த்தொங்கும் வாழைக்குலைகளும் இல்லை, அவனும் இல்லை. ஆனாலும், தம்தாட்கொண்டையிலே தூக்கிக்கட்டிய வெண்காயச்சருகுகளின் உரசல் காதுக்குள்ளே இன்னமும் கிசுகிசுத்துக் கேட்கத்தான் செய்கிறது..... புளிப்பானைக்குளே ஓரிரண்டு கரப்பொத்தான் தத்துவண்டியன் முட்டைக்கொத்துகளும் பூச்சியோட்டங்களும்... மகள் பூச்சிமுட்டை போட்டு கரப்பானோட்டி வைக்கக் கிழவி விடுகிறதில்லை. பூச்சிமுட்டைக்கொத்துக்கூட ஒட்டிக்கிடக்கிறபோது, ஒருமுட்டைக்கின்னொன்று எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறது என்று தோன்றுகிறது.... பூச்சி பொரித்தவுடன், ஒவ்வொரு கரப்பொத்தானும் தத்தம் திசைக்கு......சுவரிடுக்கிலே ஒண்டிக்கொண்டும், மரக்கதவோட்டைக்குள் தம்மை மூடிக்கொண்டும்.... வேறெங்காவது ஓடி, யார் காலிலாவது மல்லாக்காக விழுந்து உள்வெள்ளைபீச்ச சப்பளிந்து போவதும்.... வேதனை. மரத்தை உலுப்பி புளியையெல்லாம் கொட்டை எடுத்து உப்புப்போட்டுப் பானையில் காயவைப்பது அவன்தான்.... பிறகு கள்ளமாகக் கிழவிக்குத் தெரியாமல், கொஞ்சம் கொஞ்சமாய் மிளகாயத்தூளிலே தொட்டு வெயிலிலே காயவைத்துத் தின்னுவான்... சிலவேளை கிழவி அரைக்காற்சட்டைகளைத் தோய்க்கும்போது, பழப்புளியும் அவனின் பம்பரத்தோடும் கண்ணாடிக்குண்டுகளோடும் வரும்.... பிறகு அவனின் முழுநீளக்காற்சட்டைகளுக்குள், அரைகுறையாக எழுதிய குறிப்புகளும் கருத்துக்களும் தண்ணீரிலே கரைந்து பசையாகி வருவதுபோல....கிழவி எப்போதுமே எதையும் தெரிந்ததுபோலக் காட்டிக்கொள்வதில்லை... காட்டினால், இன்னமும் வெளிப்படையாகவே செய்வான்... ஆக, ஆதிதொட்டு அவன் காற்சட்டைப்பைக்குள்ளேயிருந்து வருவதெல்லாவற்றையும் அவதானத்துடன் பதமாகப் பிரித்து வெயிலிலே காயவைத்துச் சேகரித்துக் கொள்ளும்... அதற்குமேல், அவனைப் பாதுகாக்கும் நினைவுடன் எதேச்சையாகப் புளிப்பானையை இடம்பெயர்த்து வைக்கிறதைச் செய்ய முனைந்து தோற்கும்; புளியும் கருத்தும் அவனுள்ளே வளர்ந்துகொண்டே போனதைக் கண்டும் பானையை இடம்பெயர்த்தலுக்கு மேலே எதையும் அவள் கேட்கமுடிந்ததில்லை. தேடலிலே கருத்தொன்றி முனைந்திருக்கும் பிள்ளையிடமிருந்து, புளியையோ புதுப்போக்கையோ ஒளிக்கமுடியாது..... அக்கினிக்குஞ்சொன்றை அடிமரத்திடைப் பொத்தி ஒளித்துவைத்திடல் முடியாதென்பதாகத்தான் அவனைப் பற்றி அறிந்தவர்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள். பற்றிவளர் குஞ்சு வைத்த காட்டுடன் தன்னையும்கூட்டிச் சுட்டெரித்துப்போகும் என்பதை அவர்கள் சொல்லாமலே கிழவி அறியும்.

