Tuesday, February 22, 2005

தெளிவு

சோர்ந்துபோன உள்ளத்திற்கும் அது வேடிக்கையாக இருக்கிறதோ என்னவோ, அந்தக் காய்ந்துபோன அ·றிணைச்சருகு, இலையுதிர்(க்கும்) காலந்தப்பிக் காத்திருந்து, இந்தக்குளிர்காலம் உதிர்மாசியில், சைபீரியக் கூதற் காற்றில்லா வேளையிலே, சட்டென மாரடைப்பிற்போன உயிராய், மேட்டுநிலஞ் சாய்ந்த மொட்டைமரப்பந்தம்விட்டு, சுற்றிச்சுற்றி இந்த வெளித்தேசமாணவர்கட்டிடமதிலுக்கு இந்தப்புறமா, அந்தப்புறமா வந்து நிலந்தொடும் என்று, தனக்குத்தானே போட்டிவைப்பது, பந்தயத்தில் முதலிட்ட ஒருவன், குதிரைகள் எல்லைக்கோட்டைத் தாண்டும் போதுள்ள மனப்பதற்றத்திற்கு உள்ளான ஆர்வம்மீறி.....

..........-"நாசமாய்ப்போச்சு, அனுலாவை நான் கட்டேலாமத் தடை வரத்தான் போகுதோ? சனியன், இழவெடுத்த இந்த இலை அந்தப்பக்கம் விழும்போல இருந்ததாலதானெ, அங்காலை விழுந்தற் கஷ்டமில்லாமக் கட்டுவன் எண்டு யோசிச்சன். ஆய்... தடைதானே வரப்போகுது; இப்பமட்டும் என்ன வாழுதாம்? கட்டேலது எண்டு யோசிக்கயில்லைத்தனெ? மற்றது, உப்பிடி இங்கை இலை விழுறதுக்கும் இலங்கையில கலியாணங் கட்டுறதுக்கும் என்னத்தைச் சம்பந்தமெண்டுறன்? விசர் மூடநம்பிக்கையெல்லே உது?"-(தடையில்லை எண்று வந்திருப்பின், மன சந்தோஷப்பட்டிருக்கும் என்பது வேறு விடயம்). ஆனாலும், புலம்பிய மனம், சின்னவயதிலே பழக்கப்படுத்திப்போன விளையாட்டு இது, இப்போது, அது சோர்வுற்று தன் உறுதிதலரும் காலங்களிற் தன்னைப் பிரச்சனைச் சிந்தனைகட்குட் தளையவைக்காது தப்பவைக்க எண்ணிக்கையைக் கூட்டிக்கொள்கிறதோ? இதேமனம், சரிவந்திருப்பின், அடுத்த இலை விழுதற்காய், பந்தய வாக்கியத்தை வேறொரு பிரச்சனையில், தம்பியின் படிப்பில், நாட்டுப்பிரச்சனையில், தயாரித்துக்கொண்டு வேறு காத்திருக்கும்.

இப்போது, கொஞ்சக்காலமாகவே சிந்தனை வேறு, மனம் வேறு என்பதுவாய்ப்படுகிறது. நானே மூன்றாம் ஆளாக நின்று, என் மனம்-சிந்தனைகளின் போட்டிச் செயற்பாடுகளைக் கவனித்து, பரிகசித்து, பாராட்டி, அதற்கான காரணம் தேடி...., வர வர இரண்டினதும் விருப்பு வெறுப்பு வித்தியாசங்கள் தெளிவாகத் தெரிகின்றதாகி.... (இங்கு, மனம், உணர்வும் சிந்தனை, அறிவும் ஆட்டிவைக்கும் போட்டிப்பொம்மைகள் என்பதாகவும் ஓர் அபிப்பிராயம்; ஆனால், சுகுணன் மனோதத்துவத்தில், ஒருவித அறிவும் இல்லாமல் இருப்பவன் என்பதால், இதுபற்றித் தெளிவாகக் கூறமுடியதுள்ளேன்).

"ஹேய், சுகூனான்", மூவரையும் (நான் + மனம் + சிந்தனை) ஒன்றாய்ச் சிலிர்த்துக் கொண்டுதிரும்ப வைத்த Ghanian டேவிட் ஒனலூலூவின் குரல் மேற் தொடர்ந்து, "Look at the blackboard, man"...

...."...Hence, the algorithm of the Newton-Raphson iteration formula.."-'எண்களின்மீதான அலசல் & முறைகள்' கற்பிக்கும் சீன ஆசிரியர் (4Q என்பதை 'ரம்போ சில்வெஸ்ரர் ஸ்ரலொன்' அடிக்கடி (அல்லது அதுமட்டுந்தானோ?) உச்சரிக்கும் 'புணர்க உன்னை' என்பது போல் உச்சரிக்கும் ஆங்கிலம்) இன்னொரு அத்தியாயம் தொடங்கி இருக்கிறார்.

'Iteration'- அண்ணளவான திருப்திவிடை வரும்வரை மீளமீளப் பிரயோகித்தல்; இந்தக் கணிதச்சமன்பாட்டில், எழுமான நம்பிக்கையிற் பிரதியிடுந்தானாமே, தெரியாத கணியத்திற்குச் சமன்பாட்டின் விடையாகவரும்வரை மீளமீளப் போட்டு, அப்படி வரவைக்கும் தானமே, சரியான தீர்வு, அந்தச் சமன்பாட்டிற்கு என்றுகொண்டு..., இந்த நியூட்டனுக்கும் இரப்சனுக்கும் ஏன் இந்தமுறை, கணிதத்திலும் தத்துவத்திற்கு மிகப்பொருத்தமென்று தெரியாமற் போய்விட்டது? வளையியா, நேர்கோடா, இழிவுப்புள்ளி உண்டெனில் எத்தனை, உயர்வுப் புள்ளி உண்டெனில் எத்தனை, எங்கே எனத்தெரியா வாழ்க்கைச்சமன்பாட்டிற்கு, அது விரிதொடரா, ஒருங்கு தொடரா என அறியாத நிலையிலே எழுந்தமானமாகத் தெர்ந்தெடுக்கும் வாழ்வுமுறை சரியா எனத் தீர்மானிப்பது, விடையாக அந்த வாழ்வுமுறையிலேயே திருப்தியடைவதிற்றானே கிடைக்கிறது? எந்த அளவிற்கு எம் எழுமான
நம்பிக்கைப்பிரதியீடு சரியாக எடுப்போம்? கிட்டத்தட்டச் சரியாக எடுப்பினும், எந்தப்பெறுமதிக்கும் விடையும் அழுத்ததிருத்தமக அதுவாகவே வரப்போவதில்லை. வழுவுடன் கூடிய ஒரு விரிசல் இடைவெளி இருக்கத்தான் போகிறது; ஆனால், அதுவே, நாம் எமக்குப் போதும் எனக் கருதிக் கொள்ளும் சகிப்புமட்டிற்குள் அடங்கிவிட்டால்....

...-"மடைத்தனமாக அறிவுஜீவித் தத்துவஞானித்தனம் காட்டுகிறீரோ? சும்மா உங்களைப்போல ஆக்கள் இப்படிக்கதைக்கிறதைக் கௌரவமெண்டும் 'intellectual exercise' எண்டும் நினைச்சுக்கொண்டு, தனக்கும் மற்றவைக்கும் பிரயோசனமில்லாமை,...", மனம் கோபம் காட்டுகிறது.

