Tuesday, February 15, 2005

உலா

{
{

மழைவீழ்ச்சி ஒழுங்காக இல்லாத இந்த மாரி நெல்விளைச்சலைப் பற்றி அதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருக்கும் வேளையிலே பூபதியாரிடம் இந்தச் செய்தியைப் போய்ச் சொல்லலாமா, சொல்வதானால் யார் சொல்வது என்று, அடைப்பக்காரரும் அந்தப்புரத்தாதியும் ஆளையாள் பார்த்துக்கொண்டனர். நெல் விவகாரம் முடிந்தபின்னர் சொல்லலாமென்றால், ஏதோவோர் அம்மன் ஆலயத்துக்கு(ம்) மழை வேண்டி வந்த விளைச்சலையும் படையல் போடும் எண்ணத்தோடு, ஆலயமணியகாரரும் அவரைச் சேர்ந்த சுற்றமும் அடுத்ததாகக் காவல் நிற்கின்றன. அதற்குப் பிறகு, பஞ்சப்பாட்டும் புஞ்சைப்பாட்டுமாய் கொஞ்சநஞ்சமில்லாத புலவர்களும் புளுகர்களும்... இப்படியே போனால், பூபதியார் மதியப்போசனத்துக்கு வெளிநடக்கும்போதுதான் சொல்லமுடியும். சாப்பிடும்போது, சங்கதி -நல்லதோ கெட்டதோ- சொல்கின்றது அவருக்கு அவ்வளவு பிடித்ததல்ல. வதக்கலும் வறுவலும் காரமும் உப்பும் கசப்பும் இனிப்பும் எதுவென்றாலும், சாப்பிடும்போது நாக்குத்தான் சுவைக்கவேண்டுமேயொழிய, காதும் சிந்தனைப்பொறிக்கான நரம்புமண்டமுமில்லை என்பது அவர் நீதி. 'நாளெல்லாம் இத்தனை ஆட்டமும் ஆர்ப்பாட்டமும் சாப்பாட்டுக்கும் புலவர்பெருமைக்குளிப்பாட்டலுக்கும் இரவுச்சங்கதிக்கும்தான்; இதிலே எதுவும் சிதையும் வண்ணம் இடையிலே செருகக்கூடாது' என்பது பூபதியாரின் துணைவாதம். கொற்றவன் நீதிக்குப் பங்கமேதும் இருப்பதில்லை. சாப்பாடு முடிய, அந்தப்புரத்திலே ஏதாவதொரு துணைவி மஞ்சத்திலே மதியத்தூக்கம்.

அந்த நேரத்திலே, தலையிலே இரும்புப்பூண் உலக்கையாற் கொண்டு போய் இடித்துச்சொன்னாலும், பூபதியாருக்கு சித்தம், உலகம் பற்றிச் சிலிர்க்காது என்ற விடயம் அடைப்பக்காரருக்கும் அந்தப்புரத்தாதிக்கும் அப்பின இருளிலே சொட்டிய ஒளித்துளி போல. பிறகு மாலையில் எழுந்தால், பட்டத்தரசியுடன், ஊருக்குள்ளே ஓர் உலா; ஏதாவது ஓர் ஆலயத்துக்குப் போய் முதற்காளாஞ்சியைப் பெற்றுக்கொள்ளுகை. திரும்பி வரும்போது, வீதியிலும் வீடுகளிலும் புதிதாக ஏதேனும் இளம்பெண்களின் நடமாட்டம் உண்டோ என்றொரு கண்காவல் [பூனை பூட்டிக்கூட போரடித்துச் சோறுடைக்கமுடியாத நஞ்சைப்பூமியில் மாடங்கள் சிதைந்து மண்டப முற்றங்கள் மட்டுமே மிகுந்திருந்த சிறுநாடு பூபதியாருடையது என்பதை இந்த உலாவின்போது, கூட உலாவினால், நாமும் கண்டு கொள்ளாலாம்]. இரவுப்போசனம் போனபிறகு, பூபதியார் எதைத் திறப்பார் எதைமூடுவார் என்பதை எவரும் அறியமுடியாமல் அந்தப்புரத்துக் கதவுகள் மூடினால், மீளத்திறக்க மறுநாட்காலை சூரியன் உச்சிக்கு வர ஓரிரு மணிநேரங்களாகும்.

நாடாள்வாரின் வீட்டுவிவகாரவிபரம் இதுவாகி இருக்கும்போது, இந்தச்செய்தியை இந்தக்கணத்துக்குப்பிறகும் ஆறப்போடுவது என்பது, நாளைக்கு இதே கணத்தை, உள்ளத்திலே கனத்துடன் காத்திருப்பதாகத்தான் முடியும் என்று அடைப்பக்காரருக்கும் அந்தப்புரத்தாதிக்கும் இவற்றையெல்லாம் இங்கே நான் சொல்லமுன்னரே தெரிந்தே இருந்தது. தவிர, இ·து ஆறப்போடும் விடயமும் அல்ல; அடுத்தநாள் ஆகமுன்னர் காரியம் இதற்குமேலும் கையைவிட்டுப் போகவும்கூடும்; பூபதியாருக்கும் மூன்றாம் ஆளூடாகத் தெரியவந்தால், தம்மிருவர் தலைகளும் இப்போதிருக்குமிடத்திலேயே பிற்பாடும் இருக்கக்கூடும் என்பதும் குறித்துச் சொல்லமுடியாத விடயம் என்பதும் அவர்களுக்குப் புரிந்திருந்தது. ஆக, இப்போது யார் போய்ச் சொல்கின்றது என்பதுதான் அடுத்த கேள்வி. ஆண்டுக்கொரு மாரிகூடத் தூறாத மழையையும் அவித்தபோதும் அரைச்சாலும் நிறைக்கா அரைக்காணி விளைச்சல் நெல்லையும் பற்றி பூபதியாருக்கு விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கும் வில்லங்கம் பிடித்த ஆண் அதிகாரிகளின் இரைச்சலிடையே, அந்தப்புரத்துத்தாதியின் பூனைநடைகூட எழுப்பக்கூடும் அமைதியினை அடைப்பக்காரராலும் மறுக்கமுடியவில்லை. அந்தப்புரத்து அந்தரங்க விடயம் தவிர்த்து வேறேது விடயத்துக்குமாக தாதி நெல்விளைச்சலிடையே வர நிர்ப்பந்தம் இருக்கமுடியாதென்பதால், அவ்விடத்தே அவளது சாதாரண சில கணத்துப்பிரசன்னமே எத்தகைய வதந்திகளை நாட்டுக்குட் கிளப்பலாம் என்பதும் அந்தக்கிளப்பலின் சூடு, இருக்கும் சிக்கலையே இன்னும் சூரியனை நோக்கிச் சிறக்கடிகடிக்க வைக்கலாம் என்பதையும் அறிந்ததால், அடைப்பக்காரர் தன் சிகைச்சிண்டையே சொக்கட்டான் சோகியாய் முன்போட்டார்.

அடைப்பக்காரரைக் கண்ட பூபதியார், பக்கத்திற் கிடந்த பதிக்கத்துள் எச்சிற்சாற்றைத் துப்பிவிட்டு, வலக்கைச்சுட்டுவிரற்புறப்பகுதியால் ஈரமீசையை நிதானமாகத் துடைத்தபின்னர், இன்னொரு தாம்பூல மடிப்புக்குக் கையை நீட்டினார். சாட்டுக்குப் பவ்வியமாய் பக்குவமாய் வெற்றிலையைக் கொடுத்த அடைப்பகாரர், பூபதியாரின் காதுக்குள் சுருக்கமாக விடயத்தைச் சொன்னபோதும் பின்னும், ஏதோ தானேதான் நிகழ்ந்த துர்ச்சம்பவத்திற்குப் பொறுப்பு என்ற வியாக்கியானமாக, தனது பின்னந்தலையை சொறிந்து கொண்டார்.