நாலைந்து நாட்டுப்பப்பாசி மரங்களுக்கும் முள்முருங்கைகளுக்குமிடையிலே மலசலகூடம் இப்போதும் தனித்துத்தான் வீட்டோடு சேராமல் இருத்திக் கிடக்கிறது. கிழவி மகள்மாரின் எத்தனையோ விருப்புவெறுப்புக்களுக்கு வளைந்துகொடுத்தாடிவிட்டது; ஆனால், வாளி மலகூடம், பீங்கான் மலகூடமாகி, குழாயிலே தண்ணீர் வந்தபிறகும் வீட்டோடு கிழவி சேரவிடவில்லை. முருக்கம்மலர்களின் சிவப்பு நிறத்திலே கிழவிக்கும் மகனைப்போலே காதலுண்டு. முருக்கங்கொட்டைகளை தேய்த்துச் சுட்டுக்கொள்வதிலும்கூட... அறிந்தும் வருத்தி, தரையிலே முருக்கங்கொட்டையை ஆறமரத் தேய்த்து தன்னைத்தானே சுடுதலும் சுகமாக அவனுக்கு அப்போதே தோன்றியிருக்கின்றது.... சிலவேளை கிழவி மத்தியானத் தூக்கங்களிலே பக்கவாட்டிற்குத் தூங்கி இருக்கும்போது, மெல்ல அவள் மணிக்கட்டுகளிலும் சுட்டெழுப்பியிருக்கின்றான். பதைபதைத்தெழுந்த போதெல்லாம், 'சுடுதல் தரும் அதிர்ச்சிகளைப் பழக்கப்படுத்திக் கொள்' என்றுகூடச் சொல்வதுண்டு.... பப்பாசிகள், ஒற்றையற்றைக் குடும்பங்களிலே, கொத்துக்கொத்தாகப் பால்பிடித்துப் பிஞ்சும் காயும் பழமும் ..... தாவரப்பப்பாசியும்.............. விலங்குக்கரப்பொத்தானும்...... இனவிருத்தியும் பரம்பலும்.

"குமரி...." அறைச்சி இப்போது கனிந்திருந்தாள்; கிழவிக்குக் கல்யாணம் என்றதைக் கிழவிக்கு முன்னமே கேட்டு, அம்மா-அம்மம்மா இரகசியத்தை மெல்ல, தன்னுள்ளத்துளைகளூடே வெளிவிட்டுச் சொன்னதுகூட இந்தப் பொல்லாத் தோழிதான்; கிழவிக்கு மகன் உற்பத்தியானதைக்கூடச் சத்தமின்றி இருட்டுக்குள்ளேயிருந்து கொட்டக்கொட்ட விழித்தபடி நமுட்டுச்சிரிப்பு உதடாட அறைச்சி பார்த்துக்கொண்டிருந்ததை வெட்கங்கெட்டு அறைச்சி சொல்லாவிட்டாலும் அறியும் கிழவி வெட்கப்பட்டுக் கேட்காதேயிருந்தது. மற்றக்குழந்தைகளைப் போலல்ல அவன்; பிறக்கும்போதே அவசரப்பட்டு வைத்தியசாலைக்கு வண்டியை எடுக்கமுன், கிழவியைத் தள்ளிக் கொண்டு பிள்ளையாய்ப் பிறக்கையிலே, கிழவியின் உதைகளையும் விரி கைகளையும் குணுக்கிய விரல்களையும் கனத்த பிருட்டங்களையும் அடக்கமுடியா வெடிப்பொலிச்சுரத்தையும் அறைச்சிதான் அள்ளிக்கொண்டாள்; கிழவிக்கு முதலே, அவள் தாயோடும் மருத்துவிச்சியோடும் குழந்தையை அள்ளி விழி கண்டவள் இந்த அறைச்சிப்பேய்ச்சிதான். அவன்கூட, வளர்ந்தபின்பு தன் தார்மீக ஆத்திரங்களோடு உள்ளங்கைகட்குள்ளே விரல்பொத்தி, இரத்தமிறுக்கி நகமுனை சிவக்க, அடித்துக் குத்தியதுபோலவே, பிறக்கும்போதே வலுவாய் எட்டியெட்டி உதைத்தான் அறைச்சியை. அவன் ஒவ்வொரு உதைக்கும் உன்மத்தக்குத்தலுக்கும் முதலிலே அறைச்சி ஓங்கிச் சிரிப்பாள்; பிறகு, மடி அடிக்கப் பதைபதைப்பாள். குழந்தை குத்துகின்றான் என்று மென்மனது சிரிக்கலாம், ஆனால், இந்த அடங்கா ஆத்திரம் எங்கே கொண்டு சென்று அவனைப் புதைக்குமோ? அவளுக்குத் தாங்காது.... அவள் முகத்திலே கூட எழுதுகோலால், வெறும்கரியாற் கிறுக்கியிருக்கிறான்... முதலில், இலக்கற்ற விரலுருக்களாக, பிறகு தன்னிலக்குகளின் மனவெடிப்புகளைச் சிவப்பாக... அவன் கோல்கொண்டு குத்தும்போதெல்லாம், மருதாணி அலங்கரிப்பாகவே ஏந்திக்கொண்டிருக்கின்றாள் அவள்...அவன் வளர வளர, ஆர்ப்பாட்டம் குறைந்தடங்கியே போனான், அவளுக்குள்ளேயே அடங்கிக்கிடந்தான்... வளர்ந்தவை, அவன் மௌனமும் இரவுவிழித்திருப்பும் புத்தகக்குவியலும்...அந்த நேரத்தெல்லாம், ஓரமாய்த் தன்முதுகிலே சாய்ந்திருந்து அவன் பூஞ்சற்றேகத்தை வாஞ்சையோடும் வருத்தத்தோடும் நோக்கும் கிழவியோடு மௌனத்திலேயே பேசமுடியுமா என்று அந்நேரங்களிலே முயற்சி செய்து தோற்றுப்போனாள் அறைச்சி..... அவன் அவளுக்கு வெயிலிறுக்குமோ என்று கறிமுருங்கையும் கொய்யாவும் மூட நட்டு வளர்த்தபோது, குளிர்ச்சிக்குள் நெகிழ்ந்துபோனாள்; எவரையும் அவள்தலைக்கு மேல் ஏற அவன் விடாதபோது, முடிசூடா மகாராணியின் பெருமிதமும் பூரிப்பும்........ .............

