Sunday, January 23, 2022

நட்பு


சுகுணன் மீண்டும் ஒரு கல்லை,அது கல்லாகத்தான் இருக்க வேண்டும், எடுத்து ஒரு நோக்குப் புள்ளியின்றி,வெளியில் கடலை நோக்கி ஆத்திரத்துடன் (தன் மீது?) எறிந்தான். கல்மையமாக ஆரை மாறும் பொதுச்சமன்பாட்டு வட்டங்களைங்களை உருவாக்கி, விரி வாக்கி, வட்ட ஒழுங்குகளாய்க் கடலிற் பரப்பி...

சிக்.... இத்துடன் அறு மனிதனே, மனிதனே, எங்கும் எந்நேரமும் தன் ஒரே மாதிரியான வழமையான சிந்தனையில் உலகைக்கண்டு, உருவாக்கி, பழகி......... ஏன் எனக்கு இத் தோற்றவொழுங்கில் ஒரு தத்துவஞானியின் பார்வையில்லை, வளரும் மனித ஆசை வளையங்களாக காண? அல்லது ஒரு கவிஞனின் பார்வையில் ஏன் வேறு விதமாகக் கண்ணோடவில்லை ? -சிந்தனை சிதறினாலும், கை மீண்டும் கல் ஒன்றைத்தேடி...... மணல் துழாவல் எண்ணிச் சட்டென இழுத்துக்கொண்டான்.


வந்து அரை மணி நேரம் இருக்குமோ? சுகுணன் மீண்டும் கைக்கடிகாரத்தை ஏழாவது முறையாகப் (? இருக்கலாம் நேரம் அதிகம் ஓடியிருக்கக்கூடாதென்ற ஆவலிற் பார்க்கின்றான் அல்லவா ? ) பார்த்தான். 17:43 - ஏழு மணிக்கு மீண்டும் (ம்) ஊரடங்கும் (+சட்டம்) பெனடிக் வரவே மாட்டானோ? முழுமையாக என்னுடனான உறவுகளை முறித்துக்கொண்டிருப்பானோ......? இல்லை, அப்படி இருக்க முடியாது.பெனடிக் ஒரு சிந்திக்கும் பொறுமைசாலி.


எல்லாவற்றிற்கும் மேலாய் ஒரு மனோதத்துவவாதி. அவனுக்கு என் நிலைமை அப்போது புரிந்திட அவகாசம் கிட்டிடாதபோதும், பின் தெளிந்திருக்கும்.

நான் ஆத்திரமுற்றதிலும் அர்த்தமுண்டென உணர்ந்திருப்பான்-எனினும்,மனதில் ஓரச்சம் - ஒரு சிந்தனாவாதிக்கும் மனம் என்று ஒன்றும் அதில் உணர்வுகளென்று சிலவும் இருக்கலாம்; அதிற் சில மெதுவாகத் தாக்கப்படினும், வழமைபோல உணர்வு அறிவிற்குமுன் உசுப்பப்படினும்.....சுகுணன் அச்சம் ஒன்று கவிவதை, தாங்கமுடியா வேதனையென்பது இது தானோ என்று தான் அவதியுறுவதை விளங்கிக் கொண்டான். 


