Friday, February 11, 2005

அடுக்கு

நான் கட்டுரை எழுதுகிறது ஒன்றுக்காக வாசித்துக்கொண்டிருந்தேன். ஏதோ காலிலே ஊர்ந்தது. உதறி, மற்றக்கால் பெருவிரலினாலே தேய்த்தபிறகும் அதே இடத்திலே ஊர்ந்தது. குனிந்து பார்க்க அது சிரித்தது. "குஞ்சு, என்னம்மா செய்யிறீங்கள்?" கேட்டேன். சிரித்துக்கொண்டு, குடுகுடுவென்று ஓடி தொடர்ந்து அடுக்கத் தொடங்கியது; அதற்கு நான் பார்த்துக்கொண்டிருந்தால்தான் திருப்தி. கட்டுரை நாளொன்று பிந்துவதால் காதை ஒன்றும் வெட்டித்தா என்று கேட்கப்போகாது என்று எண்ணத்தோன்றியது.

முதலிலே பச்சை, பிறகு சிவப்பு, பிறகு கத்தரிப்பூ, பிறகு நீலம், பிறகு மஞ்சள், பிறகு வெள்ளை, பிறகு இன்னொரு நிறம், பிறகு பிறிதான நிறம், பிறகு உள்ள பிறகுகளுக்குப் பிறகெல்லாம் கடைசியிலே கறுப்பு. என்று வைத்தது. சிலவற்றை முன்னுக்கும் பின்னுக்குமாக நிறம் மாற்றி வைத்து அடுக்கியது. மாற்றியதையே மறுகணம் முன்னர் இருந்த இடத்திலே வைத்தது. என் முகத்தைப் பார்த்தது. தன் திருத்தங்களுக்கு அங்கீகாரம் தேவை என்று என்னைப் பார்க்கிறது என்று தோன்றியது. மெல்லச்சிரிக்கவோ, தலையையாட்டவோ செய்தேன். முழுக்கட்டைகளையும் நேர்கோட்டிலேதான் வைக்கவேண்டுமென்று அதற்கு எண்ணம் இருக்கிறது பட்டது. அதற்குக் கோணலாகத் தென்பட்ட இடத்திலேயெல்லாம் கடல்மண்¨ணைக் கையாலணைத்துச் கோட்டைக்கு சுவர்கட்டுவதுபோல கூரையாய்க் கூப்பிய உள்ளங்கைநீவலுடன் அங்குமிங்கும் அசைந்தது. அதற்குத் திருப்தி ஏற்பட்ட பின்னரும் சில இடங்களிலே எனக்கு நேர்கோட்டுத்திருப்தி ஏற்படவில்லை. "இங்கை கொஞ்சம் வளைஞ்செல்லோ இருக்கம்மா" என்று அதோடு கூடத் தவழ்ந்து சுட்டிக்காட்டமுயன்றேன். அது முதல்முறை ஓடிப்போய் சுட்டிய இடத்திலே கைக்கூரையை ரொட்டிக்கு தட்டையாய்ப் பசைமா தட்டுவதுபோல மெல்லத்தட்டிச் சரி செய்தது. இரண்டாம்முறை என்னைக் கண்ணிலே கேள்வியோடு பார்த்தது. திரும்ப கட்டைவரிசையைப் பார்த்தேன். அது நேராக இல்லைத்தான். என் நேரும் குழந்தையின் நேரும் வேறுவேறு போல. இந்தப்பக்கத்திலேயிருந்து அந்தப்பக்கத்துப்போய், அதற்குப் பக்கத்திலே இருந்து அதன் பார்வைக்கோணத்து உயரத்துக்கு என்னைக் குறுக்கிக்கொண்டு பார்த்தேன். அப்போதும் கொஞ்சம் கோணலாகத்தான் இருந்தது. சிவப்புக்கட்டையின் பின்புறத்தை பச்சைக்கட்டை இடித்து மறைத்துக்கொண்டு இருப்பதுபோலத் தோன்றியது. அதைக் கொஞ்சம் நேராக்கிச் சரி செய்தேன். இப்போது, அந்த இடம் நேராகி விட்டதுபோல இருந்தது. அது சந்தோசப்படும் என்று சிரித்தபடி முகத்தைப் பார்த்து, கண்ணைச் சிமிட்டினேன். அது சிரித்தது; பிறகு போய் அதே இடத்திலே ஒரு சின்னத்தட்டினைத் தொட்டதுபோல வைத்துவிட்டு வந்தது. கொஞ்சம் கோணலாகிப்போனாலும், பெரிதாக வெளிப்படையாக அந்த வளைவு தெரியவில்லை. குழந்தைகள்!! தான் என்கிறதை குழந்தைகளுக்குக்கூட விட்டுக்கொடுக்கமுடியவில்லை. "என் முடிவுதான் இறுதி" என்னுமாற்போல...

