Saturday, February 12, 2005

பொருத்தமான தலைப்பு அகப்படவில்லை; மன்னிக்கவும்

எம். எஸ். சுப்புலக்ஷ்மியின் வெங்கடேஸ சுப்ரபாதம் கேட்டுக்கொண்டு, கணினியிலே 'DOOM II' விளையாட்டில் ஏவுகணையிலே கண்டபடி காணாதபடி காவற்படையும் அசுரவிலங்குகளும் சுட்டுக் கொன்று தள்ளிக் கொண்டிருந்தேன், முப்பத்தைந்து வயது நான். இதனால், இவன் ஒரு 'புட்டுக்கு பிளேன் சோடா ஊத்திப் பினைஞ்சு சாப்பிடக்கூடிய நட்டுக் கழண்ட கேஸ்' என்று நீங்கள் சிரிக்கக்கூடாது. சூழ்நிலை அப்படி நண்பரே; அப்பனும் அண்ணனும் அரணாக இல்லாமல், 'ரியூசனுக்குப் போகமாட்டாத சாமர்த்தியப்பட்ட பொம்பிளைப்பிள்ளையலெல்லாம் துவக்கைத் தூக்கிக் கொண்டு காட்டுக்குள்ளை அலையவோ அல்லது முகம் தெரியாத மாப்பிள்ளையை எண்ணி, அகம் தெரியாத ஏஜென்சிக்காரனை நம்பி, நகை -அதுக்குத் தங்க நட்டெல்லாம்- உடம்பில நட்டு, மொஸ்கோ கண்டு, லெசெத்தோ கண்டு, ஒயில் ராங்கருக்குள்ளை கண்டவன் நிண்டவனோடயெல்லாம் உராஞ்சு கிடந்து உயிர் தப்பிக் கனடா வரும்' நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு சமூகத்திற் பிறந்த ஒருத்தன் இப்படியெல்லாம் செய்தால், அதைக் கண்டு நீங்கள் சிரிக்கக்கூடாது என்றில்லை; சரியாச் சொன்னால், சிரிக்க முடியாது.

சொன்னாற்போல, நான், சுகுணன், சுகுணன் செல்லத்துரை (நேற்று, Tomorrow Never Dies பார்த்தேன்); முக்கோணக்குன்று இந்துக்கல்லூரி-->பேராதனை (எட்டு வருடங்கள்; படிப்பு+ பல்கலைக்கழகம் மூடல்+திறத்தல்+வேலை) -->சிங்கப்பூர் (இரண்டு வருடங்கள்; (சொல்லப்பட்டது) மேற்படிப்பு, (செய்யப்பட்டது) 'ஜேர்மனி-இலங்கை ற்றான்ஸிற் பஸன்சருக்கும் ஏஜென்ஸி கைவிட்டுக் கைபிசைஞ்சருக்கும் லிற்றில் இண்டியா காட்டலும் சொழும்புக்கு ரிட்டேன் ரிக்கற் புக் பண்ணுதலும்') -->இப்போது, இங்கே, 'செயின்ற் லூயிஸ், மிசூரி' (போன ஒரு வருடம்; அதே மேற்படிப்பு 'பம்மாத்து'). ஊரிலிருந்து வரும் வீட்டாரினதும், எப்போதென்று தெரியாமல், ஐந்து நாளுக்கொரு ஒரு முறை என்ற சராசரி மீடிறனில் அர்த்தசாமத்திலே எடுத்து, "சென் லூயிசில இருக்கிற நான் எப்பிடி கத்திரிக்கோல் கொண்டுபோறது?" என்ற என் வெட்டுப்பதிலுக்காக, "ஸியாட்டிலிலை வந்து இறங்கி மச்சான்ரை மனிசியின்றை மச்சாட்காரிப்பெட்டை ஸியாட்டில்-வான்கூவர் போடரிலை பாஸ்போட்டைக் கிழிச்சுப்போட்டுக் கையைத் தூக்கப் போறாள், உதவி செய்ய ஏலுமே?" என்ற கேள்வி கேட்பவர்களின் அழைப்புகளும் இரவிற் சொந்த அறையில் அறைச் சிங்கள நண்பனுக்கு இடைஞ்சலையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தும் என்பதாலும் கனடியத் தமிழ் வானொலி மின்வலை ஊடாக இரவில் இடைஞ்சல் இன்றிக் கேட்க முடியும் என்பதாலும் இரவில் ஆய்வுகூடத்திற் தங்குவது வழக்கம். கடவுள் நம்பிக்கை எனக்கு இருக்கிறதோ இல்லையோ, எனக்கே தெரியாது. தேவைக்கு வரும், தேவைக்கு வராமலும் விடும்.