பெனடிக்; சுகுணனிற்கும் அவனிற்கும் பல வித்தியாசங்கள், சில ஒற்றுமைகள் இருக்கலாம். சுகுணன் மெலிதாய் உடைபவன் போலக் கூனல் விழுந்தவனாய், என்றுமேயெதிலும் துக்கம் காண்பவனாக, எப்போதும் எதிர் காலம் குறித்தே கவலை கொண்டவனாக, இனரீதியான பார்வைகொண்ட சஞ்சலம் மேலுற்றவனாய், உணர்ச்சிக் கவிதைகளின் சுவைஞனாய், படபட சூடுகளும் ஒருசில தூஷணைகளும் உள்ள ஆங்கில ‘அக்ஸ்ன்ப்fலிம்’ இரசிகனாக இருந்தும் பெனடிக் சற்றே உருண்டவனாக, அடிக்கடி குளிக்காதவனாக, நான்கு நாட் தாடி மயிர் தடவி (சொறிந்தபடி?) ’இஸங்’களின் பார்வையில் உலகைக் காண்பவனாய், மெளனத்தின் மகத்தான புத்திரனாய், மனித நேயவாதியாக முகட்டினை என்றும் வெறித்தபடி, உலகமென்றால் என்னவென்றும் தன் நிலைப்பாடு, இடப்பாடு அங்கு என்னவென்றும் அறியவேண்டி விழிப்பவனாக, அடிக்கடி தலை மயிர்களைக் கற்றையாகக் கூட்டிக் குழப்புவனாக, மெல்லுணர்வு துல்லியமாய் நுகரவைக்கும் கலைகளின் ஆர்வலனாக இருந்தும் கூட, அவர்களிடையே இந்த அளவிற்கு நட்பு வளரக் காரணம், உலகச் சராசரி மனிதர்களில் இருந்த தாங்கள் வேறுபட்டவர்கள் என்று காட்ட இருவருக்கும் இருந்த ஆவலும் ஒருவரின் பேச்சுக்களையும் உணர்வுகளையும் எழுத்துக்களையும் செய்கைகளையும் பாராட்ட, விமர்சிக்க (அதிகம் விரும்பாத போதிலும்) ஆதரவு கூறி உற்சாகம் அளிக்க இன்னொருவர் இருக்கிறார் என்ற பரஸ்பரம் நிம்மதியும் எதிர் பார்ப்புமே என்று சுகுணன் சில வேளைகளில் நினைக்கவும் தலைப்பட்டிருந்த போதும் அதை வெளிக்காட்டிக் கொண்டிருக்கவில்லை. பெனடிக்கிற்குத் தன் கொள்கைகளை வாதமின்றி ஏற்றுக் கொள்ள ஒருவன் தேவை. சுகுணனிற்குத் தனக்குஉலகில் அறியாமல் இருக்கும் விடயங்களைத் தெரிவிக்க ( அவை சரியான - பிழையான தகவல்கள் என்பதில் அவனுக்கு அக்கறையில்லை. அவன் தேவை மற்றவர்களுடன் வாதிடுகையில் எடுத்து விடச் சில விடயதானங்கள்) ஒரு குரு; அவ்வளவுதான்.


இப்படியிருக்கையிற்றான் நேற்று பிரச்சினை சுகுணனைப் பொறுத்தமட்டில் வெடித்தது. சிலருக்குச் சிலரைப் பார்த்த மாத்திரத்திலேயே பிடிக்காமல் முதல் அறிமுகத்தூடேயே முகம் வெறுத்துப்போகும். இஃது அவரவர் உள்ளுணர்விலும் மற்றையோரின் முன் ஒப்பிட்டுப் பார்த்து குறைகளைத் தன்மீது உணர்ந்து கொள்ளும்போது ஏற்படும் தாழ்வு மனப்பாங்கிலும் ஏற்படலாமோ என்னவோ அது வேறு விடயம்;  ஆனால் சுகுணனுக்கு இப்போது அந்தக் காரணகாரியங்கள் பற்றிக் கவலையில்லை. அவன் அறிந்திருந்தும் உண்மையில் அவன் சிவராமை முற்றாய் வெறுப்பதற்கும் கற்றுக்கொண்டு இருந்தான். சிவராமின் ஒவ்வொரு செயல்களுக்கும் தவறான, தன் மீதுள்ள ஆத்திரம், பொறாமை காரணங்களெனத் (ஏன் ஆத்திரம், எதிற் பொறாமை - அவனுக்குத் தெளிவாகச் சொல்ல முடியாது) தான் விமர்சனம் செய்யப் பழகிக்கொண்டிருந்தான்.