...நேற்றைக்குத்தான் ஏரிக்கரைப்பக்கம் கூட்டிப்போயிருந்ததுபோது, அது முதல்முதலிலே புகையிரதத்தைப் பார்த்தது. ஏரிகூட அதற்குப் பெரிதாகப் படவில்லை. ஆனால், புதையிரதம் ஏரியினைக் கடந்தபடிபோனதைக் கண்டபோது, கையை அதைச் சுட்டி ஆட்டி ஆர்ப்பரித்து தலையை மேலும் கீழும் ஆட்டியபடி தூக்கிவைத்திருந்த கையிலே துள்ளியது. பரந்துவிரிந்திருந்தாலும், நிலைப்பட்ட ஏரியிலும், கண நிமிடங்கள் அதிர்ந்து கடந்துபோன புகையிரதம் அதிலே பாதிப்பினை ஏற்படுத்தியிருக்கின்றதை என்னால் உணர்ந்துகொள்ளமுடிந்தது. ஓரிரு வார்த்தைகளுக்கு மேலே பேசத்தொடங்காத பருவம். இன்றைக்குக் காலை எழுந்ததிலிருந்தே, புகையிரதத்தைப் பற்றி எனக்குச் சொல்ல விரும்பிக்கொண்டது எனக்குத் தெரிந்தது. கட்டும் விளையாட்டுக்கட்டைகளை வைத்துக்கொண்டு புகையிரதம் செய்துகாட்டுகின்றது. இன்றுமாலையும் அதைப் புகையிரதம் கொண்டு போய்க்காட்டலாம்தான். ஆனால், இந்தச்சனியன் குளிர் அதற்கு ஒத்துக்கொள்ளுமா என்று எனக்குள் ஒரு பயம். எனக்கு, என் அப்பாவுக்கு எல்லோருக்கும் ஆஸ்மா இருக்கின்றது. இதுவரைக்கும் எந்தப்பிரச்சனையும் தெரியாவிடினும், இதற்கும் அது பரம்பரையாக வந்துவிடுமோ என்று பயம் இருக்கின்றது. நாளைக்கு வேலையால் வரும்போது, Toys 'r Us இலேயிருந்து ஓரிரு புகையிரப்பொம்மைகள் வாங்கி கொண்டுவந்துவிடவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். வரும்வாரம் காலநிலை இதமாக இருந்தால், ஏரிக்கரைக்கோ வேறேதோ தண்டவாளம் ஓடும் இடத்துக்கோ போய் அதற்குப் புகையிரதம் காட்டிக்கொள்ளலாம். இப்போது, தான் செய்த புகையிரதப்பொம்மைக்கு ஏறக்குறையச் சமாந்திரமாகக் குப்புறப்படுத்தபடி, தன் வயிற்றினால், அரக்கி அரக்கி சமாந்திரமாகவே நகரத்தொடங்கியது. அடக்கமுடியாமல், வாய்விட்டுச்சிரித்தேன். குழந்தைகளும் அவற்றின் சிந்தனைகளும்...... தான் நகர்ந்துகொண்டு தான் சமைத்த சட எந்திரத்துக்கு உயிர்கொடுக்கும் குழந்தைகள். எனது சிரிப்பிலே அது கொஞ்சம் அதிர்ந்து போய் தவறு செய்த வெட்கத்திலோ பயத்திலோ ஓடிவந்து என்னைக் கட்டிக்கொண்டு சிணுங்கியது. என்மீதே எனக்குக் கொஞ்சம் சங்கடமும் ஆத்திரமுமாகிப்போனது. குழந்தையின் ஆக்கபூர்வமான செய்கையை அவமதித்து, அதை மனம் முறியச்செய்துவிட்டோமோ? குழந்தை தன் செய்கைக்கு எதிரான உணர்வினையும் உள்வாங்கக் கற்றுக்கொடுக்கும் செய்கையாகக் கூட எனது இருக்கமுடியாதோ? அங்கும் இங்கும் வாசித்த ஒற்றை இரட்டைப்பக்க உளவியற்கட்டுரைகள் குழப்பத்துக்குரியவை, ஒன்றையன்று எதிர்த்து முறிப்பவை. மேசையிலே இருந்த சிரிக்கும் சீனப்புத்தர் பொம்மையின் வயிற்றினைப் பார்த்து நான் சிரித்துகொண்டதால், என் வாய்க்கு நானே அடித்துக்கொள்ள, குழந்தை தனது பால்வயிற்றினையும் குனிந்து பார்த்து சிரிக்கத்தொடங்கியது. திரும்ப, என்னிலிருந்து நழுவிப்போய், கட்டையிலே புகையிரதத்தின் முன் கட்டையினைப் பின்கட்டைக்குப் பின்னால் வைத்து, அடுத்த கட்டையினை அதற்குப் பின்னால் வைத்து, பெட்டி மாற்றி விளையாடியது. தலைகள், வாற்களாக, இடைப்பெட்டிகளாக புகையிரதம் ஓடத்தொடங்கியது. புகையிரதம் போகப்போக கோணலும் மாணலும் கூடிப்போனது. புகையிரதத்தின் தலைகள் இத்தனை நிறங்களிலே எங்கே குழந்தை கண்டது என்று என்னைக் கேட்டுக்கொண்டேன்.

