ஒரு படைப்பியல்வாலியின் இழக்கிய அனுபவங்கள்
வெறுமனே ஒவ்வொரு வார இறுதியிலும் சுங்கின் மன்ஷனின் ஏதோ மாடியின் அழுக்கு மூலையிலே இருக்கும் நேபாளச் சாப்பாட்டுக்கடைகளின் கோழி 'புட்டூன்', பியர் மேசைப்பரம்பலுக்கிடையே ஆறுமணித்தியாலம் தமிழ் இலக்கியப்பரப்பின் சிறகைப் பரப்பி, சிலிர்த்தெழுந்து, பிறகு வெறியிறங்க மூடிக் கட்டிக் கொண்டு ஹொங்ஹொங்கின் முதுகெலும்பு 'நதன்' வீதியிலே குதித்திறங்கி, 'ஸ்ரார்' படகுத்துறைக்கும் நகரப்புகையிரதத்துக்கும் ஆளுக்கொரு திசையிலே ஓடுவதற்குமப்பாலும், தமிழுக்கு உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று சுந்தரகுமாருக்குத் தோன்றியபோது, சொன்ன அவனுக்கும் நிறை வெறி; கேட்ட எங்களுக்கும் முழு வெறி.
பியர் போத்தல் மூடியைத் திறந்த மணத்தின் ஆவிப்பரம்பலுக்கே, குமரனுக்குள் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபதாம் ஆண்டு வியன்னா மதுக்கடைகளிலே உலக எழுத்துப்பரப்பின் வரப்பை வெட்டி புதுவாய்க்கால் போடப் போராடின முகம் தெரியாத ஏதாவதொரு ஏழைப் போதை எழுத்தாளனின் அடங்கா ஆவி புகுந்து சன்னதமாடத் தொடங்கிவிடும். தமிழ் இலக்கியமென்றால், ஆளுக்குக் கொஞ்சம் இளக்காரம்; அதனால், 'அதைச் சாமர்த்தியப்பட்ட குமரைப் போல பொத்தி வச்சு வளர்த்துக் கல்யாணம் கட்டிக் கொடுக்கிற பொறுப்பு தன்னது' என்றதுபோல அடிக்கடி பேச்சு.
அதே உயரத்துக்குத் தமிழ் நாட்டுக்கூத்துக்கும் ஒப்பாரிக்கும் உருப்படியாய் ஒரு களமமைக்க உற்சாகத்தோடு இருக்கிற 'மோடி' பத்மராசப்போடியாருக்கு கொஞ்சம் மெதனோல் எதனோல் சகவாசம் மூக்குச்சுவாசம் கண்டால், அரிச்சந்திர வைரமுத்து, மயானகாண்டத்திலே உலோகிதாசனைப் புதைக்க வந்த சந்திரமதியைக் கண்ட துன்பமும் இன்பமும் இரண்டறத் துவையக் கலந்த நிலை. வட்டுக்கோட்டைக் கணபதி ஐயரின் வாளபிமன் நாடகத்திலேயிருந்து,
"தந்தா ளிரண்டு புயங் குலுங்கத் தாளத் துடை மார்பிலங்க
வந்தாய் அரக்கா செருக்காய்என் வாளின் அருமை யறியாயோ
பந்தாய் உந்தன் தலையைவெட்டிப் படிமீ தெறிந்து விளையாட"
என்று கொச்சகத்தருவிலே கருக்கு வெட்ட வெட்டவேகியது, நேபாள ஸேர்ப்பா முதலாளிக்கு அவ்வளவு சுருதி கூட்டாததால், மிகுதி தமிழ் வளர்ப்பிற்கான வன்-தண்ணீருத்தலை அடுத்த கிழமை ஹ¤ங்ஹொம்மிலே எனது அறைக்குள்ளே சீனப்பன்றி வறுவலுடன் வைத்துக்கொண்டு, ஒரு தமிழிலக்கிய வருடம்-மூன்றாந்திரி சஞ்சிகைக்கு அடுக்குப்பண்ணினோம்.
