Thursday, February 24, 2005

அ-இ-இ-அ

அங்கேயும் இங்கேயும் இவன்களும் அவன்களும்

முதலாம் இவன் தான், அங்கு வடக்கில் போய் விழுந்திருந்தபோதும், தனது உரு மாறாதிருக்கக் கண்டான்; கூடவே இங்கே இவன் கொண்டிருந்த அகப்புறக்குறிகளும் நிலைத்தனவாய்.

இரண்டாம் இவன் தான், அங்கு தெற்கிற் போய் விழுந்திருந்தபோதும், தனது உரு மாறாதிருக்கக் கண்டான்; கூடவே இங்கே இவன் கொண்டிருந்த அகப்புறக்குறிகளும் நிலைத்தனவாய்.

இவன்களுக்கு எப்படி தாம் அங்கே வந்து வந்து விழுந்தோம் என்று தெரியாதுபோலவே, காலத்தினாலா, இடத்தினாலா, அல்லது இரண்டினாலுமேதானா தாம் நிலை பெயர்க்கப்பட்டிருக்கின்றோம் என்பதுவும் தெரியவில்லை. ஆனாலும், தாவரங்களின் காற்றும் பறவைகளின் எச்சமும் மண்ணின் சூடும் மகளிரின் குரலும் ஆடவரின் மூக்கின் கீழ்க் காணு/காணா மீசையும், இல்லா புலன்களுக்கு களிம்பு ஆங்காங்கே சுரண்டிய செம்பாய், கால இட நகர்வு கீற்றுக்கோடு காட்டின.

முதலாம் அவன் காலையில் ஊர்க்கிழக்கிலே தன் வீட்டில் எழுந்து தின வரும்படித்தொழில் செய்ய, வடக்குத் திசையில் ஓடும்போது, முட்களின் மத்தியில் வலியுடன் கிடந்த புறக்குறி வகையில் தன்னையொத்தும் அகக்குறி வகையில் தன்னதை ஒத்திரா முதலாம் இவனைக் கண்டான்.

இரண்டாம் அவன் காலையில் ஊர்மேற்கிலே தன் வீட்டில் எழுந்து மாத வரும்படித்தொழில் செய்ய, தெற்குத் திசையில் ஓடும்போது, முட்களின் மத்தியில் வலியுடன் கிடந்த புறக்குறி வகையில் தன்னையொத்தும் அகக்குறி வகையில் தன்னதை ஒத்திரா இரண்டாம் இவனைக் கண்டான்.

இவன்களும் அவன்களும், ஊரில் இரு கோடிகளில், புறக்குறிகளை வைத்து ஒருவரை ஒருவர், காலம் இடம் சாராது, ஆளுமையிற் தம்மிடைச் சார்ந்தோராய்க் கண்டு கொண்டனர்.

முதலாம் இவனும் முதலாம் அவனும் அந்த ஊர் மத்தி நோக்கி, தம்மிடை அகக்குறிகளை அலசிக்கொண்டு தெற்கில் நடந்தனர்.

இரண்டாம் இவனும் இரண்டாம் அவனும் அந்த ஊர் மத்தி நோக்கி, தம்மிடை அகக்குறிகளை அலசிக்கொண்டு வடக்கில் நடந்தனர்.

மத்தியை அடைந்தபோது, புறக்குறிகளிடைத் தெரிந்த நட்புத் தெறித்து, அகக்குறிகளின் புரிதலின் அடிப்படையில் வாய்ப்போர் தொடங்கியிருந்தது, முதலாம் இவனுக்கும் முதலாம் அவனுக்குமிடையே, இரண்டாம் இவனுக்கும் இரண்டாம் அவனுக்குமிடையே - வெப்பமாக.

போரின் இடையில், புறக்குறிகள் தாமே அறுத்துகொண்டு தூரே எறிபட, அகக்குறிகளின் அடையாளத்தை முன்வைத்து, முதலாம் இவனும் இரண்டாம் இவனும் ஒன்றிப்போனார்கள்.

போரின் இடையில், புறக்குறிகள் தாமே அறுத்துகொண்டு தூரே எறிபட, அகக்குறிகளின் அடையாளத்தை முன்வைத்து, முதலாம் அவனும் இரண்டாம் அவனும் ஒன்றிப்போனார்கள்.

இவன்களுக்கும் அவன்களுக்கும் இடையில் இவன்- அவன் போர் உடலளவிலும் உக்கிரப்பட்டது.ஒவ்வொரு பகுதியாரும் தமது அகக்குறிகளைப் பற்றிப் பிடித்துக் கொண்டு எதிராளிகளின் குறிகளை இலக்காய் வைத்துத் தாக்கிப் பொருதினார்கள்.

இறுதியில் தோல்வி வெற்றி தெரியமுன்னர், முதலாம் இவன், மீள, தான் இங்கே வடக்கில் விழுந்திருக்கக் கண்டான்; இரண்டாம் இவன், மீள, தான் இங்கே தெற்கில் விழுந்திருக்கக் கண்டான்.

காலத்திலும் இடத்திலும் திரும்பத் தாம் முன்னைய இருப்புகட்கு இறுக்கமாய்ப் பொருத்தப்பட்டிருக்க இரு இவன்களும் கண்டார்கள்; தாவரங்களின் காற்றும் பறவைகளின் எச்சமும் மண்ணின் சூடும் மகளிரின் குரலும் ஆடவரின் மூக்கின் கீழ்க் காணு/காணா மீசையும்,புலன்களுக்குத் தெளிவாய்க் கால இட ஆளுமை அர்த்தங்கள் சொல்லின.

பின்னர், இந்த ஊர் மத்தி நோக்கி தெற்காய் ஓடி வந்த முதலாம் இவன், இந்த ஊர் மத்தி நோக்கி வடக்காய் ஓடி வந்த இரண்டாம் இவனைக் கண்டான்.

அங்கே தூர விழுந்ததாய்த் தெரிந்த முதலாம் இவனின் புறக்குறிகள் மீள ஒட்டிக் கொண்டிருந்ததாய் இரண்டாம் இவனுக்குத் தெரிந்தது.

அங்கே தூர விழுந்ததாய்த் தெரிந்த இரண்டாம் இவனின் புறக்குறிகள் மீள ஒட்டிக் கொண்டிருந்ததாய் முதலாம் இவனுக்குத் தெரிந்தது.

இங்கே இவன்கள் இருவரும் ஒருவர் மற்றவரின் புறக்குறிகளை அறுத்தெறியப் பிடுங்குண்டு கொண்டிருந்தபோது, அங்கே அவன்கள் இருவரும் ஒருவர் மற்றவரின் புறக்குறிகளை அறுத்தெறியப் பிடுங்குண்டு கொண்டிருந்தார்கள்.

அகக்குறிகள் "அடுத்த முறை காலத்தாலோ இடத்தாலோ நீங்கள் இடம்பெயர்க்கப்படும் காலம்வரை உங்கள் போருக்குள் நாம் காரணம் பேச வரமாட்டோம்" ஒளிந்து கொண்டிருந்தன.

காலத்திலும் இடத்திலும் அகமோ புறமோ, ஸ்தூலமோ சூக்குமமோ, இடையில் ஒட்டிக்கொண்ட அடையாளங்களுக்காக மட்டும், அவன்களும் இவன்களும் அவர்களுக்குள் களமமைத்து, காரணம் செதுக்கிச் சமரிட்டுச் செத்துக் கொண்டிருந்தார்கள்.

-'99 ஜூன் 17, வியாழன் 13:34 மநிநே

0 பின்னுதை:

Post a Comment

<< Home