Friday, January 28, 2005

நகுலேஸ்வரதாஸ்

நகுலேஸ்வரதாஸ் செத்துப்போனது துக்கமாக இருந்தது. நான்கு மாதங்களுக்கு முன்னால் ஒருநாள் பனிகொட்டும் அதிகாலையிலே ஓர் ஒற்றைவடச்சங்கிலியைத் திருட்டுக்கொடுக்க மறுத்துக் கத்தியாற் குத்தப்பட்டுச் செத்துப்போனான் என்று கோபால் சொன்னான். கனடாவிலே பனிபெய்யும் காலைவேளை வேலைக்குப் போகும்போது அகாலமாய் இறந்துபோகின்ற குடியேறிகளைப் பற்றிக் கேள்வியுறுவது எனக்கு இதுதான் முதற்றடவை இல்லை என்றாலும், ‘மச்சானின் மச்சாளுக்குத் தெரிந்த பெடியன் பெடிச்சி’ என்றில்லாமல் எனக்கு முகம் தெரிந்த ஒருவன் மரணித்துப்போனது இதுதான் முதல். எனக்குத் தெரிந்தவன் என்பது தெரிந்திருந்தால் கோபால் சொல்லியிருக்கமாட்டான் - ஏதோ நான்தான் இந்தத்துர்ச்சாவுக்குக் காரணம் என்பதுபோல என்னை எண்ணத்திலே வதக்கிக்கொண்டிருப்பேன் என்று அவனுக்குத் தெரியும்; அவன் ஏதோ எதேச்சையாகச் சொல்லப்போய்த்தான், இடது மணிக்கட்டுக்குக்கீழே அவயம் இல்லையென்ற ஆளடையாளம் தவறிவிழுந்து எனக்கு மிகுதிச்செய்தி விரிக்கப்படவேண்டி வந்தது. நகுலனின் தமையன் முன்னேஸ்வரனும் நானும் கூடப்படிக்காவிட்டாலும், ஆரம்பகால இயக்கக்கூட்டங்களிலே ஆளையாள் தெரிந்தவர்கள். அவனாலேதான் நகுலனை எண்பத்து மூன்று மார்கழியிலே எனக்குத் தெரிய வேண்டிவந்தது. முன்னேஸ்வரனின் பேச்சுக்களிலே அவன் “கூழங்கைத்தம்பிரான், கூழங்கைத்தம்பிரான்” என்று சொல்லிச்சொல்லி, அதன் கையாலாகாத அர்த்தம் எங்களுக்கு அர்த்தப்படமுன்னரே நாங்களும் நகுலனைக் கூழங்கைத்தம்பிரான் என்று சொல்லிக்கொண்டிருந்தோம். பிறகு உடற்குறைப்பாட்டினை இழிவு செய்கின்ற பதம் என்ற அர்த்தத்திலே விட்டுவிடமுயற்சித்து “நகுலன், நகுலேஸ்வரன், நகுலேஸ்” என்றெல்லாம் கூப்பிடக் கொஞ்சக்காலம் முன்னேஸ்வரனின் நண்பர்கள் நாம் முயற்சித்தும்தான் பார்த்தோம். ஆனால், அதோ இன்னும் செயற்கைத்தன்மையுடையதாக அவனை எங்களிலிருந்து விலக்கி வைக்கின்றதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த ஓரிரண்டு வாரங்களிலே திரும்பவும் கூழங்கைத்தம்பிரான் என்றே அழைக்கத்தொடங்கிவிட்டோம். அவனுக்கும் அவன் அண்ணனுக்கும் ஒன்பது ஆண்டுகள் வயதிலே வித்தியாசம் என்று சொன்னதாக ஞாபகம். அதனால், எட்டுவயதுகூடிய நாங்களெல்லாம் அவனுக்கு “சுகுணனண்ணன், கண்ணனண்ணன், ராசனண்ணன்” என்று ‘இரட்டைச்சுழி ‘நானாவுக்கு’ இடையில கிடக்கிற மூண்டுசுழி நானாக்கள்தான்.’

எண்பத்திநான்காமாண்டின் எட்டாம்மாதத்தில், முன்னேஸ்வரன் சொல்லாமற்கொள்ளாமற் காணாமற்போனபின், நானும் கண்டியிலிருந்து ஊருக்கு எப்போதாவது விடுமுறைக்கு வந்த தொடர்ந்த நாலைந்து வருடங்களிலே வீதியிலே கூழங்கைத்தம்பிரானைக் கண்டால், ஒரு குற்றவுணர்வோடு ஒளிவதுண்டு; அப்படித்தப்பமுடியாத நேரங்களிலே, “படிக்கிறாயா? அண்ணனிடமிருந்து ஏதாவது தகவல்? அம்மா சுகமா?” இப்படி - இரண்டுபேருக்கும் இறகுரித்த கோழிப்பொய்யென்று படுகின்ற மரியாதைக்கேள்விகள்; தொடரும் “எட்டாம் வகுப்பு, தளத்திலே நிற்கிறார்; கொஞ்சம் நீரழிவுச்சிக்கல்” தொடைப்பதில்கள்; அடுத்தகணம், நிமிடம் தரித்திருந்த என் இரட்டைச்சில்வண்டி இந்தத்திசை, அவனுடையது எதிர்த்திசை. உள்ளுக்குள்ளே குடையும் முகங்கொள்ளல்தான். ஆனால், பல தெரிந்த நண்பர்களின் தாய்மார்களுக்கும் தந்தைதம்பிகட்கும் இதைத்தவிர எதனைச் செய்வதென்று தெரியாமல் அலைந்த காலம் அது. செய்யவேண்டியதொன்றைச் செய்யாது அவர்கள் பிள்ளைகளை,சகோதரர்களை எனக்காகவும் செய்யச்சொல்லி, வெளிப்பட-ஒளிந்து திரிவதாக அந்தக்கண்கள் துரத்தத்துரத்த தப்பித்திரிந்த காயங்களுக்கான நேரம்.

எண்பத்தொன்பதிலே, முன்னேஸ்வரனை எதேச்சையாக உயிர்த்தெழுந்ததிருநாள் விடுமுறையிலே வீதியிலே சந்தித்தேன். என்னத்தினைப் பேசுவதென்று எனக்கும் தெரியவில்லை; அவனுக்கும் அப்படித்தான் இருந்திருக்கவேண்டும். வெடிச்சத்தத்துக்குப் பக்கம்பக்கமாக பறந்துபோகும் இரு பறவைகள்போல ஆளையாள் முகத்தால் ஏதோ கேட்டுக்கொண்டோம்; விலகிக்கொண்டோம். காலத்திலே கழறாத்திட்டியாய்ப் படிந்துபோன தூசினைத் தட்ட இருவருக்கும் முடியவில்லை. பிறகு முன்னேஸ்வரன் ஜேர்மனிக்குப் போய்விட்டதாக அம்மா எப்போதோ எதேச்சையாகச் சொன்னார்.

தொண்ணூற்று நாலிலே, நான் ஹொங்கொங்கிற்குப் போய், அங்கே 'பேருக்குப் படிக்கிறதாய் மோடி' காட்டிக்கொண்டிருந்தேன்; ஒன்று, தரவுக்கோளாறும் குரு இடப்பெயர்ச்சியும் காரணமாக படிக்கப்போன ஆய்வுத்தலைப்பை பேர்ள் ஆற்றிலே இருந்து மீர்ஸ் குடாவுக்கு மாற்ற வேண்டியதாகிப்போயிற்று; எனக்கென்றால், ஹொங்கொங் தீவு, ஹ¤ம்கொம் இரண்டுக்கும் இடைப்பட்ட 'நீக்கல்' கோடான சின்னக்குழந்தையின் மூத்திரவொழுக்கைக் கடலென்றே ஒத்துக்கொள்ள மனம் வரவில்லை; என் வரைவிலக்கணப்படி, அடுத்த கரை தெரியாமல் அடிவானத்தோடு முட்டிப் பரந்திருப்பதுதான் கடல்; துவிச்சக்கரவண்டியை எடுத்தால், பத்து நிமிடத்திலே எந்தப்பக்கத்திலும் அப்படியான கடலைக் காண இருபத்தேழு வருடங்களாக வளர்ந்த ஆள் நான். இரண்டாவது, இலங்கையிலேயிருந்து மேற்கு நோக்கிப்போகும் மேற்கிலேயிருந்து இந்தியாவுக்குத் திரும்பி வரும் 'ஊராக்களுக்கு' வழிகாட்டி, கடைகாட்டி, இடம்பிடிப்பி, 'ரிக்கற்_புக்கி' என்று பல சம்பளமில்லா உபதொழில்களைச் சோடி உளையாக்கைகளாலும் ஓயாக்கால்களாலும் ஓர் ஓட்டை வாயாலும் 'சேர்க்கஸ்காரன்' மாதிரி விளையாடிக்காட்டிக்கொண்டிருந்தேன். மூன்றாவது, கையிலே சொந்தமாகக் காசு கொஞ்சம் ஒப்பீட்டளவிலே அதிகமாகப் புழங்க, 'வீடியோ-ஸ¤ங்கின் மன்ஸன் தமிழ்ப்படக் கஸெட்', 'வேர்ல்ட் ரிஸீவர் ரேடியோ', பெருத்த 'டெஸிபல் சிடி பிளேயர்-பூட்லெக் நூறு ஹொங்கொங் டொலருக்கு மூன்று சிடி','வீடியோ கமரா-ஸைனீஸ் ஒபேரா' என்று புதுது புதிதாகக் கொஞ்சம் ஆங்கில அருஞ்சொற்கள் வாயிலும் கையிலும் புழங்கத்தொடங்கியிருந்தன. கடைசியாக, எல்லாவற்றுக்கும்மேலாக ஹொங்கொங் என்னைப்போல சுகசீவன சோம்பேறி ஆட்களுக்குப் படிக்கிறதுக்கான நாடில்லை என்று திட்டமாகப் புரிந்துபோய்விட்டதுந்தான்.

தொண்ணூற்றைந்திலே ஒரு மத்தியானம் ஸ¤ங்கிங் மென்ஸனிலே ஒரு கீழைக்கரைக்காரர் கடையிலே சாப்பிடப்போயிருந்தேன் -வாடகைக்கெடுத்த தமிழ் 'வீடியோ கஸெட்டை'த் திருப்பிக் கொடுத்து, புதிதாக ஏதாவது கள்ளக்'கமராக்கொப்பிப் படமேதும் வந்திருக்கோ' என்று பார்த்து எடுத்துக்கொண்டு வரும் நோக்கும் கீழ்த்தட்டிலே பலசரக்குச்சாமான் வைத்திருக்கும் சீக்கியனின் 'பயன்படு இறுதித்திகதி அழித்த' இரண்டு மூன்று எண்ணெய் தோயாப் பஞ்சாபி ஊறுகாய்ப்போத்தல்களைத் தள்ளிக்கொண்டு போகும் எண்ணமும் இதிலேயுண்டு. விழியத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, கடையிலே பழைய 'ராணி' சஞ்சிகையை மேய்ந்தபடி (கடைக்காரரின் ஹொங்கொங், அவருடைய மச்சானின் பாங்கொக் சம்பந்தமான துணுக்குகள் எல்லாம் ராணியிலே வந்திருப்பதாக கடை நடத்துனர் பக்கத்திலேயிருந்து சொல்லிக்கொண்டிருந்தார்) உள்ளே சுடுசோற்றைத் தள்ளிக்கொண்டிருக்க, 'ஓரெட்டுப் பொடியள் சாப்பிட உள்ளே பெருத்த சத்ததோடு வந்தான்கள்'. நான் முதுகை வாசலுக்குத் திருப்பிக் கொண்டிருந்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்ததால், ஒருமுறை திரும்பிப் பார்க்க, கொஞ்சம் 'இளந்தரவழிகள்' வருகிறது தெரிந்தது; திரும்பக் கருமமே கறிமேற் கண்ணானேன்; காதுமட்டும் இவர்களின் பேச்சிலே. கேட்டால், என் ஊர்த்தெரு, தெரிந்தவர்கள்பேரெல்லாம் சோற்றுமேசை, 'கபா', 'நாகூர் தர்க்காப்'படச்சுவரெல்லாம் தெறித்து என் காதிலும். ஆவலை அடக்க முடியாமல், அரைகுறைச்சாப்பாட்டோடு கையைக் கழுவிக்கொண்டு திரும்பிவந்தால், வந்தவர்கள் மூன்று மேசைகளை நிரப்பிக் கொண்டிருந்தார்கள்; ஆக, கொஞ்சம் தடித்த ஆள்மட்டும் கடைக்காரரிடம் எவனெவனுக்கு என்ன சாப்பிட வேணுமென்று பட்டியல் சமர்ப்பித்துக்கொண்டிருந்தார். ஆட்களின் முகங்களைப் பார்க்கமுன்னால், ஓரத்திலேயிருந்த மழுங்கின ஒற்றைக்கை அடையாளப் பரிச்சயம் ஒட்டிக்கொண்டது -'கூழங்கைத்தம்பிரான்'.

நான் நிமிர முன்னரே, 'சுகுணனண்ணன்'. சத்தம்போட்டுக்கொண்டிருந்தவர்களின் 'உடன் நிசப்தம் காதிலே விழுந்தது'.

/'ஆள் நல்லாக இருட்டித் தண்ணி தெளிக்காமல் கூறாய் விக்கவைத்திருந்த பயித்தங்காயாய் வதங்கிச் சுருண்டுபோயிருந்தான். முகத்திலே, இன்னும் அந்த பூனைமீசை மயிரும் கொஞ்சம் சின்னப்புதுப்பொக்களங்களும்'/

"எங்கையடா இங்காலை?" -'ஏன்' என்று தெரிந்தாலும், 'எங்கே' எங்கேயென்று தெரியவில்லை.

"கனடாக்கு" - சத்தம் தாழ்த்திச் சொன்னான்.

அதற்குள் மற்ற நாலைந்து பேர் என்னைச் சுற்றிவிட்டார்கள்; கூடப் படித்தவன் ஒருத்தன்; பதினைந்து வருடக்காலத்திற்கு முன்னாலான வேலூன்றிமுருகன் கோயிலிலே கூடப் பூப்பிடுங்கின சிநேகிதமொன்று; தவரஞ்சனியின் தம்பி; கட்டிடத்திணைக்களத்திலே வேலை செய்தபோது, பண்டகசாலைப்பொறுப்பாளருக்கு உதவியாளராக இருந்த ஒருத்தர். ஆளுக்கொரு கேள்வி; அங்குமிங்கும் முகத்தைத் திருப்பி யாரோடு பேசுவதென்று திணறியபோது, பட்டியல் போட்டுக்கொண்டிருந்த உச்சந்தலைமொட்டைத்தடியர் தடாலென்று இடையிலே பாய்ந்தார்-

"ஆர் நீர்?"

நிறைந்த காட்டமும் சந்தேகமும் குழைத்துப்பிசைந்து சளாரென்று அப்பிப்பிடிக்க முகத்திலடித்த கேள்வி.

/'ஆள்-இடம்-சூழல்-நேரம் நிதானித்துப் பார்த்துச் சொல்லவேண்டிய செய்தியல்லவோ இது?'/

"நீர் ஆர்?"

"நான் இவையளின்ரை ஏஜென்ஸி"

இப்போது அவரின் இடைமறித்த பாய்ச்சலுக்குக்கும் பயத்துக்கும் படாரென்ற கேள்விக்கும் காரணம் தெரிந்தது. "ஏஜென்ற்'மார் அப்படித் தண்டவாளத்துக்குக் குறுக்கே புகையிரதம் வரக் காத்திருந்து பாயும் காதற்சோடியாய்ப் பாயாமலிருந்தாற்றான் அதிசயம்.

"எனக்கும் அங்கைதான் ஊர்" - விளக்கம் சொல்லி முடித்தாலும், மிகுதி நேரத்திலே நகுலனோடும் மற்றவர்களோடும் பேசிக்கொண்டிருக்கும்போது, அவர் ஒரு 'வலுத்த அவதானமாக'ப் பார்த்துக்கொண்டிருந்தார்; இடைக்கிடை "ஹொங்கொங்கிலே மலிவான விடுதிகள் எவை?", "எனக்கு எத்தனைநாள் நாட்டிலே தங்க அனுமதி இருக்கிறது?", "குடிவரவு-குடியகல்வுத்திணைக்களத்திலே எனக்குத் தெரிந்த ஆட்கள் யாரேனும் இருக்கின்றார்களா?", "ஹொங்கொங் சரக்குக்கப்பல் நிறுவங்களிலே எனக்கு யாரையேனும் தெரியுமா? என்று காரியக்கண்ணான வினாக்கள் மட்டும் அவரிடமிருந்து.

நகுலேசனிடம் கொஞ்சம் ஊர் விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்பதைவிட, ஆட்தெரியாத ஊரிலே முன்னைப்பின்னைப் பெரும்பேச்சுப் பழக்கமில்லாவிட்டாலும் ஏதோ ஒரு முன்னைப்பரிச்சயமுள்ள ஒரு முகம் தெரிய ஓரிரு சொற்பேசுவதே பெரும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தரும் என்பதாலே கொஞ்சம் தனியே அளவளாவலாம் என்று ஆசை உந்தித்தள்ளிக்கொண்டிருந்தது. மற்றவர்கள் "இதென்ன இவனோடை மட்டும் அடிப்பிடிச்ச கறிச்சட்டிமாதிரிச் சுரண்டவும் கழறாமல் ஒரு ஒட்டல்?" என்று புருவத்தை உயர்த்தாமல் இருப்பதற்காக, முன்னைத்தொடர்பை மறக்கவில்லை என்ற அர்த்தம் உட்பொதிய ஆளுக்கொன்று அவர்களின் தொழில், உறவு சுட்டிப் பொதுக் கேள்வி விசிறிவிட்டு, கிடைத்த பதிலை ஆழக்கேட்காமலே, நகுலேசனிடம் "அண்ணன் எங்கையடா?" என்றேன்.

"யேமனிலைதான்" - 'யேமன் என்ற பெயரிலே வேறொரு அரபு நாடு இருக்கிறது என்பதை அவன் உணர்ந்திருக்கவில்லை' என்று தெளிந்தது.

இதற்கிடையிலே இவர்களின் முகவரின் பதட்டம் உச்சத்தை அடைந்தது அவருடைய முகத்திலும் சாப்பிட்ட காசு கொடுத்துக்கொண்டு, இங்கே திரும்பி மற்றவர்களின்மீது தேவையில்லாத பாய்ச்சல் பாய்ந்ததிலும் தெரிந்தது '"வெளிக்கிடுங்கோடா! இப்பிடியே ஊர்சுத்திப் பார்த்துச் சாப்பாடு திண்டு போகவே இத்தினையைக் குடுத்து வந்தனியள்? போய்ப் படிக்க வேண்டியதை, பாடமாக வேண்டியதைப் படிக்க வேண்டாமே? கனடா போகப்போறியளோ, இல்லை ஹொங்கொங்கோட திரும்பப்போறியளோ? ஏற்கனவே ரெண்டு நாடு இருந்து பாத்தாச்சுத்தானே? காணுமென்ன? ஞாபகம் இருக்கோ? செம்மறியளடா நீங்கள்."

-'படிக்க வேண்டியதைப் படிக்கவேண்டாமே??' - நான் குழப்பமுற்றேன்.

"சுகுணனண்ணை, போகவேணும்; இல்லாவிட்டால், இவன் ஏஜென்ஸிக்காரன் சும்மா குதிச்சுக்கொண்டிருப்பான்; இப்பவே கொஞ்சம் இண்டைக்கு நாளைக்கெண்டு ஆறுமாசம் வீட்டிலையிருந்து வெளிக்கிட்டு..பிறகு கதைக்கிறன்; உங்கடை போன் நம்பர் இருந்தாத் தாங்கோ"

-"ஆறுமாதமா!!" அடக்கமுன் கொஞ்சம் சத்தமாகவே அவிழ்ந்து கொட்டிவிட்டது; தொலைபேசி இலக்கத்தை எழுதிக்கொடுக்கும் பாவனையிலே குனிந்து எழுதினேன். முகவருக்குக் கேட்டதோ இல்லையோ தெரியாது.

எழுதியதை நகுலேசனிடம் நீட்டி, "பின்னேரம் ஏழுக்குப் பிறகு எப்பவும் கூப்பிடு; வீட்டிலைதான் இருப்பேன்" என்றேன்.

அவர்கள் ஒவ்வொருவராகச் சொல்லிக்கொண்டு ஒன்றாகப் போனார்கள்; போகும்போது, முகவர் நகுலேசனிடம் என்னைப் பற்றி விஷயம் 'புடுங்குவது' நன்றாகவே தெரிந்தது.