அது கணணியூடாக, இணையத்திலே தமிழ்ச்சஞ்சிகைகள் பத்திரிகைகள் வளராத காலம்; மயிலையும் முரசும் கோவிந்தசாமியின் 'தமிழ்நெட்'டும் அப்போதுதான் எழுத்துருக்களாக ஆங்காங்கே மொட்டுவிட்டுக்கொண்டிருந்தன. அதனால், எங்களது சஞ்சிகை சேரவேண்டிய தமிழ்ப்பரப்பை எண்ணி, அச்சுவாகனமே ஏற்றுவதாகத் தீர்மானம் செய்துகொண்டு மிச்சக் குடிவகை, பொரி கோழி, கொறி கடலை எல்லாம் முடித்துக்கொண்டோம். (சிறுபத்திரிகை என்றால், சிறிதுகாலம் மட்டுமே நீடிக்கும் பத்திரிகை என்பதான வரைவிலக்கணம் விரிகின்றதை இனியும் விடுவதில்லை என்பதும் வெறி உச்சந்தலை எட்டியடித்தபோது கட்டியாய் வெளிவந்த உபசங்கற்பம் என்பதையும் இங்கே காண்க.)
ஆரம்பத்திற்கு A4 அளவுக்காகிதத்தைக் குறுக்குப்பாட்டிற்குச் சமச்சீராக மடித்தாக்கும் அளவிலே முப்பது பக்கங்கள் (அட்டையையும் உள்ளடக்கித்) தாளிகை தாளிப்பதாகத் தீர்மானம் ஆயிற்று. இதில், பத்துப்பக்கம் சுந்தரகுமாருக்கு, பத்துப்பக்கம் பத்மராசனுக்கு, மிகுதி எனக்கு. அதாவது, பத்துப்பக்கம் தமிழுக்குப் புதுவரவுகட்கு, பத்துப்பக்கம் பழமையைப் பராமரித்துப் பேண, மீதி விளம்பரங்களுக்கும் ஏடிட்டார்-இயலுக்கும் வருங்காலங்களில் வாசகப்படைப்பாளிகளின் தத்துவச்சிண்டுக்கும் வறுமைக்கும் புலமைக்கும் விளைவான குத்துவெட்டுக்கும் களமமைக்க என அறிக.
அவரவர் பிரிவுகளுக்கு அவரவரே விடயதானம் சேர்க்கவேண்டும் என்றாகிப் போனதால், நான் ஹொங்கொங்கிலிருந்த 'திருட்டு ஒளியத் தமிழ்ப்படங்கள்' விநியோகிப்பவர்கள், கீழைக்கரை, தஞ்சாவூர் சாப்பாட்டுக்கடைகள் + ராணி சஞ்சிகை விற்பனையாளர்கள் எல்லாரினது கடைகளிலும் 'ஆசை' படப்பிரதியெடுத்து, அல்லியின் பதில்களுக்காக அவரவர் அனுப்பிய கேள்விகளுக்குச் சிரித்தும் வைத்தாக வேண்டியதாகப் போயிற்று. போதாக்குறைக்கு, விளம்பரத்துக்குப் பல் இளிக்கையிலே இலவசப் பத்திரிகாலோசனைகள் வேறு. 'காதலன்' படம் 'ஓகோ' என்று ஓடிய காலம் அ·து ஆதலினால். நக்மாவின் நயனங்களை மட்டும் அட்டையிலே போட்டு, அடுத்த இதழிலே கண்டுபிடித்தெழுதினால், ஓராண்டுச்சஞ்சிகை இலவசம் (தொக்குநிற்பது: "பிறகு, அதனால், நீ என் தொண்டையைப் பிடித்து தொந்தரவு பண்ணும்தேவை ஒழியும்") என்று கூறும்படி மந்திராலோசனை தந்த விளம்பரதாரருக்கு, ஒரு வருடமென்ன, அரைவருடமே சஞ்சிகை வெளிவருவது நிச்சயமில்லை என்பதைச் சொல்லவோ, நக்மாவின் நயனத்தை அட்டையிலே போட்டுவிட்டு உள்ளே எட்டாம்பக்கத்திலிருந்து தொடர்ந்து மூன்று பக்கங்களுக்கு, நக்மாவின் நயனமென்ன நாக்குச்சிவப்பேகூடப் போடாமல், சுந்தரகுமாரின் முற்போக்குத்தோழர், சூ. செயவெற்பனின் 'காதலன்' திரைப்படம் மீதான "அண்ணாசாலையில் வண்டிக்குமேல் குதி குண்டிபடக் குதிக்கும் திரைவானரங்கள்" என்ற பார்வையை வெளியிடுவது சாத்தியமானது அல்ல என்பதைச் சொல்லவோ எனக்குத் துணிவில்லை; வெறுமனே, கட்டிடச்சுவரின் ஒட்டியிருந்த 'முத்து' சுவரொட்டியைப் பார்த்தபடி, 'ஏன் கன்னிமீனா இந்த அளவுக்கு விளைமீனாகிப் போனார்?' என்று எண்ணிக்கொண்டபின், காமராசர் தொனியிலே, "ஆகட்டும் பார்க்கலாம்" என்று கூறிவிட்டு நகரத்தான் முடிந்தது.
