Sunday, August 08, 2021

நான் - வட்டச்சுவருள் முட்டும் குருடன்

                             


நன்றி: திசை & நூலகம்
திசை 6 ஒக்ரோபர் 1989

எழுத்துருவிலே மாற்றித் தந்ததற்கு ந. சுசீந்திரனுக்கு நன்றி:

அவர்கள் புருவம் சுழித்து கண் சுருங்கி, இடக்கன்னம்(அல்லது வலக்கன்னம்) மேற்தூக்கி, கொடுப்புக்குள் (கண்டி இரவுக் குளிரின் அல்லது பகல்வெய்யிலின் விசித்திர விளைவுகளை எண்ணி) சிரித்ததொன்றும் எனக்கு அதிசயமாகப்படவில்லை. பின்னே, சிரிக்கமாட்டார்களா,கண்டி நகர்ப்புறத்துக்கு வெளியே, மேல் நாகரீகமும் கொஞ்சம் கீழையப் பண்பாடும் கொஞ்சம் என்று குழப்பமுற்றுத் திரியும் எங்களைப்போல், நகரமா கிராமமா என்று குழம்புண்ட ஒரு பிரதேசத்தில் தமிழ், முஸ்லிம் மக்களால் (வீட்டில்) மட்டுமே பேசப்படும் ஒரேயொரு பேருந்து மட்டுமே சேவையிலிடுபடுத்தப்பட்ட 'கம 'வொன்றின் ஒரு 'குச்சில்' 12mx10mx8m அறை (?) யொன்றில் (தூசு+ நுளம்பு+எலி+கரப்பொத்தான்+கனவுகள்&நினைவுகள் சகிதம்) வாழும் மூன்று தமிழ் இளைஞர்களில் ஒருவன், 'தவஸ' உம் 'திவயின' உம் மட்டும் ஒழுங்காக வரும் வாசிகசாலை அல்லது அதன் பொறுப்பாளரின் வாசஸ்தலம் எனப்படும் ஓர் இருண்ட கண்டத்திலிருந்து,மூன்று நாட்களுக்கு முந்தியவீரகேசரி'யில் முற்றாக நம்பிக்கை வைத்து, தன்னூர் நிலைமை கண்டு, அறிக்கைகேட்டு, வேண்டுகோள்களின் உள்ளர்த்தம் புரிந்து, நெடில்மூச்சு விட்டு, மெலிதாய் முகட்டில் ஓடும் பல்லியையும் அதன் முன்னே போகும் (அதாவது,முன்னே உள்ளே போகப்போகும்)பெயர் தெரியாத உருண்டைப் பூச்சியையும் வெறித்து விரக்தியிற் (அப்படித்தான் இருக்கவேண்டும்)சிரித்தால், அவர்கள் புருவம் சுழித்து சிரிக்கமாட்டார்களா,என்ன? அவர்கள் பார்வையில், என் அந்நியத்தன்மை, காலம் - இஃது எண்பத்துநான்கு, ந்துகளில் இருந்திருந்தால்,ஆத்திரத்தையும்ஆவேசத்தையும் ஏன்(எனக்கு?)அச்சத்தையுங் கூட எழுப்பியிருக்கும். ஆனால், இன்று எண்பத்தொன்பதின் முன்னரையின் பின்னரைத் தொடக்கம்; அதுவும் நான் ஒரு தமிழ்-பல்கலைக்கழக மாணவன்(-உணர்ந்து கொள்ளுங்கள்)என்று தெரிந்திருக்கும் போது (நான் மறந்த போதிலும்).அனுதாபத்தைத்தான் ஏற்படுத்தியிருக்கும் என்பது இரண்டாம் கருத்திற்கு உட்படுத்தத் தேவையற்ற ஒன்று.