வாயிற்குட் தாம்பூலத்தை அடைந்த பூபதியார், மென்ற சுவை மேலேறமுன்னர், விக்கித்துப்போய் நின்றார். நிற்கமாட்டாரா பின்னே? ஒரு பட்டத்துராணியும் இருபத்துமூன்று அடுத்தமட்டத்துப்பஞ்சணைமேனிகளும் என்று கணக்கு வைத்துக்கொண்டு 'இராஜமார்த்தாண்ட", 'இராஜகம்பீர" என்பவைபோல, இவற்றினையும் தன்கீர்த்திவிலாசமிடுகின்றவையாக எண்ணி வாழ்கின்றவருக்கு, தன் அந்தப்புரத்தின் ஓர் இளையசேர்த்தியை இரண்டு நாட்களாகக் காணவில்லை என்கின்ற செய்தி, கவலையைத் தந்தது - "நாடென்னென்ன என்னைப் பற்றிப் பேசுமோ?" அந்த நிலையிலும், பூபதியாருக்கு, அவளின் முகத்தினை மனத்துள்ளே எழுப்பிக் காணமுடியவில்லை. ஐம்பத்துமூன்று வயதிலே ஒவ்வொரு நாள் உலாவிலும் புதுப்புதுப்படிமங்கள் உள்ளத்திலே படலம்போட்டுக்கொள்கின்றவருக்கு இதுவெல்லாம் ஞாபகம் நிற்பதில்லை, அவரிடம் படிக்காசும் பொதிச்சோறும் பெற்றுப்போகும் புலவர்ச்சில்லறைகள் என்னத்தையெல்லாம் தம்மெண்ணங்களாகப் புழுக்கிவைத்து புழுகிச்சொல்லியிருந்தாலும்கூட.

"எவளாயிருக்கும்? அந்த மச்சநாற்றமடிக்கும் நெடிச்சி தங்காளோ, கங்கங்கமையாகவோ இருக்கக்கூடுமோ? சமையற்கட்டிலே இரசத்துக்கு உவர்ப்பு-துவர்ப்புப் பார்க்கின்றதிலே நாக்கு இரசனைமிக்கவளையெல்லாம் நான் காமரசம் சொட்டச்சொட்ட மூக்கையும் முந்தானைச்செருகலையும்மட்டும் முறைத்துப்பார்த்துக் கொண்டுவந்துபோட்டால், இப்படித்தான் ஆகும். ஆனாலும், அவள் பள்ளியறையிலேயே நல்லமடைப்பள்ளி நடத்தும் சிங்காரி." - பூபதி நெல்லுவர்த்தகம் வர்த்தமானம் மறந்து நினைவிலே தொலைந்தவளுக்கு ஒரு முகம் கொடுக்க அலைந்துகொண்டிருந்தார். அடைப்பக்காரருக்கு, பூபதியாரின் சங்கடம் புரியாததில்லை. அவரின் அந்தப்புரப்பட்டியலையும் இந்தப்புறப்பட்டியலையும் எந்தக்காலத்திலும் அமைத்து வருகின்றவருக்கும் இந்தத் தர்மசங்கடம் அகப்படாத விடயமில்லை; பூபதியாரின் தந்தைக்கும் கடைசிக்காலத்திலே போசன-பூஷண-பத்தினிப்பட்டியல் போட்டவர் அவரில்லையா? இலேகியம்தின்றே செத்த அப்பபூபதிக்கு, புத்திரபூபதி ஞாபகசக்தி எத்தனையோ மேல் என்று அடைப்பக்காரரின் எழுபத்தியிரண்டாம் பருவத்தை எட்டிய மூளை எடுத்துச் சொன்னது.

தானியச்சர்ச்சையை இரண்டு நாட்களுக்கு ஒத்திப்போடுவதினால்மட்டும், ஏற்கனவே வயிறுவற்றிச் செத்துக்கொண்டிருக்கும் மக்களின் உண்டிச்சுருக்கம் பெரிதும் பாதிக்கப்படாது என்று பூபதியூடாக, ஆலோசனைச்சபைக்குச் சொல்லிக் கலைத்தபின்னர், பூபதியைத் தனியே இருத்தி, எவளென்று அங்கவடையாளங்கள் சொல்லித் தெளிவு படுத்தினார். இறுதியாக ஒன்றரை மாதத்துக்கு முன்னர் பூபதியார் மேற்படி நங்கை, ஸ்ரீவள்ளியின் அறைக்கு ஏகியது உட்பட எல்லாமே அடைப்பக்காரர்தான் ஞாபகப்படுத்தவேண்டியதாயிற்று. பதினெட்டாம் பருவம் முட்டுக்காயாக முற்றும்தருணம் பூபதியின் ஒரு மந்தாரமாலை உலாப்போதிலே தெரியாத்தனமாக கோழிக்கூண்டினை அடைக்க வீட்டுமுன்றலுக்குப் போனவளைக் கண்டு சொல்ல, காய்கறிவியாபாரம் போல கன்னிகாதானம் இடம்-பொருள்-ஏவலுக்குப் பண்டமாற்றுப் பண்ணிக் கொண்டு வந்தவர் அடைப்பக்காரர். பூபதிக்கு அவளின் அந்தரங்க அடையாளங்கள் வேறு கிழட்டு அந்தப்புரத்தாதியை விட்டுச் சொல்விக்கவேண்டியதாகப்போயிற்று. ஊராளும்கோமானுக்கு ஏகப்பட்ட வேலையுண்டு. . . . இப்படியான சில்லறை விடயமெல்லாம் ஞாபகத்திலே வைத்துக்கொண்டிருந்தால் பொழுதும் பொருந்துநினைவும் கட்டுப்படியாகமுடியாதன்றோ?


அரசருக்கு உணர்ச்சி பொங்கிவழியவில்லை. 'பொருள் வருதலும் போதலும் இயற்கையின் இயல்பே' என்கின்றமாதிரி இருந்தார். அடைப்பக்காரருக்கு மேற்படி 'வாழ்தலும் இலமே... சாதலும் சுகமே' என்ற உளப்போக்கின் காரணத்தினால், பூபதியாரிலே மிகுந்த மரியாதையுண்டு. இவரின் அப்பனாக இருந்தால், பக்கத்தூரோடு வேலிச்சண்டைக்குப்போன அரைக்குருட்டுச்சேனையை வரவழைத்து ஊரிலே உள்ள பெண்களுக்குள்ளேயெல்லாம் ஒழிந்துபோன அந்தப்புரத்து மங்கை இருக்கின்றாளா இல்லையா என்று உரித்தே பார்த்துவிடுவார்; சேனை இதற்காகவே எவளாவது அந்தப்புரத்தாள் மடைப்பள்ளிச்சமையற்காரனுடனோ வாயிற்காப்போனுடனோ ஓடிப்போகமாட்டாளா என்று காத்திருக்கும் என்றுகூட ஊருக்குள்ளே ஒரு பேச்சு இருந்தது. இந்தப்பூமானுக்கோ கோபம் வரவில்லை; கவலை மட்டுமே மிகுந்து மிதந்து வந்தது... "என்ன குறையை என்னிற் கண்டு காணாமற்போனாள்?" பூபதியாரே கிணற்றிலே விழுந்தோ அல்லது புருஷசுகத்துக்கும் அப்பால் புத்திரவரம் கேட்டு சொப்பனத்திலே கண்டவொரு மூளிவிமானக்கோவிலுக்குத் தனியே தலயாத்திரை மேற்கொண்டோ காணாமற்போனாள் என்ற தொனியிலே சாதாரணமாகக் காணாமற்போனாள் என்று சொல்கின்றபோது, ஒரு பத்துப்பன்னிரண்டு நோஞ்சான் குதிரைகள் கொள்ளுத்தின்னும் இலாயக்கொட்டகையிலே ஒரு குதிரைக்காரனும் இரண்டுநாட்களாகப் பணிக்கு வரவில்லை என்பதைச் சொல்ல உண்மையிலேயே அடைப்பக்காரருக்கு மனம் வரவில்லை. ..... பூபதியாரின்மேலே அவருக்கு ஒரு மகன் பாசமோ அல்லது தன்னொரு மகள் வயிற்றுப்பேத்தியையும் அந்தப்புரத்துக்கு அள்ளிக்கொடுத்ததால் ஒரு மருமகன் பாசமோ.... என்ன இழவோ ஏதோவொரு நெகிழ்ச்சிப்பிணைவுண்டு. ஆனாலும், சொல்லாமல் இருக்கமுடியாது; சொன்னார்.