என்ன செய்ய? எல்லா விடயங்களிலும் எனக்கு உள்ளிருந்தே இவையிரண்டும் உனக்கு முதலிடம் இல்லை எனக்கா என வாக்குவதப்பட்டு, அடிபட்டு, ஒன்றையொன்று பரஸ்பரம் இரணப்படுத்தி, இறைச்சிமுள்ளுக் குத்திக்காயப்பட்ட தன் கடைவாய்க்குருதியையும் சுவைக்கும் நாய்களென...ம்ம்ம்..வேதனை யாருக்கு? எனக்கு, சுகுணன் செல்லத்துரைக்கு, இந்த இரண்டையும் சமநிலைப்படுத்தவேண்டிய நடுவனுக்கு. மனம், மனிதன் உணர்வு நுகரவிடில் வாழ்வேது என்பதுவாக அடம் பிடிக்க, அறிவோ, உணர்வே வாழ்வாகாது, உணர்வுதன் நுகத்தடி என்னிடன்மிருக்கட்டும் என்ற நினைப்பில்....என்ன செய்ய?

நேரத்தைப்பார்க்கிறேன்; 10:30; கடிதம் வந்திருக்குமோ? இன்று யார் யாரிடமிருந்து வந்திருக்கும்? அம்மா, அனுலா, பெனடிக் அல்லது சுகுமார்? (தம்பி, பெட்டிகளைச் சும்மாய் ஒன்றின்மேலொன்றாய் அடுக்காதே); ஒன்றும் வராமலும் போகலாம்; சும்மா ஆசைப்பட்டுவிட்டு பிறகு எதுவுமே இல்லாவிட்டாற் சுருங்கிப்போய்...எதிர்பார்ப்பு குறைவாயிருந்தால் ஏமாற்றமும் குறைவாக இருக்கும். மீண்டும் அகத்தளப்போர் ஆயத்தசங்கநாதம்... மனம் பேனையை எடு என்பதாய்...

அந்தக்காகிதத்தை நான் நேசிக்கிறேன்;
நான் அறிந்தேயிருக்கிறேன்,
இந்தக்குளிரூறும் மாரியிலுமங்கு
என்வீட்டுத் தென்கிழக்குப்புளி
காய்த்துக்குலுங்குவதால் மட்டுமிங்கு
என் வாழ்க்கை ஒன்றும் மாறிவிடப்போவதில்லையென்று.
அக்காவின் குழந்தைக்கு ஆறாவது பல்
முளைத்தது காரணங்காட்டி
ஒன்றும் என் அகதி அந்தஸ்து,
இங்கு உயர்ந்துவிடப்போவதில்லை
என்று தெரிந்தவனாகவும் தான்.
என்றாலும்,
அகதிச் சோமாலிக் குழந்தைகளின் குச்சுக்கைகால்கள் சடைத்ததென,
உண்மைமனிதர்களின் எண்ணிக்கைத் துளிர் தாங்கி,
இலையாடை அவிழ்த்தெறிந்து நாணம் தொலைத்த மரச்சாலையூடே,
சந்திக்கடை 'பணிஸ்'*ன் வட்டம்+நிறம்+பொங்குவளம்
நினைவுக்குக் கொணரும் இம்மங்கோலிய முகங்களிடையே,
என் தனிமை ஆசுவாசப்படுத்த,
நான் நேசிக்கும் என்னை நேசிப்பவற்றின்
நினைவுகள்/நிழல்கள் தாங்கி வரும்
நீல, சிவப்பு ஓரவரையிட்ட வெள்ளுறைவசிக்கும்
அந்தக் கடல்கடந்த ஆஞ்சநேயப் பழுப்புக்காகிதத்தை
நான் நேசிக்கிறேன்,
நேசித்தே ஆகவேண்டும்,
என் காதலி,
அ·து ஒட்டிய உன் சிவப்பு உதடுகளை
நான் உள்ளன்பாய்
நேசிப்பது போலவே.

"சுகொணொன்", சூடானியர் அல் பஷீர் அரபு உச்சரிப்புடன் மணிக்கூடு தூக்கிச் சுட்டுவிரல் நீட்டிச் சிரிக்கிறார் (எல்லோருக்கும் இவன் எங்கே 10:45 வருமென்று உயிர்வாழ்பவனென்று தெரியும்; ஆனால், நண்பர்களே, யார் உங்கள் நக்கலை இங்கே பொருட்படுத்தப்போகின்றார்கள்?).

சரசரவெனப் படிக்கட்டில் இறங்கி, வளைவிற் சறுக்கியோட, முட்டுப்படாக்குறையாக, கடிதங்கள் நீட்டி ஸியாட் `வ்ப்ரா (இந்தச் சோமாலியர்கள் நைஜீரியாவுக்குத் தப்பியோடினாலென்ன, `வ்ப்ராங்`வ்போட் (Frankfort) இலிருந்து 'Lufthansa' நியூயோர்க் கடத்தினாலென்ன, அமெரிக்க இராணுவம் சுட்டாலென்ன, சீனா படிக்கவந்தாலென்ன, நடுக்கடலிற் போக்கிடமின்றித் தவித்தாலென்ன, பெயரென்னவோ Syed Farahதான்), "ஹென் லீஹாய் நீ (மிக்க அபாயம் வாய்ந்த/மோசம் நிறைந்த (மனிதனப்பா) நீ), ஒவ்வொருநாளும் கடிதங்கள்" (அந்த வார்த்தைகளூடே சில ஏக்கங்களும் ஊடோடியது அறியாமலில்லை நான்; ஆனாலும் பையனே, நீ நினைப்பது போல பாசம் ஒன்றும் இங்கெனக்குச் சந்தோஷத்தைமட்டும் எடுத்தளித்துக்கொண்டிருக்கவில்லை. உனக்குத் தெளியவைப்பது கடினமென்று நினைக்கிறேன்; நீ இந்தச் சின்ன நகரின் 'திறந்த' பொருளாதாரவிளைவு இரவு நடனவிடுதிகளில் இரண்டு மூன்று மணிவரை பிறந்து இறந்து, மீண்டு(ம்) இறப்பதுக்கென்றே பிற(ழ்)ந்து கொட்டும் ஒளிவண்ணங்கள், பொப்மாலியின் 'No woman no cry', 'றேக்கே' 'டெசி`பல்' இடி ஒலி சகிதம் 'Marlbaro'புகைவளையம் சுற்றி, 'Stainbrau' மதுக்கிண்ணம், உடல்வெப்பநிலை உயர்த்தும் சீனப்பெண் "நலமுடன் வாழ்"வதற்காய் உரசும்போது, நான் என் அறைமூலையில் ("Cremation chamber"-நேபாளி, சிரோன்மணி பஞ்சியாரின் கருத்து(ம்)) கட்டிலிற் தலைபுதைத்து, கடிதங்களிற் கண்ணீர்க்கறை வரைதலும் புகைப்படங்களின் பார்வைகளில் முக்கோணக்குன்று கடற்கரையில், வீதிகளில், மலைநாட்டுத்தலைநகர் ஏரிக்கரையில் நடப்பதும். சிலவேளை, நான் நினைப்பதற்கு எதிர்மாறாய், நீயும் அந்தச் சல்லாப விடுதிகளினுள்ளேயும் கூச்சலிடு கூட்டத்துள்ளேயும் தனிமையில் சோமாலிய வாழைத்தோட்டங்கள் உள்ளே வாழலாம்; யார் கண்டது? ஆக, சிந்தனைகள் அவரவர் சார்பானவை, தம்பி (குறிப்பாக, மற்றவர்களைக் கணிப்பிடுகையில்)).