இரவு ஒரு பன்னிரண்டு மணியளிலே 'பேர்ள்' அலைவரிசையிலே ஏதோ படம் பார்த்துக்கொண்டிருந்தேன். அறை நண்பன் இலங்கையனாக இருந்தபோதும், முன்னர் தென்சீனாவிலே குவாஞ்சோவிலே வேலை செய்தபோது சீனப்பெண்ணொருத்தியைத் திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் இருந்தன. அவர்களுக்கு அப்போது ஹொங்கொங் வர அனுமதி கிடைக்காததால், அவர்களைக் ஹொங்கொங் எல்லையோடு இருக்கும் சீனாவின் சென்ஸன் நகரிலே வீடொன்றெடுத்துக் குடியமர்த்தியிருந்தான். திங்கள் காலை வந்து வெள்ளி மாலை போய்விடுவான். ஆக, வெள்ளியிரவு, சனி, ஞாயிறு எனக்கும் தொலைக்காட்சிக்கும் என் பாட்டுப்பெட்டிக்கும் என் நெல்லூர், காத்மண்டு நண்பர்களுக்குந்தான். எட்டாம்மாடிக்குடியிருப்பு இரட்டையறைத்துண்டை உத்திரப்பிரதேசத்து இரு சமையல் வல்லுநர்கள் வீட்டுக்காரரிடம் வாடகைக்கு எடுத்து, தாங்கள் வரவேற்பறை'யினைத் தட்டியடைத்து இரு அறைகளாக்கிக்கொண்டு, மீதி இரண்டு அறைகளையும் எங்கள் நான்கு பேருக்கும் வாடகைக்குக் கொடுத்திருந்தார்கள்; வெயிற்காலங்களிலே குளிர்சாதனத்துக்குத் தனிச்செலவு. அவர்களின் குடும்பம் டெகராடூனிலே; ஆண்டுக்கு ஒரு முறை ஒரு மாதம்-இரு மாதங்கள் போய்வருவார்கள்; மீதி நேரத்துக்கு ஒருத்தருக்கு ஒரு பிலிப்பினோ நண்பி; மற்றவருக்கு ஓர் இந்தோனேசிய நண்பி; வீட்டுப்பணியாட்களாகப் பணி பார்த்த பிலிப்பினோ பெண் முதற்தட்டியிலேதான் இருந்தாள்; தொலைபேசியையா, அல்லது இராம்சிங்கையா அதிக நேரம் கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பாள் என்று கொஞ்சக்காலம் புள்ளிவிபரம் எடுத்துக்கொண்டிருந்ததைத் தப்பாக எண்ணிக்கொண்டாளோ என்று சந்தேகம் வர புள்ளிவிபரவியற்றொழிற்பாடுகளை நிறுத்திக்கொண்டேன். ஒரு நாள் நானும் நேபாளி ஹரீந்திரசுபேதியும் மாதத்துக்கான உண்மையான வீட்டுவாடகை, வாயு, எரிசக்தித் தொகையை அங்கேயிங்கே தேடிக் கண்டுபிடித்துவிட்டோம்; மொத்தமாக எங்களிடம் வாங்கி விட்டுக்காரன், எரிபொருள், சக்தி எல்லாம் கொடுத்தும் அவர்களிரண்டு பேருக்கும் மாதத்துக்கு மூவாயிரம் ஹொங்கொங் டொலர் தொண்ணூற்றைந்திலே கையிலே மீந்துகொண்டிருந்தது; ஆனால், மற்றப்படி நல்ல மனிதர்கள்; அநேகமாக வாரத்துக்கு நான்கு நாட்கள் இரவுச்சாப்பாடு நானோ சுபேதியோ சமைத்ததேயில்லை; சமைக்கும் இந்திய உணவகத்திலிருந்து அவர்கள் எங்களுக்கும் இரண்டு பொட்டலம் கட்டிக்கொண்டு வந்து சாப்பிட வைத்துவிட்டுப்போய்விடுவார்கள்; "படிக்கிற (மாதிரி பேய்க்காட்டும்) பிள்ளைகள் சமைத்து நேரத்தை வீணாக்கக்கூடாது" என்பது அவர்கள் வாதம். அடிக்கடி ‘எங்களின் தம்பிமார்மாதிரி நீங்கள்” என்று சொல்லிக்கொள்வார்கள்; படம் தெரிந்து முகம் தெரியாத வீட்டாரைக் குசலம் எனக்கு வரும் தொலைபேசி அழைப்பிலும் கேட்பார்கள். காய்ச்சலாக அடிக்கடி படுத்துக்கொள்ளலாமா என்பதுபோல, கொஞ்சம் உடல்நலக்குறைவென்றாலும், அக்கறையோடு கவனித்துக்கொள்வார்கள். இந்த நிலையிலே மாதத்துக்கு நாங்கள் நாலுபேரும் மூவாயிரம் அவர்களுக்கு மேலதிக வருமானம்- அவர்கள் குடியிருப்பு வாடகை தவிர்த்தும் கொடுப்பது பெரிதில்லை; நாங்கள் கொடுப்பதற்கு வேறெங்கும் வீடும் எங்களுக்கு எடுக்கமுடியாது என்பதும் வெட்கத்தை விட்டுச் சொல்லவேண்டிய சங்கதி.

இப்படியான வாழிடத்திலே, எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்திருப்பதாக இராம்சிங் வந்து சொன்னார். அவருடைய 'அறை'க்கு வெளியேதான் ஒரு முக்காலியிலே தொலைபேசியிருந்தது. ஊரிலேயிருந்து வந்திருக்குமோ என்று ஓடிப்போய் எடுத்தேன்.

"ஆரெண்டு சொல்லு பார்ப்பம்"

/இதென்ன இழவுத்துப்பறிய மிரட்டல்! சொன்னால் என்ன, ஊருக்குச் சும்மா எயார் ரிக்கெற் தருவானோ? இந்த வழக்கமான வெள்ளி வம்புக்’கோல்’கள் ஆண்களுக்கு, அதுவும் தமிழிலே வருகிறதில்லையே!!/

குழப்பம்-தயக்கம்-மௌனம்-உடைப்பு

"தெரிஞ்ச குரலாக் கிடக்கு; ஆனா சரியா ஆரெண்டு தெரியேல்லை; இந்த 'ரிசீவரு'ம் கொஞ்சம் இரைச்சலான 'பறண'காலத்துச் சாமான்"

"நானடா; முன்னீஸ்; தம்பி இண்டைக்கு உன்னைச் சாப்பிடப்போன இடத்திலை கண்டவனாம்; நம்பர் குடுத்தியாம்; நான் அவனுக்குக் 'கோல்' எடுக்கேக்கை சொல்லி நம்பர் தந்தான்; அதுதான் கதைச்சுக்கனகாலமெல்லே; எடுத்தனான்."

ஊரிலே கடைசியாகக் காணும்போதே சும்மா கதைக்காமல் தலையாலே ஒத்தூதிப்போனவன், காசு விட்டுத் தொலைபேசி இரவிலே எடுத்துக் 'கதைச்சுக் கனகாலம்' என்று சொல்லும்போது, அது 'சும்மா நட்புக்காக மட்டுமே வந்ததாக இருக்கமுடியாது' என்று உள்ளுக்குள்ளே ஏதோ சொல்லியது.

"சொல்லு; எப்படியடா இருக்கிறாய்?"

"அப்படியேதான்; இன்னும் 'கேஸ்' முடியேல்ல; உண்மையா இயக்கத்திலையிருந்து பிரச்சனை எண்டு வந்தவங்களுக்கு, ஆமியிட்டை அடிவாங்கி ஓடிவந்தவங்களுக்கு அகதி எண்டு கிடைக்காமப்போய், சும்மா வெளிநாடு பாக்க ஓடிவந்த கள்ளங்கள் ஒண்டிரண்டுக்கு இருக்க ஓமெண்டு கிடைச்சதும் இருக்கு <”ம்ம்!! வெளிநாடு பாக்க ஓடிவந்தவங்கள்!? பேப்பகிடி விடுறான். . .” - முதல் முறை கேள்விப்படும் சங்கதி>" - ஆண்டுக்காலங்களுக்குப் பின்னால், முதலிலே பேசும் ஒருவன் இப்படி வாழ்க்கை வெறுத்துச் சொல்லும்போது அவனின் உளநிலையின் தாழிடம் புரிந்தது; ஆனால், பதிலாக என்ன சொல்வதென்று தெரியவில்லை- "அதுக்குள்ளை இவனொருத்தனையும் கனடாவுக்கு அனுப்பவேணும்; அவன் ஏஜென்ஸிக்காரன் காசை ஒரு இலச்சம் ரெண்டு லச்சமெண்டு தவணை தவணையா தானிறக்கிற நாடெல்லாத்துக்கும் கணக்குப்போட்டு இப்ப மொத்தமா ஆறு இலச்சம் வாங்கியிட்டு இன்னமும் சுத்துறான்; இப்ப இன்னும் ஒண்டரை லச்சம் கையிலை வை எண்டு நிக்கிறான்"

தொலைபேசியின் வருகை கொஞ்சம் புலப்படத்தொடங்கியது; நான் அவன் சொல்வதிலே ஈடுபாடு இருக்கிறது (- /“இவர்கள் எல்லாம் படிப்பைவிட்டு நாடு என்று போக, நான் எனது வாழ்க்கையையே பார்த்துப் பல்கலைக்கழகத்தைக் குறிவைத்த ஆள்"/-) என்பதைக் காட்ட ஏதாவது கேட்கவேண்டும்...."ஆறு இலச்சமோ?"

.."ஓமடா; முதலிலை வெளிக்கிட்ட நேரம் இந்தோனேசியாவுக்குள்ளாலை கொரியா-ஹவாய்-வான்கூவர் றூட் பிடிச்சிருக்கிறனெண்டு சொல்லிக் கொண்டுபோய் ரெண்டு மாதம் ஜகார்த்தாவிலை இறக்கி ஒரு வீட்டிலை அடைக்காத குறையாய் இவங்களை வைச்சிருந்தான்; பிறகு இவங்களுக்கு முதலிலை போன 'பச்' சியோல் ‘எயார்ப்போட்’டிலை கதைக்கத்தெரியாமக் கதைச்சுப் பிடிப்பட்டதாலை றூட் உடைஞ்சுபோட்டுது எண்டு திரும்ப எல்லாரையும் பாங்கொக்கிலை கொண்டுபோய்ப் பாஸ்போர்ட்டிலை தலைமாத்திக் கொண்டுபோவம் எண்டு ஒண்டரை மாதம்; பிறகு அதிலையும் ஏதோ சிக்கலெண்டு சொல்லிக்கொண்டுபோய், கொழும்பிலை திருப்பி ஒண்டரை மாதம் வச்சிருந்துபோட்டு, இப்ப உங்கை ஹொங்கொங்குக்கு ரெண்டு கிழமையாக் கொண்டு வந்து ஏதோ கப்பலிலை ஏத்துற 'பிளானி'லை நிப்பாட்டி வச்சிருக்கிறான். அதை ஒப்பேத்த கொஞ்சப்பேரிட்ட அவசரமாய் ஏதோ கையெழுத்தெடுக்கவேணும், காசு கைக்குள்ளை தள்ளோணும் எண்டு இன்னும் ஒண்டரை தா எண்டு நிக்கிறான்; இண்டைக்கு ஏஜண்டோட கதைச்சானான்; நாங்களும் அகதியாத்தான் வந்தனாங்கள்; இவன் விடுகிற விடுகைகள் எங்களுக்குத் தெரியாதெண்டு நினைக்கிறான்.இருந்த ஆத்திரத்திலை வீட்டை கொண்டுபோய் ஆளைவிடு எண்டு தாறுமாறாய் ஏசிப்போட்டன்; ஆனா, மூளைச்சூடு கொஞ்சம் ஆறின பிறகுதான் பாத்தன்; இவ்வளவத்தைச் செலவழிச்சுப் போட்டம்; போனதுதான் போகுது; கடைசிச் 'ஸொட்'டையும் அடிச்சுத்தான் பாப்பமே; தப்பி வந்தானெண்டால், ரெண்டு வருசத்திலை உழைச்சதுப் போனதைக் கட்டிப்போடுவான்; இல்லாட்டிப் பாப்பம்; இன்னும் நாலு வருசம்கூட நான் முறியவேணும்; ஆனால், குறைஞ்சது அவனை இங்காலை கொண்டர என்னாலை ஆனதைச் செய்தனெண்ட திருப்தியாவது மிஞ்சும்”

.... சமதர்ம ஈழத்தை நான்கு ஆண்டுகளுக்குள்ளே மலர்த்திக் காட்டுகின்றோம் என்று கருத்துக்களையும் கனவுகளையும் கைகளையும் நம்பிக்கொண்டுபோன மார்க்ஸியக்கர்மவீரர்களை இந்த நிலையிலே கொண்டுவந்து நிறுத்திய காலத்தையும் அவர்களின் இயக்கத்தலைவர்களையும் அவர்களை இயக்கிய சகுனிகளையும் எண்ணக் கசிந்தது. நான் எனது இரவுணவுக்கான இறைச்சிக்கிளியைமட்டும் குறிவைத்துக்கொண்டோடியவன்....

"நானேதும் குடுக்கவேணுமெண்டால் சொல்லு; ஒரு இலச்சமெண்டால் குடுக்க மட்டுமட்டாய் பாங்கிலை கிடக்குது; இன்னும் இருந்தால், தந்துபோடுவன்; ஆனால், இவ்வளவுதான் கையிலை கிடக்கு; வேலையிலையிருந்தனெண்டால், குடுத்திருக்கலாம்; படிச்சுக்கொண்டு கஷ்டம்; உனக்குத் தெரியாததே?"....

"இன்னும் ஒரு அரை வேறையாரிட்டையும் கடன் வாங்கிக்கொண்டு குடுத்தியெண்டால், ஒரு நாலு மாதத்திலை அனுப்..."

"கடன் வாங்கிற அளவுக்கு இங்கை எனக்கு ஆக்களைத் தெரியாதடா; எங்கடை தமிழாக்களும் இங்கை எனக்குத் தெரிஞ்சில்லை"......

செந்தில்ராஜன் தான்-மனைவி-பிள்ளைகள்-இரட்டைநாட்டுக்குடியிருப்பு என்ற சங்கிலிச்செலவுக்கே போதாதநிலையைப் பியர் பொங்கிப் போகப்போகச் சொல்லிச் சொல்லிப் புலம்புகிறவன்; அவனிடம் கேட்கமுடியாது.

சுபேதி, சுப்பிரமணியம் ஆகியோரிடம் கேட்கும் சங்கதியுமல்ல; அப்போதெல்லாம் இராமன் முன் போரிலே தோற்ற என்னூரான் நெஞ்சமாய் கடனென்று எங்கும் போகாது வாழ நான் கற்றிருந்த கட்டுப்படியான காலம்; தவிர, விஷயம் இதுதான் என்று சொல்லிக் காசைக் கேட்டால், ஹொங்கொங் விமானநிலையம் முதல் இலங்கை உபதூதுவராலயம்வரைக்கும் புலிக்குக் காசு சேர்க்கிறான் என்றெல்லாம் அநியாயத்துக்குக் கட்டுக்கதை பரவலாம்.....

"சரி நான் எப்பிடியெண்டாலாவது அநத அரையை அனுப்புறன்; உன்ரை ஒண்டை ஏலுமெண்டால், இந்தச் சனிஞாயிறுக்குள்ளை குடு"....

"சரி"

தொலைபேசியை வைத்துவிட்டு படுக்கையிலே போய் சாய்ந்தபோது, ஒரு பக்கம் ஏதோ தசாப்தங்களாக இருந்த குற்றவுணர்வு மறைந்திருந்ததாகத் தெரிந்தது; ஆனால், இதுவரை நாள் என் வீட்டுக்கென்று ஒரு 'சல்லி' அனுப்பாததும் உறைத்தது.

அடுத்த நாட்காலையிலே நான் எழும்பமுதல் தொலைபேசி உலுப்பிக்கொண்டெழும்பி நின்று சதங்கை கட்டிக்கூத்தாடியது; நகுலேசன்.

“சுகுணனண்ணன்; அண்ணை நேற்றைக்கிரவு உங்களோட கதைச்சுப்போட்டு எனக்குக் ‘கோலெ’டுத்துச் சொன்னவர்; ஒண்டு நீங்கள் தருவியளெண்டார்; மிச்ச அரையைக் கொஞ்சம் பிந்தியாவது ‘ஏஜெண்டி’ட்டைத் தாறனெண்டு தவணை கேக்கலாம். உங்களுக்கேலுமெண்டால், இண்டைக்...” - குரலிலே தயக்கம் தொங்கிக்கொண்டிருந்தது.

“உடனை தாறதிலை எனக்கேதும் பிரச்சனையில்லை; ஆனால், இண்டைக்குச் சனியெல்லோ? கணக்கிருக்கிற ‘ஹங்செங் பாங்க்’ மூடியிருக்கும்; ஒரேயடியாய் ஒண்டு எடுக்கிற அளவுக்கு ‘ஏரியெம் காட்’ விடாதெண்டு நினைக்கிறன்; அதால ஏலுமானதை இண்டைக்கும் மிச்சதை நாளைக்குமாய் பிரிச்செடுத்துத் தாறன். பிரச்சனையில்லையோ?” - பிரச்சனை அவனுக்கு இருந்தாலும் இதுதான் இயலுமான ஒரே வழி.

“சரி”

“எங்கை கொண்டந்து தாறது? ஸ¤ங்கின் மன்ஸனிலே எத்தினையாம் தட்டிலை உன்ரை அறையிருக்குது?”

“ஸ¤ங்கின் மன்ஸன்..” - யோசித்தான் போலும்; சத்தத்தைக் காணவில்லை - “இவன் அங்கை இருக்கிறதில்லைப் போல” - “விடு; நான் நீங்கள் நேற்றைக்கு நாங்கள் சாப்பிட்ட கடையிருந்த கட்டிடத்திலேயே எங்கையோ தங்கியிருக்கிறாய் எண்டு நினைச்சுப்போட்டன்”

“நாங்கள் அந்த நிலத்துக்குக் கீழால போற ரெயினிலை போய், ‘தை-(ப்)-போ’ எண்ட இடத்திலை இறங்கிப் பிறகு உள்ளை கொஞ்சத்தூரம் நடக்கவேணும்; அங்கைதான் வீடொண்டு ஏஜெண்டின்ரை இங்கத்தைய வேலை செய்யிற பாக்கிஸ்தான்காரன் எடுத்து எங்களையும் இன்னும் கொஞ்சப்பேரையும் தங்க வைச்சிருக்கினம்.”

“அப்ப காசை என்ன செய்ய?”

“அண்ணன், காசெண்டால், ஏஜெண்ட் கனடாக்குக் கூட்டிக்கொண்டு போகேலாட்டிலும் நேற்றைக்குச் சாப்பிட்ட இடத்துக்குக் கொண்டந்திடுவான்” - சிரித்தான்; நகைச்சுவை உணர்வு இவனுக்கு இவ்வளவு இருப்பது அப்போதுதான் எனக்குத் தெரியும்; வழக்கமாக அண்ணனின் சிநேகிதர்கள் என்று ஒதுங்கிப் போய்விடுகிற ஆள்; இன்றைக்குக் காசுக்கு ஒரு வழி பிறந்திருக்கிறதென்பதால், கொஞ்சம் இலேசாகி உள்ளாள் தெரிகிறான்.

“சரி; என்ன நேரமெண்டு சொல்லு; நான் ரெண்டாம் மாடியிலையிருக்கிற தமிழ்வீடியோக்கடையிலை, அல்லது பக்கத்திலையிருக்கிற பஞ்சாபிச்சமோசாக்கடையிலை காத்திருப்பன்”

“மத்தியானம் மூண்டு மணி”

தொலைபேசியை வைத்துவிட்டு அறைக்குத் திரும்பவில்லை; அடுத்த அழைப்பொன்று; கெயிட்டி தோ. கெயிட்டி, அதே பல்கலைக்கழகத்திலே சுற்றுலாத்துறையிலே இளமாணிப்பட்டத்துக்குப் படித்துக்கொண்டிருந்த ஹொங்கொங் மாணவி. சீனா பிரிட்டனிடமிருந்து ஹொங்கொங்கை எடுத்தால், தம்நிலை என்னாகுமோ என்ற அச்சமும் உள்ளிருக்க, அவுஸ்ரேலியாவிலே பெற்றோருடன் வசிக்கப் போய், இவள் சுற்றுலாத்துறையினைக் கற்றுக்கொள்ள இங்கே மீண்டு அம்மம்மாக்காரியுடன் தங்கிருந்தாள். நூலகத்திலே ஏதோவொரு ஆங்கில விழியத்துக்காக முண்டியடித்ததிலே கொஞ்சக்காலம் முன்னால், அறிமுகமானவள். ஊறுகாய், சமோசா சாப்பிட நான் கண்ட ஓரிரு சீனமுகங்களிலே அவளுமொருத்தி. எப்போதாவது, ஸ¤ங்கின் மன்ஸனிலே சமையலறைச்சாமான்கள் வாங்க நான் போனால், ஹொங்கொங்குக்கு வந்து முட்டை அவிக்கப்பழகிய எனக்கு தென்னாசியச்சாப்பாட்டுவகைகளைப் பற்றி அதிகம் தெரியும் என்ற நம்பிக்கையிலே தேர்ந்தெடுக்க, என்னைக் கூடத் தொத்திக்கொள்ளும் ஆள்.

“இன்று ஸ¤ங்கின் மன்ஸன் போகிறாயா? போனால், நானும் வருகின்றேன்; அந்தப்பாக்கிஸ்தான் ஊறுகாய் வாங்கவேண்டும்”

/அந்த எண்ணெயிலே மிதக்கும் பாக்கிஸ்தான் ‘அயூப் கலப்பு ஊறுகாயை’ப் பாக்கிஸ்தான் ஆட்களே வாங்குவதில்லை; ஏதோ இவளை நம்பித்தான் அந்தச்சீக்கியனும் அவன் மகளும் முதலாளி-அவன் மனைவியும் கொண்டு வந்து குவித்ததுபோல, இவளது கொள்வனவு/

“சாமான் நேற்றைக்கே நான் வாங்கிவிட்டேன்; ஆனால், இன்றைக்கு எனது நண்பன் ஒருவனைச் சந்திக்கப்போகவேண்டும்; வருகிறதானால், வா”

ஒரு மணி போல, அருகிலிருந்த ஹான்செங் வங்கியிலே அட்டையைப் போட்டுப் பணத்தை எடுத்து, நூலகத்தின் முன்னால் கெயிட்டியைச் சந்தித்துக்கொண்டு, அப்படியே சாத்தம் வீதியோடி, முடங்கி, குறுக்கி, திரும்பி, நடந்து, நேதன் வீதியிலே ஏறி, ஸ¤ங்கின் மன்ஸனுள்ளே நுழைந்தோம். அவள், ஒவ்வொரு ஊறுகாய்ப்போத்தலைத் தூக்கித்தூக்கி, ஆட்டிக்குலுக்கிச் சரித்து, எண்ணெய்யோடு மாங்காய்த்துண்டும் எலுமிச்சம்பழக்காற்றுண்டும் எப்படிச் சல்லாபம்-சமரசம் பண்ணுகிறது என்று பார்த்துக்கொண்டிருக்க, எனக்கு வைத்தியசாலை மருந்துகலக்கிகள்தான் ஞாபகம் வந்தார்கள்; கூட, நான் இஷ்டப்படி கண நேர உளநிலை உழைச்சலுக்கேற்ப வல்லுநன் ‘சரிபிழை’ கருத்துச் சொல்லிக்கொண்டிருந்தேன். வாங்கி முடிந்து மேலேயேற சமோசாக்கடை மேசையிலே, நகுலேசனும் தரகரும்.