எனக்குப் பின்னால் இருந்து யாரோ மெதுவாகச் சிரிக்கும் சத்தம்கேட்டுத்திரும்பினேன். "நாளைக்கு முடிக்கவேண்டிய தன்ரை வேலையை விட்டுட்டு மகளின்ரை பாம்பு ஊர்ந்து விளையாட்டுப் பார்த்துக்கொண்டிருக்கிற நல்ல அப்பா" - அவள். "பாம்பு விளையாட்டோ? அவள் நேற்றைக்கு லேக்கடியில பாத்த ரெயினெல்லோ செய்து விளையாடுறாள்." "நீங்கள் ஒண்டு. கொஞ்சமும் மூளையை விட்டு யோசிக்கிற எண்ணமில்லாதாள். நேற்றைக்கு லேக்கடியில சின்னப்பொடியங்கள் துரத்துக்கொண்டோட நீங்கலும் இவளைத்தூக்கிக்கொண்டு அவங்களுக்குப் பின்னால சூரனோடியோடிக் காட்டின சாரைப்பாம்பு, மறந்துபோச்சோ. அங்கை பாருங்கோ, ரெயின் எங்கை இப்பிடி சனம் கியூவில நிக்கிறதுபோல வளைஞ்சு வளைஞ்சு கிடக்கும். ரிவியில பாக்கிறியள்தானே, அக்சிடண்ட் பட்டுச் சரிஞ்சுகிடந்தாலும் இப்படிச் சரிஞ்சு கிடந்து காணேல்லை நான்."

அவள் சொல்கிறது சரியோ என்று பட்டாலும் என் பக்கத்து இயல்பான யோசனைக்கும் ஒரு நியாயம் இருக்கிறது என்று தோன்றியது. நான் குழந்தையைப் பார்த்தேன். குழந்தை கைக்கெட்டியபடி கட்டைகளை எடுத்து வைத்து தன்பாட்டுக்கு வைத்து எவ்வளவு நேரம் விளையாடிக் கொண்டிருந்தது.