 

மெலிதாய், சுற்றுமுற்றும் எல்லோர்க்கும் பொதுவாக ஒரு மென்னகையைத் (நீங்கள் அசட்டுச்சிரிப்பென்றும் கூறவாம்) தாராளமாய் வழங்கிவிட்டு, வெளியே நடந்து,பூங்கா என்று சொல்லப்படும் பொட்டல் வெளியின் குட்டிமரமொன்றின் (வாகை ? இருக்காது, இது முருக்கம் பூப்போல,ஈச்சஞ் செம்பழம்போல. இரத்தச்சிவப்புக் கொத்துப் பூக்களும் மெல்லிய பச்சை இலைத் தொகுதிகளாய்க் கிளைகளும்....... என்னவாய் இருக்கும்? Jungle Queen? தேவையில்லாத கேள்வி ...... என்றும் தேவையற்ற கேள்விகளுள் எனை ஆழ்த்தி, நிகழ்காலச் சுகங்களை இழக்கும் நான்) கீழ் Concrete இனாற் போடப்பட்ட இருக்கையின் காக எச்சங்களிடையே கவனமாக உட்கார்ந்து, வீழ்ந்திருந்த சிவப்புப் பூங்கொத்தொன்றை உதிர்க்கும் பணியை இச்சையின்றியிங்கும் செயற்பாடாகக் கைகள் செவ்வனே செய்ய,''நான் யார்? நான் என்ன இனிச் செய்ய வேண்டும்?"

 

நிச்சயமாக, செல்லத்துரை சுகுணன், தமிழன், 5'9” (எத்தனை கிலோ?),அறுபத்தி ஆறில் வட கிழக்கில் 'இந்த இடத்தில்' ஜனனம், எண்பத்தொன்றில் . பொ. . (சாதா)(- கட்டைக் காற்சட்டை), எண்பத்து நான்கில் பல்கலைக்கழக அனுமதி, எண்பத்தி ஏழின் பிற்பகுதிகளிலிருந்து தாடி, 'காரா', 'St.Peter's', 'Store wash' இவை; இந்தப் பௌதீக, திணிவு,நீளம், (சிலவேளைகளில் அதிரும் அணுக்களால் ஆன அலைவடிவத்தின் வழியே மற்றவர்களினால் உணரப்படும், நேரத்துடன் மாறுபடும்)அடிப்படைக் கணியங்களால் மட்டும் குறைந்த பட்சம் அறியப்படும் நான் மட்டுமல்ல அல்ல நான். அப்படியானால்,எங்கிருந்துவந்...... 'ட்டொஷ்

 

Sorry, coins விழுந்திட்டுது'', காசைப் பொறுக்கிக்கொண்டு பக்கத்து இருக்கையில் அமர்ந்தான் பெனடிக். ஆள் பற்றிய அடையாளங்கள் அவசியமற்றவை. என்னைப் பொறுத்தவரை, என்னுடைய இன்றைய (குழம்பிய அல்லது குழப்பிய) மனோநிலையின்படி, அவனும் என்னைப்போல, உங்களைப் போல, உங்களருகே இருப்பவர் போல, சுகுமார்போல, பட்டென்று வெடித்தென்றோ சட்டென்று போகப்போகும் உயிர்க் குமிழி ஒன்று போட்டிருக்கும் ஒரு சட்டைதான்; மாரீசமான். இன்றைய என்னைப்போலவே வாழ்க்கைத் தத்துவ விசாரத்திற்கும் நாட்களை இவ்வுலகிற் கடத்துவதற்குமான நம்பிக்கைப் பிடிப்புகளுக்குமாய் சில காலங்களுக்கு முன்னிருந்தே உள்மனயாத்திரை போய்க்கொண்டிருப்பவன்.

 