ஒரு நாள் அவன் அறையைப் பூட்டிக்கொள்ளாமல், எவரிடமும் சொல்லாமல் இருளூடே தொலைந்து போனான்.....இவளுள் வருவான் என்றிருந்த கிழவிகூட இரவில் இவளும் விழித்திருந்தாள்.... இந்நாட்டிலே தொலைந்து போகின்றவர்களைத் தேடிக் கொண்டு தொல்லையோடு வருகின்றவர்கள், அவனையும் தேடிவந்தபோது, தள்ளப்பட்ட கிழவி தலையடிபட அறைச்சியுள் விழுந்தது. அவர்கள் அறைச்சியையும் அறைந்தார்கள்; வளர்த்தவளும் ஒளித்தவளும் நீதானே என்று வைது குத்தினார்கள் அவள் வயிற்றிலும்.. கிழித்தெறிந்தார்கள் அவள் முலை..... அவன் கீறல்களிலே காறித்துப்பி, கறுப்படித்தபோது, கறிமுருக்கைக்கும் பொறுக்காமல் உலர்த்திக்கொட்டியது, இலையும் கிளையுமாய்; அறைச்சிக்கு, அது வருத்தம் பொறுத்துக்கொள் என்று கொட்டியதா, இல்லை எனக்கு பொறுக்கவில்லை இந்தப்பொல்லார் காரியம் என்று உறுத்தக் கொட்டியதா என்று மரம் உரைக்கவில்லை; அதற்கும் அடியோடு கிளர்த்திக் கிடைத்து உதையும் கிளையுடைப்பும்.... பால் உருக்கிச் சொட்டச்சொட்ட தன்னை வருத்தி அழுத காய்முருக்கையும் மறுபோகம் நெடுக்க நெடுக்கத் தழைத்தது சடைப்படு இலையும் கரமகல் கிளையும்............ ........... ஆனால், அவன் வரவில்லை; திரும்ப, "குமரி, உனக்கேதும் தெரியுமா? சொல்; அவன் இருப்பைப் பற்றி ஏதாவது தெரியுமா? மறைக்காதே.. சொல்..... எனக்கு ஒளித்து ஒளித்துத் திரிவதே உன் காரியமாகிற்று; எனக்கு முன்னைய வனப்பு வேண்டாம்; ஆனால், அவன் இருப்பைப் பற்றிச்சொல்." - இம்முறை தணித்து ஒலித்தது அறைச்சியின் குரல்..... கருக்கிய பிறிதொருநாள் கிழவிக்கு, தனித்து இரவில் ஒளித்து வந்த இருவர் தணித்த தொனியிற் சொன்னது, முற்றத்து நித்தியகல்யாணிக்கும் ஒளி குறைத்துச் சொட்டும் முன்னறை விளக்குக்கும் மட்டும்தான் தெரியும். ஒற்றைப்படைப்பூவும் சுட்டுப்போன விளக்கும் பின்பக்கக் கிழட்டறைச்சிக்குச் சொல்லத்துணியாச் சேதி. கிழவி எத்தனையோ நாள் அறைச்சிக்கு முன்னால், பிரித்துக்கொள்ள முயன்று தோற்ற இரகசியம் அது. அழத்தெரியும் அரற்றத்தெரியும் அதட்டத்தெரியும் அறைச்சிக்கு அற்றுப்போதல் பற்றி மெய்யறிதலேதும் கிடையாது... முன்னொரு அற்றுப்போனார், மற்றொரு காலை கதவு தட்டி நுழைவார் என்றொரு கணிப்பவளது. கிழவியின் சுவர் பற்றிக் கல்லெழுதல்பற்றிய உணர்த்தல் எழுகிலாள்.