சஞ்சிகைக்குப் பொருத்தமான பெயரிட முயற்சித்தபோது, ஒரு கல்யாணப்பத்திரிகை அடித்து விநியோகிக்கும் செலவிலும்கூடச் செலவானது என்பதாக இப்போதும் ஒரு ஞாபகம். இரண்டுதரம் 'உவுட்லண்ட்ஸ்' சைவச்சாப்பாடு, நேபாள தந்தூரி, பஞ்சாபி 'நான்'; கடைசியில், இந்த வாலாயத்துக்கெல்லாம், பெயர் பிடிக்கும் குறளி அடங்காமற்போக, ஒரு பூஜியான் சீனன் விற்பனைபண்ணும் அசல் இத்தாலியன் 'ஸ்பகட்டி'ப்புழுவை வாய்க்குள்ளே நெளித்து உள்ளிழுத்து உறுஞ்சிக்கொண்டிருக்கும்போது, "முதல் இதழைப் பெயரில்லாது வெளியிட்டு படைப்பாளிகள், வாசகர்களையே (இப்படியான முன்னேற்றவேடுகளிலே இப்பதங்களிரண்டும் ஒரே குழுவினையே குறிக்கும் என்பதறிவதறிவு) உகந்த பெயர்களாகத் தரச் சொல்லித் தெரிவு செய்யலாம்" என்று பத்மராசன் சொன்னது, எனக்குப் பொறுக்கவில்லை. பக்கத்துவீட்டுக்காரன் எவ்வளவுதான் சிநேகிதன் என்றாலும், சொந்தப்பிள்ளைக்கு அவன் வந்து பெயர் வைக்கின்றவரைக்கும் காத்திருப்பது முட்டாள்தனம் என்றால், தனது சஞ்சிகைக்குப் பெயரையே வைக்கத்தெரியாதவன் எல்லாம் பத்திரிகை நடத்தப் பார்க்கின்றது அதைவிடப் பைத்தியக்காரத்தனமாய் எனக்கே பட்டால், மற்றவர்களுக்கு எப்படித் தோன்றும்? முதலும் கடைசியுமாக இந்தப்பத்திரிகை நடத்துகிற தொழிலிலே நான் சொந்தமாகச் சொன்ன கருத்து இதுமட்டும்தான் என்று நினைக்கின்றேன். கடைசியில், நடத்துகிற மூவர் பெயர்களினதும் முதலெழுத்தைச் சேர்த்து [(சு)ந்தரகுமார்,(ப)த்மராசன்,(சு)குணன்] 'சுபசு' என்று வைக்கலாம் என்ற புதுமையான கருத்தைச் சுந்தரகுமார் முன் வைத்தான்.
சுபமும் பசுவும் 'ப'வினைப் பொதுவில் வைத்துக் கலந்திருப்பதாகவும் பசு என்றால் செல்வமென்றும் கறக்கக் கறக்கப் பால்மழை பொழியும் ("யாருடைய இரத்தம் பாலாகும்?" என்று நான் வழக்கமான குதர்க்கத்திலே கேட்டது, தோழமை வெறிக்குட்டிகளுக்குக் காதுகளிலே விழவில்லை) என்றும் சொன்ன பத்மராசன், கூடவே 'சுபசு' என்பதுதான் மிகச்சுருக்கமாகத் தமிழில் வந்த மாலைமாற்று என்று வேறு ஓர் அதிரடித்தகவலைச் சொன்னான். இது சுந்தரகுமரனுக்கு ஒரு தூண்டில் என்று நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். சுந்தரகுமாரைப் பற்றி அவன் வார்த்தைகளிலேயே சொன்னால், தென்னமெரிக்கக்கவிஞர்கள் கதையாளிகளின் 'மாந்திரீகத்தன்மையிலே சொல் ஸ்தம்பித்துப்' போனவன்; அதனால், இந்த ஒற்றை வசனத்திலே ஒரு கதை எழுதும் வித்தையை கற்றுக் கொள்வதே அதியுயர் இலட்சியமாய்க் கொண்டிருந்தான். இந்த ஒற்றைச்சொற்கவிதை, 'சுபசு' அவனுள்ளே பொங்கிப் பிரகவித்து பியர்நுரையைக் காணத் தங்கித் தடைப்படாது, தடாலென்று வெளிவந்து இன்புறவைத்தது. ஆக, சுருங்கச்சொன்னால், ''சுபசு' சஞ்சிகை; அகவை I; அசைவு I' என்று முதலாம் வெளியீட்டுக்கு இட்டுக்கொள்வது என்று முடிவானது.