சிவராம் போன மாதந்தான் 'வெளியிலிருந்து' (fப்ரான்ஸ்? அதுவே சுகுணனின் பிரச்சினைக்கே காரணமாயிருக்கலாம்) திரும்பி, சுகுணனை விட அழகாக, சிவத்து, ஊதி, கவர்ச்சிகரமாக - பண பலமாகவேறு-உலா வந்தான், அப்படிமட்டுமிருந்தால், சுகுணன் - தன் திறமைகளுடன் (அவனுக்கும் ஏதோ இருக்கத்தானே வேண்டும்.) அவனை ஒப்பிட்டு, தன் மனத் தராசில் எடைபார்த்துச் (எப்பாடுபட்டாவது சிவராம் தன்னைவிடக் கீழிருப்பதை - தராசிலல்ல, நிலைமையில் - அறிந்து) சமாதானமாகியிருப்பான். ஆனால், அவன் பெனடிக்கின் மூன்றாவது வகுப்பு நண்பனாக இருந்தது / இருப்பது அவ்வளவு சமாதானம்-மனத்தே தரக்கூடிய விடயமல்லவே. பெனடிக்கினைக் கவர செய்யவேண்டிய ”ரெண்டு பெஞ்சாதிக்காரனின்" மனைவிமார்களின் மனநிலை தன் சூழ்நிலையானதாய் உணர்ந்தான். இரண்டாவது குழந்தை (அதுவும் கொழு கொழுவென குழி விழுந்த சிரிப்புக்குதலையாய்) பிறந்த வீட்டில் ஏற்கனவே சீராட்டுப்பட்டுக் கொண்டிருந்த குழந்தை செய்யும் செயல்களைச் செய்ய வேண்டிய நிலைக்கு, மற்றவர்களைக் கவர அடம் பிடிக்க வேண்டிய நிலைக்குத்தான் வழுகிச் சென்றதாய் சுய வெறுப்புக்கூட முளைத்தது அவ்வப்போது.


இந்நிலையிற்றான் நேற்று, அச்சம்பவம், சொல்லப் போனால் விசேடமாகக் குறிப்பிட எதுவுமில்லா அச்சம்பவம் நிகழ்ந்து போயிற்று. நேற்றுக்காலை பெனடிக் வீட்டிற்குப் போனபோது, அவன் ஏற்கனவே சிவராம் வீட்டிற்குப் போய்விட்ட தாகச் சுகுணன் அறிய நேரிட்டது. ''சுருக்”; இத்தனை வருட காலத்தில் முதன் முறை  அதிகம் சுகுணன் இல்லாமல் பெனடிக் வெளியிற் போயிருக்கின்றான் – அதுவும் சிவராமிடம், நேரே சிவராம் வீடுநோக்கிப் போனால், இடை வழியே அவர்கள்,  "படத்துக்குப் போறம், வாறியா?" - அலட்சியமாகக் (அப்படிக்தான் பட்டது; வா என்று கூடக் கேளாமல், வாறியா  என்று வராதை என்னுமாற் போற்கூட அர்த்தம் தொனிக்க) கேட்டான் பெனடிக். படம் – அதுவும் அடிதடிகள் சூடுகள் நிறைந்த ஆங்கிலப்படம். பெனடிக், "இல்லை" - சுகுணன் பதட்டமாய் பல் நெருடி ஆத்திரம் உடலெங்கும் வெப்ப சக்தியாக்கி, இதுவரை கால ஆற்றாமைகள், அமுக்கம் கூடி வெடித்த பலூனாக - பட்டெனச் சிதறி, அவர்கள் திகைக்க, வீதியிற் போனோர் விசித்திரப்பார்வை தர, மிதி வண்டியேறி கண்மண் தெரியாது மிதித்து வீடு வந்து, ஆசுவாசப்படுத்தப்பட்டு, நடந்ததை மீட்டி இழந்ததற்காய் வருந்துபவனாகி, கள்ளம் வெளிவர விழித்து நின்றவனாகி.............