அது முக்கியமான விடயமில்லை. ஆனால், எம். எஸ் சுப்புலக்ஷ்மியின் காலைச்சுப்ரபாதம், முக்கோணக்குன்றின் எனது வீட்டின் -பத்துவருட காலம் முந்திய- காலை நினைவுகளின் நிறைவினைத் தருவதினாற் கேட்கிறேன். சும்மா சவரம் செய்யக் கடையிற் சவரக்கத்தி வாங்கி வரும் நேரங்களில் ஆயுதம் வைத்திருந்த குற்றமென்று தென்கொரியாவிற்குக் கிடைக்கவிருக்கும் உலகவங்கிக் கடன் அளவிற்கு அடித்து, உதைத்துத் தள்ளிய இலங்கை, இந்திய இராணுவத்தினரின் உருவொத்த 'கமஸாக்கி' உடைப்பிரதிநிதிகள், DOOM II இல், பிஸ்டலுக்கும் ரிவோல்வருக்கும் வித்தியாசம் தெரியாத என் கையினால் ஏவுகணைத்தாக்குதலில் "ஹா" என்று மாயயதார்த்தத்தில் வாய் பிளந்து செத்துப்போவது மனதுக்குத் திருப்தி தருகிறது. மிகுதிப்படி ஆயுத ரீதிப் புரட்சியா அஹிம்சைப்புரட்சியா என்று யோசித்துப் பலகாலம்; சரியாகச் சொன்னால், பத்து வருடங்கள். சொந்தவாழ்க்கையைப் பற்றி யோசித்து இங்கு வந்தவனுக்குப் புரட்சி பேசுதல் அத்தியாவசியமற்ற போலி முகமூடி என்று அர்த்தப்படுகிறது. இதற்கு மேலே என்னைப் பற்றி உங்களுக்குச் தேவையில்லாமல் எனக்கு மட்டும் திருப்தி தரச் சுவராசியமாகச் சொல்வதெனில், உண்மையிற் பாதிக்கப்பட்ட மக்கள் ஊரிற் செத்துக் கொண்டிருக்க, நயாகரா நீர் வீழ, பார்க்கிறேன் என்று கனடிய எல்லைக்குட் போய்விட்டு, வா(ல்)ள் கொள்(ல்) சிங்கமுத்திரைக் கடவுட்சீட்டைக் கிழித்துப் போடமாட்டேன் என்ற உறுதி மனம் வைத்து, புலம்பெயர் பத்திரிகைகளில், புலம்பெயர் இலக்கியம் என்பது புலம்பெயர்ந்தவர்களின் புலம்பல் மட்டும்/இல்லை என்பதில் என் மண்டையையும் தண்டை இடலாமா என்று யோசிக்கும் + ஏனஸ்ரோ 'சே' குவாராவும் கௌதம புத்தனும் மட்டுமே உண்மை மனிதர்கள் என்று பூசிக்கும் ஒரு கட்டை, மெலிந்த, இருள் வர்ண கீழ்க்காற்சட்டையும் வெளிர் வண்ண மேற்சட்டையும் அணியவிரும்பும் புகைபிடிக்காத, மது அருந்தாத, மணமாகாத (இத்தனை காலத்துக்குப் பிணமாகாதது மட்டுமே போதாதோ?) வெள்ளத்திலோடிய சிறு நெல்நாற்றுத்தாடிப்பேர்வழி. ஒரு நிமிடம், அடுத்த அறையில் தேநீருக்குச் சுடவைத்த நீர் இவ்வளவுக்குட் கொதித்திருக்கும். வரும்போது, இலங்கை அரசுக்கு வருமானம் கொடுக்கக்கூடாதென்று, சிங்கப்பூர் விமானசேவை + 'United Airlines' என்று வந்துவிட்டேன்; ஆனால், இங்கு குளிர்; என்ன செய்வது? விரும்பியோ விரும்பாமலோ, இலங்கைத்தேயிலை குடித்தே ஆகவேண்டிக்கிடகிறது. பிச்சைக்காரர் தேர்ந்தெடுக்க முடியாது. அந்த லிப்டன் பெட்டிகளில் மட்டுமே சார்பான குறைவிலையிற் தேயிலை கிடைகிறது. கொஞ்சம் பொறுங்கள். தேநீருடன் வருகிறேன்; உங்களுக்கும் புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு புகை பிடிக்கவோ அல்லது சமையலறைக்குள் புகைக்குள் கண் எரிவுடன் கிடக்கும் மனைவியிடம் எட்டி 'என்னப்பா, பொரிச்சு முடிஞ்சுதோ? இங்கை மனுசன் வாசிக்க ஏலாமல் புகையாலை கண்ணெரியிது. நீரென்னவெண்டால் சந்தோசமா எரிச்சுத் தள்ளுறீர்" என்று இந்த மணி நேரத்திற்கான அவள் மேலான அநாவசியக்குற்றச்சாட்டைச் சொல்ல ஒரு அவகாசமாக இருக்கும்....

.... என்ன வந்தாகி விட்டதோ? நான் அப்போதே வந்து நீங்கள் வந்தபிறகு எழுதுவோம் என்று காத்துக் கொண்டு இருக்கிறேன். சீச்சீ, அதிக நேரம் இல்லை; அத்தோடு, அப்துல் வந்து, 'Chicago Bulls' ன் நேற்றைய கூடைப்பந்து விளையாட்டைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்ததால், வெறுமனே வழமைபோல ஒன்றுமே புரியாமல் புரிந்ததுபோலத் தலையாட்டிக் கொண்டிருக்க நேரம் போய்விட்... சொன்னாற்போல, உங்களுக்கு அப்துலை அறிமுகப்படுத்தாமற் சொல்லிக் கொண்டுபோகிறேன். இ·து அப்துல் கிரிஸ்டி வுட்·fப்யர்; எங்கள் ஆய்வுகூடம் எல்லாம் பதினைந்து ஆண்டுகளாகச் சுத்தம் செய்கிறேன் என்று சொன்ன நாற்பத்து இரண்டு வயது, ·fப்ராக்கானின் பத்து இலட்சம் மனிதர்களில் ஒருவர் (போன இரு வருடங்களாய்). அண்மையில் கடாபியைப் ·fப்ராக்கான் சந்தித்த விபரம் எல்லாம் தரிந்திருந்த அவருக்கு, மல்கொம் எக்ஸின் மகள், ·fப்ராக்கானைக் கொல்லச் செய்த முயற்சி, அதன் காரணம் எதுவுமே தெரிந்திருக்கவில்லை, தமிழ்/சிங்களமக்களின் உரிமைக்காக 70 களிற் பாராளுமன்றத்திற் பகிரங்கமாக ஒருவருக்கொருவர் வார்த்தைச்சாட்டைகள் சாட்டிய அரசியல்வாதிகளைத் தெரிந்த நாம், அவர்கள் பின், பாராளுமன்ற உணவகத்தில், "இன்றைக்கு எப்படி உமக்கெதிராக எனது கத்துதல்?" என்று வினாவிக்கொண்டு, 'சமன்' ஸாண்விட்ஸ் தின்றது தெரிந்திராததுபோல. மனைவி, இன்னும் முட்டாட்டனமாய் வெள்ளையரின் கிறீஸ்துவின் மீள் எழுச்சிக்காகக் காத்திருக்கிறாள் என்று வருத்தப்படும் ' bulldog' நாய் வளர்ப்புப்பிரியர். இன்றும் வழமைபோல, எம்மைப் போன்ற கறுப்புச்சகோதரர்களின் நட்பை அமெரிக்க வெள்ளையர் கொஞ்சமும் விரும்புவதில்லை என்று சொல்கிறார்.