தகனவுலை அறைக் கட்டிலிற் சப்பாத்துக்களுடன் விழுகிறேன். எதை முதலில் உடைக்க? மீளச் சமர்க்களம் என்னுள் அமையவிழை...எல்லாத் தெற்காசியர்போல எனக்கும் மண்டையைப் போடும்போது கேட்டாலும் தாயா, தங்கையா, மனைவியா, மகளா உயர்த்தியென்று கூறமுடியாது. என் காதலுணர்வு குற்றமாக இல்லாதபோதும், வீட்டார் அங்கீகரிக்காதவரை, குற்றவுணர்வு தவிர்க்கவியலாததே; தானே பார்த்துக் கல்யாணம் செய்துவைத்த மருமகள்மீதே, தன் மகனின் அன்பு பங்கிடப்படுகிறதே என்று தாய் பொறாமைப்படும் வேளையில், என் அம்மாவின் நிலை சற்று இன்னமும் கடினமானதுதான், என் காதல், அதன்மேலாய் அதுள்ளிட்ட மதம், மொழி, நாட்டுநிலைமை காரணமாக. (அந்த குற்றமனப்பாங்கை என்னிடமிருந்து அறிவு போலித்தனமாயேனும் மூடிமறைக்கும்படி, அம்மாவிற்கே முதலிடம் கொடுக்கிறேன் என்பதுபோல்) வீட்டுக்கடிதத்தை எடுக்கிறேன்.

இரண்டு கிழமைகளுக்கு முன்போட்ட கடிதம். முதற்பந்தி எப்போதும் போல வாசிக்கத் தேவையில்லை; அறிவேன்; அதே, 'அன்பின்..,நாம் நல...அதுபோல்...; உடல் நல...நன்றாகச் சாப்பி....; குளிருக்குள் வெளி......' எல்லாத்தாய்மாருக்கும் இப்படி தாம் எழுதிவிட்டால், பிள்ளைகளுக்குக் கஷ்டம் ஏதும் வராது; பிள்ளைகளும் வரிக்குவரி அந்தவரியிலேயே நடக்கும் என்ற நம்பிக்கை. ஆனால், அம்மாக்களே, உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை, இந்தத் தக்காளிப்பாகுக்குள் நெளியும் புழுப்போன்ற பன்றியிறைச்சியுடன் பசையாய் ஒட்டும் சோற்றுடனும் அவதியுற்றபடி, புட்டுக்கும் முட்டைப்பொரியலுக்கும் மாசிச்சம்பலுக்கும் நாங்கள் நாக்கைச் சப்புக்கொட்டுவது; நீங்கள் அறிந்திருக்கப்போவதில்லை, இந்த சைபீரிய வான்+நிலம் தொட்டுவரும் கொடுங்காற்று நான்கைந்து உடுப்புகளூடே உடல் நுழைந்து மூட்டுமூட்டாய்க் குறிவைத்துக் குத்தி 'wintergeno' தடவக் கேட்கையிலே, நாம் ஊரின் கோடைவெயிலின் கடற்குளியல்களில் மீண்டு நீந்துவதை; உங்களுக்கு யோசிக்க அவசியமில்லை, இங்கு, நாசி மேட்டுச் சந்துகளில் உற்பத்தியாகி ஒருங்கற்கண்கீழ்ச்சுருக்கவளைவுகளின் தொடலிவளையிவடிவு கொண்டு, புவியியலின் சமவுயரக்கோடுகள் என்பதாய்க் கீழோடும் முகச்சுருக்கங்காட்டி, எந்திரம் உயிர்ப்பூட்டிப் புறப்படத் தயார்நிலையிருக்கும் 'bus' என மென்நடுக்கம் உடலோடச் சாய்ந்தமர்ந்திருந்து மதிய வேளைகளிற் கலாவரையைத் துரும்பு வைக்கும் கிழவிகளின் முகங்களில் நாங்கள் காணும் அம்மம்மாக்களினால், அந்நிய நண்பர்களுக்கு எம் துளி(ர்)க்கண்ணீருக்கு அபாண்டமாய்ச் சுழல்காற்றுதூற்று மணலைச் சுட்டுவிரல் காட்டுவது. ஆக, உங்கள் எண்ணங்களில் (நீங்கள் கவலைப்படக்கூடாதேயென்றெண்ணி) நாம் எழுதும் கடிதங்களின்படி, "பிள்ளை உலகப்பிரசித்திபெற்ற சீனவுணவுகளில் உடம்பை உருளையாக்குகிறான்; உடலுக்குகந்த குளிர் சீதோஷணத்தில், உருவத்தே மெருகும் பளபளப்பும் ஊட்டுகிறான்; பல தேசத்தோருடன் சேர்ந்து உலகைக் கண்டு களிக்கிறான்." ஆனால், அம்மாக்களே, நாங்கள் சைபீரியன் வாத்துக்களோ, இலங்கை அமைச்சர்களோ அல்ல,கோடையில் சைபீரியாவிற்கும் மாரியில் திசமகராமவிற்கும் புலம்பெயர்ந்தோடிக்கொண்டிருக்க... (உங்களுக்கு வ.ஐ.ச. ஜெயபாலனின், 'மக்வூ' பறவைகவிதை விளங்கப்படுத்தவும் சேரனின், 'பனங்கொட்டைகனவுகள்' பற்றிச் சொல்லவும் இம்மனநிலையில் என்னால் முடியாது); நாங்கள் சட்டையுரிக்கப் பாம்புகள் இல்லை; இடநிறம் மாறப் பச்சோந்தி வகையறாக்கள் இல்லை; மனிதர்கள்; வெறும் உணர்வுகளுடனும் அறிவுடனும் போராடும் தீப்பிழம்பு அகப் போராளிகள்; எங்களுக்கும் மனம், உணர்வு.....--

--"நிறுத்து! மனமே, இதுவல்ல உன் உணர்ச்சிப்பேச்சுக்கான தருணம்; மேலே கடிதத்தை வாசி", பெரியமனிதத்தோரணையிற் காத்திருந்த சிந்தனை அதட்டியது.