எதையும் தானாய்க் கேட்கமாட்டான் என்பதால், "வழமையான பிரச்சினை தான்" -சொன்னவன் நான். சிரித்தான்- தூங்கும் நெடிய Mayflower மரமொன்றின் ஊதாப்பூக்கள் உதிர்ந்து சுழன்று சுழன்று கீழ் விழுவது போற்சுகமாய். "உதுக்குத்தான் நானும் உனக்குச் சொல்லுறன். நான் ஆர் எண்டு தேடவேண்டிய காலம் ஒண்டுஇருக்கு. ஒத்துக் கொள்றன். ஆனா, அது இதில்லை. இப்பநீ யோசக்க வேண்டியது உன்ரை நிலைப்பாட்டை, உலகார்ந்த ரீதியா என்னெண்டு. விதியோ, கர்மாவோ என்ன காரணமோ, அது வேறவிசயம். நாங்கள் இப்ப இந்த உலகத்தின்ர ஏதோ ஒருவகை Machinary routine இற்குள் feed பண்ணுப் பட்டிட்டம். அதில எங்கட காலம் முடியிறவரை சூழ்நிலைகளால் வருகிற பிரச்சனைகளை, ’stress'சுகளைக் குறைத்து, இயலுமானவரை மற்றவனைப் பாதிக்காமல், ஏலுமெண்டால் அவனுக்கும் நல்லதைச் செய்துபோட்டு ஒரு வகை நிம்மதியோட சாகிறது தான் வாழ்க்கை - நிறுத்திச் சொன்னான் - "இது என்ரை இண்டையக் கொள்கை ....... ம்ம்ம்…..ஓம், கொள்கை எண்டு சொல்லலாம். ஆனா, இதில் நானும் எவ்வளவு உறுதியாஇருப்பன் எண்டு சொல்லேலா. ஆனா, தொடர்ந்து எனக்குள்ள யோசிக்கேக்க எனக்குப்படுறது இதுதான். நான் உனக்கு இதுதான் தீர்வெண்டு எதையுஞ்சொல்லேலா. ஆனா, நீ உனக்கான தீர்வைக் காண நான் சொல்கிற கருத்துகளையும் முன்னெடுக்கலாம்; மௌனம்.

 

எனக்குட் சினம் முகிழ்த்கது;என்ன மனிதன் இவன்? தெளிவின்றிப் பேசுவதையே,போதிப்பதையே, தன் திறமையாகக் காட்டப் பார்க்கிறான்; உள்ளதையும் குழப்பப் பார்க்கின்றான்; என்னுள் ஏற்படும் மோதல்களையும் முரண்பாடுகளையும் ஏன் இவனாற் புரிந்து கொள்ள முடியவில்லை? எனக்கான சிக்கல்களும் பிரச்சனைகளும் இவனுக்கும் ஏறக்குறைய அதே சூழ்நிலைகளின் கீழ் ஏற்பட்டவைதானே. நான் 'தீவிர இந்துவாய்ப் பிறக்க, இவன் 'தீவிர வேதக்காரனாய்ப் பிறந்தான் என்பது தவிர (இப்போது, இருவரும் தம் பரம்பரை நம்பிக்கைகளிலிருந்து வெளியே சென்று பலகாலம்.), மற்றப்படி அவனும் இன உணர்வூடே சென்று, பொருளாதார ரீதியாக நடுத்தரவர்க்கக் குடும்பமொன்றின் வளர்ச்சிக்கான சகலவித அரசியற் திட்டங்களையும் கொள்கைகளையும் ஆராய்ந்து மார்க்ஸீயம் அஃது, இஃது என்றெல்லாம்அலசி, நாட்டின் விடுதலைக்காய் என்ன செய்யவேண்டும் என்று விவாதித்து (கவனியுங்கள், ஆக விவாதிக்க மட்டுமே செய்தோம்), பின் எல்லாம் பொய்யாகிப் போதல்கண்டு, ஆத்மீக வெளி நிரப்ப ஜே. கிருஷ்ணமூர்த்தி (எனக்குச் சத்தியமாக இவர் பற்றி விளக்கம் அதிகமில்லை), 'ஸென்பௌத்தம்' நோக்கி, இறுதியாக இன்று இப்படி கேள்விக் குறியாக ஆகியிருக்கிறான். பிறகும் ஏன் இப்படி விளக்கமின்றிப் பேசுகிறான்? ஒருவிதத்திற் பார்த்தால் அவன் சொன்னது சரிதான். எனக்கான தீர்வை இவனெப்படி காட்டமுடியும்? இனி எனக்காக நானே கேள்வியை முற்போட்டு நான் அறிந்தவை கொண்டு, மூன்றாம் மனிதனாக நின்று அதற்கான விடையை எனக்குள் இருந்து சுகுணனான நானே விடுத் தலன்றி (ஏனெனில், என் தீர்வுகள் மட்டுமே எனக்குள் எழும் மனச்சாட்சிப் பிரச்சனைகளைத் தாக்காட்டக் கூடியதாகவும் (சப்பைக்கட்டு?)அதேநேரத்தில் சமூகக் கட்டுப்பாட்டையும் இயலுமானவரை மீறாமல் எனக்கானவினாக்களை விடுவிக்கவியலும்)வேறெவரையும் நாடப்போவதில்லை.