பூபதிக்கு ஊரென்ன தன் உடல்வலி(மை)பற்றியெண்ணும் என்ற உளவலி மேலோங்கியது. காளிங்கராயருலாவிலே, "இவனிடம் தமக்கொரு வாரிசைப் பெற்றுக்கொள்ளமாட்டோமா என்றெண்ணிய ஏக்கத்திலேயே, செத்துப்போன பெண்கள் எத்தனை இவ்வூருள்" என்றபடிக்கு எழுதப்பட்ட ஆண்மையைக்கு இவளின் குதிரையோட்டம் எத்துணை இழுக்குத் தரும் என்று கவலைப்பட்டார். ஆ!ஆ! குதிரை....... இப்போது ஸ்ரீவள்ளி யாரென ஞாபகத்துக்கு வந்தது.... மதர்த்த குதிரைதான் குதிரைக்காரனுடனோடும்.... ஏதோவொருகோவிலிலே சதிராடிய தாயைப் பெற்றுக்கொள்ள உள்ளூர்ச்சிற்றரசின் ஓட்டுவீடு இடம்கொடாததால், நாற்றுக்குவிட்ட நெல்லுப்போல, கரு முளைத்துச் சதைபற்றிப் பிடித்துப் பிறக்கமுதலே சொல்லி வைத்துப் பிறந்து வளர்ந்து பருவம் முற்றிய போதிலே, பழைய கடனைத் திரும்ப்பெற்றதுபோல் அழைத்து வந்த குதிரை...... திமிர்க்குதிரை..... முதல்நாள் இவரைக் கண்டவுடன், "என்னை அணைத்துக் கொள்ளப்போகும் இவர் மகன் இளவரசன் இனித்தான் வரப்போகின்றான்" என்ற எண்ணத்திலே, மாமன்பூபதி என்றழைத்தவளுக்கு விடயத்தைச் சொல்லி 'வழிக்குக் கொண்டு வந்து' இவர் கொஞ்ச எடுத்துக் கொடுக்கத் தேவைப்பட்டது, அந்தப்புரத்துக்குக் கொஞ்சநஞ்ச நாட்களல்ல. குதிரை பின்னால், தாயைப் போலவே மெத்தையிலும் மாடத்திலும் மொத்து மொத்தென்றாலும் மிருதுவாகத்தானே குதித்துக் கிடந்தாள்! என்ன குறை வைத்தேன் இவளோட..... சண்டைக்கோழி தங்கம்மைகூட இவரின் பெயரைச் சொல்லி, போன வாரம்தான் ஒரு பெண்பிள்ளை பெற்றுப்போட்டாள்.... இவளுக்கென்ன கேடு வந்தது எவனோடோ குதிரைச்சவாரி செய்ய.... பூபதிக்கு இப்போது, ஆத்திரம் துளிர்த்தது....... என்ன பெண்ணிவள். ஏதேனும் தேவையென்றால், சொல்லாமலா புரியும். நெல் விளைச்சல் குறைகின்றதென்றால், நெடுநாள்மழையில்லை... வரட்சியிலே பூமி பாளம் பிளந்து பயிர் முளைக்க உயிரில்லாமல் தினம் தினம் செத்துப்போகின்றதென்று சொன்னால் புரிந்து கொள்ளமுடிகின்றது. பாராளும் பூபதியிடம் தேவையை எடுத்துச் சொல்லாமல், எவனோ குதிரைக்குக் கொள்ளுப்போட்டு தன் வயிற்றுக்குப் புல்லுப் போட்டுக்கொள்ளும் குதிரைக்காரனுடன்... எனக்குப் பிறந்த பெண்ணாக மட்டும் இருந்தால், ஒன்றில் ஒழுங்காக வளர்த்திருப்பேன், அவ்வாறு வளர்ந்திராமல் இப்படி மதம் பிடித்தலைந்தால், வெட்டிப்புதைத்......... பூபதி பல்லை நெருமிக்கொண்டு உலாவத்தொடங்கினார்.... "பராக் பராக்!! இராஜ இராஜ இராஜ மார்த்தா...."

அடைப்பக்காரர், குதிரைக்காரனையும் ஸ்ரீவள்ளியையும் தேட -செய்தி வெளிவிடாத தேர்ந்தெடுத்த - கையாட்கள் ஓரைந்து பேரை நாலாதிசையும் அனுப்பாமல், அவளின் அம்மா ஊருக்கும் அவனின் அப்பா ஊருக்கும் அனுப்பி விட்டு, வந்து பூபதியின் திட்டைத் தான் தின்று, பூபதியாரை மதியப்போசனத்தினைத் தின்னச்செய்தார். பாயசத்துள் உப்பு மிதந்ததாக ஒருத்தியும் பாகற்காயிலே சீனி மிகுந்ததாக இன்னொருத்தியும் மடைப்பள்ளி வருமானம் இழந்து தத்தம் வீடு போனார்கள். ஒவ்வொரு அந்தப்புரத்து நாயகியும் பூபதியார் அன்றிரவுக்குத் தம்மறைக்கு வந்துவிடக்கூடாதே என்ற நேர்த்தியை அவளவள் ஊர் அம்மனுக்கு கொடைக்கடனாக விட்டுவைத்துவிட்டும் ஒருவிதக்குரூரத்திருப்தியிலே உலாவினாள். அவரும்கூட எவளின் அறைக்கும் தன் திருமுகமும் பெருமேனியும் காட்டும் உள்ளத்தோடு இருக்கவில்லை. சயனமஞ்சம் என்று -புழுகுமூட்டைப்பூச்சிப்பாய்தூங்கிய புலவரால், மெய்யும் தன் மெய்வீங்க, துக்கலாகச்- சொல்லப்பட்ட எட்டுத்தலையணை, இரட்டைஇலவம் பஞ்சுமெத்தைத் தேக்குக்கட்டிலிலே தன் தேகக்கட்டைச் சரித்தவர், இவருக்கு முற்பட்ட இரண்டாயிரமாண்டின் எல்லா நாட்டுச் சரித்திரமும் சொன்ன ஒவ்வொரு நாயகனும்போல, தூங்கமுடியாமல் தொந்தியையும் பிருஷ்டத்தையும் மாற்றி மாற்றி மெத்தைக்குக் குத்துச்சண்டை கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்......