"...வேறென்ன?"; இந்த 'வேறென்ன'விற்குப்பிறகுதான் புதிதான ஏதாவது விபரங்கள் கடிதத்தே தொடரும். "..தம்பி படிக்கிறானில்லை; நெடுக ஊர்சுற்றல். ஊரிலையென்றாற் கண்டபடி ஆமிச்செக்கிங்; சொல்வழியும் கேட்கிறானில்லை; என்ன செய்யவென்றே தெரியவில்லை." -அம்மா, எந்த இடத்திலாவது மேல்நிலைப்பள்ளிக்கூடம் படிக்கும் பையன் படிப்பிலே மட்டும் கவனம் வைத்துச் சுற்றாமல் இருந்ததைக் கேள்விப்பட்டிருக்கிறாயா? நான் என்னவென்றால், இழந்ததற்காக ஏங்கிக் கொண்டு, அந்தக்காலம் மீண்டும் வராதா என்று.... 'Cuba' படம் பார்க்கப்போய், இறுதியில் என் இளமை ஆதர்ஸ நாயகன், 'Fidel Castro' அமெரிக்க அடக்குமுறையிருந்து விடுபட்ட 'Havana' மக்கள் 'Cuba, Cuba' எனக் ஆர்ப்பரிக்கப் பேசுகையில், அரங்கில் நண்பர்களுடன் கதிரைகளின் மேலேறிக்கொண்டு நின்று 'ஈழம், ஈழம்' என்று கத்தி, அரங்கு உரிமையாளர் வந்து கெஞ்சி இருத்திய காலத்திற்காக ஏங்குகிறேன் அம்மா; இரவு ஏழு ஐம்பத்தைந்துக்குக் கொழும்பு புறப்படும் புகையிரதத்தின் காவலாளியின் பச்சைகொடியை, காட்டிக் கொண்டிருக்கையிற் பறித்துக் கொண்டு சைக்கிளிற் பாய்ந்தோடிய காலமெண்ணிப் புழுங்குகிறேன் அம்மா. அந்த நண்பர்களில் எவருமே இன்றிங்கில்லையே! சிவம் மட்டும் உவ்விடம் விட்டு நகரேன் என்பவனாய்; மிகுதி, எத்தனை பேரை நாட்டுப்பிரச்சனைக்கு, எந்தெந்த விதங்களிற் பலிகொடுத்தேன்: பொது எதிரிக்கெதிராகப் போரிட்டு மடிந்தவராய், அப்பாவித்தனமாகக் காணாமற் போனவராய், தமக்குள் ஆயுதங்களைக் குறி பார்த்தவர்களாக, போதாக்குறைக்கு உலகெங்கும் அகதிகளாய்ப் பரந்து என்னைப் போலவே இந்தக் கணங்களிற் தத்தம் அம்மாக்கள், காதலிகள், நண்பர்கள் கடிதங்களை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவராக... அதனால், அவனை, தம்பியை விட்டுவிடு. படிக்கச்சொல்; பாதுகாப்பாக இருக்கச்சொல்; அவை அவசியம்; ஆனால், அந்த இளமையின் உலகறியா இனிமையைக் கெடுத்து விடாதே. இக்கணத்தே, அவன் அதிகம் மீறிய கவனம், கவலை, 'குக்குர்பிட்டா' என்பதைத் தாவரவியற் சோதனைக்கு, எப்படி எழுத்துப்பிழையின்றி, ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டி எழுதுவது என்பதாக மட்டுமே இருக்கவிடு. இந்தப்பூசணிக்காய் உலகச்சுமைகள் இப்போதைக்கு அவனுக்கு வேண்டவே வேண்டாம். 'தா
வு

டு
த்தவரிக்கு.'
"அம்மம்மா ஒரு மாதிரித் தனக்குத்தானே ஆள்மாறாட்டமாய்க் கதைத்துக்கொண்டிருக்கிறா; யாழ்ப்பாணத்திற் கொண்டுபோய் விடுவிடு என்று போகிறவருகிற எல்லோரிடமும் கேட்டபடி; சில நேரங்களில், இதையே யாழ்ப்பாணம் என்று நினைத்தபடி தனக்கே கதைவேறு..."- கண்களின் விளைவு எழுத்தை அழிப்பதாய்.... அம்மம்மா; என்னை அம்மாயும் அப்பாவும், நான் வாசல்வரை ஓடிஓடிக் கதறக்கதறவும் விட்டுவிட்டு 'வாத்திமார்' வேலை பார்க்கப்போக, வளர்த்துவிட்ட அம்மம்மா; என் அம்மாவை விட எனக்குக் கூடப் பரிச்சயமான அம்மம்மா; தைப்பொங்கல், எனக்கு என்றோ நம்பிக்கை செத்துப்போன வருடப்பிறப்பு, தீபாவளிகளில் இன்றும் ஒரு ரூபாய்க்காசு (ஐனாதிபதி தலையில்லாதது) மிக அதிகம் என்றெண்ணிக் கொண்டு, 'கைவியளமாய்' தன் அடுக்குப்பெட்டி திறந்து தான் செத்து, போகும் பாடையின்பின் விசிறி வரச் சேமித்துவைத்திருக்கும் ஒரு இரு சதச் 'சல்லிக்காசு'களுளிருந்து தேடியெடுத்து, "எள்ளுருண்டை வாங்கித் தின்னடா, மேனை' என்று ("இப்பவும் ஆச்சிக்கு இவன் பிடிச்சு மூத்திரம் பெய்யத்தெரியாத பெடியனெண்டு எண்ணம்"-சிவம் நக்கலடிப்பான்) தரும் அம்மம்மா; வடமராச்சித் தாக்குதலோடு அம்மா, "உனக்கு அங்கை தனியயிருந்து சரிவராதயணை, வா" என்று மனிசியின் மனம்நோகநோகக் கொண்டுவந்து ஆனையிறவுக்கு இப்பால் வைத்ததிலிருந்து, போகும் எல்லோரிடமும் "அங்கை என்னைக் கொண்டு போய்விடடா, ராசா" என்றபடி. இடையில், படகால் முல்லைத்தீவால் ஒருமுறை, ஒப்பந்தத்தில் ஒருமுறை கொண்டு போய் அவ பிறந்தமண் காட்டியபோதெல்லாம் கண், முகம் கண்ட தெளிவு...."நீ வரும்வரை (எப்போது திரும்பிப் போவேன்?) இருப்பனோ தெரியாதடா; எனக்குக் கொள்ளிவைச்சப்பிறகு எங்கையாச்சும் போறதெண்டாற் போ, குஞ்சு." -ஆனால், அம்மம்மா என்ன செய்ய, Bigbang தத்துவத்தின்படி, அகிலம் விரிந்து கொண்டல்லவா போய்க்கொண்டிருக்கிறது? வந்த நான் இங்கிருந்து கொண்டு அங்கு வாழ்பவனாக....