 

தனது ஆற்றாமைகளையே தன் கொள்கைகளாக, வாழ்க்கைத் தத்துவமாக நினைக்கும்(அப்படித்தான் இருக்கவேண்டும் இப்படி எண்ணுதலும் ஓர் ஆற்றாமையோ? ஐயோ! எந்தத் தளத்தை, எனக்காக நின்று யோசிக்கப் பெறப்போகிறேன் ?) என்னுடைய இன்றைய சிக்கல்என்ன? அவனவன் மொழி,நாடு என்ற உணர்வுகளோடு போராடுகையில் (இதே ஒரு சிக்கல், போராடும் போது' என்று கருத்துருவம் அமைப்பதா,'போராடியபோது'என்று உருவமைப்பதா என்று) நான் ஒன்றும் செய்யாமல் விலகி வேடிக்கை பார்ப்பவனாக, அஞ்சி (வெளிநாடு ஓடாவிட்டாலும் வீட்டாரையும்படிப்பையுஞ் சாட்டி) இங்கு வந்து நின்றுகொண்டு மானிட நேயம் பேசுபவனாக (மனச்சாந்திக்காகவா? இல்லை உண்மையாகவேயா? எனக்கே புரியவில்லை) ஆனால், எந்த ஒரு தனிமனிதனையும் எந்தவொரு அமைப்பையும் அவர்களின் செயற்பாடுகள், சிந்தனைத் தளங்கள் எவையாகினும்,முடிந்தவரை அவற்றை இலகுவாக, தவறாக விமர்சித்து,அவர்களின் நடவடிக்கைகள் எப்படி இருக்க வேண்டுமென்று இன்னோரன்ன கொள்கை வழிகள், மேற்கோள்கள் முன்வைத்து, அர்த்தமற்ற விவாதங்கள் நடாத்தி, என் அறிவு(தவறு ; தகவற் குப்பைகள் 'சரியான பதமென்று நினைக்கிறேன்) உயர்ந்தது, திருத்தமானது என்று சுற்றியுள்ளோரை நினைக்கவைத்து, அன்றைய சோக்கிரட்டீஸின் கடன்சேவல் முதல் இன்றைய 'உவிற்றனின்', 'string theory' வரை நுனிப்புல் மேய்ந்து, ஆனால் எல்லாம் தெரிந்தவன்போல, உறுப்புறுப்பாய் அலசி,தனிமையிற் பல சமயங்களிற் தாழ்வுச் சிக்கலுற்று, இறுதியாக, சுகுமார் சொல்வது போலவோ என்னவோ, பிரச்சனைகட்கு முகங்கொடுக்கமுடியாமல் என் திருப்தியையும் கெடுக்காதவாறு என்றுமே(குறைந்தபட்சம் என் ஆயுட்காலம் வரை) நிறைவேற முடியாத உயர் கொள்கைகள் கொண்ட 'Utopiaa aristocracy'; ன் கற்பனை உயருலகில் என்னையும் இணைத்து(புதைத்து என்பதும் சரி), 'நெருப்புக்கோழி மனப்பாங்கில் என்னையோ என்னைச் சுற்றியுள்ளவர்களையோ எந்தப் பிரச்சனையும் அணுக முடியாது. அப்போதும் இல்லை என்ற தப்பிக்கும் சமாதானத்துடன் வாழ்கின்.........