இன்று, வழமையாகச் சந்திக்கும் இந்தக் கடற்கரையில், விசரன் போல், தூரத்தேயிருந்து பரிதாபமாகப் பார்ப்போர் கண்களாற் தாக்கப்பட்டு, மீண்டும் ஒரு கல்லை யெடுத்து ......


“நான் அடிப்படையிலேயே பிழைவிடுகிறேனோ"? சுகுணன் கேள்வி தனக்குள் எழுப்பலானான்," நட்பு; நட்பென்ன? அன்பு, பாசம், காதல் என்பவை எல்லாமே - உண்மையில், பரஸ்பரம் வாழும்காலம் வரைக்குமான ஒரு நம்பிக்கைக்கும் பிடிப்புக்காகவுந்தானே. எந்த ஓர் உறவும், உறவென்ன? எந்தவொரு செயலும் எண்ணமும் ஏதோவொரு கொள்கையினை அடித்தளமாக் கொண்டுதானே கட்டப் படுகிறது? இங்கு பரஸ்பரம் நம்பிக்கையும் புரிந்துணர்வுந்தான் முக்கியம். இன்னாரின்னாரை, இந்த விடயத்தில் இந்த அளவிற்குத்தான் நம்பமுடியும், எதிர்பார்க்கமுடியும் என்ற கணிப்பு ஓரளவிற்கேனும் இல்லாமற் கட்டப்படும் எந்தவுறவுச் சங்கிலியும் எந்நேரத்திலும் உடைபடலாம்; அல்லது உடைக்கப்படலாம். அதற்குத் தயாரா இருக்க வேண்டும். இந்தவுலகின் அவசர ஓட்டத்தில் அதற்கு எமக்குச் சரியான கணிப்பீட்டிற்குரிய நேரம் கிடைக்காமற் போவது ஒரு துர் அதிஷ்டமாகலாம். இருந்தாலும் உறவு ஏற்பட்டபின், எந்நேரத்திலும் எச்சத்தர்ப்பத்திலும் அதைப் பரீட்சிக்க முயலுதல் துன்பத்தையும் வாழ்வில் எவ்விடயத்திலும் அவநம்பிக்கையையுமே விளைவாகத்தரும். உலகின் எவ்வுறவுமே நம்பிக்கையானதல்ல என்பதாற்றான் மனிதன் இறுதி நம்பிக்கையாகக் கடவுளை, சிலவேளைகளில், இல்லாத கடவுளை(தானே சிருஷ்டித்து?) நம்ப முயல்கின்றானோ, அந்நம்பிக்கை எந் நாளும் ஆதாரமில்லாததாற் கெட்டுப் போகாதென்று, கெடுக்க யாருமே இருக்க முடியாதென்று.......?" சுகுணனிற்கு உலகில் எல்லாமே அக்கணத்திற் பிடிப்பற்றுப் போவதாக - நட்பு, இவ்வாழ்கடல், அதில் மடிவதற்காகவே தோன்றும் எண்ணம்போற் கணக்கிலா அலை, தூரத்தே மனித மனம் போற் பாதி தெரிந்தும் தெரியாமலும் அசைந்தாடும் கிரீஸ் அல்லது வேறோர் நாட்டுக்கப்பல், தொலைவில் நின்று வானவிதானம் வெறிக்கும் மனிதர்கள், இந்தக் கறை படிந்த தார்வீதி, அதிற் தனித்துப் போய்த் தந்திக்கம்பம், அதற்குதவியோ உபத்திரவமோ கால்தூக்கி நாய், மேக இருட்பின்னணியில் நிறந்தெரியா நீள் பறவை(எங்கேயிருந்து, எங்கு எதற்காய்ப் பறக்கிறது?),என் குடும்பம், நான், என் கற்பனை, வாழும் எதிர்காலம்....... எல்லாமே அர்த்தமற்று அற்றுப் போவதாய் உணர்ந்தான்.