சிலிர்த்தபோது, "அப்பாதான் திருமுறைக்கழக நூலகத்திற் பொறுப்பாக இருக்கிறார், தனக்கும் பொழுது போகவேண்டாமோ என்று சொல்லியபடி. சமையலுக்குக் கூடமாட உதவிசெய்து தந்துவிட்டு அவர் பின்னேரம் போனால், இரவு வாசிகசாலை பூட்டி வரும்வரை நான்தான் தனியே அம்மம்மாவுடன் கொட்டுகொட்டு என்று முழித்தபடி.." - அடுத்தவரிகள் இப்படி மூளையிற் பதிந்து கொள்கிறன. அம்மா, குருவிகள் நெடுகக் குஞ்சுகளாகவே இருக்கமுடியாது. இதுதான் நியதி; பழைய உவமைதான் என்றாலும், அதைவிடத் தெளிவாக ஏதும் உன், எங்கள் இந்த நிலைமையைத் திருத்தமாகச் சொல்லமுடியாது. வாழக்கற்றுக்கொள். நீயும் அப்பாவும் இனி வாழப்போவது ஓர் இனிமையான பகுதி- சொல்லப்போனால், உன் வாழ்விலேயே இதுதான் மிக இனிமையான பகுதி. உடல் தெம்பாக இருக்கும் காலங்களில், காதல் என்பதிலும் காமம் என்பதன் உணர்வே மேலோங்கி நின்றிருக்கும்; பின், பிள்ளைகள்-நாங்கள், தொல்லைகள், உங்கள் இடைப்புகுந்து, இருவரையும் தள்ளித் தள்ளி ...., இனித்தான் ஒருவருக்கொருவர் ஆதரவாக வாழப்போகும் உண்மையான காதல்வாழ்க்கை. என் வாழ்த்துகள். அப்பாகூட எவ்வளவு மாறிப்போ...("ஓஹோ! குடும்ப ஆலோசகர், 'போதனை' பண்ணுகிறீரோ?"-குத்திய மனத்தை, சிந்தனை துரும்பென்றும் கவனித்ததாகத் தெரியவில்லை.)....எனக்கு, அந்த ஏரிக்கரை நடை நேரத்தே வயோதிபத்தம்பதியினரைக் காணுகையிலெல்லாம் என் கையைக் கண்கள் பனிக்க இறுக்கும் அனுலா ஏனோ ஞாபகத்துக்கு வர, மிகுதி அம்மாவின் கடிதத்தை அவசரவசரமாக(ப்) மு(ப)டித்தேன் - அதிகம் ஒன்றுமில்லை ('AIDS' ஊர்வரை வந்துவிட்டது; படித்து முடித்து மேலேயெங்காவது படிக்கும் வழியைப்பார்; சுந்தரத்தாற்றை குமாரை 'ஏஜென்சி'க்காரன் ஏமாற்றித் தென்கொரியாவி...), அனுலாவின் எண்ணம் இவற்றுள் மனம் ஊடுருவாமற் கவனம் திசைதிருப்பி...

...அனுலா; கடிதத்தை எடுக்கின்றபோதே ('அந்தப்பழுப்புநிறக் காகித..') அம்மாவின் கடிதத்தில், மனம் நெகிழ்ந்ததுபோலவேதான் (இரண்டும் ஆழ்நெகிழ்ச்சிதான்; ஆனால், வித்தியாசமான உணர்வினதாய்...). சில கணங்கள், இறந்தகாலத்தில், கண்டி 'British Council', 'சாகரஜலய' படவிவாதம், ஏரிக்கரை மாலை மென் நடைகள்; இன(வி)வாதம் எழாது எழுந்த அன்பு, இன்று கார்ந்தவமணம் பண்ணாக்குறையாய்ப்போய், நான் இங்கு வர, அவள் அங்கே பல்கலைக்கழகம் போனபடி...எம்மைப் பற்றியே சதாயோசித்தபடி எல்லாக்காதலரும் தாம்மட்டுமே உணர்வதாக அறியும் அதே கிளர்ச்சிகள்; உருக்கிரும்புபோல், மென்னுணர்வுகளில், என்னுள் நெகிழ்பவளாய், கடினநேரங்களில், என்னை இறுகித் தாங்குபவளாய்,...அனுலா!

ஆனால், பெனடிக் சொல்வது இந்நேரங்களில் ஞாபகம் வந்து குழப்பும்; "சுகுணன், இந்த ஆரம்பகாலங்களில் எல்லாமே இனிமையாக, ஒருவருக்கொருவர் புதிராய் உள்ளவரை, ஒருவருக்குள் ஒருவர் நெகிழ்வதாகவேயிருக்கும்; ஆனால், காலம் எல்லா உணர்வுகளிலும் உறவுகளிலும் அவை உறைந்து மாறாமலிருக்கையிற் சலிப்பையே தரும். உனக்குப் பிடித்த உணவு என்றாற்கூட உனக்கு அதையே நெடுகச் சாப்பிடமுடியாது, பார். அதனால், எந்த உறவிலுமே, அதிகம் எதிர்பாராமல்...எதையும் இப்போதே முடிவு -இவள், இந்தவிதத்தில், இப்படித்தான்- என்று கட்டாமல், அதையும் ஒரு அனுமதி இடைவெளிக்குள் எதிர்பார்க்கப்பழக்கப்படுத்திக்கொள். கல்யாணம் மீதான எதிபார்ப்பு இப்படி இருப்பது நல்லது; மிகத் திருத்தமாகத் திட்டமிட்டுச் செய்தும் எதிர்பார்க்கும் அளவு, காலம், வகையில் அது பயன்படாமற் போவதில் வரும் நட்டத்திலும், எழுமாற்றாகத் (அவன் இச்சொல்லைப் பயன்படுத்துவது, ' பெரிதாக எதிர்பார்க்காமல், ஓரளவு திட்டமிட்டு' என்ற தொனியிலென எனக்குப்படும்) தேர்வதில், அதிகம் சிறப்பு இல்லவிடினும், அதற்காக முதலீட்டிற்குப்
பங்கமில்லை." இடது உள்ளங்கை, உயர்த்திய தலை -நெற்றி, நாடி, கழுத்து- வரை கீழிழுத்து நிறுத்தி, பின், எடுத்துப் பெருமூச்செறிகிறேன். ம்ம்.ம்..ம்., இப்போது, இந்தச்சிந்தனை என்னை இன்னும் குழப்பும். வலையுட் துடிக்கும் (மேலும் சிக்குதற்கென்றே) மீனாய்க் கரை கிடந்து வெய்யிலில்.... இப்போது என் பிரச்சனை அதுவல்ல; இருவரும் பிற்காலத்தில்லென் ஊரில் வாழ எந்தவளவிற்கு இச்சமூகம் இடம் கொடுக்கப் போகின்றது? ஒவ்வொரு சமூகப்பிரச்சனையையும் எந்தவளவிற்கு இருவரும் ஒருவர்மீது ஒருவர் பரஸ்பர நம்பிக்கையோடு உள்வாங்கப் இவர்கள் விடப்போகிறார்கள்? மற்ற நண்பர்கள் சொல்வதுபோல் இருவரும் வேற்றுநாடொன்றில் வாழ்ந்துவிட்டாற் பிரச்சனையில்லையா? ஆனால், வேர்களை அங்கே வைத்துவிட்டு, விழுதுகளை மட்டும் எப்படி வேற்றுமண்ணில் நாமூன்ற....-சிந்தனை தடித்து உணர்வுடன் யுத்தவியூகம் வகுத்தலிலிருந்து, தப்புதற்காய்,