 

போவமே?" பெனடிக் பின்புறத்தைத் தட்டியபடி எழுந்து கேட்டான். மௌனத்தில் தலை புகுத்தி, இருபக்ககாற்சட்டைப் பைகளுள்ளும் கைகள் நுழைத்து மெல்லடி நான் வைக்கையிலே, முன்னே (ச்) சாதாரண நீலக்கண்கள் ஒரு வெட்டுவெட்ட(எனை நோக்கி - என் கருத்து,பின், நான் நோக்குங்கால் நிலம்நோக்கி........ என்று திருவள்ளுவரின் குறளாய் என்கற்பனை விரியலாம்) அவள் கடந்தாள். மனம் தொலைதூரப் பயணம் செய்யும் --பேருந்தொன்றில் சிறிது நேரம் நன்கு ஒட்டி, பின் இடையிற்பிரியும் பெயரறியா சிறுகுழந்தையைப் பிரிந்த நிலையினிலே ஏக்கமாய்ப் பெருமூச்செறிந்து,கனத்து, --'பெண்'ஒன்று இன்று பெரு மின்னலாய்,என் பிரச்சனைகட்கு இஃது ஒரு தீர்வாய் அமையுமென்றோ? - ஆராய்ந்தது; பெனடிக் கனைத்தான். இவன் என்ன சொல்லப் போகிறான்?

 

அறிவேன் நான். காட்டு வெள்ளத்திற், கரைதேடும் ஒருவன் கட்டுவிரியனைக் கூடக் கைக்கு ஆதாரங்கொள்ளலாம்; அதனால், மெதுவாய், உன் நேரமெடுத்து யோசி”. வேறொரு பக்கம் இன்னோர் உணர்வு. எதிர்கால கொள்கைகட்காய், வாழ்விற்காக இன்றும் நாளையும் யோசிக்க நேரத்தை ஒதுக்கிக்கொண்டே போனால், அந்த எதிர்காலத்திலும் இதைத்தான் யோசிப்பேன். இன்றைய நிச்சயமான பொழுதை இப்படிக் கழித்து நிச்சயமற்ற எதிர்காலத் திட்டங்களுக்காகவே என் நாட்களை வீணாக்கி,….., எதற்காக நான் இவற்றை யோசிக்கின்றேன்? பொழுதுபோக்கிற்காகவா? இல்லை என் மூளைக்கு ஓர் 'Intellectual exercise இற்காகவா அல்லது என் செயற்பாடுகளை இம் முடிவுக ளிலிருந்து நடத்திச் செல்வதற்காகவா?

 

தலைகுழம்பியது. எங்காவது யாருமற்ற ஒரு இடத்தில் கழுத்தளவு நீரில் (கடல் நீர் நல்லது, நான் சைவ உணவுக்காரன், அயடீன் உறிஞ்சிக் கொள்ள) நின்று '' என்று உரத்து ஓலமிடவேண்டுமென்றோர் உணர்வு. அறையில் வந்து உடுப்புகளை மாற்றாமலே கட்டிலில் விழுந்தேன். எதிரே வெளிச்சுவரில் இரண்டு கிழமைகட்குமுன் ஆழ்நிலைத்தியானம், யோகாசனத்தோடு உற்று நோக்கலுக்காக, கண் சக்தியை அதிகரிப்பதற்குச் சுவரிலிட்ட றுத்தப்புள்ளி (ஒரு கிழமைக்கு முன்னரே காலை எழுகின்ற அலுப்பினாற் கைவிடப்பட்ட திட்டம்) என்ன செய்வது? மனத்தின் மாறுதல் விளைவிக்கும் குணம்; மனிதநேயம் நல்லதொரு கொள்கைதான். ஆனால், அதில் நடைமுறைச் சிக்கல்கள் உண்டு. அதையும் சமவுடமைத் தத்துவத்தையும் ஆன் மீகத்தையும் இவ்வளவிற்கு இவ்வளவிற்கு இவ்வளவு என்று கலந்து ஒரு 'புதுக்கொள்கை' எனக்காய் உருவாக்கி, (ஆற்றாமைகளின் விளைவோ எனும் சந்தேகம் மீண்டும் என்னுள்) நடைமுறைக்கேற்ப வளைந்து அவ்வப்போது, அதையதையே உபகொள்கைகள் ஆகவும் மூலக்கொள்கைகளின் வருவிப்புகள் (Derivation) இற்கு "தருவிப்பு', 'வருவிப்பு' எது சரியான தமிழ்ப்பதம்? ......... தேவையில்லாத பிரச்சனை சுகுணன், விஷயத்திற்கு வா) ஆகவும் கொண்டு இன்னும் சிலருக்கு அதையே அடிக்கடி கதையோடு கதையாக எடுத்துக்கூறி, என்னையொரு கொள்கைவழி நிற்பவனாகக்காட்டி (குறைந்தபட்சம் ஓர் அறிவுஜீவி யாகவும் அதிகபட்சம், ஓர் ஆத்மீகக்குருவாகவும்), அதன் காரணமாகப் பிரச்சனைகளிலி ருந்து தப்பிப்போகமுயலவோ? ஒருவேளை, அடிப்படைப்பிரச்சனையே மற்றவர்கள் என்னை ( ஒரு சிறப்புமிக்க 'உயர்' கொள்கைகள் (அது தான் அவை எட் டமுடிவதில்லையோ?) கொண்ட உரிமைகட்காகப் போராடுபவன் என்று எண்ணவேண்டு மென்று நான் விரும்புவது தானோ?