உங்களை அவருக்கு நான் அறிமுகம் செய்யவில்லை. ஒன்று, இத்தனை நேரமாக என்னுடன் பேசிக் கொண்டிருக்கிறார்; உங்களிடத்திலிருந்து வந்த சிகரெட்/சமையலறைப் புகையைப் பற்றி இந்த புகை தடை செய்யப்பட்ட அறையிலிருந்து ஏது விபரமும் என்னிடம் கேட்கவில்லை. மற்றையது, உங்கள் முகங்களையும் எனக்குச் சரியாக அறிமுகம் இல்லை, ஆக நாமிருவரும் ஒரே மொழியைப் புரிந்து கொள்கிறோம் என்பது தவிர. அவருக்கும் எங்கள் இருவரின் முகத்திற்கும் பெரிதாக வித்தியாசம் தெரிந்துவிடப்போவதில்லை, எங்களுக்கும் சீனப்பிரதமருக்கும் கொழும்பு சைனீஸ் க·fபே சமையற்காரருக்கும் இடையே புரியாததுபோல. இருவரையும் அசட்டையாக, ஹிட்லரின் கூர்மூக்கு ஆரியர் நாம் என்பதுபோல, சப்பட்டைகள் என்றுதானே சொல்கிறோம்; இல்லை என்கிறீர்களோ?

அப்துல் என்னைச் சந்தித்த முதல் நாளில் முதலிற் கேட்ட விடயம், எங்கள் நாட்டில் எத்தனை கறுப்பு சகோதரர்கள் இருக்கிறார்கள் என்பதுதான். கறுப்புச் சகோதரர்கள் என்பதற்கு அப்போது எனக்குச் சரியான விளக்கம் தெரியவில்லை. "நான் அறிந்தமட்டில் சில ஆபிரிக்கத் தூதராலயங்களிற் கடமையாற்றும் சிலர் மட்டுமே" என்று சொன்னேன். ஏனெனில், அவர் கேட்ட தை 98 ல், இலங்கை அமைச்சர் மங்கள சமரவீர, ஓட்டப்பந்தவீராங்கனை சுசந்திக்கா பற்றி எனக்கோ அல்லது வேறு எவருக்குமோ ஏது விபரமோ அபிப்பிராயமோ முற்கூட்டியே தெரிவித்து இருக்கவில்லை. ஆனால், அப்துல் முகவாட்டத்துடனும் சந்தேகத்துடனும் திரும்பத்திரும்பக் கேட்டபோது, என் புகைப்படத்தொகுப்பினை என் சாட்சிக்கு எடுத்துக் காட்டவேண்டியதாயிற்று. அதில், என் ஒரு தம்பியையும் சிவத்தையும் சுகுமாரையும் அவர் திட்டமான கறுப்புச் சகோதரர் என்று இனம் கண்டு கொண்டார். பின், முதற்படக் கறுப்புச் சகோதரர் என் தம்பி என்பதையும் அறிந்ததால், என்னையும் செம்மண்ணிறச் சகோதரர் வகையிலிருந்து கறுப்புச்சகோதரர் வகைக்கு உயர்த்திக் கொண்டு நட்பின் அடுத்த கட்ட முஷ்டி வணக்கத்தை, 'ஆத்ம வலுவை' கற்பிக்க முயன்றார். ம்ம்ம்ம். ட்fப்ரான்ஸிஸ் ·fபோர்ட் கொப்பலாவின் க்ரி ஓல்ட்மென் ட்ரகுலாவின் இரத்தமும் மொனோலிஸா மர்மமும் சேர்ந்த ஒரு கடவாய்ப்புன்னகையைத் தரமுயல்கிறீர்கள். எனக்குப் புரிகிறது... "ஐஸே, ஜோக் அடியாதையும்; அவ்வளவுக்கு அவனென்ன முட்டாளா, சனத்துக்க வித்தியாசம் தெரியாமல் இருக்கிறதுக்கு?" என்று. ஆனால், அதுதான் யதார்த்தம். அவர் முட்டாள் இல்லை; ஆனால், எங்களின் நாட்டைப் பற்றி, எங்கள் வாழ்வின் கஷ்டங்கள் பற்றி, - அவரது நாட்டு