“மூண்டுக்கெண்டுதானே சொன்னனான்; வெள்ளனவே வந்திட்டியளோ?”

என் கேள்வி என்மேலேயே தெறித்துக் கொக்கியது; கதிரையிலே இருந்து கொண்டிருந்தவர்கள் பார்வைகள் என் காதுச்சோணையை உராய்ந்துபோய் எனக்குப் பின்னால், இரண்டு ஊறுகாய்ப்போத்தல்களை, பூனைகளுக்கு அப்பம் பிரித்த குரங்குபோல கைப்பாரவித்தை பார்த்துக்கொண்டிருந்த சீனமங்கையிலே நின்றன. அவள் “ஹலோ!” என்றாள்.

‘எக்ஸ்’ ஆனவள் இன்னாரென்று ‘வை’யிற்கும் ‘ஸற்’றுக்கும் தீர்வு சொல்லி, மறுதலைகளையும் முதற்றலைக்குச் சொல்லி வைத்தேன்.

“இராசாங்கம் அண்ணனுக்கும் கப்பற்கொம்பனிக்காரார் ஒராளை கப்பற்காரற்றை ஹொட்டலிலை பாக்கவேணுமெண்டதால, வெள்ளன வந்தம்”

/’என்னைப் பாத்துப் பதிலைச் சொல்லனடா’/

தரகு இராசாங்கம், “அப்ப நான் போய் அவனைப் பாத்திட்டு வாறன்; நீங்கள் நான் வரக்குமுதல் -ஒரு மூண்டரைக்கு முதல்- கதைச்சு முடிஞ்சால், இதால திரும்பி, கப்பற்காரர் லொட்சுக்கு முன்னாலை இருக்கிற முதல் வாங்கிலை இருங்கோ; சந்திக்கிறன். நான் வெள்ளனக் கதைச்சு முடிஞ்சால், இங்கை வாறன்” - கெயிட்டியைப் படியிலே இறங்கப் பார்த்து என்னையும் ஏற உற்றுப்பார்த்துப் போனார்.

நான் திரும்பிக் கெயிட்டியிடம் “நான் கதைத்துமுடிந்து புறப்பட இன்னும் இரண்டு மூன்று மணிநேரங்கள் எடுக்கும். நீ என்ன செய்யப்போகிறாய்?” என்றேன்.

“நான் போகிறேன். ‘ஸாத்தினி’லே என் நண்பி ஒருத்தியைச் சந்திப்பதாகக் கூறியிருக்கின்றேன்; நாங்கள் ‘Something to Talk About’ பார்க்கப்போகிறோம்.”

நகுலேசனைப் பார்த்து ‘பாய்!’ என்றாள்; யூலியா ரொபேர்ஸ் விசிறி ஊறுகாய்ப்போத்தல்களை இரட்டை ஆறுமாதக்குழவிகள்போல வருடிக் கட்டிப்பிடித்துக்கொண்டு படியிலே இறங்கிப் போய்விட்டாள்.

பத்திரமாய்க் கண்ணாலே கொண்டுபோய்விட்டுப்போட்டு வந்த நகுலேசன், “நீங்கள் கொங்கொங் பாசை கதைப்பியளே?” என்றான்.

“இல்லை” என்றேன்.

“அப்ப எப்படிச் சமாளிக்கிறீங்கள்?”

“இங்கை என்ரை இங்கிலீஸை வைச்சுக் கொண்டு தாக்காட்ட ஏலுமானளவு தாக்காட்டிறன்; பொதுவாய்ச் சனத்துக்கு வெள்ளைக்காரனிருக்கிறதால இங்கிலீஸ் தெரியும். மிச்சப்படி, ‘ம்’, ‘யட்’ ‘சி’ எண்டு வாய்நட்டுவமும் கைநட்டுவமுந்தான்”

சின்ன உறைக்குள்ளே சுற்றி நாடா வாயட்டிக் கொண்டு வந்த காசை மேல்மாடியன்றிலே இருந்த அசோகா நேபாள உணவகத்துக்கு ஏறும்போது, ஆள்நடமாட்டமில்லாத மாடிப்படித்துண்டிலே அவன் கையிலே கொடுத்து, வழக்கமாகக் காசைக் ஹொங்கொங்கிலே கொண்டு திரியும்போது பத்திரப்படுத்துவதை முன்னிட்டுச் சொல்லவேண்டிய அத்தனை அறிவுரைகளும் உபயமாகக் கொடுத்தேன். “மிச்சதை நாளைக்கு இதே நேரம் வந்தெடுக்கிறேன்” என்றான்.

தரகனைப் பற்றி விசாரித்தேன். எங்கள் ஊர்க்காரர்தானாம்; எழுபதுகளின் இறுதியிலே கப்பலிலே பணிபுரியப்போய், பதினைந்து வருடங்களின்பின்னால், ஊரிலே வந்து கல்யாணம் கட்டிக்கொண்டு கனடாக்கு ஆளனுப்பும் பணி செய்கிறார் என்றும் இதுவரை இருபது பேரைச் சிக்கலின்றிக் கொண்டுபோய்ச் சேர்த்த புண்ணியத்தைக் கட்டிக்கொண்டவர் என்றும் சொன்னான். ஊரிலே அவரின் பிறப்பிடம், வாழிடம் அறிய வந்தபோது, சந்திரகுமாரியின் மூத்தண்ணன் என்று தெரியவந்தது. அவனுக்கு ராசாங்கத்தைப் பற்றி ஏதுவும் கெட்ட அபிப்பிராயம் இருப்பதுபோலத் தெரியவில்லை. ஆளடையாளம் தெரியாமல் மூன்றாம் நாலாம் ஆளூடாக தெரியாத நாட்டிலே திக்கற ஏமாற்றும் தரகர்கள் மத்தியிலே, காலமாய் ஊருக்குள்ளே தெரிந்த ஆளோடு போவது நம்பிக்கையானதும் சுலபத்திலே ஏமாற்ற முடியாது என்றும் அவனின் கருத்து இருந்ததிலே, ஊரெண்ணத்தோடு ஏங்கும் எனக்கு என்ன மாற்றுக்கருத்தும் இருக்க வாய்ப்பிருக்கவில்லை.

“சரி வா. அவர் தற்செயலாக வந்து எங்களைத் தேடினாலும். கீழே போய்க்கொண்டே கதைப்போம்” என்று கீழிறங்க, எனது வினாக்கள் ஊரைப் பற்றியும் அங்குள்ளவர்களைப் பற்றியும் தாவிக்கொண்டே போனது.

ஆள் சமோசாக்கடைக்கு முன்னால் இல்லாததால், வெளியிலே வந்து கப்பற்காரர் விடுதிக்குப் போகும் சந்தியிலே திரும்பி கூடிக் கதைத்துக்கொண்டிருந்த தெற்காசியப்பணிப்பெண்கூட்டங்களைக் கடந்து போக, இடையிலே என் பெயரைச் சொல்லி யாரோ அழைப்பது கேட்டதால் நின்றோம். முத்திரை இயந்திரத்துக்குப் பக்கத்துப்படியிலே அமர்ந்திருந்த சுனித்ரா சுற்றி மூடியிருந்த பெண்களைப் பிரித்தபடி. சிங்களத்திலே “எப்படி?” என்றாள்.

“நலமே. இ·து என்னோடு படிக்கப் புதிதாக ஹொங்கொங் வந்திருக்கும் இந்திய நண்பன்; அதுதான் ஊர் காட்டிக்கொண்டு போகின்றேன். லலித் நலமா?” என்று என் அரைகுறைச்சிங்களத்திலே பதிலைச் சொல்லிக்கொண்டே நகர்ந்தேன்.

“நலம்; நல்லது; போய் வா; புதுப்பையனை உன் கெட்டபழக்கமெல்லாம் சொல்லிக்கொடுத்துக் கெடுக்காதே” என்றாள்; நல்ல காலம்; அவளுக்கு எழும்பி இங்கே வந்து விடுப்புக் கேட்கப் ‘பஞ்சி’யோ அல்லது அங்கே ஓவ்வொருத்தியினதும் வாரநிகழ்வின் சாரம் பெரிதாகிப் போனதோ விடவில்லை என்று பட்டது. நல்ல பெண். லலித்தும் என் அறைப்பங்குதாரன் செந்திலும் கொழும்பிலே ஆளையாள் நன்றாக டி. எஸ். சேனநாயக்கா வித்தியாலத்திலே படிக்கும்போது அறிந்தவர்கள். லலித்தின் காதலி சுனித்ரா. நல்ல பெண். எப்போதாவது, லலித் செந்திலைச் சந்திக்க வரும்போது கூட வர அறிந்து பழக்கம். இலங்கை அரசியல் ஹொங்கொங்கிலே நாங்கள் பியர் குடிக்கும்போதும் மறந்து பேசுவதில்லை. ஆனாலும், நகுலேசனை வந்த-நிற்கும்-போகும் விடுப்புக் கேட்காதது சந்தோஷமாகத்தான் இருந்தது.

இவன் நிறைந்த பிரமையும் குறைந்த சந்தேகமும் பிடித்தவனாகிப் பக்கத்திலே நடந்தான்.

“சுகுணனண்ணை; இங்கை கன சிங்களவங்கள் இருக்கிறாங்களோ?”

“இருக்கிறாங்கள்”

“இவங்களாலை இங்கை தமிழாக்களுக்கேதும் பிரச்சனையில்லையோ?”

“இங்கை அவனவனுக்கு அவனவன் பிரச்சனையைத் தாக்காட்டுறதே கஷ்டம்; கொஞ்சம் நடந்தியெண்டால், ஹொங்கொங் பொலீஸ்காரங்கள் உன்ரை ஐடண்டிக்காட்டைக் காட்டக் கேக்கேக்கை, சிங்களவனா தமிழனா பாக்கமாட்டான். என்ரை முகமும் உன்ரை முகமும் அவனுக்கொரே மாதிரித்தான். அதிலையும் விசாமுடிஞ்சு நிக்கிறானோவெண்டு சந்தேகம் வந்து ஹெட் ஒப்பீஸ¤க்கு வயலெஸால நம்பரடிச்சு ஆள் விபரம் கேப்பான். ரெண்டுபேரும் பிறத்தியான் எண்டு முகத்தோட உலாவேக்குள்ளை சிங்களவன் தமிழன் பிரச்சனை வில்லங்கமாய் இலங்கைப் பிரச்சனை கதைக்கப்போனாத்தான். சனத்துக்கு அதுக்கு நேரமில்லை; அதை விடப்பிரச்சனையள் கனக்க. தனிப்பட்ட சண்டையிலை பாவிக்க வெளிக்கிட்டால் மட்டுந்தான்.” -/ஆனாலும், எனக்கின்னும் நானேன் இவன் இந்தியச்சிநேகிதன் என்று சுனித்ராவுக்குப் பொய் சொன்னேன் என்று தெரியவில்லை; நல்ல காலம் இது சிங்களம் என்பதற்குமேலே, அவனுக்கு எனக்குத் தெரிந்தளவும் சிங்களம் தெரியாது; அவளும் நாளைக்கு இவனை இராசாங்கம் மற்றவர்களுடன் அடையாளம் காணுமளவுக்குக் கையைக் கவனித்திருக்கமாட்டாள்/ நகுலேசன் நடக்கும்போது, தன் கைக்குறை தெரியாமல், எந்த வெயிலிலும் முழுக்கைச்சட்டைபோட்டு, இரண்டு கைகளையும் காற்சட்டைப்பைகளுக்குள் வைத்தபடிதான் உலாவுவான்.

“சொன்னாப்போல, கையிலை பாஸ்போட் வைச்சிருக்கிறியே? இப்ப பொலிஸ்காரன் வந்தால், காட்டோணும்.” - பதைப்பு என்னுள்ளே எகிறியது; இ·து அடிக்கடி அவர்கள் சீருடையிலும் சீரில்லாத உடையிலும் உலாவுமிடம். ‘உலகத்திலே அநியாயங்கள் தோன்றுமிடத்திலே நேரத்திலே நான் அவதரிக்கின்றேன்” என்கிற மாதிரிப் பேசுகிறான் கீதாநாயகன். தோன்றமுதலே ஏன் அதைத் தடுக்கக்கூடாது என்பதைமட்டும் எந்தப்போர்க்களத்திலும் புரியச்சொல்வதாக அவனுக்கு உசிதமில்லைப்போலும்.
“நேர்மையாய் வாழலாமெண்டால் சொந்த இடத்திலையும் ஐடியோட அலைச்சல்; அதைவிட்டுட்டுக் கள்ளமாயோடுவமெண்டு இங்கை வந்தால், இங்கையும் காட்டு பாஸ்போட்டை” - தன் நகைச்சுவையைத் தானே இரசித்துச் சிரிக்கின்றான் . . . .

... “இருக்குதண்ணன்; இராசாங்கம் அண்ணர் இப்ப போகேக்கை கையிலை தந்திட்டுப்போனவர்; திருப்பிப்போகேக்கை அவரிட்டைத் திருப்பிக் குடுக்கோணும். எல்லாற்றை ‘புத்தகமு’ம் அவரிட்டைத்தான். அவர் கனடா எம்பஸியிலை இன்னும் கன இடத்திலை அதைக் காட்டி அதிலையும் கப்பற்புத்தகத்திலையும் கப்பற்கொம்பனியிலையும் சைன் எடுக்கோணும். அவள் என்ன கேட்டவள்?”

‘சும்மா சாட்டுக்கொரு குசலக்கேள்வி’யென்று ‘சடைஞ்சு’ சொன்னபின்னர், இலங்கை-கனடாப்போக்குவரத்து கொஞ்சம் விவகாரமான விடயமென்று முன்னாலே தெரிந்தபோதும், ஊர்க்காரனைக் கண்டபோதிலே வந்த மகிழ்ச்சியிலே தோன்றாத ‘இவன் எப்படி போகின்றான்?’ என்ற கேள்வி இதுக்குப் பிறகுதான் எனக்கு எழுந்தது.

அவனிடம் கேட்போமென்று வாயை உன்னினேன். அதற்குமுதல், கப்பல் விடுதி முன்னால், பிரிந்து கிளம்பும் பாங்கிலே இராசாங்கமும் வழியனுப்பும் தோரணையிலே உயர்ந்த ஒரு சீனரும் நிற்பது தெரிந்தது. எங்களைக் கண்டவுடன், இராசாங்கம் எங்களை நோக்கி நடக்க, கொஞ்சம் பின்புறம் காட்டி நடக்கும் அவரையும் எங்களையும் பார்த்துகொண்டிருந்த சீனர் திரும்ப விடுதிக்குள்ளே போனார்.

“வாங்கீட்டியோ?” - இராசாங்கம் அவதிப்பட்டார்.

“ஓம்; மிச்சது நாளைக்குத் தருவார்” - இவன் காற்சட்டைப்பையிலிருந்து எடுத்துக் கொடுக்கப்போனான்.

“மடையா! பொக்கற்றுக்குள்ளையே பொத்தி வச்சுக்கொள்ளடா; கள்ளன் காவாலியள் கண்டமாதிரி உலாவுற இடத்திலை, ஏதோ சிகிரட் பத்த நெருப்புத்தாறவன் மாதிரி ஸ்ரைலாய் எடுத்துத்தறாய். ஒழுங்கான கையையும் காசோடை வெட்டிக்கொண்டோட ரெண்டு கையுமில்லாமல் கனடாவுமில்லாமல் ஊருக்குப் போற எண்ணமே? பத்திரமாய் வைச்சு வீட்டை வந்து தா” - என்னதான் கனடா கொண்டுபோகும் தரகரென்றாலும், என் நண்பனின் தம்பியை -அதுவும் இயற்கையிலே உறுப்புக் குறைப்பட்டனை- என் முன்னாலேயே ஏசுவது வெறுப்பையும் ஆத்திரத்தையுமேற்றியது. அவன் முகத்தைப் பார்த்தேன்; எந்த மறைக்குணக்குறியும் தோற்றாமல், சிரித்துக்கொண்டு, “சரியண்ணை; விடுங்கோ” . . . கண்காணாக்கனடாவின் தவனமா நாட்டிலே போகவரத் தமிழனெனப் பட்ட அடியுதை அவமரியாதைகளின் பின்னான சகிப்புத்தன்மையின் பக்குவமா அல்லது “எதையும் சொல்; ஆனால், எப்படியாவது நடந்தாற்சரி” என்ற காரியக்குறியா இந்தச் சிரிப்பின்கீழே பதுங்கிக்கிடந்தது என்று எனக்குச் சரிவரச் சொல்லமுடியவில்லை. ஆனால், ஏதோவொரு காரணத்தால் இந்தச்சிரிப்பு எனக்கும் பரிச்சயமானது என்று தெரிந்தது.

யாரையோ எங்கள் பின்னால் தேடினார்; இன்றைக்கு என்னோடு நன்றாகப் பழகினவர் போலப்பேசினார் - “தம்பி, உங்கட ஹொங்கொங்காரி . . . “ . . .”போட்டா”.

சின்னதாயரு வாட்டம் அலைபோல, நெற்றிச்சுருக்கம்-இமை-கண்-மூக்குநுனி-உதடு வந்து அவர் முகமிருந்து கழிந்துபோனது; பெருமூச்சு விட்டார்.

“அண்ணை; நீங்கள் சந்திரகுமாரியின்ரை மூத்தண்ணரோ?” - கேட்டுவிட்டுத்தான், அவர் அதையெனக்குச் சொன்னதுக்கும் நகுலேசைக் ‘கிழிகிழி’யென்று பிய்க்கப்போறாரோ என்றும் பயம் வந்தது; அவன் முகத்தைக் குற்றவுணர்வுடன் பார்த்தேன்; அவன், இங்கிலாமல் அவருக்குப் பின்னாலே போகும் இரண்டு பிலிப்பினோப்பெண்களைக் கவனித்துக்கொண்டு நின்றதை நானும் கவனித்தாயிற்று.

அவரிடமிருந்து சின்ன வியப்புக்குறியும் மகிழ்ச்சிக்கண்மிளர்ச்சியும் தெரிந்தன; “உங்களுக்குச் சந்திராவைத் தெரியுமோ?”

“அவவோடதான் கனகநாதன் மாஸ்ரரிட்டை ரியூசன் படிச்சனான்”

“கிட்ட வந்திட்டியள்; இந்தக்கூழங்கைமூதேவி (/இன்னும் நகுலேசனிலே கோபம் தணியவில்லை/) எங்கடை ஊரெண்டும் முனீஸோட படிச்சவனெண்டும் சொன்னவன்தான். ஆனால், சந்திராவோட படிச்சவனெண்டு சொல்லயில்லை” - /காண்கிற ஆட்களெல்லாம் இவருடைய குடும்பத்துக்கு எப்படிப் பழக்கமென்று குறிப்பு வைத்துக்கொள்வதும் இவரூடாகக் கனடா போகிறவர்களின் கல்வியிலே அடக்கமோ?/

“அவனுக்குத் தெரிஞ்சிருக்க நியாயமில்லை.”