 

கண்களை இறுக்க மூடி தலையை உலுப்பி, முகத்தை தலையணையுட் புகுத்தி, இருட் டுச் சுற்றுமதில் அமைத்துக் கொண்டேன் (வேண்டாம், என் பிரச்சனைக்கு வாருங்கள். தலையணையின் நிறமோ, அது தண்ணீர் கண்ட நாட்களோ அல்ல இன்றைய பிரச்சனை). எந்தப் பிரச்சனையை ஆராய்கையிலும் நான் விடும் தவறு இதுதானோ? பிரச்சனையையும் ஏதோவொரு தீர்வையும் வைத்துவிட்டு அந்தத் தீர்வைச் சரியாக்க (அல்லது பிற ருக்குச் சரியெனக் காட்ட) தகுந்த காரணத்தைத் தேடுகிறேனோ? எந்த முடிவையும் சரியெனக் காட்ட எவ்வளவு காரணங்கள் உண்டோ அதேயளவு அல்லது அதைவிட அதிகமாக, அதைப் பிழையெனக் காட்டவும் காரணம் உண்டாமே? (யார் சொன்னார்? யாரோ ஒருவர் இன்னொரு யாரோவின் தீர்வைத் தான் மறுப்பதற்காய் இந்தக் காரணத்தைச் சொல்லியிருப்பார். (அப்பாடா, ஒருமாதிரி என் குழப்பத்தை உங்களுக்கும் தந்தாகிவிட்டாயிற்று. இனி, என் நிலைமை உங்களுக்கு நன்றாகப் புரிபடத் தொடங்கும்). இன்னொரு பக்கம் இவன் பெனடிக் சொல்கிறான்-பிரச்சனையின் காரணத்தை அறி; அதுவே பிரச்சனைக்குத் தீர்வு.

 

