அநேகமாக மரணக்கூண்டுக்குறிப்புக்கள்
<தொகுப்பாளனின் முற்குறிப்பு:
கீழுள்ள எழுத்துக்கள் எனது நண்பன் ஒருவன், சிறைச்சாலை காவலாளியாகப் பணி புரியும் தனது ஒரு நண்பன், ஒரு கைதியின் அறையிலிருந்து எடுத்துக்கொண்டதாகக் கூறி என்னிடம் தரப்பட்ட கசங்கிய துண்டுக்காகிதங்களில் இருந்து, அவற்றில் குறிப்பிடப்பட்ட நாட்களின் ஒழுங்குளை அடிப்படையாக வைத்து நான் தொகுக்க முயன்றவை. திகதி இடப்படாத காகிதங்களை ஊகங்களையும் உள்ளுணர்வினையும் அடிப்படையாகக் கொண்டு அவை பொருந்தக்கூடிய இடங்களில் சேர்க்க முயன்றுள்ளேன். வாசிப்பதனை இலகுபடுத்துமுகமாக அமைப்பற்ற திகதிகளினைத் தருவதினைத் தவிர்த்துள்ளேன். அடைப்புக்குறிகளுக்குட் காணப்படுகின்றவை எனது விளக்கக்குறிப்புகளாகும்.>
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
<தினப்படி முதலிடத்தில் இருக்கக்கூடிய குறிப்புகள் முற்றிலும் கிட்டவில்லை>
"............... புரட்சிக்காரக்காரக் கணவனைக் கூடி, ஒரு போராட்டக்காரி குழந்தையினைப் பெற்றுக் கொண்டிருக்கவேண்டுமா என்று இப்போது என்னையே நான் கேள்வி கேட்டுக்கொள்வதில் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை.சந்தர்ப்ப சூழ்நிலை மட்டுமே நான் என்மட்டில் சரியெனக் கருதிக்கொண்டவற்றிக்காக என்னைச் செயற்படவைத்திருக்கின்றதாக எனக்கு இப்போதைக்குப் படுகின்றது. நான் நெறியென எண்ணிக்கொண்டதற்கு உதவி புரிதல் என்ற அளவில் என் செய்கை அந்தக் குறித்த கணத்தில் இத்தகைய விதத்தில் உதவியிருக்காமல் இருந்திருந்தால், இறப்புக்காகக் காத்திருக்கும் இந்நேரத்தில், என் உயிர்வாழ்தலுக்காக நான் விழைதலிலும்விட, மேலும் வருந்திருக்கக்கூடும். ஆனாலும், என் விருப்பின் நிமித்தம் ஒரு குழந்தையினைப் பெற்றுக்கொண்ட நிலையில் என் செய்கைகளுக்கு, என் நெறிகளின் அளவில் மட்டுமே தனிப்பட்ட அளவிலே தீர்மானங்களை எடுக்கும்நிலை இருக்கின்றதா என்று என்னால் இப்போது சொல்லமுடியவில்லை.
<இதன்பின் இதே பக்கத்தில் எழுதியவை அடித்து வெட்டப்பட்டிருக்கின்றன; இது எழுதியவரினாலேயே செய்யப்பட்டதா என்பதை உறுதி செய்து கொள்ளமுடியாதிருக்கும் வண்ணம் பயன்படுத்தியிருக்கும் எழுதுகோல் மையின் நிறம் வேறாக இருக்கின்றது.>
"தினசரி நிகழ்வுகளினைப் பதிவு செய்வதில் ஏதும் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை; குறைந்தபட்சம் நான் ஒரு பூசிக்கோ, அனி பிராங்கோ அல்ல; ஆனால், நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் நேரத்தில், என்னை என் நம்பிக்கைகளை மறுபரிசீலனை பண்ணிக்கொள்ள இந்தக்குறிப்புகள் ஓர் ஒழுங்கான பதிவுகளாக இருக்கமுடியும் என்று நம்புகின்றேன்.