கொஞ்ச நேர உரையாடலிலே தனது என் அம்மாவழி மாமாவின் உதைபந்தாட்டத்தோழமை, முப்பது ஆண்டுகளுக்கு முன்னால், பதினைந்து பதினாறு வயதிலே என் அம்மமம்மாவின் கையாலே சாப்பிட்ட வல்லாரைச்சம்பல் எல்லாம் கக்கினார். நிமிடங்களிலே நெருக்கமான தோழனானார் (எனக் காட்டினார்). /பிலிப்பினோ பெண்களுக்கும் இந்தோனேசியப்பெண்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் ஓராண்டு கூலோன், சென்றல், வான்சாய் உலாவும் நானே இன்னும் விழிக்கும்போது, நகுலேசன் எப்படி வேறுபடுத்துவான்?! ஹ¤ம்! இந்நேரத்தில் அவனது தேவை வேறுபிரித்தறியலுக்கு அவசியமும் முக்கியத்துவமும் தருவதாயிருக்காது/

“ரெண்டு கிழமையிலை இவங்கள் போனாலும் போகாட்டியும் ஒருக்கால் ஊருக்குப் போவன்; வேலூண்டியார் கோயிலிலை எங்கடை திருவிழா. அப்பா ரெண்டு வருசத்துக்கு முன்னாலை தவறினபிறகு நாந்தான் தெர்ப்பை போடுறனான். அதாலைதான். இவங்கள் போயிட்டா ஒரு மாதத்திலை அடுத்த ‘பச்’சோடை வருவன்; போகாட்டி, மூண்டு நாளையிலை திரும்பி வந்து ஒருமாதிரி அனுப்பிப்போட்டுத்தான் அடுத்த ‘பச்’சைப் பற்றி யோசிக்கோணும். ஆக்களுக்கென்ன ஏஜென்ற் எண்டால், ஏதோ காசை வாங்கிப்போட்டுச் சும்மா பம்மாத்துக்காட்டிக்கொண்டு அலைக்கழிக்கிறதுமாதிரி எண்ணம். என்ரை பிரச்சனை எனக்கெல்லே தெரியும். இவங்களாலை கிட்டத்தட்ட எனக்கு ஆளுக்கு ஒரு இலச்சம் கைநட்டம். இது மூண்டாம்முறை இவங்களைக் கொண்டோடித்திரியிறன். முதல் ரெண்டு ‘பச்’சும் ‘விசுக்விசுக்’கெண்டு ஒரு பிரச்சனையில்லாமப் போச்சு. அந்தக் காசை விட்டுத்தான் வேலூண்டியாருக்குப் பின்னாலை நவக்கிரகத்துக்கு இடிச்சுப் புதுசாய்க் கட்டினது - அம்மம்மாட்டைக் கேட்டுப்பாரும் தம்பி; சொல்லுவா; அவவை இப்ப முன்னை மாதிரி அடிக்கடி கோயியிலை காணுறதில்லை - <”அவவுக்கு வாதமும் காலுளைச்சலும்; அதால, அங்கையிங்கை அடிக்கடி முன்னைப்போலை உலாவ ஏலுறதில்லை”>, இப்ப இவங்கடை கைநட்டத்துக்கும் போட்டு நிரப்புறது. இதோட, சந்திராவின்ரை கலியாணத்துக்கும் - மாப்பிளைப் பொடியனை உமக்குத் தெரிஞ்சிருக்கும்; ‘வைபோர்ச்’ துரைசிங்கத்தாரை மகன் <“எனக்குத் தெரியும்”> அவளோட படிச்சவன்தான்; ஆறு வருச லவ்; அவன் டொன் பொஸ்கோ பள்ளிக்குடச்சந்தியிலே கராஜ் வைச்சிருந்தான்; எந்த எளிய வடுவாவோ, கடத்தின கல்விக்கந்தோர் ‘ஜீப் பார்ட்ஸை’க் கழட்டி இவனிட்டை வித்திருக்குது. இந்த மடையன் ஏன் இப்படிக்குறைய விலைக்கு விக்கிறான் எண்டு யோசிக்காமல், கண்டதைக் காணாததுபோல, அவாவிலை விழுந்திருக்கிறான். ரெண்டு நாளிலை ஆரோ எங்கடை அயல் எளியது, ஆமிக்காரனுக்குச் சொல்லிப்போட்டுது. கொண்டுபோய் மூண்டுமாதம். பிறகு நான்தான் கையிலை இருக்கிறதை விட்டு, ஆமிக்காம்ப் பெரியவன் தொட்டுச் சில்லறை வரைக்கும் உள்ளை தள்ளி, ஆளை வெளியிலை கொண்டந்தது. சம்பலடி. ஒவ்வொரு எலும்பும் தன்னரைபாட்டுக்கு டான்ஸ் ஆடுது. அவன் ரெண்டாயிரத்துக்கு ஆசைப்பட்டு, கடைசியிலை நான் அறுபத்தைந்து கோதாரியிலை போன ஆமிக்காரங்களுக்குக் கரைக்கவேண்டியதாப் போச்சு; அதைவிடு. இவன் கராஜ் கார் டயரைத் தள்ளக்கூட ஏலாமல், அனுங்கிக்கொண்டு படுக்கையாய்; வேற வேலைக்குப்போகவும் பயப்பிடுறான்; அவள் அழுகிறாள்; பிள்ளை அழுகுது; என்ரை அம்மா அழுகிறா. நாசமாப்போச்சு, போனதோட போகட்டுமெண்டு, என்ரைக் கைக்காசைவிட்டு, ரெண்டாம் ‘பச்’சிலை ஒருமாதிரி ஆளைக் கொண்டுபோய் வாங்கூவரிலை இறக்கிப்போட்டன்; பாஸ்போட்டைக் கிழிச்சுப்போட்டுக் கையைத்தூக்கியிட்டான். கேஸ் நடக்குது. இப்ப, அங்கையிருந்து பெண்சாதியையும் பிள்ளையையும் பாக்கோணுமாம்; நாசமறுவான் என்ன நினைச்சுக்கொண்டான்! அவள், அவரைக் கொண்டுபோனதுபோலை இப்ப தன்னையும் பிள்ளையையும் கொண்டுபோய் விடு எண்டு தாறுபாச்சி கட்டிக்கொண்டு சண்டைக்கு நிக்கிறாள். நான் கூடப்பிறந்த சகோதரமெண்டு இத்தனையைச் செய்தாலும், என்ரை வல்லமைக்கும் ஒரு எல்லையிருக்கெல்லே. அவனைக் கப்பலிலை வேலைசெய்யிறவன் எண்டு சொல்லி இவங்களைப் போலக் கொண்டுபோய் < “கொஞ்சம் போகும்வழி புரிகிறது”> இறக்கியிட்டன். இவளையும் மகனையும் என்னெண்டு கொண்டு போக? எலிஸபெத் மாராணியும் பட்டத்திளவரனெண்டுமே? சொன்னால், இவள் இழவெடுப்பாளுக்கு ஒண்டும் விளங்குதில்லை; மற்றப்பக்கம், மனிசிக்காரியின்ரை மன்னை முன்னுகுத் தள்ளிக்கொண்டு நிக்குது. அந்தப்பக்கத்திலை இன்னும் உழைச்சதை முழுசாய்க் கொட்டிக்கொண்டே இருந்தால், பெத்த ரெண்டு பெட்டையளுக்கும் வாறகாலத்திலை வழியென்னெண்டு? அவள் சொல்லுறதும் ஒரு வழியிலை நியாயம், உடம்பிலை தெம்பிருக்கிருக்கிற காலத்திலைதான் உழைச்சாலுண்டு எண்டு ஒருத்தியின்ரை பேரிலை வீட்டைக் கட்டத்தொடங்கினால், அந்தரத்திலை வேலை தொங்குது. சாமான் கிடைக்கிற கஷ்டம் ஒருபக்கம்; அவள் நினைக்கிறமாதிரி டிசைன்போடச் சாமான் கிடைக்கிறது மற்றப்பக்கம்; கடைசியிலை உள்ளதெல்லாம், இவங்களுக்குக் ஹொங்கொங் காட்டுறதிலை கரைஞ்சு போகுது. இந்த இழவெடுப்பாங்கள், அவங்கடை அண்ணந்தம்பிமார் என்னெண்டால், ஒண்டும் விளங்கமாட்டனெண்டு ‘எப்ப கொண்டுபோறாய்? எப்ப கொண்டுபோறாய்? இல்லாட்டிக் காசைத் திருப்பித்தா; வேற நல்ல ஏஜன்சியைப் பாக்கிறம்; நாங்களும் அகதியாத்தான் வந்தனாங்கள்; எங்களை ஏமாத்தாலாமெண்டு பாக்காதை’ எண்டு சத்தம்போடுறாங்கள்; இவங்கள் அகதியாப்போனது சரி; ஆனால், எப்ப? எண்பத்தி ஒன்பது, தொண்ணூறிலை. இப்ப தொண்ணூற்றைஞ்சு. போக்குவரத்து இவங்கள் போன காலம்மாதிரி, சொகுசானதாய், இந்தப் பிளேனிலை ஏறினால், அந்த எயார்ப்போட், அங்கை அந்தப்பிளேனைப் பிடிச்சால், நேரை அம்ஸ்ரடாம் எண்டில்லைத்தானே தம்பி; இவங்களுக்கு அதைச் சொன்னால் கேக்கிறாங்களில்லை; நான் செய்த சுத்துமாத்துக்கு இன்னும் நூல் சுத்துறன் எண்டமாதிரிக் கத்துறாங்கள். இவங்கள் சொல்லுற வேற ஏஜென்சிக்காரமடையங்கள் போற ரூட்டை ஒழுங்காய்க் கொண்டுபோனால், ஏன் இப்படி நாங்கள் அல்லைதொல்லைப்படோணுமெண்டு இந்த விசரங்களுக்குச் சொன்னால் தெரியுதில்லை. இவங்கள் ஜேர்மன், கனடா, பிரான்ஸ் எண்டு வள்ளிசாய்க் குந்திக்கொண்டு, காசைத்தந்துபோட்டமெண்ட திமிரில ஓடர் போட்டுக் கத்துவாங்கள். இங்கை இவங்களைக் கொண்டுபோக நாங்கள் படுறபாடு அவங்களுக்குத் தெரியுமே? நானென்ன போற வழியைக் ‘பென்ர’ருக்குள்ளை ஒளிச்சுவைச்சுக்கொண்டே காட்டமாட்டன் எண்டுறன்? இவங்களுக்கென்ன? நேற்றைக்கு இந்தக்கூழங்கை, வீடியோவிலை காதலன் படம்பாக்கப்போறாராம். நீங்களே சொல்லுங்கோ தம்பி; காதலிச்சுப் பாக்கிற நேரமிதோ? காதலன் பாக்கிறதெண்டால், இவர் அங்கை ஊரிலை, ரீவிக்கொட்டிலுக்குள்ளை முழு வாங்கொண்டிலை படுத்துக்கொண்டு காலையாட்டிக்கொண்டு பாத்திருக்கலாமெல்லே? இங்கை வந்து உளையத்தேவையில்லை, எல்லே? ஏதோ ‘ரூர்’ வந்ததுமாதிரியும் நான் பணம் காய்ச்சிப் படைச்சுக் கொட்டுறதுமாதிரியும் இருக்கிற இருப்புத்தெரியாமல் குதியன் குத்துறாங்கள். எனக்கும் இவங்களை அனுப்பினால், கொஞ்சநாளைக்கு வீட்டிலை பெஞ்சாதி பிள்ளையளோட போய்ப் பேசிப்பறைஞ்சு கிடக்கலாமெண்டுதான் தெரியுது. இவங்களுக்கு மற்ற ஏஜன்சிக்காரங்களிட்டைக் குடுத்துப் பட்டாத்தான் தெரியும், ராசாங்கம் அண்ணற்றை அருமை.”.... /ம்ம்ம்!! அவனவனுக்கு அவனவன் பிரச்சனை; பிடிக்காத சுஜாதாவின் பிடித்த கதையிலொன்றான நடமாடும் வைத்தியரின் கதை ஞாபகத்திலே வந்துபோனது. நகுலேசன் சின்ன வயதிலே சமயபாடத்திலே படித்த தாமரையிலைத்தண்ணீர்போல எங்களோடை வந்தொட்டி, இராசாங்கத்தின் முகத்தை அடிக்கடி கவனித்துவிட்டு, உருண்டு போக்குவரத்துப்பெண்புள்ளிவிபரவியலிலே தொடர்ந்து தொலைந்து போனான். அவனுக்கும் இருபது வயது இருக்காதா? இருபது வயதிலே எனது பெண் நோக்கிய ஏக்கங்கள் எனக்குத் தெரியும்; வயதிற் சாராதவை பல; இப்போது நான் மூச்சுவிடவேண்டும்/

....”மெய்தான் அண்ணை; இப்படி நடுவழியிலை நிண்டு கதைச்சுக் கொண்டிருக்கிறம். இவங்கள் ஹொங்கொங் பொலீஸ் -உங்களுக்குத் தெரியாதே- சும்மா வந்து ஐடி, பாஸ்போர்ட் கேட்டு அலுப்புக்குடுப்பாங்கள். எங்கையாச்சும் சப்பாட்டுக்கடையில ஒதுங்கிப்போயிருந்து கதைப்பமே?”

கொஞ்சம் தயக்கம் தெரிந்தது; நகுலேசன் சிரித்தான்.
“நீங்கள் வாங்கோ ஸ¤ங்கின் மன்ஸன் சமோசாக்கடைக்கே போவம்; அல்லது மேலை அசோகா அல்லது தோசைக்கடை” - கொஞ்சம் அதிகாரத்தோரணையுடன் பேசியது, நான் செலவைப் பொறுப்பேற்பேன் என்று அவருக்குத் தோன்றவைத்ததோ அல்லது இனியும்போகாவிட்டால், அவமரியாதை என்று பட்டதோ, “சரி, இலேசாய்ச் சாப்பிடுவோம்; அங்கை இவங்கள் பொடியங்கள் வீட்டிலை சமைச்சு வைச்சிருப்ப்பாங்கள்” சொன்னார்; நடந்து போயேறி, சமோசா பாற்தேநீருக்குச் சொல்லிவிட்டு இருந்தோம்.

“இப்ப எப்படி இவயளைக் கொண்டுபோகப்போறியள்?”

“அதுதான் என்ரை கவலையும்; ஒரு சிக்கலைத் தீத்தா, இன்னொண்டெண்டு வந்து மசுக்குட்டி மாதிரி விழுந்து சொறிஞ்சு கொண்டேயிருக்குது. இவங்களின்ரை காசை இவங்கள் நான்தான் முழுக்க எடுத்து விடுறனெண்டு <”இஞ்சை கூழங்கை ஒரு அஞ்சு நிமிசம் கீழை போய் எங்கடை ரியாஸ் வாறானா எண்டு பார்; அவன் இண்டைக்கும் வராட்டில், இவன் ஹொங்கொங்காரன் கடிதத்திலை ‘சைன்’ வைக்கமாட்டான்; வந்தால், இங்கை கூட்டியா; இவங்கள் சமோசா கொண்டு வர பத்து நிமிசத்துக்கு மேலையெடுக்கும்; நீ வர, சூடாய் அதுவும் வரும்” -நகுலேசன் இறங்கிப்போனான்- “எங்கை விட்டனான், தம்பி? ஓம்..”> ..இவங்கள் காசு முழுக்க நான் தின்னுறனெண்டு குறை வீட்டையும் கட்டின கோயில் மண்டபத்தையும் வச்சு யோசிக்கிறாங்கள். இவங்களிலை மீன்பிடிக்கிற ‘போட்’கூடப் பாக்காதவங்களுக்கும்கூட கொழும்பிலை ‘மேர்ச்சண்ட் நேவி ஸ்கூலி’லை இருந்து ‘பாஸ்’பண்ணின மாதிரி ‘லொக் புக்’ ஆளுக்கொண்டு எடுக்க, அவங்களிலை மேலையிருந்து கீழே வரைக்கும் ஒவ்வொரு கையெழுத்துக்கும் எவ்வளவைத் தள்ள வேண்டியிருந்தது. ஒரு புத்தகத்துக்கு, தலைமைக்கு பெரிசு ஒண்டு, அடிக்கு சின்னது இருபத்தைந்து எண்டால், கூடஇடையிலை இருக்கிற ரெண்டு கையெழுத்தையும் கணக்குப்போட்டால், ஒண்டு தொண்ணூறு. பிறகு, கட்டுநாயக்கா எயார்ப்போட்டிலை நாள்பார்த்து டிக்கற் எடுத்து நிக்கிற ரெண்டுபேருக்கும் ஆளுக்குப் பத்துப்பத்து ஒரு புத்தகத்துக்குத் தள்ளோணும். இத்தனைக்கும் இது பாஸ்போர்ட்டிலை தலைமாத்திற விளையாட்டில்லை. அதுவும் முன்னாலை செய்திருக்கிறன். ‘ரிஸ்க்’ கூட. இது கொஞ்சம் ‘சேவ்’.. சொந்தப்பாஸ்போர்ட்; ஆக, இவங்கடை ‘கடேட்’புத்தகத்திலை விசயம் சரியெண்டால், எல்லாம் சரி; ஆனால், கனடா எம்பசிக்காரங். . . .”

“அதெல்லாஞ் சரி; என்ன மாதிரிக் கொண்டுபோறியள் எண்டு சொல்லைல்லையே? “ - இது சிங்க எலும்புக்கு உயிர்கொடுக்கும் மந்திரத்தைக் கேட்கிறமாதிரித்தான்; அதுவும் ஆட்பழகி இருபது நிமிடத்திலே கேட்டிருக்கக்கூடாதோ. .. .

“நீங்கள் அடிமடியிலையே கையை வைக்கிறியளே, தம்பி” - நான் எதிர்பார்த்ததுக்கு மாறாய்ச் சிரித்தார்; தாழ்ந்த தலையோடு குரலும் சேர்ந்தது; என் நெற்றியை முட்ட வந்தார்-“ எங்கடை பிள்ளை நீர்; உம்மட்டைச் சொல்லலாந்தான்; ஒருத்தருக்கும் மூச்சுவிடக்கூடாது” - <’ம்ஹ¥ம்! விடேன்! குறைந்தபட்சம் நீங்கள் தொழிலை நிறுத்தும்வரைக்கும்’ ~ உள்ளுக்குள் முனகிக்கொண்டேன்> - முன்னுக்கு விழுந்த ஓரிரு மிச்சமிருந்த அலைமயிரை உச்சியை நோக்கி ஓங்கித்தள்ளிக் கொண்டு, கையிலே தக்காளிக்குழம்புக்குடுவையை உருட்டினார்- “இந்தப்பொடியங்களுக்கு ஆக்களின்ரை வயசுக்கேத்தமாதிரி, கப்பலிலை வேலைசெய்யிற புத்தகம் - தம்பி, நான் பதினைஞ்சு வருசம் கப்பலிலை உலகம்சுத்தினனான்; ஆனால், இண்டைக்கும் குடி, சிகிரட், பொம்பிளை எண்டொரு கெட்டபழக்கமில்லை; ஒரேயரு கெட்டபழக்கம், அம்பிட்ட இங்கிலிஷ் படம் எதெண்டாலும் எப்பிடி அலுப்படிச்சாலும் முடியிறவரைக்கும் குந்தியிருந்து பாக்கிறதுதான். என்னோட வேலை செய்தவங்கள் அப்பி.. விடும் அவங்கடை கதையை; அவங்கள் கூத்தடிக்கிற நேரத்திலை, எதிர்காலத்திலை கொஞ்சம் சுகமாய், கடலின்ரை ஆட்டத்துக்குச் சாப்பாட்டுக்கோப்பையும் சத்தியும் எண்டு ஆடாமல் இருக்கோணுமெண்டு ஒரு பிளானோட நான் கப்பற்போக்குவரத்திலை என்ன நடக்குதெண்டு அறிஞ்சுகொண்டும் தேவையான இடத்திலை தேவைப்பட்ட ஆக்களைப் பழக்கம்பிடிச்சுக்கொண்டும் திரிஞ்சன். இண்டைக்கும் எந்தப் ‘போட்’டிலை போய்க் கப்பல் நிண்டாலும், ராசாங்கத்தைத் தெரிஞ்சவன் ஒருத்தனாவது இருப்பான் <” சுயபுராண அறுவை தாங்கமுடியவில்லை”> எனக்குத் தெரியுது, நீர் நினைக்கிறீர் இவனென்ன, தன்ரை பெருமையடிச்சு அலுப்படிக்கிறானெண்டு. இதை ஏன் சொல்றனெண்டால், நான் ஏஜென்ஸி நடத்திறதிலை பாவிக்கிற ‘ரெக்னிக்’கும் ‘ஐடியா’வும் கப்பல்வேலை தெரியாத மற்றவங்களுக்குச் சுழியோடிச் செய்யிறது கஷ்டம். விளங்கவும் மாட்டுது. அதாலதான், உமக்கு ஒவ்வொண்டாய்ச் சின்னதாய் விளக்கம்குடுக்காமல், உமக்கு விளங்கத்தேவையான அளவுக்குச் சொல்லுறன். உம்மடை பாடத்தை எனக்கு நீர் படிக்கிறதுமாதிரியே சொன்னால் விளங்குமே?<”மனிதர் எவ்வளவு சாமர்த்தியமாக என்னை நோகாமலே அடிக்கிறார்; கண்கட்டிவித்தைக்காரனாவது தொழில் இரகசியத்தைச் சொல்லித்தருவதாவது?”> இந்தக்கப்பற்புத்தகந்தான் கப்பலிலை வேலை செய்கிறவங்களுக்கு உயிர்நாடி ..(கையிலே சுற்றிவைத்திருந்த பையுக்குள்ளே இருந்து நகுலேசனின் கப்பற்றொழில்வல்லமை பற்றிய கல்வியாவணம்+பதிவுப்புத்தகத்தை எடுத்து என் கையிலே தந்தார்; புரட்டினேன்; அவன் படம், ‘கப்பற்கல்வி’ கற்ற இடம்; பின்னாலே, அரசவர்த்தக்கடலோடிகள்கற்கைநிறுவனத்திலே வைக்கப்படவேண்டிய அத்தாட்சிக்கையப்பங்கள் எல்லாம். அதற்குமேலே அங்கே பார்ப்பதற்கும் புரிந்துகொள்ளவும் எனக்கேதும் இருப்பதாகத் தெரியவில்லை; நல்ல வல்லட்டை; அரசமுத்திரை; திருப்பிக்கொடுத்தேன்; பைக்குள்ளே பத்திரமாய்ச் சுத்திவைத்தார் ).. இதிலை அவங்கடை ஒவ்வொரு தொழிலும் இருந்த கப்பலும் காலமும் கப்பல், தொழில் மாறமாறப் பதிஞ்சு கொண்டே போவினம். இந்தப்புத்தகத்தை எடுக்கத்தான் அவங்களுக்கு கிட்டத்தட்ட கூட்டிப்போற ஒருத்தனுக்கு ரெண்டு இலச்சம் கொழும்பிலை குடுத்தன். பிறகு, இந்தக் ‘க்ரூ’ கனடாவிலை தங்கடை கப்பலிலை ஜொயின்ற் பண்ணுது எண்டமாதிரி கனடாவுக்குப் போக விசா எடுத்தால், இவங்கள் பிளேனிலை அங்கை போய் இறங்கி இமிகிறேசனுக்குள்ளை போகமுதல், பாஸ்போட்டைக் கிழிச்செறிஞ்சாச் சரி. கையை உயர்த்த வேண்டியதுதான்”.. . . நான் விதிர்விதிர்த்துப்போய் விறைத்திருந்தேன். நேர்மையாக சகல பத்திரங்களும் கக்கத்திலேயிருக்க ஹொங்கொங் வர அனுமதி எடுக்கப்போகவே பிரிட்டிஷ் தூதரகத்திலே வியர்த்துப்போய் நின்றதை எண்ணிக்கொண்டேன். ஆனால், சொந்தக்கூரைக்குக்கீழே ஒழுங்காய் வாழ முயன்றால், உயிரே நிச்சயமில்லையென்றானபின்னர், வேறென்னத்தைத்தான் ஒருவன் செய்யமுடியும்?