பல பிரச்சனைகள் என் முன்னே அதிகரிப்பதாய், யோசிக்க யோசிக்க கேள்விகளை இன்னும் அதிகமாய்ச் சொரிவதாய், இப்போது மொத்தத்தில் நான் என்ன செய்யட்டும்? ஓரளவு எச்சரிக்கையுள்ள தமிழ் இளைஞனாக, தமிழ் உணர்வுடன் ஒன்றிரண்டு உணர்ச்சிக் கவிதைகளையும் (திட்டமிட்ட குடியேற்றங்களை எதிர்த்தொன்று; மறைந்த போராளிகட்கு (எல்லோருக்கும் பொதுவாய்) அஞ்சலியாக இன்னொன்று) ஓரிரண்டு முற்போக்கான(?)கதைகளையும் (வெளிநாடுபோனோரை காரணங்கள் காட்டி (வயிற்றெரிச்சலுடன் திட்டி) துரோகிகளாக வெளிக்காட்டி ஒரு கதை; நான் என்ன காரணங்களுக்காக ஊரில் நின்று போராடாமல் இங்கு படிக்க வந்தேன் (அது வேறு, படிக்க வந்தேனேயொழிய, யார் போன ஒன்றரை வருடங்களாகப் படிக்க விட்டார்? **குறிப்பு: படிப்பதைத் தவிர அனைத்துக் கூத்துஞ் செய்தாகிவிட்டது. செல்லத்துரையரின் (என் தகப்பனார்தான்) காசில்) என்று விளக்கி கிட்டத்தட்ட மற்ற வர்களுக்கு அறிக்கை போல இன்னொன்று) எழுதி விட்டு இங்கேயே என் எதிர்கா லத்தை ஒளிமயமாக்க (என்னைப் படிப்பு முடிய என்ன விலைக்கு விற்கலாம்?) முற்படும் நோக்கில் இருக்கவா? இல்லை, இன்னும் சாதாரணமாகி, வெளிநாட்டிற்குப் போய், பண்பாட்டுக் குழப்பத் தோடும் பண நிறைவோடும் இருக்கவா? அதையும் விட்டு ஏதோவொரு போராளியியக்கத்துடன் ஊறிப்போராடவா? அதைக்கூட விட்டு, ( பெரும்பா லான நேரங்களில் மனோதத்துவத்தோடு ஒத்துவரா) மனிதநேயம் பேசி, நமீபிய மக்க ளுக்கு ஆதரவும் எத்தியோப்பிய பட்டினிச்சாவிற்குக் கவலையும் 'சதி' உடன்கட்டையேறலுக்குக் கண்டனமும் Nato'-’Warsow' போராட்டங்களுக்கு, நட்சத்திர யுத்தங்களுக்கு, அணு ஆயுதங்களுக்கு எதிர்ப்புணர்வும் காட்டி, என் சூழலை மறக்கவா? இல்லை, எல்லாவற்றையுங் கலந்து (அல்லது கடந்து) மனிதநேய வெளிப்பாட்டில் எமது விடுதலைப் போராட்டத்தை நியாயப்படுத்திப் பேசித் திருப்தி அடையவா? மேலாக இந்த குறுகிய கால அடைதல்களை (Short term goals) விடுத்து என்றோ வரப்போகும் (?) தேவனின் இராச்சியத்திற்காக, பிரபஞ்ச அறிவுடன் சங்கமமாக, முக்தியடைய, (அல்லது) முடிவான உண்மை தேடி, பரிநிர்வாணம் அடையவா? (அதாவது, செயலற்று உறங்கு நிலைப்பருவம் அடைந்து மோனத்தவம் செய்யவா, நடப்பது எல்லாம் நன்மைக்கேயென்று?) தலையணையைக் குத்தினேன். தலையைச் சிலுப்பிக் கொண்டு, கால்களைக் கட்டிலிற் போட்டடித்துக் கொண்டேன். என்ன செய்ய? என்ன செய்ய? என்ன செய்ய?

 

 சுகுமார் பெனடிக்கிற்குச் சொல்லிக் கொண்டிருந்தான்; "மச்சான், சுகுணனும் வரவர உன்னைப் போல தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்ப வெளிக்கிட்டுட்டான். Campus கெதியில திறக்காட்டி, பாதிப்பேர் பைத்தியமாயும் அல்லது உன்ரை நோக்கில Enlightment அடைந்தவராயும் போயிடுவியள்.”

 போச்சுடா. இவன் இது வேறு ஒரு கருத்தை ஊர் முழுக்க, பரப்ப வெளிக்கிட்டு விடுவான். இன்னொரு யோசிக்கவேண்டிய Short term goal பிரச்சனையைக் கிளப்பிவிட்டான். இல்லாவிட்டால், நான் ஏதோ வகை இஸத் தினூடே விளக்கம் கற்பிக்கப்படுபவனாக, என் செயல்கள் இக்கொள்கையூடே விளங்கப்படுவதாக ஆகி என்னைக் குறுக்கி, என் (இந்தளவாகினும் உள்ள) சுதந்திர நிலைப்பாட்டிற்கு அழிவூட்டி விடுவார்கள்.

 

இப்போது இதற்கு நான் என்ன செய்யட்டும்? என்ன செய்ய? என்ன செய்....... .... Act without the mind of mine?    



0 பின்னுதை:

Post a Comment

<< Home