எனது எழுத்துக்களுக்கு நானே பகலிலே படைப்பாளியாகவும் மாலையிலே வாசகனாகவும் இரவிலே விமர்சகனாகவும் இருப்பது மிகவும் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கின்றது..... இறந்த காகத்தை மறுகாகங்கள் கொத்தி உண்பதைப் போலக்கூட சில நேரங்களில். சிறைக்கம்பியின்பின்னால் அடைப்பட்டு, பலகணிக்கம்பிக்கூடாக வெளிக்கிடந்த கூனல்நிலவூடாகத் தான் வாழ்ந்திருந்த கோணல் உலகைப் பார்த்த லூஸ¤னின் பண்ணைச்சமூகத்து சீனத்துவிபச்சாரப்பெண்ணைப்போலக்கூட வெளியின் மாசுள்ள வளியைச் சுவாசித்து, தொட்டுணரமுடியாத நிலையில் நாட்கள் இருட்டுப் பொந்து எலிகளுடன் ஒளித்துப்பிடித்து விளையாடிகொண்டிருக்கின்றன. ஓர் அரசியற்கைதி கொலைகாரி ஆகவும் இருந்து, அரசியலமைப்புச்சூழல் அவளுக்கு எதிராக இருக்கும் காலப்புள்ளியில், அவள் வெறும் கொலைகாரியாக மட்டுமே அவமானத்தினைச் சுமந்துகொண்டு இறப்பினைக் காத்திருக்கவேண்டி இருக்கின்றது. அவள் இறப்பின் பின்னே, எந்த அளவுக்கு அவளைச் சார்ந்த மக்களும் இயக்கமும் காலத்தின் நம்பிக்கைகளுக்கும் நிதர்சனங்களுக்குமிடையில் அவளை நினைவில் வைத்திருக்கக்கூடும் என்ற கேள்வி அடிக்கடி என்னுள்ளே எழுந்துகொண்டிருக்கின்றது. தன்னலமற்று, நம்பிக்கை கொண்ட கொள்கையின் நிமித்தம் தன்னைச் சார்ந்தவர்களின் துயருக்குப் பாத்திரவாளி என்று கருதப்படும் ஒருவனைக் கொல்வதில் நியாயத்தைக் கண்ட ஒருத்திக்கு, தன்னை தனதுமக்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று எண்ணி அவாக் கொள்வது, இறப்பின் விளிம்பில் தன்னை மட்டும் தியாகியாக அடையாளப்படுத்திக் கொள்ளும் விளைவோ என்ற வெட்க உணர்வுகூட என்னுள் எழுகின்றது. ஆனால், .......
<தொடர்ச்சி எழுதப்பட்ட காகிதம் காணக்கிடைக்கவில்லை.>
"இன்று காலையில், என் உயிருக்காக, என் சார்பிலே கருணைமனு தாக்குதல் செய்யப்போவதாக என் சட்டத்தரணி கூறுகின்றார். அது எந்த அளவுக்கு, ஒரு விரோதமான - சட்டத்தையும் தன் சட்டைப்பையிலே போட்டுக்கொண்ட - ஓர் அரசியற்சூழலிற் சாத்தியமாகும் என்பது ஒருபுறமிருக்க, எந்த உயரத்துக்கு இது என்னாலேயே செரிக்கப்பட்டுக்கொள்ள முடியும் என்பதைப் பற்றி என்னால் எதையும் நிச்சயம் கூறமுடியவில்லை. கருணைமனு நிராகரிக்கப்படும்நிலையிலும் ஏற்றுக்கொள்ளப்படும் நிலையிலும், எந்தவகையிலேயுமேகூட எவரின் அநாகரிகமான அராஜகத்துக்கெதிராக எம் செயற்பாடுகள் இருந்தனவோ அவர்களிடமே எமது செய்கை தவறுவோ என்று தப்பான அர்த்தம் தொனிக்கும்விதத்தில் உயிரை யாசித்துக் கொள்ளும் அவமான உணர்வுமட்டுமே மிச்சமாகி உள்ளது. மற்றைய தோழர்களில் சிலர், தம் உயிரின் நிமித்தம் குழப்பமுற்று இருப்பதை என்னால் உணரக்கூடியதாக உள்ளது; எனக்கும்கூட என் குழந்தையின் நிமித்தம் நான் வாழமாட்டேனா என்ற உணர்வு ஓரொரு சமயம் மேலோங்காமல் இல்லை. ஆனாலும், யாசித்தல் என்பது, அடக்கப்பட்ட எனது மக்களின் போராட்டகுணம் என்பதற்கு முரண்பட்டதும் அவர்களிடம் அவர்களுக்கென்று மிஞ்சிக்கிடக்கும் தன்மான உணர்விலே நெருப்புக்கங்குகளை மட்டும் இடுகின்ற கேவலமான செயல் என்றும் படுகின்றது. நான் கருணை யாசிப்பதற்கு மறுத்தபோதிலும், எனது தனிப்பட்ட அளவினாலான மறுப்பு, மற்றைய உயிர்ப்பிச்சை யாசிக்கும் தோழர்களின் தப்பிக்கும் வாய்ப்பையும் இழக்கவைக்கும் அளவுக்கு பிச்சையிடுவோரின் தன்முனைப்பினைப் பாதிக்கக்கூடும் என்று சட்டத்தரணி கூறுகின்றார். இன்னமும் ஒரு வாரகால அவகாசம், இந்த விடயத்தில் எனக்குத் தீர்மானம் எடுக்க அவர் எனக்குக் கொடுத்திருக்கின்றார்."