...”முதல் ‘க்ரூ’வை இலங்கையிலிருந்தே வான்கூவருக்கு ஏத்தி விட்டன்; அடுத்ததுக்கும் அங்கைபோனால், அவங்களுக்குச் சந்தேகம் வரும்; ரெண்டாவதை இந்தோனேசியா கொண்டுவந்து ஏத்திவிட்டன். <”அப்ப, சியோல் போனது?”> பிறகு, இப்படி அலையிறது கஷ்டமெண்டுதான், இவங்களைத் தலைமாத்திக் கொண்டுபோகப்பாத்து ஏலாமல், திரும்ப இப்ப பழையபடி, இங்கை. பிரிட்டிஷ்காரனிட்டை இருக்கிறதாலை, கொமன்வெல்த் எண்ட அளவிலை, கொஞ்சம் இலேசாயும் ஹொங்கொங்குக்குள்ளை மற்ற நாடுகளிலும்விட வரக்கூடியதாயிருக்கு; சீனாக்காரன் எடுத்தால், என்ன நாசம் பண்ணுவானோ தெரியாது; இங்கை க ப்பலிலை ஏற வாறதுமாதிரி கப்பல் கொம்பனியோட உண்மையான கப்பல் விபரத்தோடை வந்துபோட்டு, கப்பல், ‘க்ரூ’ வரக்குமுதற் திரும்பி வெளிக்கிட்டுது; வான்கூவரிலை அல்லது வேறை கனடாபோட்டிலை ப்டிக்கோணுமெண்டு, திரும்பக் கப்பற்கொம்பனியிட்டையிருந்து ஒருகடிதம் எடுத்துக்கொண்டு, திரும்ப இங்கையிருக்கிற கனடா எம்பஸியிலை போய்க் காட்டி எல்லாருக்கும் விசா எடுக்கோணும்.”

“அப்ப ஏன் இன்னும் நிப்பான்? இவங்களை..”

“தம்பி, அங்கைதான் இப்ப பிரச்சனை மாட்டிக்கொண்டு நிக்குது (சுட்டுவிரலைப் பெருவிரலாலே இரண்டு கட்டைக்குக்கீழே அமுக்கி, கையை மணிக்கட்டிற் சுழற்றி ஒரு விரைவுச்சொடுக்கு சொடுக்கினார்); ஒண்டு, கப்பற்கொம்பனிக்காரன்ரை சிநேகிதம் நான் வேலை செய்யேக்குள்ளை பிடிச்சது; அவங்களிலை மூண்டு பேர் சைன் இங்கை ஒருத்தன், அங்கை ஒருத்தனெண்டு வைக்கோணும்; அவங்களுக்கும் ஆளுக்கு அரை தட்டோணும். சிலவேளை கனடா எம்பஸிக்காரனுக்குச் சந்தேகம் வந்தால், முதலிலை போற ‘குரூ’காரங்களைக் கூப்பிட்டு கப்பல்வேலையைப் பற்றி கேள்வி கேப்பான்; அதுதான் இவங்களுக்கு, ‘லீவேர்ட்’, ‘லிஸ்ற்’, ‘பிச்’, ‘நொட்ஸ்’, ‘ஒன்போட்’ எண்டெல்லாம் இராப்பகலாச் சொல்லிக்குடுத்து, அவங்களையும் ஆளுக்காள் கேள்வி கேக்கச்சொல்லியிருக்கிறன். எம்பஸிக்காரன் கேள்வி கேக்கேக்கை, மிலாந்தி மிலாந்தி விரலைச் சூப்பிக்கொண்டு நிக்கேலாதெல்லே? எம்பஸியிலை ஒருத்தன் சறுகினாலும், எல்லாற்றை கனடாப்போக்கும் ஒரே வீட்டை திரும்பிப்போற போக்காப் போயிடும் (முதல்நாள், போய்ப்படிக்கவேண்டியதை, பாடமாக்க வேண்டியதை அழுத்தி அவர் சொல்லிக்கொண்டிருந்தது ஞாபகம் வந்தது; “இந்தாளும் தன்னாலை ஏலுமானதைத்தான் உண்மையாச் செய்யுது”) இவங்கள் என்னெண்டால், ஏதோ காசைத் தந்திட்டம் மிச்சதெல்லாம் உன்ரை பொறுப்பெண்ட மாதிரி விளையாடிக்கொண்டிருக்கிறாங்கள். இது நான் மட்டும் வாழைப்பழத்தை உரிச்சு வாய்க்கை வைக்கிறதோட முடியிற வேலையில்லையெண்டு முக்காவாசி மூதேசியளுக்குத் தெரியிதில்லை; அதிலையும் தப்பினால், அடுத்ததாய் எம்பஸிக்காரன் -வலு சுழியன்- நேரே இங்கையும் கனடாவுக்கும் கப்பற்கொம்பனிக்குப் போன் எடுத்து, உண்மைதானா எண்டு கேப்பான்; அப்படிக்கேட்டால், மெய்தான் கனடாவிலை வந்தேறுறாங்கள் எண்டு அவங்கள் சொல்ல, இன்னும், இருபத்தைஞ்சு இருபத்தைஞ்சு இருபத்தைஞ்சு அவங்களுக்கு இங்கையும் கனடாவிலையும் வைக்கோணும்; அவங்களும் ரிஸ்க் எடுக்கிறாங்கள்தான்; அதுக்கு, அவங்களுக்கும் பகுதி போகத்தான் வேணும்; ஆனால், இப்ப அதிலை ஒருத்தன் கனடாவிலை வேலையை விட்டுட்டுப் போயிட்டான்; புதுசாய் வந்திருக்கிறவனைச் சமாளிக்க, மற்றப் பழையவன் தனக்கும் ரேட்டைக் கூட்டி, அவனுக்கும் அதே ரேட்டைப் போட்டிருக்கிறான். எல்லாம் இருபத்தைஞ்சாலை கூடுது. எனக்குக் கட்டுமோ சொல்லும்”

என்னத்தைச் சொல்வதென்று தெரியவில்லை; அடிப்படையே சுற்றுமாற்று; இதிலே நேர்மைத்தன்மையை எதிர்பார்க்கமுடியுமா? அவா மட்டுந்தான் எல்லாப்பக்கங்களிலும் மிஞ்சித்தேறும். திருடனுக்குத் தேள்கொட்டுதல்போல . . . அவர் சொல்கிற விடயங்களே எனக்கு முழுதாக விளங்கவில்லை; அவர் விளங்காதென்று எச்சரித்ததும் ஒருவிதத்திலே சரிதான். ஏன் மூன்று பேரின் கையெழுத்து வேண்டும் என்பது தொடக்கம் கப்பற்றுறை எப்படி இயங்குகிறது என்பதுவரை, -நம்ப விருப்பமேயென்றாலும்,- அவர் சொல்வது எந்தளவு உண்மை, எவ்வளவு பொய் என்பதும் எனக்குத் தெரியாது. ஆதலால், சும்மா தலையாட்டினேன் <பக்கவாட்டிலா? மேலும் கீழுமா?>

“அதுதான் இவன் பாக்கிஸ்தான்காரன் ரியாஸை வைத்து, சந்திச்ச ஹொங்கொங்காரனூடாக, கொஞ்சம் ரேட்டைக் குறைக்க ஏற்பாடு பண்ணப் பாக்கிறன். இவன்தான் அவங்கடை கொம்பனி வேலைக்கு இங்கை பொறுப்பு. இங்கையிருந்து அவங்கடை கப்பல் போனால், இவன்தான் இங்கை சாட்சி. அதால, இவன் சொன்னால், அவங்கள் கேட்பாங்கள். ஆக்களை எல்லாம் கப்பலிலை வேலைசெய்யேக்குள்ளை அறிஞ்சு கொண்டன்தான்; ஆனால், ஆக்களின்ரை ரேட்டும் போக்கும்கூட காலம் போகப்போக மாறுந்தானே?”

“ம்..”

“ஆனால், இவன் ஹொங்கொங்காரன் தனக்கும் கூட ரேட் பேசுறான்; ரியாஸ் அவன்ரை ரேட்; பேசாமல், சாட்சிக்காரன்காலிலை விழுகிறதிலும் விட, சண்டைக்காரன் காலிலே விழுவது புத்தியெண்டாலும், சண்டைக்காரன் கேக்கிறசாங்கிலே இல்லையெல்லே” ~ எனக்குச் சொன்னாரா, அல்லது தனக்குத்தானே சொல்லிக்கொண்டாரா என்று எனக்குத் தெரியவில்லை.

நகுலேசன் வந்துவிட்டான்; சமோசாவும் தேநீரும் ரியாசும் இன்னும் வரவில்லை. சமோசா கேட்க, நேரமாகுமென்று கடைக்காரன் காட்டுத்தனமாய்ச் சொன்னான்; சொன்னதை வேண்டாமென்று சொல்லிவிட்டு, இறங்கி நடந்து நான் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்; அவர்கள் தை-போவுக்கு வண்டியேறினர்.

இரவு பூராக இந்தப்புதினக்கதையைக் கேட்டு நான் வியப்பும் துக்கமும் பயமும் கொண்டிருந்தபோது, ஒரு விடயம் பொறி தட்டியது; நகுலேசன் இல்லாத இடக்கையை வைத்துக்கொண்டு, எப்படி மாலுமியாய் ‘வெட்டிவிழுத்தினவன் எண்டு விளக்கிக்காட்டப்போறான்’? இது சரி வருகின்ற காரியமென்பதிலே எனக்கென்றால், சந்தேகமாயிருந்தது. “என் போன காசு வருமா?” என்ற சொந்தக்கவலையும்கூட அதிலே தொக்கிநின்றதை நான் மறுக்கமுடியாது. எனது சம்பாத்தியச்சேமிப்பின் அரைப்பகுதி அது; நாளைக்கு மிச்சக்காலும் போகும் என்பதிலே ஒரு நியாயமான அச்சமிருந்தது.

அடுத்த நாள் மிகுதிப்பணத்தை எடுத்துக்கொண்டுபோனேன். தனிய வந்திருந்த நகுலேசன் கடவுச்சீட்டைக் கையிலே இறுக்கிக்கொண்டு, கொஞ்சம் சோர்வாக இருந்தான். காசைக் கொடுத்துவிட்டு என்னவென்றேன்.

“அவள் திரும்பி வரச்சொல்லி அழுகிறாள் அண்ணன்; பெட்டியைக் கட்டிக்கொண்டு, ஊருக்கே போய் என்ன இ ழவெண்டாலும் அவளுக்குப் பக்கத்திலையே இருந்தாப்போதுமெண்டு படுகுது. சும்மா, ஊராய் அலைஞ்சு கொண்டு என்ன வாழ்க்கை. நாளைக்குக் கனடா போனனெண்டுதான் வைச்சுக்கொள்ளுங்கோ; பிறகு எனக்கு எல்லாம் சரிவந்து அவளைக்கூப்பிட எவ்வளவு காலம் எடுக்கும்; எழெட்டு வருசம். அதுக்குள்ளை என்னென்ன நடக்குமோ?”

/இதென்ன கோதாரி! இராசாங்கம் சொல்லுறதும் நியாயந்தான். ஒண்டு இவங்கள் வெளியை போக எண்ணமுதல் வரப்போறதை தங்களாலை தாக்காட்டஏலுமோ எண்டதை யோசிக்கோணும்; மற்றது அவையள் புருசன் பொடியன்மாரை அனுப்பமுதல் தங்களாலை அதைத் தாக்காட்ட ஏலுமோ எண்டைதை யோசிக்கவேணும். இதென்னடாவெண்டால், இண்டைக்குப் போறன், நாளைக்கு நீ போனிலை கூப்பிட்டழுதால் வாறன் எண்ட விழல் விண்ணாணம்/

“எவள்? சரி எவளெண்டாலும், நீ வெளிக்கிடமுதலெல்லே இதை யோசிக்கவேணும். அவளுக்குப் பக்கத்திலை இருக்கோணுமெண்டால், அப்பவே அங்கையா நிலையா நிண்டிருந்தியெண்டால், இப்ப இந்தத் தொழவாரங்கள் தேவையில்லையே?”

“சாருமதி; ‘பீபிள்ஸ் பாங்க்’ சங்கற்றை தங்கைச்சி...”

“நகுலேசன், கேக்கிறனெண்டு கோவிக்காதை. சங்கர் பெரிய அலுப்பனெல்லே? உங்கடை விசயம் அவனுக்குத் தெரியுமே? நானறிஞ்ச வரைக்கும் ஆள் தலையிலை பாரத்தை வைச்சுக்கொண்டு தான்தான் பெரிசெண்டு நிண்டு கூத்தாடுற கேஸ். முனீசுக்கெண்டாலாவது உன்ரை விசயம் தெரியுமே?”

மெய்யாகவே காற்சட்டைப்பைகளுக்குள்ளேயிருந்த கைகளை எடுத்துக்கொண்டு, சிறகடிக்கும் பறவைபோல தோள்வரை தூக்கி மணிக்கட்டை உதறிக்கொண்டு நாலைந்து முறை துள்ளினான் -
“நீங்கள் சொல்லுறது உண்மையாச் சரியண்ணை; உங்களுக்கு அவனை நல்லாத் தெரிஞ்சிருக்குது. அவன் என்னை ரெண்டுமூண்டுமுறை பொலிஸ¤க்குச் சொல்லுவன், ஆள் வைச்சடிப்பன், ஒழுங்கான வேலையில்லாமல் எப்படி அவளை வச்சுக் காப்பாத்துவாய் எண்டெல்லெலாம் பட ஸ்ரைலிலை தனிய ரோட்டிலை நிப்பாட்டி வெருட்டிப்பாத்தான்; உன்னாலை ஏலுமெண்டாப் பண்ணிப்பார் எண்டு சொல்லிப்போட்டன்; அவருக்கு வெறும் வாய்மட்டுந்தான், பிறகு சாருமதியைப் பிடிச்சு அடிச்சுவெருட்டியிருக்கிறான். ‘அவன் வேணுமெண்டால் வீட்டைவிட்டிட்டு, அவனோட போயிரு; இங்கையிருக்கிறதெண்டால், நான் சொல்லுறமாதிரியிரண்டு’ பேய்நியாயம் சொல்லிக் கத்தியிருக்கிறார். அவள் முகத்திலை அடிச்சாப்போல ஏசிப்போட்டாள், “நான் என்ரை படிப்பிக்கிற உழைப்பிலை எனக்குச் சீதனம் தரப்போற வீட்டிலைதான் இருக்கிறன். நீ வேணுமெண்டால், உன்ரை மனிசியையும் பிள்ளையளையும் கூட்டிக்கொண்டு வேற வீட்டை போவெண்டு”; தாய்க்காரி ஒண்டும்பேசுறதில்லை. என்ன நினைக்குதெண்டு சொல்லுறதுமில்லை; எங்கடை அம்மா, அவையள் கொஞ்சம் ஊருக்குள்ளை அறிஞ்ச குடும்பமெண்டு கட்டினால் நல்லதுதான் எண்டு யோசிக்கிறா போல. முன்னீஸ் அண்ணர், ‘தானே போக வழியில்லாமல் விளக்குமாத்தையும் தூக்கக்கேக்குதோ குரங்கனுக்கு; இத்தினை வயசாச்சு; நானென்னெண்டால் வீட்டுநிலையைக் கொஞ்சம் ஒப்பேத்துவம் எண்டு பாக்கிறன்; இவருக்கு இருபது வயசுக்குள்ளை காதலோ’ எண்டு கத்துறார். அவள் பாவமண்ணை” . . . கொஞ்ச நேரம் உருகிப்போய் நின்றான். பிறகு, முழுத்தறிகளும் போட்டு மூடியிருந்த சட்டை மேலிரண்டு தறிகளையும் விலக்கி, . . .“இஞ்சை பாருங்கோ; அவள் வாங்கித் தந்த சங்கிலியும் பென்ரனையும்” எண்டு காட்டிக் கொஞ்ச நேரம் எங்கோ இலயப்பட்டு நின்றான். ஒரு இளம் சங்கீத ஆசிரியையின் நளினமும் சுவையும் அந்த ஒற்றைவடச்சங்கிலியிலே முறுகி ஹொங்கொங் கடற்காற்று வெயிலிலே மினுமினுத்தது. . . சின்ன இதயவட்டத்துள் எஸ்-என் என்று எழுதித் தொங்க, இதயத்தின் அடிமுள்ளு அவன் தொடுதலிலே துருத்திக் குத்தியது; அவன் கண்ணைப் பார்க்கப் பனித்திருந்தது தெரிந்தது; நடந்துகொண்டே திரும்பி, கடற்கீலத்துக்கு மற்றப்புறம் பெரும்பூமியோடு ஒட்டாமற் பாதைமட்டும் கொழுக்கித் தெரியும் ஹொங்கொங் தீவினைப் பார்த்த எனது கண்கள் உப்புக்காற்றின் அடிப்பிலே கரித்தது. . . ஒருத்தனுக்கென்று உருக ஒருத்தியிருப்பதை, அந்த உருகலின் மென்மையை, வல்லமையைத் தெரிந்து தெளிவதற்காகப் பிரிவு மிக அவசியம் என்று முன்னர் படித்த அகநானூற்று விளக்கங்கள் காற்றுக்கும் கடலுக்கும் ஓரளவு புரிகின்றது. பேசாமலே நடந்தோம். . .

. . . . எம்பயர் கட்டிடத்துக்கு, சாலைக்கு மேலே குறுக்கேபோகும் பாதையேறுமிடத்திலே மௌனத்தை உடைத்துத் தரையிலே போட்டேன். . .
“அவளுக்கு என்ன மறுமொழி சொன்னனீ? எனக்கென்ன படுகுதெண்டால், துணிஞ்சு வெளிக்கிட்டு வந்தனீ; மிச்சதையும் பாத்துப்போட்டு, பிறகு நடக்கிறதைச் செய்கிறதுதான். ஊருக்குத் திரும்பிப்போனால், காசும் நட்டம், பட்ட பாடுக்கும் பயனில்லை; ஒரு ரெண்டு நாளைக்கு அவளைக் காணச் சந்தோஷமாயிருக்கும்; இல்லையெண்டேல்லை; ஆனால், பிறகு, அது வடிய பிறகென்ன செய்யிறதெண்டதெல்லே திரும்ப கண்ணுக்கு முன்னாலை நிண்டாடும். அந்த நேரத்திலை, இதைவிட்டுட்டம் அதைவிட்டுட்டம் எண்டு குத்தி முறிஞ்சழுது பிரியோசனமில்லை; அதுக்குமேலை, எல்லாம் போனது அவளாலைதான் எண்டதுமாதிரி ஆத்திரமும் வெறுப்புமெல்லே அவளிலை வரும்? ஏதோ வந்தம் கஷ்டப்பட்டமெண்டு போய்ச்சேர்ந்தால், அவளை அங்கை கெதியிலை எடுக்கிற குறியிலையாச்சும் நீ அங்கை இங்கை ஏமலாந்தாமல் வேலையைப் பாக்கவும் ஒரு உந்துதலாயிருக்குமெல்லே. ஒண்டை ஒத்துக்கொள்ளுறன்; எனக்குச் சொல்லுறது சுகம். ஏனெண்டால், இது என்ரை பிரச்சனையில்லை <”என்ன உன்ரை பிரச்சனையில்லையா?”> ஆனாலும், நல்லா யோசிச்சுப்பாத்துச் செய்.”

முன்னைப்போலவே, நடந்தவன் நின்று கைகளை எடுத்து, -கடந்து போகிற இரண்டுமூன்று சுற்றுலாப்பயணிகளுக்கு வேடிக்கை காட்டுகிறவன்போல- செட்டையடித்துப் பறந்துகாட்டினான்-
“அண்ணை நீங்கள் சொல்லுறது மெத்தச்சரி; அப்படித்தான் நானும் யோசிக்கிறன்; அவளுக்கும் சொல்லிப்போட்டன்; கொஞ்சம் பல்லைக்கடிச்சுக்கொண்டு ரெண்டு வருசமிரு. மிச்சதை நான் பாத்துக்கொள்ளுறன் எண்டு. டெலிபோனிலை ஒவ்வொரு கிழமையும் கதைச்சு, கடிதமும் போட்டாச் சமாளிக்கலாம் எண்டு சொன்னனான். எல்லாத்துக்கும் மனமுண்டானால் இடமுண்டுதானே அண்ணை.” . . . தடாரென்று உற்சாகத்திலே உயர்ந்து பறந்தவன், கைகளைக் காற்சட்டைப்பைகளுக்குள் நுழைத்துக்கொண்டு, தலையைக் குனிந்துகொண்டு, குழந்தைபோல நெகிழும்குரலிலே, “எண்டாலும் கஷ்டமாயிருக்குதண்ணை; போறவாற ஒவ்வொரு பெட்டையையும் பாக்க அவள்தான் ஞாபகம் வாறாள்; அவளின்ரை அண்ணன் ஒரு மூதேவி; செம்மறி; மடையன்; நாய்” - நெருமினான்; பதிலேதும் சொல்ல எனக்குத் தோன்றவில்லை; தமிழ்ப்படங்கள் இருபதாண்டுகளாக விபரம் தெரிந்து அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்ததால், சிரிப்பு வருகிறது போலவும் இருந்தது; ஆனால், இது மெய்யானநிலை; தமிழ்த்திரைப்படங்களைக் கொஞ்சம் தேவைக்கதிகமாகவே கீழேபோட்டு மிதித்துவிடுகின்றேனோ என்று தோன்றிய மிகச்சில தருணங்களில் அதுவுமொன்று. சத்தம்போடாமலே ‘கௌலூன்’ புகையிரதத்தளம் தொடக்கும் தபாற்கந்தோர் வரை நடந்த பின்,

“உன்ரை கைப்பிரச்சனையோடை, கப்பலிலை வேலைசெய்யிற ஆளெண்டு சொல்லிப்போறது சிக்கலில்லையோ?”

- கடைசியிலே துணிந்து கேட்டுவிட்டேன்.

“அதைக் காசைக் கைக்குள்ளை வைச்சு சரிக்கட்டலாமெண்டுதான் ராசாங்கம் அண்ணர் எங்களிட்டை ஒண்டு கூட வாங்கினவனவர்; மற்றவங்களிட்டையெல்லாம் அஞ்சு; என்னட்டைமட்டும் ஆறு; இப்ப குடுக்கிறாதெல்லாம் பிறகு மேலாலை வந்த கணக்கிலை. . .”

. . . காசு கற்கையின்றியே சரளமாகப் பேசப்படக்கூடிய மொழி. . . .