"இல்லை; இதை இப்படியே விட்டுவிடல் கூடாது; இவ்வுணர்வு என்னை இப்பொழுதே இக் கடலில் விழச் சொல்லும்; இல்லை, சட்டை காற்சட்டையுடன் சேர்த்து இச்சமூகக் கட்டுப்பாடுகளை எல்லாம் கிழிக்கச் சொல்லும்; வீதியிற் போகும் பெண்களை அர்த்த மற்று வெறுக்கச் சொல்லும்; சந்தியில் முறைப்பதற்கே யென்றிருக்கும் பொலிஸுடன் தேவையின்றி விறைக்கச் சொல்லும்; வீட்டில் “இளையர் அரங்கம்” பார்க்கும் தம்பியை எட்டி உதைக்கச் சொல்லும்; முட்டையைப் பொரித்து விட்டு புட்டுடன் காத்திருக்கும் அம்மாவின் தலை மேலாய்க் கோப்பையை எறியச் சொல்லும். முடியாது! இந்த உணர்வை நான் அனுமதிக்கமுடியாது. சரியோ பிழையோ சில நம்பிக்கைகளைத் தயார் பண்ணிக் கொண்டு அவற்றின் அடிப்படையில் வாழ்க்கையைக் கொண்டு போகவேண்டியது தான். வாழ்க்கை வாழ்வதற்கேயென்று எடுத்துக் கொண்டு அதற்கேற்றாப் போல என் கொள்கைகளை, உலகிற்கேற்றாப் போல் என் நடவடிக்கைகளை, என் ஈகோ புண்படாது இழுவுண்டோ இறுக்குண்டோ வளைந்தாவது முறியாமல் வாழ வேண்டியதுதான். உலகத்தை 'நான்' என்ற குவிமைய ஆதாரம் பற்றி அடையாளம் பண்ணி விஸ்தரிப்ப தால் ஏற்படுகின்ற சிக்கல் தான் இது.

ஒரு வகையிற் தவிர்க்க முடியாத போதும், உண்மையில் 'நான்'தான் உலகமெனும் அகிலத் தொடையுள் ஒரு தொடைப் பிரிவேயொழிய 'நான்' ஒரு போதும் அகிலத்தொடையுள் ஒரு தொடைப் பிரிவாக மாட்........

பொறு, பொறு மனமே பொறு; சிலந்தி வலை விழுந்த ஈ வெளிவர உந்தியுந்தி இன்னும் சிக்கலும்பட்டு.........”

சுகுணன் நிதானித்தான். ''அட, இந்தப்பிரச்சனையை இப்படி அணுகினாலென்ன? பெனடிக்கின் உலகத்தில் ஒரு பகுதியில் என் உலகமென்பதின் ஒரு பகுதி இடைவெட்டு; அதே போல என் உலகத்தில் அவன் உலகின் ஒரு பகுதி இடைவெட்டு, அவன் உலகின் மிகுதிப்பகுதிகள் வேறுபலரின் உலகங்களுடன் இடைவெட்டலாம். சிவராம் போல; என் உலகமும் அப்படியே சுகுமார் போன்றோருடன் ஆகலாம். இடைவெட்டாப்பகுதி என் அந்தரங்கங்களுக்கான தாகலாம். ஆனால், என் வட்டத்தைச் சிறிதாய்க் கொண்டு நான்  அதிற் பெரும்பகுதியை ந பெனடிக்குடன் இடை வெட்டியிழந்து, மிகுதிப் பகுதியைச் சிறிதாய்க்கொண்டு அவஸ்தையுறுகின்றேன். ஆனால் அவன் உலகம் பெரிதாய்; இடைவெட்டியது போக இன்னும் தனக்கென எஞ்சி, மேலும் இடைவெட்ட இடமுள்ளதாய்….இதைவிட்டு நான் அவனுள் ஒரு பிரிவென்றோ மறுதலையாகவோ எண்ணுவதில் அர்த்தமில்லை..." சுகுணனிற்குக் கடற்கரை ஞானம் பிறந்தது போல் -கடல் நீலம் அழகுப் பின்னல் கூடியதாய், வீதித் தார் மாலையொளியில் மின்னலுறுவதாய், தான் போட்டிருந்த இருதரங்கட்கும் மேற் தைக்கப்பட்ட செருப்புச் சோடி கவர்ச்சிகர மாக இருப்பதாய் ஒரு பிரமை.'