அநேக நண்பர்கள் வந்த புதிதிற் கடிதங்கள் எழுதிக் குறைந்து, இப்போது அற்றுப்போன நிலையிலும் வரும் பெனடிக்கின் கடிதம் உடைக்கிறேன். வழமையான தத்துவப்போக்கு. இடையே, "'முழியன்' நந்தன் போனகிழமை கதைக்கையிலே, 'என்ன சமதர்மவாதி சீனாவிற் போராட்டம் நடத்தப்போயிற்றாரோ?' என்று உன்னைப் பற்றிக் கேட்டான்" - (நந்தா, சீனா ஒரு சமதர்மநாடா? நீகூட நகைச்சுவையாகப் பேசக்கற்றுக்கொண்டாய் பார்.) நந்தன் மட்டுமல்ல, அநேகர் என்னை இப்படித்தான் பார்க்கக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள்; அது தவிர்க்க இயலாதுதான். அவர்களில் என் பிம்ப வடிவுப்படி நானும் என்னைத் தக்க பாதுகாப்புவலயத்துள்ளிருத்திப் பல்கலைக்கழக வளையத்துள், மொத்தச் சிவப்புப்புத்தகங்களுள் மேற்கோள் மேய்ந்தெடுத்தெறிந்து, முற்போக்காளியெனக்காட்ட வெறும்தேனீரும் அழுக்கேறிய 'denim'உம் சமதர்மமும் ஈழமும் பேசும் ஒரு 'bourgeois' புத்திஜீ(சீ)விதான் (அப்படியுந்தானோ? தான் ஓங்கச் சந்தர்ப்பம்வரும்வரை, சமதர்மம் பேசி....). என்னைப் பொறுத்தவரை, '83ல், என்னோடொத்தவர் எல்லோரும் நாடென்று போக, கோழைத்தனத்தாற் பின்தங்கியதால், இப்போதாவது அந்த நாடென்றதற்கு ஏதாவது வகையில், ஏதாவது நல்லது செய்வோமென்று எழுந்த எண்ண அரிப்பினா...இன்று 'international call' ஒன்று எடுத்து அனுலாவோடு கதைத்தால், கொஞ்சம் மனம் ஆறுதலாக-->தெளிவடையும்; ஆனாலும், அ·து ஆற்றுநீர் பிரித்து அடி தேடுவது போலத்தான்; மீண்டும், நீர்மூடும். ஆனாலும்...11:00 மணி 'சூழலியல் ஒழுங்கமைய ஆய்தல்' வகுப்புக்கும் போகாம.. என்..ன...வாழ்..படி.....இப்ப....அம்மா...நாடு...அனு....நாளை..குழ..ப்.ப...ம்.....

.....கண்விழிக்கும்போது, முன்னே, என்னையறியாமலே குணம்+கொள்கை காலத்துடன் கற்பிழக்கக்கூடாதென்று என் படுக்கையின் நேரெதிரே சுவர்மேலே ஒட்டியிருந்த செஞ்சிலுவைச்சங்கச் சுவரொட்டி, 'He got in the way of somebody's war'- தன் பாரத்தின் மேலாக மூட்டை தூக்கிக்கொண்டு, ஓடும் மக்களிடையே, முகம் தெரியாது முதுகு காட்டிச் செருப்பின்றி ஓடமுடியாது நகரும் உடைகிழிந்த முகவரியற்ற பையனின் சிறு உருவம். சிந்தனையும் மனமும் மாறி மாறிக் குழப்புகின்றன.

சிந்தனை :- தம்பி, நீ யார்? நான் உனக்கு என்ன செய்யமுடியும்? ஒரு குருடன் இன்னொரு குருடனுக்கு எப்படியப்பா வழிகாட்டமுடியும்?

மனம் :- ஐ.நா. சபைச் சமாதானப்படையிற் சேர்ந்தாலும் ஒன்றும் அவனுக்கு நீ பண்ணிவிடமுடியாது. போரில் ஈடுபடுபவர்கள் சுட அவனோடு சேர்ந்து நீயும் ஆயுதத்தைத் தூக்கிக் கொண்டு ஓடமட்டுமே உனக்கும் அனுமதியுண்டு; அவ்வளவே; அதைவிட்டுவிட்டு, அமெரிக்க இராணுவத்திற் சேர்ந்தாலாவது, அவனுக்கு விடிவு கிடைக்கிறதோ இல்லையோ, அவன் பேரைச் சொல்லி, ஆயுதம் தூக்கி அகிம்சைக்கும் அமைதிக்கும் உழைப்பதாக வருங்காலம் உனக்குச் சமாதன நோபல் பரிசுக்குச் சிபார்சு செய்யும்; வேறென்னத்தை உனக்குச் சொல்ல? பிறகேன், இந்தப் படத்தை ஒட்டிவைத்திருக்கின்றாய்?

சிந்தனை :- பிற்காலத்திலாவது ஏதாவது செய்யவேண்டும் என உணர்வோடு இருக்க. தனிப்பட்டமனிதனாகவாவது, நல்லதைச் செய்..

மனம் :- ஓஹோ! முழுச் சமூகக்கொள்கை மாற்ற, மக்கள் இயக்கம் அமைக்கப்பேசியவர், இப்போது கொள்கை மாற்றுவதே கொள்கையாகி, இனித் தனி நபராகிச் சேவை செய்யப்போகிறீரோ? பிறகு, என் எழுத்து ஏதாவது சாதிக்கும் என்று மட்டும் இரு கதை, ஒரு நாடகம், மூன்று கவிதை எழுதி, புலம்பெயர் சஞ்சிகையில், தேசியமுதலாளித்துவம், தரகுமுதலாளித்துவம் விவாதத்தில் உம் நாசியையும் நுழைத்து, பின், அதுவும் தேய்ந்து, BBC ஊடாக மூன்றாம்தர அரசியல்வாதிகளிடம் தொலைபேசியில் முட்டாள்த்தனமாகக் கேள்விகள் கேட்டு....

......."நிறுத்து!", கத்திய சிந்தனையின் குரலில், மனம் தரிப்பிட, "நான் வேறு என்னதான் செய்யமுடியும் என்கிறாய்? உங்கள் உந்தலில் எல்லோரும் பொது எதிரிக்கு எதிராக ஆயுதம் தூக்கினார்கள். காலப்போக்கில், என்ன பண்ணவைத்தீர்கள்? அவரவர் தத்தம் சொந்த எதிபார்ப்பை மட்டும் யோசிக்கப்புறப்படவும் தக்க வைத்த சிந்தனைகளைத் தடம் புரட்டவும் யார் காரணம்? நீங்கள், மனங்கள்தானே? நீங்கள் உங்களுக்காக, தனிமனிதர்களுக்காக மாறலாம். நாங்கள், சிந்தனைகள்; விருந்தில்லாவிடினும் மருந்தாவது கொடுப்போம் என இன்றும் பொது நலன்களுக்காகப் போராடுவது, உங்களுக்கு நகைப்பதற்குரிய விடயமாக உள்ளதோ? இதுவும் கொள்கைமாற்றம் ஒன்றுமில்லை; பொதுநலக்கொள்கை நிலைத்திருக்க எடுத்திருக்கும் ஒரு யுத்த தந்திரமே. எழுதுதல் கூட என்ன பத்திரிகைகளுக்கு, சஞ்சிகைகளுக்கு அனுப்பவென்றா நினைத்துக் கொண்டிருக்கிறாய்? எனக்கு அ·தொன்றுதானே வடிகாலாகவுள்ளது. இப்போது, உள்ளிருக்கும் போராட்ட உணர்வை அந்த வடிகால் வற்றிப்போட்டுவிடுமென்று, அதையும் தள்ளிப் போட்டு....இருந்துவிட்டு எப்போதாவது இவன் உணர்வு மிகப்பொங்கையில், சமநிலை தடுமாறக்கூடாது என்றல்லவா எழுதுகிறேன்? சோர்ந்திருக்கும் மக்களிடம் செயற்கையாக போராட்டவுணர்வைத் திணித்துக்கொண்டிருக்கமுடியாது. முதலில், சோர்ந்திருப்பவரைத் தடவிக்..."