"ஒருவாரமாக எதையுமே எழுதவில்லை; மனம் சோர்ந்து காணப்படுகின்றது; ஓர் மனிதனின் உயிரை எடுப்பதற்கு இன்னொரு மனிதனுக்கு எந்த அளவு அங்கீகாரம் உள்ளது என்பதை எனது செயற்பாடுகள், ஒரு கொடுமையான பண்ணையாரின் உயிர் இழப்பு என்பவற்றின் உள்ளிருந்து பார்க்காமல், வெளியே இருந்து வேறொருமனிதனாகப் பார்க்க முயன்று கொண்டிருக்கின்றேன். தான் உணர்வளவிலும் அறிவளவிலும் சம்பந்தப்பட்ட ஒன்றை விலத்திக்கொண்டு, ஒரு கருத்தினை ஆராய்தலென்பது, மிகவும் கடினமாக விடயமாகவே இருக்கின்றது. எந்தவகையிற் பார்த்தாலும், பண்ணையாரினதும் அவன் அடியாள்களினதும் கொடூரமும் எரிந்த எமது வயல்களும்
உரிந்து கிழிந்த விவசாயப்பெண்களின் யோனிகளுமே ஞாபகத்தில் வந்து, மூன்றாம் பெண்ணாக நின்று கருத்தினைப் பார்க்காமல், என்னை உணர்வின் அனற்படுக்கை உள்ளே விழுத்திவிடுகின்றது. அத்தகைய சந்தர்ப்பங்களில், இயந்திர வகைப்படாத மனிதன் என்பதை உணர்வினை விலத்தி வைத்து வெறும் கருத்தினை மட்டும் முன்னே வைத்து ஒரு செய்கையினை ஆயவேண்டி எதுவித காரணமும் இல்லை என்றே என்னால் ஒரு முடிபுக்கு வரமுடிகின்றது. எனக்கும் என் தோழர்களுக்கும் எதிரான வழக்கில், அரசதரப்புச்சட்டத்தரணியின் வாதம், பண்ணையாரினது தனிக்க விடப்பட்ட விதவையின்மீதும் குழந்தைகளின்மீதும் ஊற்றப்பட்ட கழிவிரக்கத்தைக் கொண்டு கட்டப்பட்ட நியாமாக மட்டுமே இருந்தது. ஒரு இளம் விதவைப்பெண்ணின் உணர்வுகள் புரியாதவள் ஒருத்தியாக நான் இருந்திருப்பின், நான் கொலையைப் புரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதைச் சொன்னால், அதிலே தொனிக்கும் நியாயத்தைப் புரிந்து கொள்ளக்கூடிய தளத்திலே எவரும் நீதிமன்றத்திலோ, நீதி என்று சொல்லப்படுவதை நியாயப்படுத்து எழுதிய சமூகத்திலோ இருக்கமுடியாது என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும் என்பதால், நான் அதைப் பேசவில்லை. இந்தப்பண்ணைத்துவ அரசும் அதன் தரவாளர்களும் தவிர்ந்த எதுவுமே உயிரைப் பலியெடுக்க அனுமதி இல்லை என்ற நம்பிக்கையைக் கொட்டிப் பின் காதிலே ஈயத்தினை ஊற்றிக்கொண்ட சமூகத்தின் சட்டத்தின் மத்தியில் எமது நடப்பின் நியாயத்தினை விளக்கிச்சொல்வதென்பது...