'பெனடிக் வந்து அவன் தன் நடத்தைக்காய்க் கவலைப்படுவதாகக் கூறினாலும் வேஷம் என்று நினைப்பேன்; நேற்றைய சம்பவத்திற்கு நான் மன்னிப்புக் கேட்கையில், அவன் தான் அச்சம்பவத்தைக் கருத்திலேயே எடுக்கவில்லை, பிறகேன் கவலைப்படுகின்றாய் என்றாலும் நான் அவன் என்னைப் பற்றியே அக்கறையெடுக்கவில்லையே பார் என்று நினைப்பேன்; இச்சம்பவம் பற்றிப் பேசாமலே எம் தொடர்பு தொடர்ந்தாலும், பார் இவன் என் நடவடிக்கைக்காக அலட்டிக் கொள்ளவில்லையே என்று எண்ணுவேன். ஏன், அவன் என் மேல் உரிமையெடுத்து மற்றவன் முன் என்னையும் தன்னைப் போல நினைத்து (உரிமையில்) புதியவனுக்கு நாம் அன்பில்லாவிடினும் ஒரு மரியாதை கொடுப்பதில்லையா? அதுபோல சிவராமைப் பார்த்திருக்கலாம் என்றுகூட நினைக்கலாமே? இல்லை, என்னில் அவனுக்கு உண்மையிலேயே அக்கறை இல்லா மற்கூட இருந்திருக்கலாம். இல்லாவிடில் வேறு விதமாய், ஒருவகையில், நட்பில் பரஸ்பர முகலோபனங்களும் சந்தோஷிப்புக்களும் உருவாக்கிய சலிப்பு அகல மனம் தேடிய ஊடலோ? இந்த உறவை உடைக்கக் கூடாது என்ற ஆவலில் என்னை நானே நம்பவைத்து மீண்டும் பெனடிக்குடன் நட்பைச் சீர் செய்யத் தான் இப்படியோசிக்...சட்! மட்டில்லா என் மனமே கட்டுண்டு கிட.


இன்று இந்த முடிவிற்கு உடனடியாகப் பக்குவப்பட முடியாவிடினும், ஒருகாலம் நீ பக்குவம் பெறவே வேண்டும்.அப்போதுதான் அது வாழ்க்கை என்று ருசி பொருந்திக் கிடக்கும்.இது தான் சில நம்பிக்கைகளின், ஆராயக்கூடாத, படாத நம்பிக்கைகளின் அடிப்படையிற் கட்டப்பட்டு, அதிற்கட்டுண்டு, தின்று, குடித்து, விளையாடி, இன்புற்று, உள்ள காலம் வரை நன்றாய்...” - சுகுணன் சிலிர்த்து மெலிதாய்ச் சிரித்து, வாழ்க்கை நீலவிசும்பின் அடிக்கடலில் வழுக்குண்ட முட்டைக்கருச் சூரியனிற் சிக்குண்டு, வீடுதிரும் புகையிற் சத்திக்கப்போகும் "ற்யூஷன்” விட்டுப்போகும் இளம் பெண் கண்கள் விகசிப் பண்ணி, பெனடிக்கின் நட்பிலே அன்பு கொண்டு, தான் சுகுணன் என்பதிற் பெருமை கொண்டு, பின்புறம் கைதட்டி மண்ணகற்றி எழும்புகையில், சந்தியிற் கைய சைத்துவருவது பெனடிக்காகவும் இருக்கலாம்; பெனடிக்கேதான்.


Read more »