...."என்ன பெண்! என்ன பெண்!!....." பூபதியாருக்கு, தன் முன்னைய தெய்வக்குற்றம்-பெண்குற்றம், இவளின் வடிவிலே தனக்கு ஏதேனும் மறைப்பு விலக்கிக் காட்டி உட்பொருள் சொல்லப்பார்க்கின்றதோ என்று தோன்றியபோது, வாயிற்காவலர் நடுவிரவு முறை மாறியது தெரியவில்லை. பூபதியார் பெண்களையோ குழந்தைகளையோ அவரின் பாட்டன் முப்பாட்டன்போல, பெண்நிமித்தம் பொருள்நிமித்தம் நிலம்நிமித்தம் கொன்றவர் அல்ல; கொல்லக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர்கூடவும்தான். அதன்காரணமாகத்தான், அவரின் நாடு சுருங்கியும் வீடு பெருக்கியும் இருப்பதாக கிழட்டுக்கிளிஜோசியர்கள் தொடக்கம் தேசசஞ்சார கஞ்சாமுனிகள் வரை அடித்துச் சொல்லி அவரவருக்கு ஆள் நாவாளுமைக்குத்தக்கபடி பெற்றுப்போயிருக்கின்றார்கள். வள்ளி இல்லாதுபோனது, பெரிதாய்ப் பழகாத உயிருள்ள பெண்ணென்ற அளவிலே தனக்கு இழப்பென்றே உணர்வினூடாகத் தோன்றவில்லை என்று சொல்லிக்கொண்டார்; ஆனாலும், நல்ல ஆரோக்கியமான இளமைதிமிறும் சவாரிக்குதிரையை லாயத்திலே இருந்து ஏதும் இலாபமின்றி இழப்பது அவ்வளவு உள்ளத்துக்குச் சுகமாக விடயமில்லையே! சும்மாவா காளிங்கராயருலாவிலே, ஸ்ரீவள்ளியின் பின்புறத்தினையும் முன்தனத்தினையும் அவரின் செல்லவலிமைக்கும் மகேந்திரகிரிக்கும் ஒப்பிட்டு சபையிலே - ஓர் ஏழெட்டிருக்குமோ..... பின்புறத்துக்கு இரண்டு.... அவரின் அஸ்வதனம் பற்றி இரண்டு... மகேந்தி... பத்துப்பன்னிரண்டே இருக்கும்..... - பாடல் கரகோஷம் சிரக்கம்பம் இவையத்தனைக்குமிடையே ஸ்ரீவள்ளி நாணி முகம் திரையுட் புதைக்கவும் மீதி நாயகிகள் கோணிச் சிவக்கவும் சொல்லப்பட்டது!!! என்ன இழப்பு!!! அஸ்வமேதயாகம் என்று ஒன்று செய்தாலும்கூட பலி கொடுக்கக்கூடாத பளபகட்டுப்பரிகளுமுண்டு. அவற்றின் அழகும் இளமையும் சிலிர்ப்பும் துள்ளலும்..... அப்பப்பா! அவை எவரும் சிதைக்காத வண்ணம் தாமாய்க் கிழடுபற்றி அழுகுண்டு அழிவுண்டு போகும் வரைக்கும் பேணிப் பாதுக்காக்கப்படவேண்டும்.... கோயிற்றேவடியாள்கள் போல... ஸ்ரீவள்ளியின் தாய் நலங்கம்மைபோலவல்ல.....

..அறைவாயில் மெல்லத்தட்டுண்டது.....அடைப்பக்காரர்.... குதிரைக்காரன் அப்பன்வீட்டுக்கருகாமையிலே ஒரு சத்திரத்து மூலையிலே பதுங்கியவரைப் பிடித்து வந்திருக்கின்றார்கள். அவளினை இருட்டோடிருட்டாக இழுத்துவரமட்டும் மூன்று அந்தப்புரத்தாதிகளை இரவோடிரவாகக் கொண்டுபோய், ஆண்கைபடாமற் கொண்டு வந்து அவளின் அறையிலே பலத்தகாவலுடன் வைத்திருப்பதாகச் சொன்னவர், குதிரைக்காரனைப் பற்றி ஏதும் சொல்லவில்லை... சோதிடர்கள் பெண்கள் குழந்தைகள் பற்றி மட்டும்தான் சொல்லியிருக்கின்றார்கள். வீடு பெருகுதலுக்கு பெண்களும் குழந்தைகளும் காரணவான்களாலும், நாடு சுருங்கலுக்கு உடல்வலிபொங்கு அடங்கா முரட்டுக்குதிரைகள் குறைந்து கொண்டுபோவதும் காரணமாகும் என்று பூபதிக்குத் தெரியும். ஆனாலும், அமர்க்குதிரைகளின் மதம் இரண்டு வகையானவை; 'நான்' 'பெண்'. பெண்மோகம் பிடித்த குதிரைகள் எத்துணை பலமுடைத்தெனிலும், போருக்காகா; இலாயத்துக்கும் காட்டுக்கும்கூடவே...

அந்த அர்த்தசாமத்தையடுத்த வேளையிலே அவளைத் தான் போய்க் காண்பது தனக்கு இழுக்கு என்பதிலும்விட அடைப்பக்காராரே பின்னிருந்து அரைக்கொடுப்புக்குட் சிரிக்கக்கூடும் என்று புரிந்து கொண்ட பூபதி, புளிக்கள்ளிலே போதையேற்றிக்கொண்டு போய்த்தூங்கினார்.... வாலைப்புரவிகள் அறுக்கமுடியாத கயிறுகளும் போரிலே புறமுதுகுகாட்டி ஓடுகின்றவனை ஏற்றிய குற்றத்துக்காக ஈட்டி பாய்ந்திறக்கும் சூரக்குதிரைகளும் கொட்டிலிலே போட்ட கொள்ளைத் தின்று விட்டு தின்ற கடனுக்கு, திரியாத நூலிலே நெய்யாத நேர்த்திப்பட்டுடுத்த திகம்பரராஜாவைத் தாங்கிக் கொண்டு ஊருலாவரும் போருக்குதவா மேனிமினுங்கு அழகஸ்வங்களும் அவரின் கனவிலே ஊரின் எல்லாப்பாட்டைகளிலும் சத்திரமுடுக்குகளிலும் அந்தப்புரத்து வாயிற்கதவுகளுக்குப் பின்னும் ஓடியும் குதித்தும் குழப்பிக்கொண்டிருந்தன.