" நானாவது மூளையை விட்டு யோசிக்கேல்ல, உனக்கு மூளையே இல்லையெண்டதால், அதுக்கும் வழியில்லை. எங்கையாவது, சாரைப்பாம்பு கலர் கலரா பெட்டி பொருத்தி ஓடுமோ? கலர்கலராக ஓடினாலும், பிறகு கறிக்கு வெட்டின சுறாமீன் போல, தலையையும் வாலையும் மாத்தி மாத்தி வச்சு ஓடுமோ? சாரைப்பாம்பென்றால், அவள் முதலிலை ஒரே கலரில இருக்கிற கட்டையளை வைச்சு அடுக்கிவிட்டு, பிறகு வேற கலர்க்கட்டைகள், அதுக்குப்பிறகு மற்றக்கலர், அப்பிடியெல்லோ வைச்சிருப்பாள்; அது ரெயின்தான்."

"இந்த வயதில குழந்தை கையிலே அம்பிடுற கட்டையைத்தான் தூக்குமேயழிய, நிறம்நிறமாப் பாத்துப்பாத்துத்தூக்காது" என்று மறுத்தாள்.

சிரித்தேன்; "நிறம்நிறமாய்த்தூக்காத குழந்தைக்கு ரெயினும் பாம்பும் வித்தியாசம் தெரிஞ்சு பில்டிங் புளொக்ஸிலே கட்ட மட்டும் தெரியுமாக்கும்."

தெரியும், தெரியாத வாதங்களுக்கெல்லாம், முதற்பிள்ளை வளர்ப்புக்கு கிழடுகட்டைகள் இல்லாத வீட்டுத் தம்பதிகள் பார்க்கும் குழந்தைவளர்ப்புக்கைநூலிலே, குழந்தைக்குப் புகையிரம் கட்டவும் பாம்பு நகர்வது அறியும் உணர்வும் எப்போதும் தெரியவரும், நிறங்களை எப்போது வகை பிரிக்கத் தெரிந்து கொள்ளும் என்று பார்த்து, நாங்கள் கிட்டத்தட்ட ஓர் இருபது நிமிடங்கள் தர்க்கம் செய்து வரவேற்பறைக்கு வந்தபோது, அது கட்டைகளைக் கட்டிப்பிடித்தபடி நித்திரையாகிப் போய் இருந்தது.

மாலை நாங்கள் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தோம். குழந்தைகளுக்கு மிருகங்களின் வாழ்க்கையூடாக மனிதப்பண்புகளையும் வாழ்க்கையினையும் விளக்கமுடியும் என்று எங்கோ வாசித்திருந்ததால், நாங்கள் இந்த Discovery, TLC, PBS அலைவரிசைகளிலே போகும் பொறுமை தின்னும் இயற்கை, வனவிலங்கு நிகழ்ச்சிகளையும் கண்டுகொண்டிருக்கவேண்டும் என்று அவளின் கட்டளை. இடையிலே வனவிலங்குப்புகலரண் ஒன்றிலே வாழும் யானைகளின் வாழ்க்கை நிகழ்வு வந்தது. யானைகள், முன்னாலே பெரிய யானைகள் ஒன்றின் பின்னால் ஒன்று, முன்னே போவதன் வாலை, பின்னால் போவது தும்பிக்கைகளினால் பிடித்தபடி செல்ல, கடைசியிலே குட்டியானையன்று பெரிய யானையின் வாலைத் தும்பிக்கையினால் பிடித்தபடி வாலையாட்டிக் கொண்டு போனது.

குழந்தை ஓடிப்போய், தரையிலே குப்புற தன் வயிற்றிலே அரக்கிக்கொண்டு தனது கட்டைகளுடன் விளையாடத்தொடங்கியது.

'01, April 30

8 பின்னுதை:

Blogger Narain Rajagopalan said...

அழகான பதிவு. மிக யதார்த்தமாக, அதே சமயத்தின் உளவியல் ரீதியாக எழும் சிந்தனைகளின் ஊடாக, அருமையாக இருக்கிறது. கொஞ்சம் விசயங்கள் சேர்த்து ஏதேனும் பத்திரிக்கைக்கு அனுப்புங்கள்.

1:45 PM  
Blogger -/பெயரிலி. said...