மெல்லியசிரிப்பு; மனந்தான்; "மன்னித்துக்கொள்; உன், தனிநபர்-சமூகம் உறவுப்பிணைப்பிலான கருத்தமைப்பில் எங்கோ ஏதோ தவறு உள்ளதாகப்படுகின்றது, எனக்கு. மீண்டும் நீ அதை ஆய்ந்து அலசல் நல்லது. தனிநபர் சுற்றியே சமூக..."

நல்லதோ கெட்டதோ, இந்த நாட்டுப்பிரச்சனை எங்களின் பாரம்பரியக் கருத்துச்சிறை தகர்த்து வெவ்வேறு தளங்களிற் சிந்தனை தட்டவைகிறது. ஆனாலும், இக்கணத்தே இவையிரண்டினதும் போராட்டத்தை என்னாற் தாங்கவியலாது. இல்லை, இல்லை, இல்லை. தற்போதைக்கு இவையிடமிருந்து தப்பிக்கவேண்டும்; மேசைமீதிருந்த புத்தகங்களில் ஏதோ ஒன்றைத் தூக்குகிறேன். ஜே. கிருஷ்ணமூர்த்தியின், 'Commentaries on living' - எழுந்தமானமாய்ப் பக்கம் திருப்புகிறேன்.

Love: Is it love when there is complete identification with another? And is not th....-

-தூக்கி எறிகிறேன்; இந்த மனிதனைச் சரியாகப் புரிந்துகொள்ளாவிடில், அனுலா மீதான என் தஞ்சமனப்பாங்கும் கெட்டுவிடும்; பிரமராஜன் கவிதைபோல எவருக்குமே புலப்படாடாது, புரியாது...; எனக்குள் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. (கதிர்காமக்கந்தன்கோவிற் கப்புராளையின் வாய்க்கட்டுள் அந்த ஆள் என்ன சொல்லுமோ தெரியாது என்பதேன் இப்போது ஞாபகம் வருகிறது?)

ஆனால், மூன்று விடயங்கள் மட்டும் புரிகின்றன. ஒன்று, நான் இப்போதே இதற்கொரு குறுகியகாலத்திற்கான தீர்வாவது காணவேண்டும், குறைந்தபட்சம், இந்த இறுகிய சூழ்நிலை ஓரளவு இளகும்வரையாவது. இரண்டாவது, இந்த என்னுள்ளேயுள்ள எதிரிகளை ஒறே சீராய் வண்டியிழுக்கும் மாடுகளென ஒன்றுக்கொன்று இயைந்து போகுமாறு நண்பர்களாக்கி என்னைச் சமநிலைப்படுத்த ஒருகால அவகாசம். இறுதியானதும் முக்கியமானதும், எனக்கொரு, காற்சட்டை இரு ஓரப்பைகட்குள்ளும் கைவைத்தபடி சமநிலைச்சிந்தனை/உணர்வு தவழவிட்டு, கல்லொன்றைக் கால்தட்டதட்ட ஒரு தனி நீள் நடை.

மெதுவாக நடக்கிறேன், இந்த மிருகக்காட்சிச்சாலைவிலங்கென எனைப் பார்க்கும் இம்மனிதரிடையே.

எனக்கு(ள்) என்ன நடக்கின்றது? மீளவும் மூன்றாம் மனிதனாக எனக்கு நானே ஆகி உள்ளெட்டிப்பார்க்கிறேன். என் வயது என்னை என் எதிர்காலம் பற்றிச் சிந்திக்க வைக்கின்றது; என்னை நம்பியுள்ள பிணைப்புகள் என் கொள்கையின், உறுதியின் வடிவத்தைத் தமக்கேற்ற வடிவத்தே தாமறியாமலே உருக்கி வனைக்கவிளைகின்றன. என் கொள்கை, சிந்தனை என்பனவோ தம் உணர்வை, மனதை எப்போதும் புரியாத ஏதோ ஒன்று நெருடிக் கொண்டு இருக்காத வரையில், வகையில், சூழற் கஷ்டமிருப்பினும் மனக்கஷ்டத்தைக் குறைக்கவிரும்புகின்றன. பார் மனதே, சிந்தனை கூட உனக்காகத்தான் இவ்வளவு கஷ்டப்படுகின்றது. ஒத்துப்போகக்கூடாதா அதனுடன்? படிப்பு முடிய மேலே படிக்கமுடியுமானாற் படிப்போம். பிறகு, இயலுமானவரை ஊருக்குத் திரும்பி விடுவதுதான் என்னைப் பொறுத்தமட்டிற் சரி. இல்லாவிட்டால், அம்மம்மா இப்போது கவலைப்பட்டுக்கொண்டு உள்ளத்தால் அழுந்தியிருப்பதுபோல என்னாலும் அழுந்திக் கொண்டு இருக்கமுடியாது. ஆனால், என் முன் தலைமுறை (அப்பாபோல, அறுபதுகளில், சாதியமைப்புகளுக்கு எதிராய்ப் போராடி, தன் உற்றாராலேயே கிட்டத்தட்ட ஒதுக்கப்பட்டும் தான் தனக்குச் சரியெனப் பட்டதைச் செய்தது சரியென்ற மனோதிடத்துடனிருந்துவிட்டு, இன்று எந்த வெளியுலக நடவடிக்கைகளுக்கும் முகம் கொடுக்க விரும்பாது, தன்னுள்ளேமட்டும் சமூக அநீதிகளுக்குச் சாபமிட்டபடி, புதினப்பத்திரிகைகளும் புத்தகங்களும் பூந்தோட்டமும் பூனைக்குட்டிகளுமே கதியாய்) இருப்பதுபோல், போராட்டத்தளர்வு என்னில் ஏற்பட்டுவிட விட்டுவிடக்கூடாது. இன்று, காலத்தின் குழப்பத்தால் என்னிற் தளர்வு உண்மைதான். அத்துடன், என் அடுத்தசந்ததிக்கு இந்தவயதில் இருக்கப்போகும் தாக்கத்தையும் காட்டப்போகும் போராட்டகுணத்தையும் விட நான் குறைந்தளவினையே என் வெளிக்கொணர்வாக்கமுடியும். ஆனால், ஒன்று இங்கு நன்கு விளங்குகிறது. அப்பா என்னைவிடத் தளர்ந்திருக்கலாம்; ஆனால், அவர்தான் என்னை இந்த உலகப்போக்கில் இந்தப்படியிற் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார். என் அடுத்த தலைமுறை என்னைவிட உயர்ச்சிப்படியில் நிற்கப்போகிறதென்றால், அ·து என்னாற்றான். நாங்கள் எல்லாவற்றையுமே ஒரு பத்து பதினைந்து வருட காலத்தில், பலூன் ஊதுவதாய்ப் பண்ணப்போய்த்தான் இப்படி வெடிப்பதாய், என்சமூகம். கூர்ப்புத்தத்துவம் படிமுறைப் பரிணாமவளர்ச்சிதான் சொல்கிறது. சில வேளை பிற்காலத்துக்குத் தேவையான எம் சில குணம்சயங்களை இன்றைய நிலை கருத்திற் கொண்டு எம்மிடமிருந்து நாமே, இன்று அதீதமெனில் அழிக்கவேண்டும்; அல்லது, ஆழ்மனத்துள் மறைவெப்பமாய்க் குளிர்காலத் தூக்கம் போடவைக்கவேண்டும். ஆனால், அதற்கு, அது நம்மைத் தொடங்கியபாதைகே இட்டுச்செல்கிறோம் என்று அர்த்தமில்லை. இந்தக்காலத்தில், அ·து தேவைக்கதிகமாக இருப்பதால் ஏற்படும் உடனடிப்பாதிப்பில், அது விலத்தி நிற்கவேண்டியதுதானெனில், வரும் தலைமுறைக்கு அதைக் கருத்தாய்ச் சொல்லிவைப்போம், ஊறப்போட்டு முளைக்கவிடும் நெல் நாற்றென. கம்பளி குளிர்காலத்துக்குத் தேவையெனில், கோடை காலத்தில் அது மலிவாய், தொகையாய்க் கிடைப்பின், அதைப் பண்டகசாலையிற் பத்திரமாய்ப் போட்டு வைத்துவிட்டு, உயிர் கொளுத்து வெயில் பாதுகாக்க, துண்டுப் பருத்திக்காவது வழியை தேடுங்கள் (பறப்பதற்காய் உறங்கிக் கிடக்கும் கூட்டுப்புழுவாய், உங்களுட் கருத்து; என் அப்பா, முட்டை; நான், கூட்டுப்புழு; என் மகன்... யார் கண்டது? சுதந்திரமாய்த் தன் மலர்வனமெங்கும் சிறகடிக்கும் சின்ன வண்ணாத்துப்பூச்சியாகலாம்; ஆவான் நிச்சயமாக). இவற்றைமட்டும் விளங்கிவைத்திருக்கிறேன். எங்கு சுத்தமான சுதந்திரக்காற்று உள்ளதோ அதுவே என் (இரவற்) தாய்நாடு என்று என்னால் வாழமுடியாது; காற்றை எங்கு சுதந்திரமாக, சுவாசிக்கச் சுத்தமுடன் வீசவைக்கவேண்டுமோ அதுவே என்தாய்நாடு. நாட்டிற்கு நான் தேவையா என்பதல்ல, இங்கென் பிரச்சனை; எனக்கு என் தேசம் தேவை என்பதுதான் என் அத்தியாவசியம்; என் காலத்தில், இறக்கை தட்டும் என் கனவுப்பறவைகள் தரையிறங்காமற்போவது பற்றி எனக்குக் கவலைப்படுவதி அர்த்தமெதுவுமில்லை; அ·து, இங்கு இன்று இறங்கமுடியவில்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பதிலும் விட, என்றாவது இறங்கவைப்பதற்கு நான் என்னலான வழியைச் சொந்தமாகத் தேடுவதுதான் நல்லது.