(அண்மையிலே வெங்கட்சாமிநாதனின் 'வெசாஎ' வந்தபோது, அவரும் தஞ்சைபிரகாஷ¤ம் எங்கள் யோசனையைத் திருடிக்கொண்டார்கள் என்று பத்மராசன் 'அதிமுக்கியம்' என்ற அடையாளத்துடன் எனக்கும் சுந்தரகுமாருக்கும் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தான். (பத்மராசனுக்கு எப்போதுமே இலக்கிய-சதி ஆய்வுகளிலே ஒரு தனிப்பித்து; புதுமைப்பித்தன், கல்கி, மயூரம் வேதநாயகம்பிள்ளை, கா.நா.சுப்பிரமணியம் தொடக்கம் இன்றைய சுஜாதா, சாருநிவேதிதா, சுபா வரைக்கும் இவர்கள் என்ன எழுதியிருக்கின்றார்கள் என்று காண்பதிலும்விட எதை எங்கிருந்து திருடியிருக்கலாம் என்பதைப் பற்றித் தகவல் சேர்கிறதே அவனுக்குப் பொழுதுபோக்கு) ஆனால், இதையெல்லாம், 'வெசுநா' இடமே காகிதத்திலே நாசூக்கில்லாமற் கேட்டு, இப்போதுதான் தவழத்தொடங்கும் என் இலக்கியத்தடத்துக்கு முன்னால், கரித்தடைச்சுவர் எழுப்பவிரும்பவில்லை. மேலும், 'சுபசு' பெயரிடுகை என்ன, 'இராமர் மூலிகை எரிபொருட்' சூத்திரமா, பதிவுக்காரியாலயத்திலே பெயர் குறித்துக் கொள்ள? அதனால், மூன்றெழுத்திலே என் மூச்சில்லை என்று பத்மராசனுக்குப் பதிலெழுதிவிட்டு மூச்சுப்பேச்சில்லாமல் இருந்துவிட்டேன்)
ஆரம்பத்திலே ஐம்பது பிரதிகள் கொழும்பிலே அடித்து எடுப்பதாகவும், அதிலே முப்பது பிரதிகள் பரந்துபட்டுவாழும் சிற்றிலக்கியக்காரர்களுக்கு (அதாவது, இதுவரை எங்களுக்கு இலவசமாகப் பிரதிகள் அனுப்பியோருக்குச் செஞ்சோற்றுக்கடன் தீர்க்க) அனுப்புவதாகவும், மிகுதியை வைத்துக்கொண்டு வாங்கக்கேட்போருக்கும் (இதுதான் எங்கள் கற்பனையின் உச்சத்திலே வெளிவந்த அதியுன்னத கருத்துப்படைப்பு) பிற்காலத்துத் தமிழிலக்கிய ஆய்வாளர்களின் தேவைக்குச் சேமித்துக் கொள்வதாகவும் முடிவு செய்து கொண்டோம்.
முதற்சஞ்சிகைக்கான இலக்கிய எழுத்து உபயங்களையும் வரவுகளையும் படைப்பாளிகளின் மனம் கோணாது கருத்துச்சுதந்திரத்தை வெட்டிச்சுருக்காது, தனிப்பட்ட வைதல்கள் வாழ்த்தல்களையும் வரிவிடாது கோர்த்து ஒழுங்குபடுத்துவது என் தொழில்; முதலாவது 'சுபசு' இனைப் பார்த்தால், 'ஆசிரியர்' என்பதன் முன்னால், என்னுடைய பெயரையும் 'கௌரவ ஆலோசகர்கள்' என்பதன் முன்னால், சுந்தர்-பத்மர் என்ற இரட்டைச்சொல்லடுக்கையும் நீங்கள் காணமுடியும். தவிர, இன்றைய தமிழ்ப்படைப்புலகம் எங்கே போகிறது, எந்தெந்த வாகனத்திலேறி எந்தளவு கதியிலே போகின்றது என்பது பற்றியும் ஓர் ஆசிரியத் தலையங்கம் எழுதினேன். "கட்சி, மதம், சாதி, பால், பண்ணை, முதலாளித்துவம் அத்தனை பேதமும் முன்னிறுத்தாமல் எழுத்திலே தார்மீகக்கூர்மையும் இறுக்கத்தளர்வும்...," இப்படி இரண்டு இரவுகள் விழித்திருந்து ('ஓர் இரவு' விழித்திருந்து எழுதியவர்களே முதன்மந்திரியானால், கொஞ்சம் மட்டான வேகம்கொண்ட நான் குறைந்தபட்சம் தமிழின்முதன்மந்தியாகவேனும் ஆகலாம் என்ற