காலையெழுந்த பூபதிக்கு, ஊரெல்லாம் அந்தப்புரத்துத்தாதிகள் பரப்பிய புதினத்தை அடைப்பக்காரர் சொல்லியே ஆகவேண்டியதாகப் போய்விட்டது; அல்லாதுவிடின், கோமானின் கூற்றுகளும் காற்குதிநடையும்கூட குட்டையைக் குழப்பிவிடும் என்று பயந்தார். பூபதி, ஸ்ரீவள்ளியைத் தன் சமூகத்துக்கு சயனவறைக்கே அழைத்து வரச்சொன்னார். அந்தப்புரத்தாதிகளினால், 'அழைத்து வரப்பட்டவள்' பூபதியினதும் அடைப்பக்காரர் 'பிரசன்னத்துக்கும்' முன்னால் மட்டும் குதிரைக்காரனைப் பற்றி முதலிலே பேசினாள்; அதன் பின்னர், பூமான்கள் இழிசெயலாளிகளுடன் பேச்சுநிகழ்த்துவது வழக்கமில்லையாதலால், பூபதியின் ஆணையின்பேரிலே அடைப்பக்காரர், முரட்டுக்குதிரைகள் போரிலே மட்டும் இறப்பதில்லை என்பதையும் இலாயத்திலே உள்ள மீதிப் பவனிக்குதிரைகளின் உளச்சமநிலையைக் குழப்பும்பட்சத்திலே திருத்தமுடியாத காமச்சூடுகனல் வாலைப்புரவிகளுக்கும்கூட அந்தவிதி மாற்றமுடியாதது என்பதைச் சொன்னார். நாடு சுருங்கினாலும் வீடு பெருகுதலிலே என்றைக்கும் நம்பிக்கை கொண்ட பேருள்ளத்தவர் பூபதி என்பதையும் சொல்ல அடைப்பக்காரர் மறக்கவில்லை. அதையடுத்து, குதிரைகளும்கூட அகாலவீடுபேற்றிலே விருப்பற்றவையாதலால், காத்திருந்தாயினும் வீட்டிற்பெறுதலிலே தான் நம்பிக்கை கொள்ளவிரும்புவதாக ஸ்ரீவள்ளி கவலைக்கேவலுக்குள்ளும் ஆத்திரத்துள்ளும்கூட ஆற்றாமை அவதிப்பட்டு வெளிவரச் சொன்னாள். ஓடியகுதிரைகளைக் கட்டிக்காத்துக் கொண்டிருந்து நம்பி உலாச்சவாரி போகமுடியாதென்று பூபதி வெற்றி நாற்றப்பிசிறடித்த குரலிலே அடைப்பக்காரரிடம் அதட்டிச் சொன்னார். வாலைக்குதிரையிறச்சியை எவரும் உண்ணவோ அதிலெவரும் சவாரி செய்யவோ முடியாத நிலையிலே குதிரையை ஏதோவோர் ஆலயத்துச் சுவாமி பவனிக்குத் தத்தம் செய்தார் பூபதியார் என்ற பட்டயம் தனக்குப் பிடிக்கவும் பெருமை சேர்க்கவும் கூடும் என்றார். ஆனாலும், குதிரையின் உளவிருப்பறிந்தே பூபதி தெய்வத்துக்குத் தத்தம் செய்தார் என்றும் கீர்த்திகள் பாடப்படவேண்டும் என்ற கருத்தும் தனக்கு இருப்பதை, தன் 'தாழ்மையான வேண்டுகோளின்' ஊடாக அடைப்பக்காரர் அவளிடம் சொன்னார்.

குதிரைக்கும் உயிர்ப்பற்றுண்டு. குதிரைகளின் சவாரி வேண்டிய கோவிற்றெய்வங்களும் உண்டு. தெய்வங்களிடம் தேவை வேண்டிப்போடும் கோமான்களும் உண்டு. விக்கிரகச்சிலையிடம் நைவேத்தியம் வைத்துச் சொல்லமுடியாதை ஆண்டவனின் பரியிடம் பரிந்துரைக்கும்படி அர்ப்பணித்துச் சொல்லி அதன் ஏதோ குறியை எமக்கான திருப்தியின் வெளிப்பாடாய்க் கருதிக் கொண்டு போவதெம் வழக்கம்.

ஸ்ரீவள்ளியின் பின்புறப் பவனியைப் பாடிய புலவர்கள் பின்வந்த காலத்திலே அவளிடம் தெய்வீகம் தோன்ற பூபதியின் பெருந்தன்மையே காரணம் என்று பாடி, கூடவே வேறொரு அந்தப்புரத்துப் புரவீகவல்லியின் முன்புறத்து நாகப்படத்தின் தடத்தைப் பற்றி அவள் முன்னிலையிலேயே பலர் முச்சுவிடப்பாடி, பூபதியிடம் ஒற்றைக்குலை வாழைக்காயுடன் பத்துப்படி அரிசி வாங்கிப்போனார்கள். குறவள்ளி தெய்வமான கதை தெரிந்தவர்கள் ஸ்ரீவள்ளியை மட்டும் விட்டுவைக்கவில்லை. பூபதிகூட, அவளிடம் சில சமயங்களிலே ஆண்டின்முதல் நெல்விதைப்பு, அடுத்தடுத்த தன் புதுச்சேர்த்திகளின் மாதவிலக்கின்பின்னான தன்கூடலுக்கான சுபகாலம் என்பனபற்றி தெய்வக்கூற்று கேட்டுப்போனதாக வாய்மொழிச்சரிதம் சொல்லும்; ஸ்ரீவள்ளிஅம்மானையும் கூத்துவள்ளியும், அவளின் சிறப்புகளை -அவள் இறப்பின் பிற்காலத்தோர் சிலையெழுப்பிக் கும்பிட முன்னாலேயே- அரசவுலாத்துலாக்களுக்குச் சமபாரம் உலாவவிட்டுப்போயின. பூபதியின் சிலைகூட எல்லைவள்ளியம்மாவின் சிதிலடைந்த கோவிலைப் பார்த்து, உறையிட்ட வாள்தொங்கும் கச்சத்துடன், ஒருகால் மண்டியிட தலைதாழ்த்தி வணங்க மழைக்கும் வெயிலுக்கும் மண்டியிடாமல் நிற்கின்றது. பூபதிக்கெதிரானவர்கள், குதிரைக்காரனுக்கு ஒரு கூத்தும் இரண்டு கோயில்களும் கட்டிக்கொண்டார்கள்; இன்றைக்கும் வருடத்துக்கு இரண்டு முறை குதிரைக்காரன் வள்ளியம்மையிடம் வரும் திருவிழாவும், அதன்காரணமாக வருடத்துக்கு நாலுமுறை பூபதி-குதிரைக்காரன் சாதிச்சண்டையிலே குதிரைக்காரன்பக்கம் நாலு குதிரைகளும் பூபதி பக்கம் இரண்டு குதிரைகளும் விழுவது வழக்கமாகிப் போனது. அடைப்பக்காரரைப் பற்றியும் அந்தப்புரத்தாதிகள் பற்றியும் எவருமே பாடவுமில்லை... குதிரைக்காரன் பற்றிய இரண்டு திரைப்படங்களிலும் பூபதி பற்றிய ஒரு திரைப்படத்திலும் வள்ளியம்மை பற்றிய எல்லாத்திரைப்படங்களிலும் .. சில சமயங்களிலே மேற்படித்தொழிலாளர்களை விதூஷகனாகக் காட்டிவிட்டதாகவும் காட்டாமல் விட்டதாகவும் பொதுவுடமைக்கட்சிக்காரர்கள் புரட்சிக்குரல் எழுப்பியதுண்டு. பெண்நிலைவாதிகள், குதிரைக்காரனின் குடுமியையும் பூபதியின் குடுமியையும் பிடித்துக்கொண்டு வள்ளியம்மையை இருந்த குட்டித்தேவதைநிலைக்கும் மேலே கொண்டு போய் முழுத்தெய்வமாக்கி 'ஸ்ரீவள்ளிதேவி' என்று 'உயர்நிலை அங்கீகாரம்' கொடுத்துவைத்தனர். பழம்பண்டிதர்கள், 'அம்மானையும் உலாவையும்' கிளறிக் கிளறி, எல்லாப்புளுகும் எம்புழுகே; ஆதலினால், உன்னதத்திலே உள்ளது அகல்அல்குல் வர்ணிப்பும் அரசனுலாவும் சந்தத்தில் யானைத்தந்தமும்' என்றுவிட்டு, அடுத்த மூச்சிலே, புதுப்புலவர்கள் கிராமத்துக்காதைகளை முன்வைத்து புதுக்க விதைத்து வளர்ப்பதைத் தறிப்பதிலே கோடாரி சீவிக்கொண்டார்கள். நாடகர்கள், கிராமியவேருக்குத் திரும்பிப்போனோம் என்று சொல்லி இருட்டுச் சிம்னி விளக்கிலே ஆலமரத்தடியிலே சுத்திவர இருந்து பத்துபேர் பூச்சி பூரானுக்குப் பயந்து பயந்திருந்து முதுகுகள் வியர்வை ஒட்டுப்பட உட்கார்ந்து பார்க்க நாடகம் போட, பல்கலைக்கழகத்து அறிஞர்கள் அதற்கு திறனாய்வு செய்து ஆராய்ச்சிப்பட்டம் வாங்கி தம் பெயர்களின் பின்னே ஒட்டிக்கொண்டார்கள். சரித்திர ஆசிரியர்களும் தேசியவாதிகளும் மொழிவாதிகளும் மூக்கை நுழைத்து இன நாட்டு அடையாளங்களைத் தேடிக்கொண்டார்கள்.