“அண்ணை, அந்த உங்கடை ஹொங்கொங் அக்கா எப்படியாள்? ஒத்துவருவாவோ?”

எனக்கு இவனின் கேள்வி விசித்திரமாகப் பட்டது.

“என்னத்துக்கு ஒத்துவாறது? பழக நல்ல பிள்ளை”

கொஞ்சம் தயங்கிப் பிறகு சொன்னான்,
“இல்லை; ஹொங்கொங்காரர் இலங்கையாக்களெண்டால், சரியாப் பழகமாட்டாங்கள் எண்டு ராசாங்கம் அண்ணை சொன்னவர். எனக்கும் பார்க்க அப்படித்தான் தெரியுது.”

/என் அனுபவமும் அப்போது பெரிதாக அவனுடையதிலிருந்து வித்தியாசமில்லைத்தான்; ஆனால், அப்போது, நானும் சிறகை விரித்து ஆட்களோடு பேச முற்பட்டிருக்காத காலமானதால், என் பக்கத்திலும் சிக்கலிருந்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது./

“அதுவும் ஓரளவு சரிதான். எனக்குப் படுகிறமாதிரிக்கு தங்கடை வேலையைச் செய்யத்தான் வெளிநாட்டுக்காரர் வருகினம் எண்ட எண்ணமும் கொஞ்சமிருக்கு. மற்றப்பக்கத்திலை இங்கை கனபேர் விசாமுடிஞ்சும் நிக்கிறதால, கள்ளர்காடையர் எண்டமாதிரியும் யோசிக்கினம். எங்கடை ஆக்களும் இங்கை செய்யிறதெல்லாம் சரியெண்டும் சொல்லவேலாது; ஆனால், எல்லாரிலையும் நல்லவை கெட்டவை இருக்கினந்தானே; எங்களுக்குப் பொருத்தமானவை இல்லாதாவை எண்டு இருப்பினம்; கெயிட்டி அந்தளவிலை ஒரு வித்தியாசமான போக்கு”

“அப்ப உங்களுக்குப் பேசப்பழக நல்ல பொருத்தமெண்டுறியள்” -சிரித்தான்.

அவனுக்கு ‘தை(ப்)போ’வுக்குப் புகையிரதச்சீட்டை எடுத்துக் கொடுத்து ஏற்றி விட்டு, “வீட்டுக்குப் போனவுடன் தொலைபேசி எடுத்துப் போய்ச்சேர்ந்ததைத் தெரிவி” என்று சொல்லி வழியனுப்பிவிட்டு வீடு வந்து சேர்ந்தேன். நல்ல களைப்பு; சுபேதியும் மற்ற நண்பர்களும் லாந்தாவ் தீவுக்கு தை ஓவீலே யாரையோ சந்திக்கப்போயிருந்தார்கள்; பிலிப்பினோ நங்கை ஞாயிறுகளிலே சிநேகிதிகளைக் காணப் போயிருப்பாள்; ராம்சிங்குக்கு ஞாயிறும் வேலை; மற்றவரின் கதவுமூடியிருந்த ‘அறை’க்குள்ளே ஆணும் பெண்ணுமிருப்பது சன்னமான ஒலிவடிவாய் வீட்டுக்குள்ளே நடைபாதையிலும் அலைந்து கொண்டிருந்தது. அப்படியே அரை நித்திரையிலே தொலைக்காட்சியிலே ‘அலாடின்’ சித்திரப்படமோடச் சாய்ந்திருக்க, தொலைபேசி தொடந்து அலறியது. எடுக்க, நகுலேசன்.

“சுகுணனண்ணை, பத்திரமாய் வந்து சேத்திட்டன்”

“சரி”
பின்னாலேயிருந்து “நான் அவரோட கதைக்கவேணும்; போனைத் தந்திட்டு, அறைக்குள்ளை போய் அந்த ‘லேரைம்’, ‘லேடன்’ எண்டால் என்னெண்டு ஞாபகப்படுத்திக்கொண்டு, அரிசியைக் களைஞ்சு <”கல்லில்லாத அரிசியை ஏன் களைவான்?”> ரைஸ்குக்கருக்குள்ளை போடு; இண்டைக்கு உன்ரை முறையெல்லோ?” - இராசாங்கம்.

“தம்பி எப்படியிருக்கிறியள்; காசு பத்திரமாய்க் கொண்டுவந்து தந்திட்டான்”

“சரி; இந்தக்கிழமை விசாவுக்கு ஆக்களைக் கொண்டுபோறியளோ?” - ஏதாவது கேட்க வேண்டுமல்லவா? கேட்டுவிட்டேன்.

“எங்கை தம்பி போறது? நேற்றைக்குத்தான் சொன்னனல்லே இருக்கிற பிரச்சனையைப் பத்தி. அது அப்பிடியே கழுத்துக்குமேலை பாறாங்கத்தி மாதிரித் தொங்குது. அதுதான் இப்ப உங்களோடை கதைக்கோணுமெண்டு எடுத்தனான்.”. . . . ‘என்னோடை? கனடா கொண்டுபோறதைப் பற்றி என்னோடை என்னத்தைக் கதைக்க இருக்கு; கடலிலை சூறாவளி அடிச்சால், அலை எந்தளவு உயரம் சூறாவளிவேகத்தைப் பொறுத்தெழும்பும் எண்டதையே சரியாக் கணக்குப்போடமுடியாமல், ஒரு வருசமா மல்லுக்கட்டிக்கொண்டிருக்கும் எனக்கென கப்பலைப் பற்றித் தெரியப்போகிறது; கனடாவுக்கு ஆளனுப்புறதைப் பற்றித் தெரியப்போகிறது’ - மெல்லிய பயமொன்று நீரிலே கலந்த நீலப்பொடியாய் அடியிலிருந்து எழுந்துவிரிந்து பரவியது . . .

. . . “கனடாவிலை எனக்கு முதலே தெரிஞ்சவன் ஆள் கப்பல் வேலைத்தரத்திலை இருக்கிற நேரத்திலை, இவங்கள் கனடியன் எம்பஸிக்கு விசாவுக்குப் போகிறமாதிரி ஒருமாதிரி அமைச்சால், புதுசாச் சேந்த மற்றவன்ரை காசை வெட்டலாம். பழையவனுக்கு அவன் ஏத்திக்கேக்கிற காசுக்கும் போற ஒராளுக்கு ஒரு பத்தை மேலை வைச்சுக்குடுத்தால், அவன் மற்றவனை வெட்டிப்போட்டு முழுசையும் தன்ரை கொன்ரோலுக்குள்ளை இருக்கிறமாதிரி வைச்சுக்கொள்ளுவான். இங்கையும் நேற்றைக்கு நீங்கள் கண்ட கொங்கொங்காரனுக்கு ஒரு ஐஞ்சை ஏத்தினால், இடையிலை பாக்கிஸ்தான்காரண்டை தரகை வெட்டிப் போடலாம்.” . . . <“சரி, நல்ல யோசனையாத்தான் படுகுது; இதிலை என்னோட கதைக்க என்ன இருக்கு??”> . . .“ ஆனால், எம்பஸிக்குப் போற கப்பல் துண்டிலை மற்றவன்ரை கையெழுத்து இல்லாமல் எதுவும் செய்யேலாதெல்லே? அவனுக்கு மொத்தமாய் ஆளுக்கு எழுபத்தைஞ்சு அழுகிறது அநியாயம்?” . . . <”மெய்தான்; ஒத்துக்கொள்ளுறன். பிறகெப்பிடி இந்தப்பிளான் வேலை செய்யும்?”>. . . “அதுதான் எனக்கு ஒரு நல்ல சிம்பிளான பிரச்சனையில்லாத ஐடியா வந்துது”. . . “சொல்லுங்கோ”. . . “கனடாவிலை இருக்கிற பழையவன், புதுசா வந்திருக்கிறவன்ரை பேரை, கையெழுத்தை ‘பக்ஸி’லை அனுப்பியிருக்கிறான். சும்மா கோழி வாழைப்பாத்தியை ரெண்டுதரக்கா(ல்) இடக்காலும் வலக்காலும் மாத்திமாத்தி விறாண்டிக் கிண்டின கீறல்; ஐஞ்சு நிமிசம் போட்டுப்பழகினா(ல்), அவனை மாதிரியே கிறுக்கிப்போடலாம். தம்பி, நீங்கள் அவன்ரை கையெழுத்தைப் போட்டிட்டால், விசயம் ஐஞ்சு நிமிசத்திலை முடிஞ்சுபோம்; நாளைக்கு இங்கை வீட்டுக்கு வந்தால், இங்கையே முடிச்சுப்போடலாம்”

“.”

“ஹலோ தம்பி; ஹலோ ஹலோ. . . . டேய் வசந்தன், ஆராச்சும் ‘ரெலிபோன்’ வயரை இழுத்தனியளோடா? ‘ரேப்’ சத்தத்தைக் கொஞ்சம் குறையுங்கோடா. நாசமறுவாங்கள் சும்மா அவளுகள் கேரிக்கொண்டு முக்கிறதெல்லாத்தையும் பாட்டெ <”நாங்களொண்டும் செய்யேல்லை அண்ணன்; நாங்கள் இங்கை அறேக்குள்ளை படுத்திருக்கிறம். அங்காலை அவற்றை பக்கத்திலை ‘கட்’டாய்ப்போச்சோ என்னவோ. கட்டானால், ர்ர்ர்ர் எண்டு சத்தம் இழுத்துகொண்டு வருமே”> . . . ஹலோ! தம்பி சுகுணன், ஹலோ. . .”

“அண்ணன்; சொல்லுறன் எண்டு கோவிக்கக்கூடாது; இது என்னாலை செய்யேலாத விசயம்...” பாய்ந்து இடைமறித்தார் - “தம்பி சுகுணன், பயப்பிடீறீங்கள்போலை. இதிலை பயப்பிட ஒண்டுமேயில்லை... உங்கட ‘சைனை’ அவங்கள் ஆரெண்டு பாக்கவே தேவை வராது; கனடாக்கு ரெலிபோன் எடுத்தாலும், எங்கட மற்ற ‘ஏஜென்ற்’ கதைப்பான். சொல்லப்போனால், அந்தக்கனடாக்காரனே கடிதத்துக்குப் பிறகு பெயருக்கும் இல்லை; உங்களுக்கொண்டும் பாதிப்பில்லை. . .” -நியாயங்கள் அடுக்கித் தட்டிவிட்ட சிகிரெட் பெட்டிகள்போல வளைந்து வளைந்து விழுந்துகொண்டேபோயின.

“அண்ணை, அதுவும் ஒரு பிரச்சனைதான்; அந்தப்பயமும் எனக்கு இருக்குத்தான். ஆனால், என்ரை பெரியபிரச்சனை, இது ஏமாத்துவேலை. இதுக்கு நான் ஒருக்காலும் ஓமெண்டு சொல்ல ஏலாது. வேறாச்சும் நான் செய்யக்கூடியதிருந்தால் சொல்லுங்கோ. குறை வைக்காமற் செய்யிறன். ஆனால், இது சரியெண்டு படயில்லை. மன்னிச்சுக்கொள்ளுங்கோ. கேக்கிறனெண்டு கோவிக்காதயுங்கோ. பெயரேதும் வெளிய வராதெண்டால், ஏன் நீங்கள் ‘சைன்’ வைக்கக்கூடாது; அல்லது இந்தப்பொடியங்கள் யாராவது கையெழுத்துப்போடலாந்தானே? நான் என்னத்துக்கு?”

“தம்பி, செய்யலாந்தான்; ஆனா, எங்கடை சொந்தக்கையெழுத்தை ‘எம்பஸி’க்காரன் எந்த நேரத்திலை என்ன காரணத்துக்குக் கேப்பான் எண்டு சொல்ல ஏலாதெல்லே? பிறகு அந்தக் கையெழுத்தை வைக்கேக்கை, இதுக்கும் அதுக்கும் உள்ள ஏதாவதொரு தொடுப்பைப் பிடிச்சானெண்டால், எல்லாம் போச்சு. இவங்கள் பொடியங்கள் வேறை, அவன் கேள்வி கேக்கமுதலே நடுங்கிக்கொண்டு நிக்கிற ஆக்கள்; உம்மட கேஸ் வேற. அவங்களுக்கு நீர் எந்தக்கையெழுத்தும் இந்தக்கையெழுத்தைத் தவிர வைக்க வேண்டியதில்லை, முன்னாலையும் வரத்தேவையில்லையே. பிறகொரு பிரச்சனையும் வர நியாயமில்லைத்தானே? நீர் உதவி செய்வீரெண்டுதானே நேற்றைக்குச் செய்யிறதெல்லாமே சொன்னனான்; நீர் இப்பிடிக்கையை விட்டால், இந்தப்பொடியன்களின்ரை நிலைமையைக் கொஞ்சம் யோசிச்சுப்பாரும்; நகுலேசன் <"கூழங்கைத்தம்பிரான் காணாமற்போனான்!"> போல..." - கொஞ்சம் கெஞ்சுறதுபோலையும் மிச்சம் அதட்டுறது போலையும் நான் ஏன் கையெழுத்து வைக்கவேணும் என்பதற்கான நீதியைப் பேசிக்கொண்டிருந்தார்.

"அண்ணன் நீங்கள் சொல்லுறது எனக்கு விளங்குது; தெரியும். ஆனால், நான் சொல்லுற காரணத்தையும் யோசிச்சுப்பாருங்கோவன்"....."சரி இப்படிப் பாரும்; ஒரு கையெழுத்துக்கு பத்து உமக்கு; மொத்தம் பன்னிரண்டுபேர். உமக்கு ஒரு இலச்சத்திரண்டு வருகுது. நியாயமான கணக்கு"

"ராசாங்கம் அண்ணை; இஞ்சை நான் பிஸ்னஸ்காரனில்லை; என்ரை காரணம் விளங்காட்டி(ல்), எனக்கு விருப்பமில்லையெண்டால், விடுங்கோ. இப்படி பேரம்பேசிக்கொண்டு வாராதீங்கோ; நான் போனை வைக்கிறன்" கொஞ்சம் நெருப்பாகச் சொல்லிவிட்டு, தடாலென்று வைத்துவிட்டு அறைக்குப் போகவும் உடம்பு நடுங்கிக்கொண்டிருந்தது. காற்சட்டையைப் போட்டுக்கொண்டு, ‘வம்பொக்கா கார்டின்ஸ்’, ‘ஹ¤ங்கொம்’ கடற்கரை எல்லாவிடமும் ஆத்திரம் தீர அலைந்துகொண்டிருந்தேன். மற்றவங்களைப் பற்றி எந்தக்கவலையும் எனக்குப் பெரிதாக இல்லை; ஆனால், நகுலேசனை நினைக்கக் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அதைத்தவிர முன்னீஸ்வரன் என்ன சொல்லுவானோ என்பதும் கொஞ்சம் உறுத்தியது. ஆனாலும், கள்ளக்கையெழுத்து வைக்கிறதென்பது எந்த விதத்திலே பார்த்தாலும் சும்மா சின்னக்காரியமில்லை. வீட்டுக்குத் தெரிந்தாலோ, சுபேதி, செந்திலுக்குத் தெரிந்தாலோ, பைத்தியக்காரன் என்றுதான் சொல்வார்கள் என்று தெரியும். இருட்டினபிறகும் ஹ¤ங்கொம் படகுத்துறையிலே குந்திக்கொண்டு விமானநிலையத்திலேயிருந்து எழும் விமானங்களையும் வரும்போதும் படகுகளையும் பார்த்துக்கொண்டிருந்தேன்.

வீட்டுக்குப்போனால், சுபேதி வந்த களைப்பிலே நித்திரை. மற்றவர்களும் நாள்முடிந்ததிலே வேறுவேறு காரணக்களைப்பினால் அடித்துப்போட்டதுபோல நித்திரையாகியிருந்தனர். ஒன்றும் செய்யவிருப்பமில்லாமல், இருட்டுக்குள்ளே குழப்பத்திலே மேற்தட்டைப் பார்த்தபடி கிடந்தேன். வீட்டுக்கு வரும் ஒவ்வொரு தொலைபேசிக்கும் பயம் வந்தது. கடைசியிலே விரும்பாத எனக்கும் வந்தது; இராசாங்கந்தான்.

"தம்பி, நானும் கொஞ்சம் என்ரை கஷ்டத்திலை உங்களைக் கஷ்டப்படுத்தியிட்டன்போலை; காசைக்காட்டினால், வேலை செய்யிற ஆள் நீங்கள் எண்டு நான் எண்ணேல்லை; பிழையாய் விளங்காதீங்கோ; உங்களுக்கும் சும்மா ஒரு ஐஞ்சு நிமிடக் கையெழுத்துப்போட வாற காசுதானே பிரியோசனமாயிருக்கும் எண்டு யோசிச்சன். வேலூண்டியார் சத்தியமாய்ச் சொல்லுறன்; நான் பிழையான ஆளில்லை தம்பி; காசைமட்டும் பாத்தால், இப்ப்டிப்போறவங்களுக்கு வட்டிக்குக் குடுத்துக்கொண்டிருக்கலாம்; மினக்கெட்டு ஒரு ரெண்டுமணித்தியாலத்தெப்பை போடுறதுக்காண்டி காசை விட்டெறிஞ்சு ஊருக்குப் போய், உடனேயே வருவனா?"....நான் எதுவும் பேசவில்லை..."வேறையாரும் கையெழுத்துப் போடக்கூடிய, செய்யக்கூடிய நம்பிக்கையான ஆக்களிருந்தால் சொல்லுங்கோ. நீங்கள் அவங்களோட கதைக்கவேண்டாம். நானே கதைச்சுப் பாக்கிறன்; இவங்கள் பொடியங்களைப் பாக்கப் பாவமாயிருக்கு; இண்டைக்குச் சமைச்சுப்போட்டுச் சாப்பாடு இறங்குதில்லை எண்டு அப்பிடியே கொட்டிப்போட்டு, வெறும் ‘பிளேன்ரீ’யைக் குடிச்சுப்போட்டுப் படுக்கிறாங்கள்" கயிறா அரவமா என்றறியமுடியாமல் தொலைபேசியூடாக ஊர்ந்து கொண்டிருந்தது அவரது நாக்கு.

பேசிக்கொண்டிருக்கும்போது, இன்றைக்கும் என்ன காரணமென்று பிரித்தறிந்து சொல்லமுடியாத உணர்வினால், கடைசியிலே ஒரு முடிவுக்கு வந்தேன்.

"அண்ணை; நாளைக்கு எல்லாத்துக்கும் ஒரு கையெழுத்துப்போட்டுத்தாறன். ஆனால், ஒண்டிரண்டு 'கண்டிசன்'. பொடியங்களுக்கு நான்தான் கையெழுத்துப் போட்டுத்தந்தன் எண்டு தெரியக்கூடாது; அங்கை வீட்டுக்கு வந்து கையெழுத்துப் போட்டுத்தரமாட்டன். வேறை எங்கையாவது தெரிஞ்சாக்கள், தெரியாதாக்கள் இல்லாத இடமாய்ப் பாத்துக் கொண்டாருங்கோ. மூண்டாவது, எனக்கும் உங்களுக்குமிடையிலைதான் இது இருக்கவேணும்; காசு கத்தரிக்காய்க்கதையெல்லாம் பேசிக்கொண்டிருக்காதையுங்கோ. கடைசி, இதுதான் முதலும் கடைசித்தரமும். ஆளைவிடுங்கோ"

"மெத்தப்பெரிய உபகாரம் தம்பி; வயதிலை குறைஞ்...." நீட்டி முழக்கிக்கொண்டு போனது பதியவில்லை.

திங்கள் மதியம் வான்சாயிலே எங்கையோ ஒரு இந்திய உணவகத்திலே வைத்துக் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்தைப் போட்டுக்கொடுத்தேன். சாப்பிட்ட செலவு வந்தபோது, பாய்ந்தடித்து இரண்டுபேருக்கும் அவரை வலிந்து மறித்து நானே கொடுத்தேன். வெளியே வந்து அவர் திரும்பக் கௌலூன் போல வேண்டுமென்றார்; நான் எந்த வேலையும் இல்லாதபோதும், சென்றலிலே சிநேகிதன் ஒருவனைப் பார்க்கவேண்டுமென்றேன்.நகுலேசனைப் பிறகு என்னோடு கதைக்கச்சொல்லும்படி கேட்டுக்கொண்டு விலகி நான் சென்றலை நோக்கி நடந்தபோது, பத்தாண்டுகளின் பின்னர் மனது இலேசாக இருந்தது தெரிந்தது; ஆனாலும், உள்ளே ஒரு சின்னப்பயத்தால் இதயம் அடிக்கடி இலக்குப்பார்த்து அடித்த முயலாய்த் துடித்தது.

பிறகு இரு கிழமைகளுக்கு நகுலேஸ்வரதாஸோ, முன்னீஸ்வரதாஸோ தொலைபேசி எடுக்கவேயில்லை; ராசாங்கமும்கூட. கொஞ்சம் கவலையும் மிச்சம் நிம்மதியுமாக இருந்தது. இன்னமும் இரவிலே வரும் தொலைபேசிகளுக்கும் வீதியிலே போகும் பொலிஸ்காரர்களுக்கும் பயம் தோன்றிக் கடந்து கொண்டிருந்தது. இரண்டாம் வியாழன் இரவு, நகுலேசன் திடீரெனத் தொலைபேசி எடுத்தான். குரல் அனுங்கி ஒலித்தது.

"போற விசயம் என்னாச்சுது? ஆளையும் காணன்; 'கோலை'யும் காணன்"

"அது பிரச்சனையில்லாமற் தந்திட்டாங்களண்ணன்; வாற வெள்ளிவிட்டு அடுத்த வெள்ளி கனடா போறம்; நீங்கள் கையெழுத்துத்தந்தனீங்களெண்டு ஆருக்கும் சொல்லவேண்டாமெண்டு சொல்லி ராசாங்கம் அண்ணை சொன்னவர். ஆனால், உங்களுக்கு உபகாரம் சொல்லாமல் இருக்க ஏலுமே. சொந்த அண்ணையைப் போல இவ்வளவு" - சுருதி தளர்ந்த குரலிலே நீட்டினான். எனக்கென்றால். ஆத்திரம் ஒரு பக்கம்; நிம்மதி மற்றப்பக்கம்.