நம்பிக்கை) வெட்டிவெட்டி, இரட்டைப்பந்தி எழுதி, 'தோழமையுடன், இவண் சுகுணன்' என்று முடித்து, திருப்தியுடன் ஆலோசகர்களிடம் மேற்பார்வைக்குக் கொடுத்தது, எனக்குத் திரும்பி வந்தபோது, 'சுகுணன்' என்பதைத் தவிர என் பெயரிலே கிடந்த ஓர் அறுப்பும் எனக்கு வெளிச்சமாகவில்லை; சில சொற்களுக்கான அர்த்தங்களுக்கு ஒருவன், "'க்ரியா' அகராதியைச் சரியாகப் பார்" என்றான்; மிகுதி கொஞ்சத்துக்கு, மற்றவன், "சதுரகராதியின் 1899ம் ஆண்டு அபூர்வப்பதிப்பு அகப்பட்டபோது பார்" என்கின்றான்; வேறு சிலதைப் புரிந்துகொள்ள, எனக்கும் கூடவே தமிழ் எழுத்துக்கும் அதை அடுத்த உலகுக்கும் குறைந்தபட்சம் ஒரு பத்துப்பன்னிரண்டாண்டு காலம் தவணைக்கெடு தந்திருப்பதாகச் சுந்தரகுமார் சொல்லி என் அறைக்கதவை அறைந்து விட்டு 'ஹேனேகர்' பியர் வாங்கக் கீழிறங்கிப் போனான்.
ஆலோசனைக்குஞ்சு இல. 'அ,' சுந்தரகுமார், தனது பகுதிக்கு, 1940களிலே மட்ரிட் இலே தஞ்சம் புகுந்து பாரிஸிலே ஒரு பெருத்த பிருஷ்ட வைப்பாட்டி வைத்திருந்த பரகுவே எழுத்துக்கிழச்சிங்கம் ஒன்றின், 'கங்கைநதிப்பண்பாடும் பருத்ததனப்பெண்டிரும்' என்ற அவலப்பெருங்கவிதையை இரண்டரைப்பக்கங்களுக்கு ஆங்கிலமூடான மொழி பெயர்ப்பிலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்து இறுதியில், அரைப்பக்கத்துக்கு அவரின் வைப்பாட்டிகளின் பெயர்களையும் அவர்தம் தேசிய அடையாளங்களையும் எந்தெந்தக் கவிதை எழுத எந்தெந்த வைப்பாட்டியின் முலையும் மூக்கும் ஆதர்சமாக அவருக்கு இருந்ததது என்பதையும் பட்டியல் போட்டிருந்தான். கவிதையை முதல்முறையாக அவன் எனக்கு மொழிபெயர்த்துத் தந்தபோது, அரைகுறையாகவே புரிந்ததுபோல இருந்ததால், தெளிவாக மீள ஒருமுறை செதுக்கிச் சீராக்கித் தரும்படி ஆசிரியர் என்ற உரிமையுடன் கூறினேன்; அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி; ஒரு படைப்பாளிக்கு உப்புச்சப்பற்ற 'ஆஹா! இதுதாண்டா இயற்கவிதை!' பாராட்டிலும்விட, இப்படியான
முகத்துதியற்ற உண்மையான திறனாய்வே அவசியம் என்று சொல்லிவிட்டு வாங்கிக் கொண்டவன், 'சுபசு,' உறுதிபண்ணப்பட்ட அஞ்சலிலே கொழும்புக்கு அச்சுக்கு போகிறதுக்கு முதல்நாள் காலையிலேதான் திருத்திய கவிதையை எனக்குத் தந்தான்; அந்தத்தமிழ்க்கவிச்சிறகினை ஆங்கில வழிமூலங்கூட இல்லாது, நேரடியாக ஸ்பனிஷிற்கு மொழி பெயர்த்து, மூலக்கவிதையாக்கியவரின் புதைகுழியைத் தோண்டி உளுத்துப்போகாமலிருக்கும் எலும்புலுப்பியெழுப்பி, உயிர்கொடுத்து, அவரின் அபிப்பிராயம்கேட்டால், அவர் என்ன செய்யக்கூடும் என்பதை -இப்போதும் நான் எனக்குள்ளே அடிக்கடி- தமிழ்க்கவிதைகள் என்ற பெயரிலே வருகின்றவற்றைப் பார்க்கும்போது கேட்டுக் கொள்வதுண்டு; அப்படியாக என்னுள்ளே ஆழமாகப் பதிந்துபோன ஒருபடைப்பு, தமிழ்க்கரைக்கட்டுடைப்பு, அந்த மொழிபெயர்ப்பு)