அரசாங்கம் போலல்லாது- அவருக்கும் பயன் இல்லாதபோது அறியவேண்டிய தேவை இல்லை. இவ்வளவு எதற்கு? அவர் அரசாங்கம்போல, அவருக்கு, முக்கோணக்குன்றுத் துறைமுகத்தில் நிறுத்தச் சொந்தக் கடற்படை வைத்திருக்கும் கவலையில்லை; விற்பதற்கு ஆயுதங்கள் இல்லை; புத்த அரசாங்கத்தில் அக்கறையும் இந்துப்பயங்கரவாதத்தில் எதிர்ப்பும் வருவதற்கு அவற்றைப்பற்றியே தெரியாது. இந்தியத்தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சி வெல்லுமா என்பதைப் பொறுத்து, ஈழத்தில் உள்ளது இந்துப்பயங்கரவாதமா இல்லை வெறும் 'சாதா' பயங்கரவாதமா என்று நிறம் கண்டுபிடிக்கும் தேவை இல்லை. உங்களுக்கு, அமெரிக்கக்கறுப்பர் எல்லோருமே HIStory படிக்கும் பாட்டுக்காரர் இல்லை என்பதோ, நிமிடத்துக்கு அறுபது தடவை நிலத்திற் பந்து தட்டி, விளையாட்டு உலகத்திற் கூடச் சம்பாதிக்கும் கூடைப்பந்துக்காரர் இல்லை என்றோ, வெறுமனே பத்து டொலருக்கு ஒரு மில்லி கிராம் போதைமருந்து விற்பவர் இல்லை என்றோ தெரிவதில் அக்கறை இருந்ததுண்டா? அதுவே தெரியாதபோது, அவர்களுள்ளும் வெளுப்பாக உள்ளவர்கள் மற்றையவரிலும் கூட உயர்வுச்சிக்கலில் வாழ்கிறார்கள் என்பதோ கீழ்த்தட்டு மேற்தட்டு மத்தியதட்டு என்ற இடியப்பச்சிக்கலில் இருக்கிறார்கள் என்றோ தெரியவாய்ப்பில்லை. இல்லையா? உங்களைக் குற்றம் சொல்லவில்லை. உங்கள் நிலையிலும் நீங்கள் ஜிப்ஸிகளைப் பற்றி அதிகம் தெரிந்துவைத்திருகிறீர்கள். எனக்கு அந்த வாய்ப்பில்லாததால், போன வருடம் கி.பி. அரவிந்தன் கதை சொல்கையில், "ஆ" என்று வாசித்து வைத்தேன். பிறகு, அது தெரிந்து இனியும் விட்டால், நான் அதைப் பற்றியும் தாறுக்கும் மாறுக்கும் கதை எழுதிப் பெயரைக் கெடுத்துப் போடுவேன் என்று புனித பாப்பரசரும் இரண்டாம் உலகமகாயுத்தத்திற் செத்த ஒரு ஜிப்ஸியை ஐம்பது ஆண்டுகளின் பின்னாவது திருநிலைப்படுத்தினார். (முதல் ஒருமுறை இதுபோலவேதான், அவரும் ரேகனும் வலேஸாவுடன் சேர்ந்து சதி செய்துதான், வார்ஸோ நாடுகளில் முதல் பிளவை ஏற்படுத்திப்போட்டார்கள் என்று எழுதிப்போட்டேன் என்ற பயம்). அதனால், இவர்களைப் பற்றி நான் உங்களுக்கு சொன்னாற்றான் உண்மை தெரியும். வெறுமனே, கியூபாவைப் பயங்கரவாத நாடு என்று சொல்லிக்கொண்டு, தனது நிலக்கண்ணி ஒப்பந்தக்கையெழுத்து மறுப்புக்கு ஆயிரம் நியாயம் சொல்லும் ஒரு நாட்டின் செய்தித்தாபனங்களை மட்டும் நம்பிவையாதீர்கள். அதனாலோ, இல்லை, ஆகவேயோ, நான் இந்த பெரியமனித அபிப்பிராயம் சொன்னதுக்காக நீங்கள் என்னிற் கோபிக்கவில்லை, இல்லைத்தானே?