<இதன்பிற்பட்ட கிட்டத்தட்ட இரு வாரங்களுக்குரிய எழுத்துக்கள் ஏதும் காணக்கிடைக்கவில்லை>
"இன்று கருணை மனுவுக்குத் தாக்குதல் என் பேரிலேயும் செய்ததாக என் சட்டத்தரணி கூறினார்; உயிர் நிலைக்கக்கூடும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை, நிலைக்க வேண்டும் என்பதிலேயும் அத்துணை ஆசை இல்லை என்பதைப் போலவே. குழந்தையின் அண்மைய படமொன்றினை என் கைக்குக் கிட்ட சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதி அளித்தனர். குழந்தை வளர்ந்திருக்கின்றாள்; இன்று கருணை மனுவிற்கு எந்த விளைவு ஏற்படும் என்பதைவிட, இன்னும் ஒரு பதினைந்து வருடங்களில் என் மகள் தன் தாயைப் பற்றி என்ன நினைக்கக்கூடும் என்பதே என் கேள்விகளாக இருந்துகொண்டிருக்கின்றன. என்னை வெறுமனே ஒரு கொலைகாரியாக மட்டும் அவளுக்கு இந்தச்சமூகம் அறியத் தரக்கூடுமா? அல்லது, எதிரிகளிடமே உயிரினை யாசித்த கோழைத்தனமான துரோகியாக அவள் என்னை அறியக்கூடுமா? அவளின் பிறப்புக்கு முந்திய என் நம்பிக்கைகளும் அவற்றினைத் தொடர்ந்த நடத்தைகளும், அவளின் சாதாரண வாழ்க்கையையும் அசாதாரணப்படுத்திவிடக்கூடுமா? அவளுக்கும் அவள் தாயினைப் போலவே, அதே நம்பிக்கைகளும் அவற்றின் விளைவு நடத்தைகளும் ஏற்படும் நிலைமையிலேயே கட்டுக்குலையாமல் அவர்களுக்கான அவர்களின் நீதி நிறுத்தப்பட்டிருக்குமா?எனக்குத் தெரியவில்லை; தனக்குரிய காலத்தில், தன்னால் தன்னைச் சுற்றி எதையும் மாற்றமுடியாதவள், இனி பின்னெப்போதோ வரும் காலத்தில், எந்த விதத்தில் எது நிகழக்கூடும் என்று சொல்ல அருகதை அற்றவள் என்றே நினைக்கின்றேன். ஆனால், எந்த நிலைமையாக இருப்பினும், சொந்தக்குழந்தையினால், தவறாகப் புரிந்து கொள்ளப்படும் நிலைமையில் தம்மைத் தெளிவாக அந்தக்குழந்தைக்கு உணர்த்த முடியாத நிலையில் அகன்று போகவேண்டிய நிலையில் இருக்கும் பெற்றோர் மிகவும் துர்ப்பாக்கியசாலிகள்..... கொலைகாரர்கள் என்றாகியிருந்தபோதும்."
"இது அநேகமாக எனக்கே நான் எழுதிக்கொண்ட என் இறுதிக்குறிப்பாக இருக்கலாம்; திரும்பிப் பார்த்ததில், பலரின் இழப்புக்களுக்கும் வேதனைக்கும் காரணமான ஒரு கொடூரமானவனைக் கொன்றதற்காக நான் வருந்தவில்லை; ஆனாலும், ஒரு தனிமனிதனை அற்றுப்போகச்செய்தல் மட்டும் அவனின் கருத்தினைப் பிரதிபலிக்கும் ஒரு சமூகத்தின் தொனியிலோ சிந்தனையிலோ ஏதேனும் மாற்றத்தினை ஏற்படுத்தியிருக்கக்கூடுமா என்பது எனக்கு இன்றைக்கு ஒரு கேள்வியாக இன்னமும் இருக்கின்றது. அந்தக்கொலை காலங்காலமாக அழுத்தப்பட்ட எனது மக்களின் ஈடேற்றத்துக்கு ஏதும் நேரான விளைவினை ஏற்படுத்தியிருக்கின்றதா என்பதுவும் நான் அறிய வாய்ப்பில்லாத எனக்கேயான இன்னொரு கேள்வி. கருணை மனு நிராகரிக்கப்பட்டதில், எனக்கு ஒருவகையில் மிகவும் நிம்மதியும் மகிழ்ச்சியும் கூட. அநாகரீகர்கள், அநாகரீகமான அராஜத்தன்மையையே என்றும் தாங்கள் சொல்லிக்கொள்ளூம் சத்தியத்தின்பேரில் வெளியிடத் தயங்குவதில்லை