அவனுடைய தாமிரபரணிக்கரையோர நண்பர் ஒருவர், 'யோனியின் கிழிவும் தமிழ்மொழியின் நேர்கோட்டுவழியும்' என்ற தலைப்பின்கீழ், "அசலான அநேர்கோட்டுப்படைப்புகள், அ. ராசசேகரத்தினுடையதேயழிய, 'அரைக்காற்சட்டையும் ஆறுபாகையும்' எழுத்தாளர் உடையதல்லவேயல்ல" என்று ஆறேழு வட்டதன்மைவாய்ந்த உசாத்துணை நூற்கண்டுடனான சத்தியப்படுத்தும் கட்டுரையைத் தந்திருந்தார். "அநேர்கோட்டுத்தன்மையற்றுப்போனதற்கு, கிடைத்த தரவுகளிற் தெளிவின்மையா, அல்லது சரியான நேர்கோட்டுமாதிரிக்கான குணகங்களைத் துணிய முடியவில்லையா?" என்ற கேள்விகளை எழுப்புவது என் தத்துவவறுமையைச் சுட்டிக்காட்டி, இலக்கியவாழ்விலே இதழாசிரியனாக இருக்கும் காலத்தினைக் குறுக்கும் என்பதால், நான் அதையிட்டேதும் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை.
கடைசியாக, சுந்தரகுமாரின் மச்சானும் முன்னைய முன்னிலைப்போராளியுமான 'அம்ஸ்ரடாம்' ஈழத்துநெருப்பெறி ஈ, 'குருதிக்குட் கொப்புளித்து ...... சிரட்டைக்குட் சங்கூதி.... விழி விரியப்பாய்ந்தது விடுதலை' என்ற சொற்றொடர்களை உள்ளடக்கிய ஒரு கவிதை பின்னி, கவிதையின் கீழே அது வாசிக்கப்படும் தமிழ்ப்பரப்பை முன்னிறுத்தி, சிரட்டைக்கும் சில்லெடுப்புக்கும் வட்டாரவழக்கு அர்த்தம் கொடுத்திருந்தார். அதற்கண்மையிற்றான், தமிழகச்சிற்றிலக்கியக்கவித்திறனாய்வுக்கொக்கொன்று, அக்கவியை, "அற்புதம்" என்று 'அக்மார்க்' முத்திரை தந்ததாகவும் அடைப்புக்குறிக்குள் குறிப்பொன்று போடும்படி என் கௌரவ ஆலோசகர் 'இலக்கம் ஒன்று' சொன்னார். தமிழகக்கவிவிமர்சனவிக்கிரங்களின் காமாலைக்கண்களுக்கு, எந்தப்புல்லுக்கட்டு ஈழத்து ஒப்பாரியும் கவிதையாகத்தான் தெரியும் என்பதை இதழாசிரியன் நானே அடிக்குறிப்புக்கும் கீழே 'subscript' குறிப்பாக வலியுறுத்துவது பத்திரிகாதர்மமில்லை என்று வேறு எனது ஆலோசகர்கள் அடித்தே சொல்லிவிட்டார்கள். "சாடிக்கு மூடியும் அ. மார்க்ஸ¤க்கு வளர்மதியும் செயப்பிரகாசத்துக்கு சிவத்தம்பியும் தஞ்சை பிரகாஷ¤க்கு வெங்கட்சுவாமிநாதனும் கோணங்கிக்கு ராமகிருஷ்ணனும் சூத்ரதாரிக்கு ஜெயமோகனும் சுந்தரராமசாமிக்கு மனுஷ்யபுத்ரனும் வில்வரத்தினத்துக்கு மு. பொன்னம்பலமும் கி. ராஜநாரயணனுக்கு ரமேஷ்-பிரேமும் வேலிக்கு ஓணானும் சாருநிவேதிதாவுக்கு சாருநிவேதிதாவும் பிரேதா-பிரேதருக்கு பாண்டிச்சேரி அரசாங்க வைத்தியசாலை அனாதைப்பிரேதமுமே எழுத்துவழக்குமுறைப்படி இலக்கிய எழுத்துத்திறனாய்வு பண்ணலாம், மற்றவர் பண்ண உரிமையில்லையென்றுதான் விதியிருக்க எப்படி என் மச்சானுக்கு நீ விமர்சனம் பண்ணலாம்?" என்று ஒருமுறை கிட்டத்தட்ட அரைவெறியில் சுந்தரகுமார் எனக்கு அடிக்கவே வந்துவிட்டான். ஆக, இ·து எப்போதோ முடிந்த காரியம்; இனி நான் ஒன்றும் செய்யமுடியாது என்று பத்திரிகையிலே அந்தக் கவிதையை ஆலோசகர் தந்த ஆசிரியர் குறிப்புடன் விட்டேன்.