/கொஞ்சம் விசயங்கள் சேர்த்து ஏதேனும் பத்திரிக்கைக்கு அனுப்புங்கள்./

அண்ணே ஆளை விடுங்க. பத்திரிகைச்சங்காத்தமே பெயரிலிக்கு வேண்டவே வேண்டாம். ஏதோ நிம்மதியா வலையிலே நெத்தலி தின்று சுறா, திமிங்கலம் வாலைக்கடிச்சு நீந்திக்கொண்டிருக்கிறேன். அந்த நிம்மதி உங்களுக்குப் பிடிக்கவில்லையோ? ;-)

1:50 PM  
Blogger சன்னாசி said...

பெயரிலி,
'புனைவு' பதிவைச் சற்று அகலப்படுத்தமுடியுமா? (increase the width so that it makes an easy read)...ஒருசில வரிகளிலே நாலைந்து வார்த்தைகள் மட்டுமிருப்பதால் படிக்கச் சற்றுச் சிரமமாயிருக்கிறது....

2:41 PM  
Blogger -/பெயரிலி. said...

தமிழ்ப்பாம்பு, அப்படியாகத்தான் நானும் உணர்ந்தேன். (இன்னும் கொஞ்சம் சுருக்கினால், இன்னும் வரிக்கு மூன்று நான்கு சொல்லாகி நெடிய புதுக்கவிதை என்று அடித்துச் சொல்லிவிடுவேன்:-)) ஆனால், என்ன பிரச்சனையென்றால், பக்கவாட்டுப்படித்தலுக்காக அகலத்தை நீட்டின் கணித்திரை சிறிதாக வைத்திருப்பவர்களுக்கு, இழுத்து இழுத்து வாசிக்கும் நிலை உருவாகுமோ என்ற குழப்பம். எதுக்கும் மாற்றிவிடுகிறேன். யாராவது வாசிப்புக்குச் சங்கடமென்றால், திரும்பச் சுருங்கிக்கொண்டாலாச்சு.

3:43 PM  
Blogger Thangamani said...

குழந்தையின் சிரிப்பை பார்க்கமுடிந்தது. எது குழந்தையின் (குழந்தையினுடையதை மட்டுமா?) மனதைப் பாதிக்கிறது என்பது ஒரு புதிர்தான். அதன் புரிதல் ஆனால் நிச்சயம் வளர்ந்த மனிதனின் நேர்கோட்டுப்புரிதல் அல்ல. அந்த சந்தப்பங்களை கவனிக்கும் பொழுதுகளிலேயே நமது கட்டுமானங்களை உடைக்கத்தோதான ஆச்சர்யங்கள் நடக்கின்றன.

நன்றி.

9:40 PM  
Blogger Thangamani said...

This comment has been removed by a blog administrator.

9:40 PM  
Blogger -/பெயரிலி. said...

/அதன் புரிதல் ஆனால் நிச்சயம் வளர்ந்த மனிதனின் நேர்கோட்டுப்புரிதல் அல்ல. அந்த சந்தப்பங்களை கவனிக்கும் பொழுதுகளிலேயே நமது கட்டுமானங்களை உடைக்கத்தோதான ஆச்சர்யங்கள் நடக்கின்றன./

மெய்தான். குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியவை பல. ஆனால், குழந்தைகள்தான் வரும்போது மந்திரம் போட்டு மறந்ததுபோல அவற்றை மறந்துவிடுகின்றார்கள்.

3:51 PM  
Blogger Thangamani said...

ரமணீ! நேத்துதான் உயிர்மையில், கார்த்திக் சொல்லி அதெல்லாம்படித்தேன். எனக்கு பழைய சிறுபத்திரிக்கை விவகாரங்களெல்லாம் தெரியாதாகையால், விவாதங்கள் எதையும் செய்யமுடியவில்லை; மாலனின் நகைச்சுவைக்குமட்டும் என்னுடைய பதிலை இட்டேன்.

நன்றி. தொடர்ந்து எழுதுகிறீர்கள், படிக்க மகிழ்ச்சி!

1:36 PM  

Post a Comment

<< Home