என்பதை இன்னொருமுறை உணர்த்தியிருக்கிறார்கள் என்பதை எனது மக்கள் புரிந்துகொள்ள இது உதவக்கூடும். எனினும், இந்தக்கணத்தில், ஒரு துளிவருத்தம்; அவர்களிடம் என் மீது கருணைக்கு எக்காரணம் கொண்டும் நான் யாசித்திருக்கக்கூடாது - குறைந்த பட்சம் என் சின்னமகளின் கௌரவத்திற்காகவேனும். ஆனால், என்னால் எதுவும் செய்வதற்கில்லை; இத்தனை காலம் பழகிய எனது தோழர்களின் உயிர்கள், நாட்கணக்கில்மட்டும் நான் தொட்டுணர்ந்த எனது மகளின் கௌரவத்திலும்விட எனக்கு மேலானது. இறந்துபோனபின்னர், ஒரு கொலையைச் செய்ததற்கான நியாயப்படுத்தலில் வைத்திருக்கும் நம்பிக்கையைப்போலவே தனக்காக வேண்டாமலேனும்கூட தன் உயிருக்காக யாசித்ததுக்கான வெட்கக்கேடும் எனக்கு அர்த்தமற்ற ஒன்று. வாழும்போது நான் வெறும் சடம் அல்ல என்று உணர்த்துவது மட்டுமே அவசியம் நிறைந்தது என நினைக்கின்றேன்; இறந்தபின்னர், என் சடலத்துக்கு எந்தவிதமான சடங்கு எவரால் பண்ணப்படுகின்றது என்பது எனக்கு அந்நியமானது. நாளை நான் என்பது இல்லை என்று அகன்ற பின்னர், இந்தக்குறிப்புகள் என்னவாகும் என்பது எனக்குத் தெரியப்போவதில்லை; தெரிவதிலும் ஏதும் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை."
<மற்றைய குறிப்புத்துண்டுகள் போலவே இந்த இறுதித்துண்டும் அந்தரத்திலே தொங்கி
நிற்கின்றது>
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
<தொகுப்பாளனின் அடிக்குறிப்பு:
இவை உண்மையிலேயே ஒரு மரணதண்டனை பெற்ற ஓரு புரட்சிக்காரியின் நாட்குறிப்புக்கள்தானா என்பது பற்றி எனக்கு எதுவுமே நிச்சயமாகத் தெரியாது. இவை பின்னிணைக்கப்பட்ட அனி பிராங்கின் குறிப்புகள்போல, பேசப்பட்ட ஹிட்லரின் நாட்குறிப்புகள்போல பொய்யாகக்கூட இருக்கலாம்; ஆனால், இந்த எழுத்துக்களூடாகப் பேசப்படும் தொனியில் அதீத உணர்வு மயப்பட்ட போதும், ஒரு நெகிழ்வூட்டும் நேர்மை இருக்கின்றதை என்னால் உணர்ந்துகொள்ளமுடிகின்றது. அந்த நிலையில், நாங்கள் அறியாத பெண்ணொருத்தியின் இந்தக் குறிப்புக்கள் எந்த விதத்தில் எனக்குப் பயன்படும் என்று என் நண்பனையும் அவனின் நண்பனையும் போலவே எனக்கும் புரியவில்லை. ஆயினும், குறைந்தபட்சம், நல்லெண்ணத்துடன் செய்யப்படும் எந்த ஒரு செய்கைக்கும் ஒரு நல்ல விளைவு இருக்கின்றது, இருக்கவேண்டும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. இந்த அளவில், இதை இங்கே தொகுத்து வெளியிடுவது, குறைந்தபட்சம், அந்தப்பெண்ணின் மகளுக்கேனும் என்றாவது ஒருநாள் அவளின் தாயின்சார்பாக அவள் குரலை, கருத்தினைக் காலம் கடந்து பேசக்கூடும் என்ற அளவிலே இங்கே சேமித்துவைக்கின்றேன். மிகுதிப்படி, புரிதல்கள், புனிதநூல்களைப்போல, பேசப்படுகின்றவர்களுக்கும் கேட்பவர்களூக்கும் பேசப்படும்பொருட்களுக்கும் இடையிலேயான காலத்தை மேவிய சங்கதி என்று நினைக்கின்றேன்.>
11/11/99
0 பினà¯à®©à¯à®¤à¯:
Post a Comment
<< Home