பத்மராசனின் தமிழகத்தணிக்கைத்துறைக் கத்திரிக்கோல் நண்பரின் மெய்யாலாகாத கையாலாகாத்தனத்தின் வெளிப்பீற்றாக எங்களுக்கு எழுதித்தந்த 'காதலன்' திரைப்படம் பற்றிய கட்டுரைத்தனத்தை முன்னரே சொல்லியிருந்தேன். பத்மராசரின் சொந்தக் கருத்தை உள்ளடக்கிய, "தெருக்கூத்தும் வீதிநாடகமும்: ஒன்றானவையா? ஒப்பானவையா? வேறானவையா? வீச்சானவையா?" என்ற நாடக ஒப்பியலிலக்கணக் கட்டுரைத்தலைப்பை ஒரு மாதிரி காலைக்கையைப் பிடித்து, இரண்டு மூன்று வரள் பியர் கோழிப்பொரியல் வாங்கிக் கொடுத்து, 'நாட்டுக்கூத்து, தெருக்கூத்து: ஒரு சமாந்திரப்பார்வை' என்று சுருக்கமுடிந்தாலும், 'கூறியது கூறல்' தவிர்த்து கட்டுரையின் 'பார்த்திபன் கனவு பட' நீளத்தை வெட்ட என்னால் முடியவில்லை. முன்னமே நாட்டுக்கூத்தில் எகிறிக்குதித்து தரையிற் பாதம் தட்டும் இலயத்தின் இலாவகம் பற்றி நான் கேட்டிருந்த வினாக்கள் என் நாடகவிலாசவெளியை மத்தளம்தட்டிக் கொட்டியிருப்பதாக அவன் குறைகூறிக் கொண்டிருந்ததும் இதற்கொரு காரணம். கௌரவ ஆலோசகர்களின் நன்மதிப்பிலிருந்து இறங்குதல் ஆசிரியர்கட்கு அழகல்ல என்பதை அறியாத நான் தமிழிதலாசிரியனாகக் குப்பை கொட்ட மட்டுமல்ல, குறைந்தபட்சம் தூசிகூடத் தட்டமுடியாது என்பதை அறியும் அளவுக்கேனும் என் முன்னைய கையெழுத்துப்பிரதி இதழியல் அனுபவம் கைகொடுத்திருந்தது.
கடைசியாக, அட்டைப்படமோ அல்லது அதற்கான ஓவியமோ ஆக்கும் பொறுப்பு, மூன்று பேர்களிலும் ஒழுங்கான கையெழுத்துள்ள காரணத்தில் என்னிடத்திலே வந்தது என் தலையெழுத்து என்றுதான் சொல்லுவேன். புதுமையாக, 'தொழில்நுட்ப-பதிவியலில்' (Techno-impressionism) தமிழ்ப்புத்தோவியங்களுக்கு ஒரு சிலிர் சிற்றோடையாகவேனும் இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன், வேலை நேரத்தில் இணையத்திலேயிருந்து இறக்கிய, முலைதெரியும் மார்பகங்கள், மகரந்தம் உதிர்ந்த மலர்கள், ஈழத்து அகதிக்குழந்தையின் முகம், மாட்டுவண்டிலும் நீர்வேலிவாழைக்குலையும், எங்கல்ஸின் படம் எல்லாவற்றையும் ஒரே குதம்பலாக, 'புகைப்படச்சீராக்கி' ஒன்றிலே கணணியிலே தாறுக்கும் மாறுக்கும் ஒன்றுக்குமேல் இன்னொன்றென்று போட்டு, வந்தபடவுருவின் ஒரு பாதியை எதிர்வண்ணத்திலே மாற்றி, மீதியை முப்பது பாகைக்குள்ளாற் சுற்றி, பின் விகாரப்படுத்தி, "ஆழ்கனவில் என் உலகம்" என்ற தலைப்போடு போட்டது நானேதான். இந்தப்படைப்பை, பிற்காலத்தில், தமிழ் நவீன ஓவியத்திறனாய்வாளக்குஞ்சுகளிலே பாதி, குப்பை என்றும் மீதி கோமேதம் என்றும் பார்த்த பார்வைகள் கட்டுரைகளாக்கப்பட்டதை இங்கே நான் சொல்லித்தான் ஆகவேண்டும்; எங்கேயோ கோவில்யானை காலால் வரைவதே ஓவியமாகினால், நானேன் கையால் வரையக்கூடாது என்று இப்போதும் எனக்குத் தோன்றத்தான் செய்கின்றதால், தமிழ்ச்சூழலிலே நவீன ஓவியத்தின் பெருமையை சிதைத்த குற்றவுணர்வு ஏதும் இற்றைவரை தோன்றவில்லை; மாறாக, அதை வளர்த்த பெருமிதம் அவ்வப்போது என்னுள் ஒரிசாச் சூறாவளியாய் எகிறுவதுண்டு.