இப்படியாக, செத்துப்போனவர்களிலே தேசம் பிழைத்துக்கொண்டிருக்க, நானோ, அவளை மீளத் தன்னுடன் கூட்டிக்கொள்ளாத குணத்துக்காக பூபதியை வைது, 'தேசாபிமானி'களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டேன்; அவளைக் கொல்லாமல் விட்ட அவர் பெருந்தன்மையை உயர்த்திச் சொல்லி, பெண்ணிலைவாதிகளிடம் கூட்டத்துக்கொரு நீதி கற்றுக்கொண்டேன். அவளின் சமூகத்தினை எதிர்த்து நிற்காத பயந்த குணத்தைப் பேசி, மரபின் புனிதத்தினைக் கற்பிப்பாரிடம் இனவிழுமியத்தினை இலவசமாக வாங்கி விழுங்கிக்கொண்டேன்; அதே காரணத்துக்காவே பெண்ணிலைவாதிகளிடம் இன்னொருமுறை வெளி-காலப்பிறழ்வினைப் பற்றி உபதேசம் பெற்றுக்கொண்டேன். குதிரைக்காரனின் மூடத்தனமான திட்டமிடாமல் ஈருயிர்களைப் பாதித்த முட்டாட்டனத்தினைக் குறிக்க, பாட்டாளிகளின் கூட்டாளிகள் எவரென்றெல்லாம் அடையாளம் கண்டுகொண்டேன்; இறுதியாக, 'அன்றைய அவர்களின் சமூகத்தின் எண்ணங்களும் சிந்தைகளுக்கும் அவர்கள் எவ்வாறு அடங்கிப்போக வேண்டியிருந்தது... அதிலிருந்து இன்றைக்கு எந்தளவுக்கு மாறுபட்டுக்கொண்டோம்' என்பதை கண்ணாடி முன் கேட்டு என்னிடமே நான் வாங்கிக் கட்டிக்கொண்டேன்..... இத்தனை கொண்டலின்பின்னும் இடிபோதாதென்று, ஒரு மனிதனை, தனியே முழுக்க நல்லவன் அல்லது முழுக்கவும் கெட்டவன் என்று கறுப்பு வெள்ளைக் கொடி -'யிங் யாங்' வட்டம் கீறாமல்- பிடித்தது பிடிக்கவில்லையெனக் கருத்தாடி எல்லோரிடமும் கட்சி, பால், தயிர், சாதி பேதமின்றி நீதி வாங்கிக் கொட்டிக்கொண்டேன்...... மொத்தத்திலே எவரும் புளிப்பையும் இனிப்பையும் மாங்காயிலே மட்டும் பார்க்க விரும்புகின்றார்கள்... கசப்புமருந்தினைக்கூட, இனிப்பைப் போட்டு சுற்றி, இனிப்பாகவே கசப்புத் தெரியமுன்னர் விழுங்கிவிட எண்ணும் உலகத்தின் ஓரங்கம் நான்..... இன்றைய இருப்பிலே ஒன்றையாவது கேள்வி கேட்க எனக்கு உரிமை இருக்கின்.................."

}


- கேதீஸ்வரன் எழுதிக்கொள்வதை இங்கே நிறுத்த வேண்டியதாகிப் போய்விட்டது; சிவாந்தினி கூப்பிட்டாள். கொஞ்சம் சினமேறியது...."என்ன இவள்! எண்ணவோட்டத்தைக் குழப்புகின்றாள்"

"என்ன?!"

"சாப்பிட்டுப்போயிருந்து மிச்சத்தை எழுதுங்கோவன்."

"எத்தினை முறை சொல்லியிருக்கின்றன். எழுதுற நேரத்திலை குழப்பாதை எண்டு... ஒருக்கால், விட்டால் திரும்பி அந்த 'மூட்'டுக்கு வர்றது கஷ்டமெண்டு உனக்குத் தெரியாதே... நீ கொஞ்சம் இருந்து படிக்கேக்கை குழப்பினால், எப்படியிருக்கும்?"

அவள், "சரி! சரி!" என்று கைகளை -சரணாகதி அடைகின்றவள் போல- ஒரு கைக்கரண்டியுடன் தூக்கிக்கொண்டு சிரித்துக்கொண்டு பின் சாய்ந்தபடி, பயப்படும் பாவனை காட்டினாள்.

அவன், " நீ என்ரை 'மூட்'டை இண்டைக்குக் கெடுத்துப் போட்டாய்" என்றபடி, எழுதியதை அப்படியே விட்டபடி எழுப்பிப்போனான்.

சமையலறைக்கும் வரவேற்பறைக்கும் இடையிலே இருவருக்குமிடையே நின்று பார்த்துக் கொண்டிருந்த நான் (கொஞ்சம் ஆத்திரத்துடனும் வேதனையுடனும்) உள்ளே புகுந்தேன்..

"கேதீஸ்வரன், நீங்கள் செய்கிறது சரியில்லை; உங்கள் மனைவி உங்கள்மீதுள்ள அக்கறையினாலேதானே உங்களினைச் சாப்பிட வரும்படி சொல்கின்றார்; நீங்கள் இவ்வாறு எரிந்து விழக்கூடாது; இரண்டோ மூன்றோ நூற்றாண்டுகளுக்கு முன்னாலே இன்னொரு நாட்டிலே இறந்துபோன ஒரு கற்பனைப் பெண்ணிற்கு, கதையிலே நியாயம் கேட்பது முக்கியமா அல்லது மெய்யான உங்கள் மனைவியிற்கு அவரின் அன்பினையும் அக்கறையினையும் மதித்து, ஒரு கதைக்கான உளநிலையைக் கொஞ்ச நேரம் விட்டுக்கொடுத்து, சாப்பிடப்போகின்றது முக்கியமா?

நீங்களும்தான் சிவாந்தினி, உங்கள் கணவர் மிகவும் ஆர்வத்துடன் எழுதுகின்றபோது, அது புரிந்தும் சிறிது பொறுத்திருக்காமல், உடனே சாப்பாட்டுவிவகாரத்தினை முடித்துவிட்டு பிறகு மிகுதி விரும்பியதைச் செய்யுங்கள் என்று கேட்பது முறையில்லையா? அவர் ஒரு பெண்ணுக்கான நீதியைப் பேசும் கதையைச் சொல்லிக்கொண்டிருக்கின்றார் என்பதைக்கூட அறியாமல்....... சே! கணவரின் உளநிலையை மனைவியும் மனவியின் உளநிலையினைக் கணவனும் புரியாமல் இதுவென்ன வாழ்க்கை? அதிலென்ன வெற்றி?!"

-சலித்துக்கொட்டினேன்..... அவியலும் பொரியலுமாக.

எதிர்பாராத கூற்றுக்களும் வினாக்கொத்துமாக வர, திகைத்துப் போய் நின்றவர்கள் ஒருமித்துக் கேட்டார்கள்;
"நீர் யார்? உமக்கென்ன எங்கள் இருவரின் தனிமையிடையே ஒளிந்திருந்து ஒட்டுக்கேட்டு நீதி சொல்லும் வேலை?"