மனம், அறிவு இரண்டுமே தம்முள் -நௌங்காலத்தின்பின்- மெல்லிய காதற்பார்வை, முரண்பட்ட குற்றம் அழுத்து நாணத்துடன் பார்ப்பதாகத் தெரிகின்றது. அனுலா, கவலைப்படாதே; முக்கோணக்குன்று, நீ என்னைப் புரிந்துள்ளதுபோல், நான் உன்னை அறிந்துள்ளதுபோல், எம்முறவையும் சந்தேகமகன்று தெளிந்து ஏற்றுக்கொள்ளும் என நம்புவோம். அடுத்ததாக, நான்/நாம் யோசிக்கவேண்டியது, நாமே உயர எமக்கெனக் கட்டப்போய், இடித்துத் தள்ளிய ஈழக்கட்டிடங்களிலிருந்து என் பார்வையில் எந்தெந்தக் கற்கள் மீண்டும் பயன்படுநிலையில் உள்ளனவெனத் தேடிக்கண்டு, பொறுக்கிச் சேர்த்தெடுத்து, எந்தெந்த வழிமுறைகளில் முக்கோணக்குன்றில், குன்றாடு தென்றல் தழுவு நீலக்கடல் பார்த்த என்வீட்டின் நெடும் குளிர்கால இரவுகளில், இன்னும் ஏழோ எட்டு வருடங்களில், என் எதிர்கால வண்ணாத்துப்பூச்சிகளுக்கு, பறந்தமுறைகள், திசைகள், பறக்கும் முறைகள், திசைகள்,மீண்டு,மீண்டும் வசிப்பிடம் கட்டும் முறைகள் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கப்போகிறோம் என்பதுந்தான். அம்மாவிற்கு, நான் மேற்படிப்பு முடிய உவ்விடமே திரும்பிவந்திருக்கப்போகிறேன் ("அம்மம்மா, உனக்கு நான்தான் கொள்ளி வைப்பேன்; அப்பா, திருமுறைக்கழகப்பொறுப்பாளர் கதிரை, உங்கள்பின், திட்டமான எண்ணங்களுடன் வந்தமரப்போகும் ஒருவனைச் சுமக்கப்போகின்றது") என்பதையும் அனுலாவிற்கு, இதுவரை என் எண்ணம் பட்ட எல்லாவற்றையும், சிவத்திற்கு, அங்கு, எங்கள் நண்பர்கள் சோர்ந்திருந்தாலும், அவர்கள் குழந்தைகளும் மற்றைய தேசக் குழந்தைகள் போலவே, பசித்தாற் சாப்பிட்டு, கிள்ளினால், அழுது, பள்ளிக்கூடம் விடவந்து (விளையாட்டு வேறாயினும்) விளையாடுகிறார்கள் என்று கேள்விப்படுவதையும், பழையமாணவர் சங்கத்தைச் சைவவித்தியாலயத்திற் புணருருத்தாரணம் பண்ணவேண்டிய அவசியத்தையும் எழுதவேண்டும். எனக்கே இ·து ஓர் அதீத கற்பனைவாதம்போல் இப்போதைக்குப்படினும், உண்மையில் அப்படியில்லை; ஆனால், கொஞ்சம் நம்பிக்கையோடு கஷ்டப்படவேண்டும் அபிப்பிராயங்களையும் (அவை வேண்டுமென்றேயெழு அநாவசியங்கள் எனப்படுகையில்) -சிலவேளை, உயிரையும்- பொருட்படுத்தாது; அவ்வளவே. என் உணர்வுகள், ஓர் ஒருங்கு தொடராகவே இனி அறிவுடன் பிணைந்து செல்லும். அத்தோடு, நியூட்டன்-இரப்ஸனின் மீள்செய்கை வீட்டுவேலையையும் செய்து முடிக்கவேண்டும். அதற்கு முன், மாலைச்சாப்பாட்டிற்கு, உடனடி நூடில்ஸ் தயாரிக்க, முதன்முதலாய், இன்று நானே முயற்சி செய்யவேண்டும். முதன்முறை கருகினாலும் கரைந்தாலும் அடுத்தடுத்த முறைகளிற் தானே சரிவரும் (காலப்போக்கில், நானே ஒரு கைதேர் சமையற்காரனாகலாம்; யாருக்குத் தெரியும்?). எனக்குப் பிடித்த சீனப்பழமொழி -பல தூர உலகச் சுற்று யாத்திரையும் முதற்காலடியிலேயே ஆரம்பிக்கின்றது; சரியாக வைத்த அவ்வடி, பாதி விடயம் சரியாக ஏற்கனவே நிறைவுற்றதைத் தெளிவாகத் தெரியப்படுத்துகின்றது- என்று சொல்லும்.

-/'93 Mar 14, Sun 10:50

0 பின்னுதை:

Post a Comment

<< Home