இத்தகைய அங்க(த)ங்களுடன் ஒரு மாதிரி கொழும்பிலே சஞ்சிகை அடிக்க மூலப்பொருளை அனுப்பியபிறகு, ஹொங்ஹொங்கிலிருந்து கொழும்பு போய்த் திரும்பிவரும் விமானச் செலவுக்கும் மேலான தொகைக்குத் தொலைபேசி செய்து பேசி (பத்திரிகை முன்னனுபவம் உள்ளவர்கள் இதை, 'முழந்தாளிட்டு இறைஞ்சி/கெஞ்சி' என்பதாக வாசித்துக்கொள்ளவும்), மூன்றுதரம் வெளியீட்டுத் திகதியைப் பிற்போட்ட பிறகு, ஒரு ஹொங்ஹொங் பெண்சூறாவளி, 'டெய்ஸி' அடிக்கிற நாளுக்கு முதல்நாள் கையிலே புத்தகக்கட்டு கிடைத்தது.
எதிர்பார்த்தபடி அமைந்திருந்ததா என்பது ஒருபுறமிருக்கட்டும். அதன்பிறகு, எழுந்த வாதப்பிரதிவாதங்கள் முக்கியமானவைதான் என்றாலும், அவையும் மறுபுறமிருக்கட்டும். அவற்றினை விட முக்கியமானவை இரண்டு விடயங்கள்:
1. அதுதான் 'சுபசு' இன் இறுதி வெளிவருகை
2. இந்த ஆண்டு தை, மேற்படி இருவரும் தாம் கௌரவ ஆலோசகர்களாக இருக்கப்போகும் 'தபசு' என்ற தகுதரத்தமிழ் இணைய மாதாந்திரி ஒன்றிற்கு, ஆசிரியராக என்னை இருக்கவேண்டி, வருந்தி மின் அஞ்சலிலும் தொலைபேசியிலும் அழைத்த -தற்போது 'தரணி மார்க்கூஸ்' எனத் தமிழ் இலக்கிய வட்டத்திலே அறியப்படும்- சுந்தரகுமாருக்கு நான் இன்னும் பதில் போடவில்லை; இணை-ஆலோசகர் பதவிகேட்டுக்கூடப் பதில் போடப்போவதுமில்லை.
தொடங்கிய அடுத்தமாதமே சுரத்துப்போய் எழுத்து நமத்துப்போம் இலக்கிய உலகத்துக்குச் சுகுணன் செல்லத்துரை இன்னும் சரியாகப் பழக்கப்படவில்லை என்றே படுகின்றது. மச்சான்மார் கவிதையையும் கட்சிக்காரன் கதையையும் விடுதிக்காரன் விளம்பரத்தையும் தொண்டரடிப்பொடிகளின் விண்டுகண்ட கலைத்திறனாய்வுகளையும் போட்டுக்கொண்டிருக்கிறதிலும்விட, 'சுபசு'வை நான் முதல் வெளியீட்டோடேயே முற்றுத்தரித்து நிற்பாட்டியதனால், தமிழ் இலக்கியத்துக்குத் தனிச் சேவை செய்திருக்கிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியும் பெருமையும் வெகுவாகவே உண்டு என்பதை இன்றைக்கும் அவர்கள் இருவருக்கும் பியர் வெறி தலைக்கேறின காலங்களிலும் நான் சொல்லவில்லை.
ஏப்ரில் 4, '00 செவ்வாய்
1 பினà¯à®©à¯à®¤à¯:
யாருடைய இரத்தம் பாலாகும்?" என்று நான் வழக்கமான குதர்க்கத்திலே கேட்டது, தோழமை வெறிக்குட்டிகளுக்குக் காதுகளிலே விழவில்லை.
மிகவும் இரசித்துப் படித்துச் சிரித்தேன்.
Post a Comment
<< Home