இதை நான் உங்களுக்குச் சொல்லித்தான் ஆகவேண்டும்; இந்தக்கேள்விகளை நானும் அவர்களிடம் எதிர்பார்க்கவில்லை....
"நானா? கடவுளே!! நீ இல்லை என்பது உண்மைதானோ!! நான்தான் உங்களைப் படைத்து உங்கள் சுதந்திரவிருப்பிலே நடமாடவிட்டிருக்கும் எழுத்தாளன். ஆக்கதாரிக்கு அவனின் பொம்மைகள் முன்னே அங்குமிங்கும் நடமாட உரித்தில்லையா? இ·தென்ன கற்பனைத்தேசம்! இதில் வேறு சட்டதிட்டங்களும் வாழ்நெறிக்கோவைகளுமா? பயிர்வைத்தவன் விளைச்சலெடுக்காமல், நிறைபயிரே தன்னைத்தான் நெல்லறுவடை பண்ணிக்கொள்ளுமோ?"

அவர்கள் கொஞ்சம் திகைப்பு கலைந்து, படைத்தவன் என்ற பெயரிலே என்னோடு சமரசத்துக்கு வந்தபோதும், அவர்களின் அந்தரங்கப்பேச்சிடையே புகுந்த ஆத்திரம் இன்னமும் அவர்களிடம் இருந்தது போலவே தெரிந்தது...

"நாங்கள் சுயவிருப்பிலே செயற்பட உங்களால் விடப்பட்டவர்கள் என்றால், பிறகு எங்கள் நியாயக்கோவைகளையும் வரைந்து கொள்ள எங்களுக்கு உரிமையில்லையா?.... சரி அதைத்தான் விடு..... ஒரு சிறகு முளைத்த குருவிக்கு முட்டை போட்ட அம்மாக்குருவி அதைச்செய் இதைச் செய்யென்று கட்டுப்படுத்திக்கொண்டிருப்பது, அதன் சுதந்திரத்தினையும் செயற்றிறனையும் மட்டுப்படுத்தி, பழையதைத் திரும்பத்திரும்பக் கிளறிக் கொண்டிருப்பதாகாதா? ஆயிரம் எண்ணங்கள்தான் மலரட்டுமே, ஐயா" - கொஞ்சம் நக்கலாகக் கேதீஸ்வரன் கேட்டான்..... இரண்டு நூற்றாண்டுக்கதாநாயகியை வைத்து இறந்தக்காலத்துக்கதை எழுதிக்கொண்டிருக்கிறவன் புதுமை பற்றிச் சொல்லிக் கேட்கிறான்.... இந்தக்கேள்விக்காவே இவனை முப்பத்தைந்து வயது நாயகனாகப் படைக்காமல் ஓர் எழுபது வயது நடக்கவும் முடியாமல் தள்ளாடும் அறளைபெயர்கிழட்டுச்சென்மமாக நான் உளறவும் உருளவும் விட்டிருக்கவேண்டும்..

என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டேன்...... ஓர் எழுத்தாளன், தனது எண்ணவோட்டத்தைக் கட்டுப்படுத்தக்கூடாதென்றாலும் திசையை வகுத்துத்திருப்பிக் கொள்ளவேண்டும்.... இல்லாவிட்டால், போகாதவிடத்துக்குப் போய்ச்சேரும்..... அல்லது வெள்ளம் வற்றப் போகாமலே மண்ணுள் ஊறி வற்றிப்போம் நீர். "இல்லை! இல்லை!.... அதற்காகச் சொல்லவில்லை... உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால், உங்களை நான் உங்கள் விருப்பிலே ஓடவிட்டதே, உங்களின் உட்போக்குகளை மூன்றாம் ஆளாய் இங்கே உங்களுக்குத் தெரியாமல் நின்று அறிந்து எழுதிக்கொள்ளவே.... நான் சொல்லிக்கொண்டு நின்று கொண்டிருந்தால், நீங்கள் வெறும் என் கைவிரலாடு பொம்மைகள்தான்... உங்களுக்கென்று ஏதும் சுயம் இல்லை. எனது விருப்பே உங்கள் ஆட்டமும் பாட்டமும்."

சிவாந்தினி கொஞ்சம் இறுக்கமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள் (அடுத்தமுறை இவளைக் கொஞ்சம் நகைச்சுவையுணர்வு தூக்கும்படி சரளமான பேச்சுக்காரியாகப் படைக்கவேண்டும் நான்)...." என்னத்தினை எங்களிடம் படைத்து வளர்த்துவிட்டதற்குக் கைமாறாக எதிர்பார்க்கின்றீர்கள்?" ["கைமாறாக" என்பதற்குக் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தாள் என்பதாக எனக்குத் தோன்றியது]

அவசர அவசரமாக மறுத்தேன், "பதிலுபகாரமாக எதையும் நான் உங்களிடம் எதிர்பார்க்கவில்லை" - தொடர்ந்தேன், "ஆனால், உங்களின் தனித்துவமான, நீங்கள் நீங்களேயான வளர்ச்சியிலே கணவன் மனைவியாக உங்கள் உளப்பாங்கு ஒருவரையிட்டு மற்றவருக்கு என்ன இருக்கின்றது என்பதினை அறிந்து கொள்ளும் படைப்பாளியின் மூக்குநுழைப்பு எனது" - வசன இறுதியிலே கொஞ்சம் யாசிக்கும் குற்றவுணர்வுடனே பேசினேன் போல எனக்கே தோன்றியது.

அவன் இன்னமும் இலேசாக - நெகிழ்ந்து பேசத்தொடங்கினான். [இன்னொருவன் இறங்கிப்போய் யாசிக்கும் தொனியிலே பேசத்தொடங்குகையிலே, மற்றவனுக்கு பரிதாபமும், கூடவே கொஞ்சம் கம்பீரமும் ஏற்பட்டுவிடுகின்றன என்பதை என் இனிவரும் ஏதாவதொரு கதையிலே குறித்துக்கொள்ளவேண்டும் என்று அப்போது எண்ணிக்கொண்டேன்]

"நீங்கள்......."

".....யசோரஞ்சன்"

"யசோரஞ்சன், உங்களை நோகும்வண்ணம் ஏதும் சொல்லியிருந்தால், எங்களை மன்னித்துக்கொள்ளுங்கள்..." [அவளுக்காகவும் அவனே பேசுகின்றான்........ திரும்பிப்பார்த்தேன்.... அவள் அப்படித்தான் என்று தலையாட்டுகின்றாள்.... இவளொருத்தி...... என் கதாநாயகிக்கான பண்பில்லை.... அவன் தான் எழுதுவதை அவள் குழப்பிவிட்டாள் என்று சற்று கொஞ்ச நேரத்துக்கு முன்னர்தான் அவளின் நல்நோக்கத்தையும் எண்ணாமல் ஆத்திரம் கொள்கின்றான்..... இவள் இப்போது அவன் சொல்கின்றதெல்லாவற்றுக்கும் தலையாட்டுகின்றாள்...சரியான பைத்தியக்காரி]