"என்னடா குரல் ஒருமாதிரிக்கிடக்கு?"

"சின்னமுத்துப் போட்டிருக்கண்ணன்; அதுதான் கோல் எடுக்கேலாமப் போச்சு. நாளைக்கு நாளண்டைக்கு உதிர்ந்து கொட்டியிடும். கடிதான் தாங்கேலாமக் கிடக்கு. இளநி, வேப்பமிலையும் கிடைக்காமல், சும்மா பாயையும் 'பானை'யும் போட்டுத்தான் படுத்துக்கொண்டிருக்கிறன். தண்ணிச்சாப்பாடுதான். நாக்குச் செத்துக்கிடக்குது. ராசாங்கம் அண்ணையும் மற்றவங்களும் நல்லாப் பாக்கினம். ஆனால், இங்கையிருந்தால், எல்லாருக்கும் வரிசையாய் வந்து முடிய போற பிளான், நாள் எல்லாம் குழம்பிப்போடுமெண்டு பயமாயிருக்குது. அதுதான், உங்களோட ரெண்டுமூண்டுநாள் உங்கடை சிநேகிதர் சைனாக்குப்போற நேரத்திலை நிண்டால், பிறகு இங்கை வந்திடலாமெல்லே" -
செந்திலின் நியாயத்தை எடுத்துச் சொல்லி நிலைமையை விளங்கிக்கொள்ளுமாறு கேட்டேன்.

"சுகுணனண்னை, எனக்குத் தெரியாதே.[குரல் தாழ்ந்து] ராசாங்கம் அண்ணைதான் நீ கேக்கிறமாதிரிக் கேளெண்டவர்"
"விளங்குது; போக முதலொரு போனடி; அண்ணனைக் கேட்டதாய்ச் சொல்" - என்னிடம் அவனது தொலைபேசி இலக்கமிருந்தாலும், அடிக்கிற ஆர்வமிருக்கவில்லை.

பிறகு வந்த நாட்களில் என் வேலைகளிலே மூழ்கிப்போனேன். ஒருநாள் வீட்டிலே இருந்து, "ஏனடா வாறபோற ஏஜென்ஸிக்காரங்களோட சேருறாய். எங்கையாவது வில்லங்கத்திலை மாட்டிவைச்சிட்டுப்போயிடுவாங்கள். ராசாங்கத்தைக் கோயிலிலை கண்டன்; தெப்பை போட்டுக்கொண்டு மொட்டைத்தலையைச் சிலுப்பிக்கொண்டு வண்டியையும் தள்ளிக்கொண்டு போறான். உன்னைக் கண்டதெண்டான். அவன் ராசாங்கம் ஆக்களைக் கூட்டிக்கொண்டுபோய் ஏமாத்திக்கொண்டு நிக்கிறானெண்டு ஊருக்குள்ளை சனம் அவன்ரை வீட்டிலைபோய் தாய்க்காரியையும் மனிசிக்காரியையும் உலுப்பி எடுக்குது. நீ வேற ஏன் அவனோட...." அம்மம்மா உலுப்பி எடுத்தா.

ஒரு மூன்று கிழமைகளின் பின்னர், இராசாங்கம் தொலைபேசி எடுத்துச் சுகம் விசாரித்து, "பொடியள் நேற்றைக்குப் போய்ச் சேந்திட்டாங்கள். உங்கடை உதவியில்லாமல் இது சரி வந்திருக்காது; மெத்தப்பெரிய உபகாரம்" ... <”மிச்ச அரையை நகுலேசன் குடுத்தானா, இல்லையோ எண்டு தெரியேல்ல”> [ஆத்திரத்தைக் காட்ட விரும்பாமல்]..."பரவாயில்லை; எங்கடை பொடியங்களுக்கு என்னாலை ஆனது"..."போகமுதல், நகுலேசன் உங்களுக்குப் போனடிச்சவனாம்; ஒருத்தரும் எடுக்கயில்லை எண்டான். யூனிவசிற்றிக்குப் போயிருப்பியள் போல. ஊருக்கு நாளண்டைக்குப் போறன். வீட்டிலை ஏதும் குடுத்துவிடவேணுமே; ரெண்டு கிழமைக்குமுதல் வேலூண்டியார் அபிஷேகத்துக்குப் போன நேரம் உங்கட வீட்டிலை உங்களுக்கு ஏதும் குடுத்துவிடவேணுமோ எண்டு கேட்டன்; இல்லையெண்டிச்சினம். இங்கைவாறனெண்டோனை ஊரிலை பாதிச்சனம் தங்களுக்கு வாங்கியரச் சாமான் லிஸ்ட் தந்துவிட்டிருக்கு; கொஞ்சமும் மற்றவங்கட கஷ்டநட்டம் யோசனையில்லாததுகள்" ......" கேட்டதுக்கு உபகாரம். ஆனால், வேண்டாமண்ணை; உங்களுக்கு ஏற்கனவே நிறையச் சாமான் பாரமிருக்கும். வாற மார்கழிக்கு நான் போவன்தானே; ஆக, நாலுமாசம். போகேக்கை திரிஞ்சு வாங்கிப்போனால், சரி. இப்ப இங்கை வேலையும் கொஞ்சம் கூட. அலைய ஏலாது."....

..."பரவாயில்லை; இவ்வளவு உதவி செய்திருக்கிறீங்கள்; நான் உங்களுக்கு நிரம்பக் கடமைப்பட்டிருக்கிறன்.".... புகைப்படக்கருவி, தங்கைக்குச் சில புத்தகங்கள் இரண்டொரு சிறிய பொருட்களை வாங்கிக் கொடுத்தபோது, "சங்காய், தியான்சினிலை கப்பற்கொம்பனியிலை வேலைசெய்யிற ஆக்களாரையும் தெரியுமோ?" என்றார். நல்ல காலம்; உண்மையிலேயே எனக்குத் தெரியாது.

நகுலேசனோ, முனீச்வரனோ நான் ஊருக்குப் போகும் வரைக்கும் தொலைபேசி எடுக்கவில்லை. கெயிட்டியைக் காணும்போதுமட்டும், ஒன்றிரண்டு மாதங்களுக்கு நகுலேசன் ஞாபகம் வந்தது. பிறகு ஆக, எனது மாதாந்த வங்கிக்கணக்கு கையிலே வரும்போது தவறாமல் அண்ணனும் தம்பியும் ஞாபகத்துக்கு வந்து கொஞ்சநேரத்துக்குப் போகாமலே நின்றார்கள். காசு கொடுத்த விடயத்தை, வீட்டுக்குச் சொல்லவில்லை; செந்திலுக்கும் சொல்லவில்லை; ஆள், என்னை மடையன் என்று எண்ணிக்கொள்வதோடு லலித்துக்கும் சொல்லி வைப்பான். சுபேதிக்குமட்டும் சொன்னேன். தலையிலே கையை வைத்துக்கொண்டு, கொஞ்சநேரம் என்னைப் பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருந்தான். வீட்டுக்குப் போய்த் திரும்பியவுடன், தொலைபேசியிலே முன்னீஸ்வரனுடன் கதைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். வீட்டுக்குப் போகும்நேரம், ஒன்றிரண்டு இலத்திரனியற்சாமான்கள் சுபேதியிடம் கடன் பெற்று வாங்கிக்கொண்டுபோனேன்.

ஊரிலே இரண்டுமூன்றுமுறை தொலைவிலே இராசாங்கத்தைக் கண்டபோதே அடுத்த சந்தியிலே திரும்பி மறைந்தோடினேன். முன்னீஸ்வரன் வீட்டுக்குப் போன நேரம், அவனது தாயார் ஹொங்கொங்கிலே என்னைக் கண்டதையும் நான் உதவி செய்ததையும் நகுலேசன் சொன்னதாகச் சொன்னார். நகுலேசன், இன்னும் இரண்டு 'ஊர்ப்பொடியங்களுடன்' இருப்பதாகவும் மேலும் விபரங்கள் சொல்லி, 'உம்மடை சீனப்பெட்டை விசயம் அம்மாவுக்குத் தெரியுமோ?' என்று கேட்டபோது, நான் முக்கிமுக்கிக் கொடுத்த விளக்கமேதும் அவருடைய பதிவை அழிக்கப்போதுமானதாக இருக்கவில்லை. எனக்கு நகுலேசனிலே பரிதாபம் தொலைந்து கொஞ்சம் ஆத்திரம் வந்தது. ஆனால், அவனைச் சொல்லி என்ன என்னாலே செய்யமுடியும் என்றும் கூடவே தோன்றியது. ஊருக்குள்ளே கை-கால்-கண்-காது-மூக்கு இந்தக்கதைக்கு எப்படி முளைத்திருக்கிறதோ என்ற அச்சம் கவ்வ அலைய வேண்டியதை எண்ணி விசனப்பட்டுக்கொண்டு, அவனது ரொரண்டோ தொலைபேசி இலக்கத்தைப் பெற்று நகர்ந்தேன்.

ஹொங்கொங் திரும்பி, அங்கே ஒரு மாதமும் இருக்கவேண்டியிருக்காமல், அமெரிக்க செயின்ற்.லூயிஸ¤க்குப் புத்தகப்பெட்டியையும் கடவுச்சீட்டையும் உடுப்புமூட்டையையும் தூக்கிக்கொண்டோடினேன். போயிருந்து, எல்லாம் படிந்த மூன்று நான்கு மாதங்கள் பின்னரே, காசளவிலே அமெரிக்கா என் கையையும் காலையும் கடிக்கத் தொடங்கிருப்பது மாதக்கடைசிகளில் கடனட்டைக்குறிப்புகளிலே தெரியவந்தது. நகுலேசனைப் பிடிப்பதிலும் முன்னீஸ்வரனைக் கேட்பதுதான் சரியென்று பட்டது.

இருமுறை முயற்சித்துத் தோற்றபின், ஒருநாட்பின்னேரம் முன்னீச்வரன் தொலைபேசியிலே அகப்பட்டான்.

“என்னடா, ரெண்டு முறை வீட்டுக்குப் போன் எடுத்தன்; ஆள் அம்பிடூறாயில்லை”

“வேலையடா; இங்கை ஒரு மணித்தியாலம் வேலை செய்தாத்தானே அங்கை. . .” - கவலைகளைப் பரப்பத் தொடங்கிவிட்டான். இவனிடம் போய் என் இப்போதையக் கவலைகளைச் சொல்வது ஏதாவது விதத்திலே நான் எதிர்பார்க்கும் பயனைத் தருமா என்ற பயம் வந்தது. . . .”ஆனா, ஆறுமாதத்துக்கு முதல் ஒருக்காலும் போனமாதம் ஒருக்காலும் உன்ரை வீட்டுக்கும் எடுத்தன்முதல்முறை ஒரு பெட்டை எடுத்து அவர் நாட்டிலை இல்லை எண்டு போட்டாள். நான் நீ திரும்பி இலங்கைக்குப் போட்டாயாக்கும் எண்டு யோச்சிச்சன். . பிறகு அம்மா நீ ஊரிலை நிக்கிறாய் எண்டா. அடுத்த முறை ஒருத்தரும் எடுக்காமலே ஒரு ஐஞ்சு நிமிசம் அடிச்சுக்கொண்டிருந்துது. நான் வச்சிட்டன். எப்படியிருக்கிறாய்?”

“மச்சான் முன்னீஸ், நான் இப்ப அமெரிக்காவுக்கு வந்திட்டன்”

“எப்ப? எனக்கொருத்தரும் சொல்லையிலையே”

“இப்ப ஒரு நாலு மாசமாத்தான்”

“ரெலிபோன் நம்பரைச் சொல்லு; எழுதுறன்”

நிறுத்தி நிறுத்திச் சொன்னேன்; திரும்பிச் சொல்லிக் கேட்டு எழுதிக் கொண்டான்.

“நகுலேசன் என்னமாதிரி இருக்கிறான்? கனடா பிடிச்சுக்கொண்டுதாமோ? அவன்ரை நம்பரும் என்னட்டை இல்லை. அவனும் போனதுக்கு ஒரு ‘கோல்’ அடிக்கேல்லை. நான் போகேக்கையும் அவனிட்டைச் சொன்னனான். போய்ச்சேந்ததுசேராதது தெரிய சேந்தோனை ஒரு கோலடியெண்டு”

“அந்த நாய் அடிக்குமே; சுயநலம் பிடிச்ச சனியன்; தன்ரை தேவைக்கு மட்டும் அண்ணை தம்பியெண்டு. . .” - பொரிந்து விழுந்தான்; ஏதோ அண்ணன் தம்பிக்குள்ளே சிக்கலென்று விளங்கத்தொடங்கியது; என்னுடைய தொலைபேசுதலின் நோக்கு, தொலைபேசிச்செலவைக் கூட்டிக் கொள்வதோடுமட்டும்தான் நிற்கும் போலத் தோன்றியது.

“என்னடா! என்னடா!! இஞ்சை கொஞ்சம் பொறு; ஏன் அவனிலை சும்மா கத்துறாய்? கொஞ்சம் ஆறுதலாய்ச் சொல்லு; அவன் இப்பதான் இவ்வளவு கஷ்டப்பட்டுப்போட்டு புதுநாட்டுக்குப் போயிறங்கியிருக்கிறான். நீ வேறை அவனோட எரிஞ்சு விழுந்துகொண்டிருக்கிறாய்?”

“உனக்குத் தெரியாது, அந்தச் சனியனை; அது தேவைக்குமட்டும் காலைச் சுத்திப்போட்டு, பிறகு கழண்டுபோயிடும்” .... “ இஞ்சை பார் அவன் உன்ரை தம்பி; நீதான் இவ்வளவு கஷ்டப்பட்டு அங்கை அனுப்பினாய். இப்ப என்னடாண்டால்,. . .”

“பின்னையென்னடா? போய்ச்சேர்ந்தான். என்ரை சிநேகிதப்பொடியளுக்குள்ளால நிக்க, வேலைக்கு வசதி செய்துகுடுத்தன். உன்ரை காசு, மற்ற இங்கை நான் அவன் கனடா வரவெண்டு கடன்வாங்கிக் குடுத்த காசு எல்லாத்தையும் கொஞ்சங்கொஞ்சமாய்த் தானும் கட்டோணும் எண்ட யோசினையே சனியனுக்கில்லை. இஞ்சை நான் ரெண்டு வேலை மூண்டு வேலை எண்டு ஒழுங்காய் அன்னமாகாரம் இல்லாமல் மாஞ்சுமாஞ்சு வேலை செய்யிறன். இவர் என்னெண்டால், உழைக்கிற காசை -இஞ்சை நான் மூண்டு வேலேலை உழைக்கிறதுமாதிரி ஒண்டரைமடங்கு இவற்றை ஒரு வேலைக்குக் கிடைக்குது- அவற்றை பெட்டைக்கு ஊரிலை சங்கிலி வாங்கவும் கோலெடுக்கவும் அனுப்பிக்கொண்டிருக்கிறார். மசிர்க்காதல். கத்தரிக்காய். காதலிக்க வேண்டாமெண்டே சொன்னனான்? ஆனால், முதலிலை நாயே நீ உன்ரை காலிலை எல்லோடா நிக்கோணும். ஊரான்ரை காசை அப்பிடியே அந்தரத்திலை தொங்கவிட்டுப்போட்டு, அவளுக்கென்ன தேச்சுக்கொண்டிருக்கிறாய்? மூதேசியிட்டைக் கேட்டால், கோவம் வருகுது. அம்மாட்டைச் சொல்லுங்கோ எண்டால், அவ பாவமடா அவனும் நல்லாக் கஷ்டப்பட்டு அலைஞ்சுலைஞ்சுதானே போனவன். ஒரு கொஞ்சக்காலம் சந்தோஷமாயிருந்திட்டு, பிறகு பொறுப்பாய்ச் செய்வான். எனக்கவனைத் தெரியுமெண்டுறா. இவர் தன்ரை சந்தோஷமசிர் பிடுங்கிறதுக்கு இஞ்சை நான் இன்னும் முறிஞ்சுகொண்டிருக்கோணுமே.. இப்ப பார் உன்னட்டைக் காசு வாங்கிக்குடுத்திருக்கிறன். நீ என்னைத்தானே நம்பிக்குடுத்திருக்கிறாய்? இந்தக் கூழங்கையனையே? இல்லைத்தானே? நான்தானே உனக்குப் பதில் சொல்லோணும். அவருக்கென்ன அவற்றை பெட்டைக்குப் போனிலை சீலை கழுவுறார். எளிய நாய்.” - என் கழுத்திலே கயிறு சரியாக இறுகிப்போனது தெரிந்தது. . .”சரி சரி; கொஞ்சம் பொறு. அவனுக்கு விசயம் விளங்கும். அவன் அப்பிடியண்டும் பாக்க, கூடாத கெட்டழியிற பொடியனாய்த் தெரியேல்லை. அவனும் சின்னப்பொடியந்தா.. .” ... . “நீ அடுத்தவன்; அவனுக்கு வக்காலது வாங்கிக்கொண்டு. . . நீயே அவனிட்டை எடுத்து உன்ரை காசுக்கு நியாயம் கேட்டுப்பார் என்ன சொல்லுறானெண்டு கேட்டுப்போட்டு நான் கத்துறதிலை நியாயம் அநியாயம் சொல்லு” - <“பந்தை எதேச்சையாகவோ திட்டமிட்டோ என் காலிலே தட்டிவிடுகிறான்”> “சொன்னாப்போல, உங்கடை அம்மா தந்த அவன்ரை ரெலிபோன் நம்பரைச் சொல்லுறன்; சரியோ மாறியிட்டோண்டு சொல்லு; நான் கதைச்சுப்பாக்கிறன்”

மாறிப்போயிருந்தது <”என்ரை சிநேகிதங்கள் எனக்காண்டிக் கதைச்சுப் போட்டாங்களமெண்டு, இத்தினைகாலமில்லாத சூடுசுரணை இப்பதான் வந்து சண்டைபோட்டுக்கொண்டு, அவரோட ஒத்தோடக்கூடிய ரெண்டு வாலுகளோட போயிருக்கிறார்”>; அவனோடு சொல்ல புதிய தொலைபேசி எண்ணை எழுதிச் சரி பார்த்துக்கொண்டு, தொலைபேசியை வைத்துவிட்டு, ஆயாசத்துடன் அமர்ந்தேன். இந்தக்கடனை எப்படித் திரும்பி எடுத்து மாளப்போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. காசு இருக்கும்போது, அதைப் பற்றிக் கவலையில்லை; கையிலே கடித்துக்கொண்டு நிற்கும்போது, என்ன செய்வதென்று தெரியவில்லை. முன்னைப் பின்னை கடன் எடுத்துக்கொடுத்து எனக்கு அனுபவம் இல்லை; இப்போதுதான், சில சிநேகிதரிடம் அந்தர அவசரத்திலேவாங்கினேன். சுபேதியிடம் இலங்கைபோகும்போது வாங்கிய கடனிலே பாதி ஹொங்கொங்கிலே இருந்து இங்கே வந்தப்பிறகும் பிய்ந்து என்னோடு தொங்கிக்கொண்டு வந்திருக்கிறது. கடன் தந்த நண்பர்களுக்கும் வீடு பிள்ளைகள் என்று எவ்வளவு செலவுகள் இருக்குமென்று எண்ணும்போதும், எனக்கு நகுலேசன் -முன்னீஸ்வரன் பற்றி இருக்கும் மனநிலை போலத்தானே எனக்குக் கடன் தந்தவர்களுக்குமிருக்கும் என்று எண்ணும்போதும், உள்ளுக்கு அந்தரத்திலே நிலை கொள்ளாமல் அலைந்தேன். உள்ளவதி தாங்கமுடியாமல், நகுலேசனுக்கு உடனே தொலைபேச முயன்றேன். ஆளில்லை. பெயரையும் தொலைபேசி இலக்கத்தையும் பதிலிறுப்பியிலே சொல்லி வைத்தேன். ‘ஆள் திரும்ப எடுத்த சாடையாய்த் தெரியவில்லை.’

அடுத்த ஞாயிறு காலை ரொரண்டோ நேரம் ஐந்து மணிக்குத் திரும்ப அடித்தேன். “ஹலோ” என்ற நித்திரைக்குரல் நகுலேசனுடையதில்லை. பிழையாக இலக்கத்தை எழுதிக்கொண்டேனோ என்ற யோசனையிலே “நகுலேசன். . .” என்று இழுத்தேன். “இருங்கோ” என்றதன்பின்னால், “கூழங்கை; உனக்குப் போன்” <”இங்கையும் கூழங்கை தொத்திக்கொண்டு வந்திட்டுது”> “எனக்கோ? ஆரெனக்கு இந்தக் காலமைக்குளிருக்குள்ளை எடுக்கிறது; கொஞ்சம் படுக்க விடமாட்டாங்களெ..” - எரிச்சலும் சோம்பலும்பட்டது, அவன்தான்.

“ஆர்?”
“நான் சுகுணன்”
“ஆர்”

நித்திரைக்குழப்பத்திலே இன்னும் இருக்கிறான் போலும்

“நான் ஹொங்கொங் சுகுணன்”

“சுகுணனண்ணை, எப்பிடி இருக்கிறியள்? நான் இப்ப ரெண்டு மணிக்குத்தான் வேலையால வந்தனான்; கொஞ்சம் அசந்துபோனன், அதுதான் நித்திரைக்குழப்பத்திலை உங்கடை குரலடையாளம் தெரியேல்லை; இப்ப உங்கை என்ன நேரம்; வையுங்கோ. நான் எடுக்கிறன்.”

“நான் இப்ப ஹொங்கொங்கிலை இல்லை; அமெரிக்கா வந்திட்டன்; எப்பிடி இருக்கிறாய்? முனீஸோட போன கிழமை கதைச்சனான். அவன்தான் நம்பர் தந்தவன். உனக்கு எடுத்தன் ஆளில்லை. அதால, மெசினிலை மேசேஜ் விட்டனான். கேக்கேல்லையோ?”