கிழவிக்கும் அவனுக்கும் பிடிமானமாய் இடையிலே கிடந்த அறைச்சிக்கு, கிழவி தன்னைத் தவிர்ப்பதும் தனக்கேதும் மறுப்பதும் அவமானமாகத் தோன்ற, தன் பொலிவு போனதறிந்தும் மீண்டும் கத்தினாள், "மற்ற அறைச்சியளைப் பாரடி குமரி." அறைச்சி தன்னைக் காணும் போதெல்லாம் தன் நெஞ்சை, பெண்குறியை, உதரத்தைக் குறி பார்த்துப் பார்த்து உதைக்கக் கண்டது கிழவி. மழைநீரூறிய கிழட்டுச்சுவர்த்தேகத்தோலிருந்து நாறி நாறி கசிந்தது சீழ்நீர். சுருட்டுப்புற்றுச் சுவாசப்பை பற்றிப்பற்றியெரிக்க, "எனக்கு நோத் தாங்க ஏலாமக்கிடக்குது; உனக்குப் புண்ணியம் கிடைக்கும்; கொஞ்சம் அலரிக்கொட்டை அரைச்சுத் தந்து சாகக்கொண்டு விடு பிள்ளை" என்று கத்திய அம்மப்பா குரலோடு சுருட்டுநாற்றமும் கொட்டைவிலக்கிய புளியும் மிதித்த கரப்பொத்தான் முட்டைமணமும் கிழவிக்குச் செவிக்குள்ளும் நாசிக்குள்ளும் நிறைந்தொழுகப் புலன் அடைத்தன. அறைச்சி மடியிலே சிகை குலையக் கை தொய்ந்து மயங்கிச் சரிந்தது கிழட்டுச்சுவர்.


~~~~~~~~~



"அம்மா; எழும்பணை" என்றாள் பாடசாலையாற் திரும்பிய மகள்.

"பிள்ளை, தம்பியன்ரை அறை நல்லாய்ப் பழுதாகிப்போச்சுது; அதால, நாளைக்கு ஆரிட்டையும் சொல்லி அதை இடிச்சுப்போட்டு, அதுக்கு மேலாலே நீட்டிக்கொண்டிருக்கிற கறிமுருங்கையையும் வெட்டிவிச்சுப்போடு; இரவெல்லாம், கறாச்சு கறாச்சு எண்டு ரெண்டும் ஒண்டோட ஒண்டு உராஞ்சு உராஞ்சு சரியான சத்தம்; மனுசர் ஒல்லுப்போல ஒழுங்காய்க் கண்ணை மூடி நித்திரை கொள்ள விடுகுதுகளில்லை; அதோட அக்கா சொன்னமாதிரி, முன்பக்கத்துச் சீற்றுகளையும் கழட்டிப் போட்டு கொழுக்கி ஓட்டைப் போடவும் ஆளை ஒண்டைப்பிடி" - என்றாள் தன் குமரிக்காலத்திலே, அம்மப்பாவுக்கு ஆருக்கும் தெரியாமல், அரளிக்கொட்டை பனங்கட்டியோடு அரைத்துக் கொடுத்த கிழவி.

அம்மப்பாவின் செத்தவீட்டிலே பாடையை படலைக்கு வெளியிலே போனபிறகும் "ஐயோ, அம்மப்பா என்னை விட்டுட்டுப் போட்டியளே" என்று கைகால்திமிறிக்கொண்டு வீரிட்டுக் கத்திய அவளைத் 'தாக்காட்ட' ஆட்கள் பட்டபாடும் கண்டழுத வேதனையையும் பற்றி ஊரிலே மற்றக் கிழவிகள் இப்போதும் நினைவில் கண் பனிக்க, நெஞ்சுருகிச் சொல்கிறதுண்டு.

கல்லுட் தூங்கிய தேரை மீண்டுமொருமுறை ஒருமுறை மெல்லத் தத்தி விழியால் எட்டிப்பார்த்து வெளியை.


08, ஏப்ரில், '00 சனி 17:17 மநிநே.

0 பின்னுதை:

Post a Comment

<< Home