அவள தொடர்ந்தாள்..... [நான் எண்ணியதைப் புரிந்து கொண்டிருப்பாளோ??].." எவருக்கும் திடீரென ஒரு முன்பின்னறியாத புதியவர் தனிமையின்போது குதித்து, இடக்குமடக்கான குறுக்குக்கேள்விகள் கேட்டால், ஆத்திரம் வராதா? அதுதான்......" [இவளையா பெரிதாகப் பேசமாட்டாதவளாகப் படைத்துவிட்டோம் என்று கவலைப்பட்டேன்!.....குழந்தைகள் எப்படித்தான் தாய்தந்தையர் எண்ணமுடியாதபடி உளப்பக்குவமும் முதிர்ச்சியும் பெற்று வளர்ந்து விடுகின்றார்கள்!!]....."மற்றப்படி, நீங்கள் சொன்ன கூற்றுக்களோ, கேட்ட கேள்விகளோ எதுவும் எங்களை எதுவும் புண்படுத்தவில்லை..... தனக்கென சில கருத்துக்கள் கொண்ட மூன்றாவது மனிதனாக இருந்து மற்றவர்களின் வெளிநடத்தைகளையும் கூற்றுக்களையும் பார்க்கின்ற எவருக்கும் - உங்களைப்போன்ற தாய்தந்தை தரத்திலே இருக்கும் எவருக்கும்கூட- இப்படித்தான் தோன்றக்கூடும். செயல்கள் எங்களினதென்றாலும், கண்கள் உங்களதல்லவா? நானும் இவனும் மனிதர்கள்தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கணத்திலும் எண்ணங்கள் அவரவர் போக்கிலேயே உள்ளுக்குள் இயங்கு உலகத்துள் இயங்கிக்கொண்டிருக்கின்றன என்று படைக்கின்ற உங்களுக்கு நான் சொல்லித் தெரியத்தேவையில்லை...." [இப்போது, அவன் "அப்படியேதான்" என்று தலையாட்டிக்கொண்டிருந்தான்..... இவனை எப்படிப் படைத்திருக்கவேண்டும் என்று இந்த நேரத்திலே எனக்கேதும் தோன்றவில்லை....... எப்படிப்படைத்தாற்றான் என்ன..... வளர்ந்துகொண்டுபோகும் நேரத்திலே நான் விரும்பிய விதத்திலேயே சமைந்து வந்து என் குரலாகவா பேசிக்கொண்டிருக்கபோகின்றான்??.... என்னையும் மீறி எனக்குப் பேச்சுக் கற்றுத்தந்துக்கொண்டிருக்கிற நிலையிலேயல்லவா போய்க்கொண்டிருக்கின்றான்!]

"..... அதனால், நான் அவளினை இந்த நிமிடத்திலே திட்டிக்கொண்டிருக்கிறேன் என்பதற்காக, இங்கு நானே அவளுக்கு மேலதிகாரி என்றோ, அவள் எனது சமையற்காரியென்றோ அர்த்தமல்ல... நான் ஓர் தற்பாற்புணர்ச்சிவிரும்பினனாக இருந்து, அவளின் இடத்திலே ஓர் ஆடவன் இருந்திருந்தாலும் அதேபோலவே திட்டியிருப்பேன்........ சில சமயங்களிலே இவள் வாசிக்கும்போது, நான் குடிநீர்க்குழாயிலே எதேச்சையாக நீரைக் "கொழகொழ"க்கத் திறந்து விட்டுக் கொண்டிருந்து அவளிடம் வாங்கிக்கட்டியதை நீங்கள் பார்த்திருக்கவில்லை என்று எண்ணுகின்றேன்.

"இதற்காக, அவன் சமையலிலே எனக்கு பங்காக சமைத்துக்கொண்டிருக்கும் மனநிலை உள்ளவன் என்றும்கூட நீங்கள் எண்ணிவிடக்கூடாது. அவன் சமைத்துச் சாப்பிட்டால், நான்கு நாட்களுக்கு வைத்தியசாலைதான்..... இதையே சாக்கிட்டு, நீங்கள் அவன் சமையல் என்பது முழுக்கமுழுக்க என் வேலை என்று எண்ணிவிட்டான் என்று கதை எழுதுகின்றதில்லை...... அவனிலே எனக்கு பிடித்த விடயங்களும் உண்டு பிடியாத விடயங்களும் உண்டு. ஆனால், அதற்காக அவனின் எல்லா நடவடிக்கைகளையுமே, அவன் நான் பெண் என்ற காரணத்தினாலேதான் அப்படிச் செய்கின்றான் என்று நானோ நீங்களோ பார்த்துக்கொண்டிருந்தால், அவன் கதையைப் போல நூற்றாண்டுப்பழமையைக் கிண்டிச் சுரண்டித் துரு சேர்த்து, நிகழ்வுருக்களுக்குக்குத் தனக்குப்பிடித்த உயிர் கொடுப்பதோடேயே எல்லாம் நின்று விடும். இன்றைக்கு துருவும் துன்பமும்தான் கூடும்.... புதுப்பார்வையும் போனதிலிருந்து கற்றுக்கொண்டு, புதியது தழைக்கப் பதிபோடவும் ஆகி வராது."

இதற்குமேலே ஏதேனும் கேட்பதா அல்லது சொல்வதா என்று சொல்லமுடியாத அளவுக்கு நான் கூனிக்குறுகியும் குழம்பியும் போயிருந்தேன்... அப்பன்சாமியும் சுவாமிநாதனும் என்று ஒன்றே இரட்டைவேடத்தில் என் முன்னால் உட்கார்ந்திருந்ததாகத் தெரிந்தது... அப்பனுக்கோ இன்னமும் புரிந்தும் புரியாமலும்......

எம் முகம்பார்த்த மௌனத்தின்போது, அவள் அவன் எழுதிக்கொண்டிருந்த கதையை வாசிக்கத்தொடங்கினாள்.... அவன் கொஞ்சம் என்னைப் பார்த்துக்கொண்டிருந்து விட்டு "தேநீர் குடிக்கின்றீர்களா?" என்று கேட்டபடி தேநீர் தயாரிக்க எழுந்தான்.

"இல்லை இல்லை; எனக்கு வெளியே வானம் இருட்டியது போலே தெரிகின்றது; நேரமாகி விட்டது; நான் வீட்டுக்குப்போயே குடித்துக்கொள்கின்றேன்." என்று இருவரிடமும் சொல்லிவிட்டு அவர்களிடமிருந்து அவசரவசரமாக விலகி வெளியே வர, மெல்லிய நக்கற்சிரிப்பொலி என் முதுகோடு ஒட்டி நகர்வதை உணர்ந்தேன்.......

}

..... தட்டச்சுச் செய்த விரலாயாசமும் ஓயாத மணிநேர எண்ணவோட்டமும் ஓய விரல்நெட்டி முறித்தபடி எழுந்தேன்... எழுதிக்கொண்டிருந்ததிலே தெரியவேயில்லை; நன்றாகவேதான் இருட்டிவிட்டது; கொஞ்சம் சூடாகத் தேநீர் குடித்தால் புத்துணர்ச்சி வரும் என்று சொன்னது பழகிப்போன தேநீர்ச்சிந்தை..

மனைவி, தான் வாசித்த நூல் தன் முகம்மூட நித்திரையாக இருந்தாள். அவளை எழுப்பித் தேனீர் கேட்பதா அல்லது நானே போடுவதா என்றெண்ணிக்கொண்டு கொஞ்ச நேரம் தடுமாற்றத்துடன் அறைக்குட் குறுக்கும் நெடுக்கும் உலாவிக்கொண்டிருந்துவிட்டு, பின் பேசாமல் அவளருக்கே போய்க் கூரையை வெறித்துப் பார்த்தபடி படுத்த நானும் நித்திரையாகிப் போய்விட்டேன்.


'00, டிசம்பர் 23, சனி 15:25
திருத்தம்: '01, செப்ரெம்பர் 28, வெள்ளி 15:58 மநிநே

1 பின்னுதை:

Blogger வசந்தன்(Vasanthan) said...

உமக்கு பின்னால உதச்சு சரிவராது.

7:26 AM  

Post a Comment

<< Home