“இல்லையண்ணன்; இந்த இழவெடுப்பான்கள் சில நேரம் கேட்டதுகேக்காதது பாக்காமல், தங்கட இஷ்டத்துக்கு வெறியிலை அழிச்சுப்போடுவாங்கள். <”டேய் நரேன், நீ கிட்டடடியிலை ஆன்சர்மெசினிலை கேக்காமலேயே எதையாச்சும் அழிச்சனியனியேடா?” அந்த நரேன் எந்த பதில் சொன்னான் என்பது கேட்கவில்லை> இவங்கள் இப்படித்தானண்ணை. இவங்களாலை சாருமதி அவசரத்துக்கு அங்கை எக்ஸேஞ்சுக்குப் போய் எடுக்கிற கோல்கூட கைக்கு வாரமச் சில நேரம் போயிடும். முன்னீஸ் அண்ணர் என்னைப் பற்றி நல்லாயேதும் சொல்லியிருக்கமாட்டாரே? முந்தியாவது நாய் பேயெண்டு ஏசிக்கொண்டிருந்தார்; இப்ப அதுவுமில்லை. என்னோட அவர் கதைச்சே நாலு மாதம். கோலெடுத்தாலும் நானெண்டு தெரிஞ்சால், தூக்கிறேல்லை. அவருக்குச் சாருமதியை நான் விரும்புறது பிடிக்கேல்லை. அவளுக்குக் கோல் எடுக்காதை, கடிதம் போடாதை எண்டால், எனக்கும் இருக்கிற பிரச்சனைக்குள்ளை ஆத்திரம் வராதே? நானென்ன சின்னப்பொடியனே? எனக்கும் யோசிச்சுச் செய்ய மூளை இருக்குத்தானே? அவள் அங்கை படுற பிரச்சனையை...” - என் சொந்த உளச்சோர்வு தாளாமல் “ஓமோம்; சரி; சொல்லு; சொன்னவர்; நியாயந்தான்; கேக்கிறன்” என்று ஒற்றைப்பதங்களை ஒவ்வொன்றாக மாற்றி மாற்றி உதிர்த்துக்கொண்டிருந்தேன்; அண்ணன் -தம்பிச்சண்டைக்குள்ளை நான் போக நீதியில்லை. நாளைக்குக் கட்டித்தழுவிக்கொண்டால், இடையிலே என் பொச்சுத்தலைத்தேங்காய்தான் உதைபந்தாய் உருளும். . .

. . . “உங்கடை காசை..” - தடாலென்று காதுகள் விழித்துக்கொள்ள, “அவர் தரவேண்டாம்; எனக்குப்போன செலவுதானே; நான் கட்டுறதுதான் முறை; அண்ணை எனக்கு ஒரு வருசம் தவணை தாங்கோ; கொஞ்சம் கொஞ்சமாய் வட்டியும்போட்டுக் கட்டி முடிச்சிடுறன்; உங்கட வீட்டு அற்றஸையும் பாங்க் எக்கவுண்ட் நம்பரையும் தாங்கோ” . . . ஓராண்டானாலும், கொடுத்தது என் தேவைக்குக் கையிலே வந்தாற் காணும் என்ற நிலைமட்டுந்தான் எனக்கு. . .”நகுலேஸ், இந்த வட்டி குட்டி ஒண்டும் எதிர்பார்த்து உனக்கு நான் காசு தரேல்லை; அந்தரத்திலை தெரிஞ்ச ஆக்களுக்கு உதவுறதுதான் நியாயம். அதுதான் தந்தனான். வட்டி அனுப்பி என்னை மரியாதை கெடுக்காதை. விளப்பமில்லாமல் வெளிக்கிட்டு இங்கை வந்ததாலை, எனக்குக் கொஞ்சம் அவசரத்தேவை; அதாலதான் காசு கிடைச்சால், கொஞ்சம் மூச்சுவிடலாமெண்டு நினைக்கிறன். மிச்சப்படி, எனக்கு வட்டி கிட்டி. . . அந்தக்கதையை முழுக்க மற” . . .” இல்லையண்ணன்; இங்கை பாருங்கோ என்ன நடக்குதெண்டு. வெள்ளைக்காரங்கள்; சிநேகிதம் ஒரு பக்கம்; தொழில் மற்றப்பக்கம் எண்டுதான் வாழ்க்கையை வலுசிம்பிளாய்ப் பிரிச்சுவைச்சு நடத்துறாங்கள்; பிரச்சனையில்லை கண்டீங்கள்தானே? நாங்கள்தான் ஒண்டுக்கை இன்னொண்டாப் போட்டு எங்களையும் குழப்பியடிச்சு மற்றவங்களையும் குழப்பியடிக்கிறம்..”... .

“நாங்கள் வெள்ளைக்காரங்கள் இல்லையேடா. நாங்கள் பிறந்து வளந்து இத்தனை நாளாய். . . “. . “அண்ணை; இதை யோசியுங்கோ; நீங்கள் திரும்பி, இலங்கைக்குப் போப்பறியளே? இல்லை. நான் போகப்போறனே? இல்லை; பிரச்சனை தீர்ந்தாலும் சும்மா, ஒரு லீவுக்குப் போட்டு இறங்கின சூடாற முதல் திரும்ப இங்கை ஓடிவந்து குளிருக்குள்ளை குந்திக்கொண்டிருக்கப்போறம். பிறகேன் இன்னும் அங்கையிருக்கிற இலங்கையாக்கள் மாதிரி யோசிப்பான்? அங்கை போற ரெண்டுமூண்டு கிழமைக்குமட்டும் அவையள் மாதிரி யோசிச்சப்போச்சு; இங்கை வந்து சாப்பாடு, உடுப்பு, போக்குவரத்து எல்லாமே சுவாத்தியத்துக்காயும் வசதிக்காவும் மாத்தவேண்டியதாப் போச்சு; உள்ளுக்குள்ளை ஆள்மட்டும் மாறமாட்டனெண்டு ஒத்தைக்காலிலை நிண்டால், எங்களுக்குத்தானே காலுளைச்சல்”

இவனோடு பேசி ஏதும் நான் நினைக்கும் மாதிரிப் பலன் வரப்போவதில்லை என்று தெரிந்தது. முன்னீஸ்வரன் இவன் நினைக்கிறதுக்கும் முழுக்க மற்ற மாதிரி யோசிக்கிற ஆளாயிருப்பான்போலத் தெரிந்தது; அதனால், இரண்டு பேருக்கிடையிலும் கருத்து வேறுபாடு வருகிறது இயல்புதான் என்று தோன்றியது. முகவரியையும் வங்கிக்கணக்கிலக்கத்தையும் கொடுத்துவிட்டுத் தொலைபேசியை வைத்தேன்.

மேலும் கடன் வாங்காத நண்பர் ஓரிருவரிடம் வாங்கி உடனான தேவைக்குப் பயன்படுத்திக்கொண்டேன். ஆறு மாதங்களுக்குப் பிறகு என் வங்கிக்கணக்குக்குக் கொஞ்சம் பணம் அனுப்பியிருந்தான். கொடுத்ததிலே, கால்வாசி தேறும். கிடைத்ததைச் சொல்ல அன்று மாலை அவனின் வீட்டுக்குத் தொலைபேசியை எடுக்க, வீட்டிருந்த பையன், “அவன் பெட்டையோட வேற வீட்டுக்கு மூவ் பண்ணியிட்டான்” என்று புதிய இருப்பிடத்துத் தொலைபேசி எண்ணைத் தந்தான். எனக்குச் சந்தோஷம்; இத்தனை கஷ்டப்பட்டும் ஒருமாதிரி வந்து ஆறுமாதத்துக்குள்ளேயே அவளை ஏதோ விதத்திலே எடுத்துப்போகிற புத்திசாலித்தனமும் பொறுப்புணர்வும் எத்தனை என் அரைக்கிழட்டு வயதுக்காரருக்கே இருக்குமென்று யோசித்துப்பார்த்துக்கொண்டு அவனுக்கு தொலைபேச முயன்றேன்.

"ஹலோ"

"ஹலோ! ஹ¥ இஸ் திஸ்?" - கொஞ்சம் பிரிட்டிஷ் சாயலோட 'செல்லம் பொழியிற பெட்டைக்குரலொண்டு'.

"ஹலோ! இஸ் இற்..." தொலைபேசி எண்ணை கவனமாக வாசித்து நகுலேசின் வீடுதானா என்று உறுதிப்படுத்தினேன்; அதுதான்.

"நகுலேஸ்வரதாஸ்..."

'டாஸ்' வேலைக்குப் போய்விட்டதாகவும் காலை ஐந்து ஆறு போல நான் தொலைபேசி எடுத்தால் இருப்பானென்றும் என்னைப் பற்றிய விபரத்தைச் சொன்னால், அவனிடம் கொடுப்பதாகவும் அல்லாவிடின் தான் தொலைபேசியை வைக்க பதிலிறுப்பியிலே செய்தியை விடவும் சொல்ல, என் விபரத்தைக் கொடுத்துவிட்டுக் மிகுதி இரவுக்குக் குழம்பிக்கொண்டிருந்தேன்.

அரைநித்திரையில் தொலைபேசி அடிக்க, விழுந்தடித்துப் போனால், "அண்ணன் போனடிச்சீங்கள் எண்டு வனேசா சொன்னாள்; காசனுப்பினனான்."

'வனேசா' என்றானா 'வனசா' என்றானா என்றொரு குழப்பம்.

"ஓமோம் கிடைச்சுது. அதைச் சொல்லத்தான எடுத்தான். முனீஸ், அம்மா எல்லாரும் சுகமோ?"

"அவைக்கென்ன சுகமா இருக்கினம்; இங்கை நாந்தான் உத்தரியப்படவேண்டிக்கிடக்கு. முன்னீஸ் அண்ணையை யேமனிலையிருந்து கனடாக்கெடுக்க வேண்டும். அங்கை வாழ்க்கை முழுக்க இப்பிடியே கிடந்து இழுபட ஏலாதெண்டு சொன்னதாலை, 'ரை' பண்ணுறன். எனக்காண்டி நல்லாக் கஷ்டப்பட்டவரெல்லே. தம்பியெண்டிருக்கிற நான் செய்யவேண்டியதைச் செய்யத்தானே வேணும். ராசாங்கத்தான் போலவே நான்? அவன் பம்மாத்துக்காட்டி ஏமாத்த ஏமாத்தத் தலையைச் சொறிஞ்சுகொண்டு நாயே பேயேயெண்டு ஏச்சையும் வாங்கிக்கொண்டு கனடாவிலை இறங்கட்டுமெண்டு வெளிக்குச் சிரிச்சுக்கொண்டிருந்தன். இப்ப என்ரை இந்த கூழங்கையாலேயே எத்தினை விளையாட்டுக்காட்டுறன் எண்டு மொட்டை ராசாங்கத்தான் பாத்தா, பயந்துபோவான். என்னாலை இங்கை ஒரு வேலை செய்யிறது பெரிய விசயமில்லை; எனக்கு வேண்டின இடத்திலை ஆக்களைத் தெரியும். நினைச்சனெண்டால், ரெண்டு மாசத்திலை எடுத்துப்போடுவன். ஆனா, முதலிலை அம்மாவை இங்கை எடுக்கவெண்டு பாக்கிறன். மனுசி என்னெண்டால், குளிர் கோதாரியெண்டு பெரிய 'பஸ்' அடிச்சுக்கொண்டிருக்குது" - பேச்சிலே கொஞ்சம் சொற்தள்ளாட்டமும் கருத்துத்தொடர்ச்சியின்மையும் மேலோங்கி 'உள்ளுக்குப் போனது ஓங்கின கீறு' வெளிப்படையாகத் தெரிந்தது,
தொடர்ந்தான்;
"நீங்கள் இவள் வனேசா எடுக்க அவளின்ரை இங்கிலிஸிலை குழம்பியிருப்பியள் என்ன? அவளின்ரை பிரெஞ்சு இதைவிடத் திறம். தமிழ் இப்பதான் கொஞ்சம் ஆத்திர அவசரத்துக்குத் தேவைப்பட்டாலுமெண்டு சொல்லிக்குடுக்கிறன். பக்கெண்டு பிடிச்சிடுவாள். அண்ணருக்கு அதுவேற கரிபியன்காரியோட கூடிக்கிடக்கிறன் எண்டு ஆத்திரம். அம்மாக்குப் போட்டோ மட்டும் அனுப்பினன். போட்டோவிலை இங்கிலிஸ் கேக்காதுதானே (விக்கி விக்கிச் சிரிப்பு). அசல் எங்கட முகம், நிறம். மனிசிக்கு ஓகே"

","

"என்னண்ணை நான் கதைச்சுக்கொண்டே போறன். இருக்கிறியளோ, இல்லை, கட் பண்ணியிட்டியளோ?"

"இருக்கிறன்"

"விளங்குது; என்னடா இவன் சாருமதி இல்லாமல் உலகமில்லையெண்டு ஹொங்கொங் கடக்கரையிலை பென்ரனைக் காட்டி அழுதுபோட்டு இப்ப, கரிபியன்காரியோட கிடக்கிறானெண்டு யோசிக்கிறியளாக்கும்....".... "நகுலேஸ், முகத்தைப் பாக்காமல் உண்மையை நான் சொல்லவேணுமெண்டு நினைச்சால், நீ சொல்லிக்கொண்டிருக்கிறது மெத்தச்சரி. சொல்லுறனெண்டு கோவிக்காதை. நீ ஆள்மாறிக்கொண்டு போற வேகத்தைக் கொஞ்சம் மட்டுப்படுத்தோணும் எண்டு படுகுது; கொஞ்சம் நிண்டு சுத்திப்பாத்து யோசிச்சு நட."

"அண்ணை; சாருமதியை இப்பவும் நான் விரும்புறந்தான். ஆனா, நீங்கள் சொல்லுறதுமாதிரி நிண்டு நிதானமாய் யோசிக்கத்தான் இந்தமுடிவு சரியெண்டுபட்டுது. நீங்கள் ஹொங்கொங்கிலை வச்சு என்ன சொன்னனீங்கள். முடிவை எடுத்தால், எடுத்துப்போட்டு, எடுத்தமுடிவை மாத்தாமல் கவலைப்படாமல் நடக்கோணுமெண்டு < "சொன்னேனா? அவ்வளவு காசையும் காலத்தையும் செலவழித்துப்போட்டு வந்து வீட்டை போகப்போறன் எண்டு அழுகிறவனுக்குத் தாக்காட்ட ஏதாவது சொல்லவேணுமெண்டு சொல்லியிருக்கவும்கூடும்; சொல்லியிருக்கவுந்தான் வேணும்" > சாருமதியை இங்கை இருக்கிற நிலைமையிலை இன்னும் ஐஞ்சாறு வருசத்துக்குக் கொண்டுவாறதைப் பற்றி நான் யோசிக்கேலாது. ஆனா, அதுக்காண்டி நான் சாமியார்மாதிரி உலாவிக்கொண்டிருக்கிறதும் கஷ்டந்தானே? என்ன சொல்லுறியள் அண்ணை? இவள் எங்கட கந்தோரிலை கிட்டத்தட்ட எங்கடை ஊர்க் கிளாக் மாதிரி உத்தியோகம் - உங்கை அமெரிக்காவிலை என்னெண்டு சொல்லுறதெண்டு எனக்குத் தெரியாது- இங்கை சிற்றிசன்சிப்பும் இருக்கு. அவளுக்கும் என்னைப் பிடிச்சுப்போச்சு; எனக்கும் சாருமதியை யோசிக்காட்டி முழுக்கச் சரி எண்டமாதிரித்தான். அதே நேரத்திலை. இங்கை இவளை வைச்சுக்கொண்டு அங்கை அவளை ஏமாத்தவும் ஏலாது. உங்கட ஹொங்கொங் வீட்டிலையிருந்த ரெண்டு ‘செப்’பும் செய்யதது மாதிரிச் செய்யிறது சரியில்லையண்ணை; எங்கடையாக்கள் கள்ளத்தை ஒளிச்சுமறைச்சு நல்லவையா இருக்கோண்டுமெண்டு பாக்கினமேயழிய, நேரை தங்களுக்குப் விருப்பமானதை மற்றவைக்காண்டி மறைச்சுக்கொள்ளாமல் செய்யத்துணிவில்லாத பொன்னையங்கள். எனக்கிருக்கிறது ஒரு வாழ்க்கை. அறுபது வயதிலை கலியாணத்தைக் கட்டி என்னைத்தைச் சாதிக்கலாமெண்டு நினைக்கிறீங்கள். நான் சொல்லுறது உங்களுக்கும் அடிக்குதோ தெரியாது. ஆனா, நீங்கள் இப்ப அந்தக் ஹொங்கொங்காரியை விட்டுட்டுத்தானே இங்கை வந்திருக்கிறியள். அதுக்கு உங்களை ‘அஜஸ்ற்’ பண்ணினியள்தானே? சாருமதிக்கு உடைச்சு நேரை சொல்லிப்போட்டன். 'ஏமாத்திப்போட்டாய், நஞ்சுகுடிப்பன்' எண்டு - தெரியாதே உங்களுக்கு எப்பிடி எங்கட பெட்டையள் ஒரு அழுகை ‘சீன்’ போடுவாளுகள் எண்டு...."

எனக்கு மேலே பல காரணங்களின் விளைவான குதம்பலான உணர்ச்சியினால் பேசப்பிடிக்கவில்லை. அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். கடைசியிலே "இங்காலை ஒருதரம் வந்திடுப்போங்கோ அண்ணன்" என்றான். "வாய்ப்பும் வசதியும்பட்டால் வருகிறேன்" என்று சொல்லி வைத்தேன்.

அதற்குப்பின்னால், ஏழுமாதங்களுக்கு, மாதாமாதம் எனக்காக வரவேண்டிய காசு வங்கியிலே வந்தது; வட்டியும் சேர்த்துத்தான் அனுப்பினான்; கணக்குப் பார்க்க, பதினைந்து வீதமாவது வட்டி போட்டிருப்பான என்று தோன்றியது. எனது காசுத்தேவையே அமுதசுரபியாக இருந்தபோதும், இந்த வட்டிக்காசு எனக்கானதில்லை, எதிர்பார்த்ததில்லை என்று கடைசியிலே ஊரிலே தெரிந்த நூலகமொன்றுக்கு அவனின் பெயரிலே அனுப்பிவிட்டேன். காசு அவனிடமிருந்து வந்தபோதெல்லாம், தொலைபேசி எடுத்து ஒப்புக்குப் பேசி வைப்பேன். அவ்வப்போது, "அண்ணர் வரமாட்டன் எண்டிட்டார்; அம்மாக்கு வர எல்லா ஏற்பாடும் பண்ணியிட்டன்; வனேசாவுக்கும் எனக்கும் ஒத்து வாராதெண்டு விலகி வேற வீட்டுக்குப் போப்பறன்; தன்னிலை இன்னும் அன்பிருந்தால் சங்கற்றை மூத்தமகனைக் கனடாவுக்கு எடுத்துவிடட்டாமெண்டு சாருமதி கோலெடுத்துச் சொன்னாள்" - இப்படி சின்னச்சின்னத் தகவல்கள். முன்னீஸ்வரனுக்கு எடுக்க இரண்டு மூன்று முறை முயற்சிக்கத் தோல்வி. செய்தி விட்டால், அவனும் திருப்பி எடுக்கவில்லை.

பிறகு எனக்குத் திருமணமாகி, மனைவியும் வந்து நானும் ஊர் மாறி நாலு ஆண்டுகளானபின்னர், அவனுக்கும் எனக்கும் பொதுவான நண்பர்களென்று எவரும் இல்லாததால், தொடர்பற்றுப் போய்விட்டது. நான் இடம்மாறியபோது, எனது புதிய தொலைபேசி எண் அவனுக்குக் கிடைத்திருந்தால், அவன் என்னோடு தொடர்பு வைந்திருந்திருக்கக்கூடுமோ என்னவோ, அது நடக்கவில்லை.

கோபால் செத்த விடயம் சொன்ன அன்றைக்கு, என்ன நினைத்தேனோ தெரியாது, இணையத்திலே தொலைபேசி எண் தேடி எடுத்து, சிட்னியிலே பயணமுகவர் நிலையமொன்றிலே வேலை செய்யும் கெயிட்டிக்கு ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர், "ரொராண்டோவிலே ஓர் அரைப்பவுண் ஒற்றை வடச்சங்கிலிக்கும் அதிலே தூங்கும் காற்பவுண் இதயவடிவமுத்திரைக்காகவும் ஆட்களைக் காலை வேளையிலே கொலை செய்கிறார்கள்" என்று சொல்லித் தொலைபேசியை வைத்தேன். என்ன நினைத்தாளோ தெரியாது. அந்த வார மிகுதி முழுக்க பாக்கிஸ்தானி எண்ணெய் ஊறுகாய் தின்ன வேண்டுமென்று ஆசை மிகுந்து இருக்கின்ற நகர், பக்காதூர் இந்தியப்பலசரக்குக்கடையெல்லாம் 'அயூப் கலப்பு ஊறுகாய்' தேடி ‘இப்பதான் முதற்கரு முளைச்ச பிள்ளைத்தாய்ச்சிபோலை’ காரை எடுத்துக்கொண்டு அலைந்து திரிந்தேன். 'அயூப் ஊறுகாய் இப்போது தயாரிக்கப்படுவதில்லை' என்றே எல்லாக்கடைக்காரர்களும் ஒத்த பதில் தந்தார்கள்.


முதலெழுதுகை: ~27, மே '02, திங்கள் 17: 57 மநிநே.
திருத்தம்: ~25, ஜூன் '02, செவ்வாய் 09: 57 மநிநே.

1 பின்னுதை:

Blogger சுடரகன்: சிவா முருகையா said...

என்னை 22 வருடங்களுக்கு முன் அழைத்துச் சென்றிந்த பதிவு. நன்றியும், கனடாவை நினைத்து கவலையும்.

8:14 PM  

Post a Comment

<< Home