காண்போர் வலக்கை முஷ்டி மடித்து முழங்கை மடித்து, கிடைக்கு முப்பது பாகை நிலைக்குத்தச்சுப் பற்றி ஒரு நாற்பத்து ஐந்து பாகை கீழ் நிலைகுத்திலிருந்து தோள் பந்துக்கிண்ணமூட்டு அச்சுப்பற்றிப் பின்னிழுத்து, பின் முன் எடுத்து இருவரும் ஒருவரின் முஷ்டியின் கீழ்ப்புறம் மற்றவரினது மேற்புறத்திலே இடிக்கக் குத்தி, பின் முறை மாற்றிக் குத்தி, மீள முஷ்டி முன்மடிப்புகள் மோத இடித்து, இறுதியாக அவரவர் இடநெஞ்சின் இதயம் இருக்கலாம் என்று எண்ணப்படும் இடத்தே முஷ்டி மேற்புறத்தால் மோதுவதோடு முடியும் இந்த -சொல்ல ஒரு நிமிடமும் செய்ய இன்னொரு நிமிடமும் எடுக்கும்- முஷ்டி வணக்கம் நான் அவரின் திருப்திக்காகச் சரியாகக் கற்றுக் கொள்ள ஒரு வாரம் எடுத்தது. அவருக்கு இந்தச்சடங்கின் அர்த்தம் தெரியவில்லை. தெரியவும் ஆசை இருக்கவில்லை. ஆனால், அது தனக்கு, தன் இனத்துக்கு உரியது என்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் இருந்தது. வேறு ஒருவருக்குப் பாதிப்பு இல்லாமல் ஒருவருக்கு மகிழ்ச்சி ஒரு காரியம் தருமானால், அதைச் செய்வதில் எனக்கும் எந்தத் தவறும் வருத்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. அவரைக் காணும்போது இச்சடங்கு செய்தாகிவிடும். சிலவேளை கூட இருக்கும் போலந்து நண்பர், ஹரியானா நண்பர், ஓரிரு சீன நண்பர்கள் அவருக்குத் தெரியாமல் ஒரு புன்னகை சிந்துவார்கள். ஆனால், எவரும் எதையும் மனம் திறந்து பேசுவது இல்லை. 'Politically incorrect' எனப்படும் 'அரசியற்படி திருத்தமற்றது' ஆகப் போய்விடுமோ என்ற பயந்தான். மிகுதிப்படி, இந்நாடு பேச்சுச்சுதந்தரம் மிகுந்தது என்பதில், என்னைப் போலவே அவர்களுக்கும் -வரும்காலத்தில், அவர்களை இயற்கைமயப்படுத்தப்போகும் நாடு என்பதால்- எதுவித கருத்துவேறுபாடும் இருந்ததில்லை.

அப்துல் போகவேண்டுமாம். அவருக்கு, "Puff Daddy" இன் ஊரில்லுள்ள அனைவரையும் புணர்தலுக்கு அழைக்கும் 'Rap' காதிலே 'நடைமனிதனிற்' (ஹி ஹி ஹி... walkman தான்; நடையன் என்றால், செருப்பு என்று ஆகிப்போகிறது; தமிழ்ப்படுத்தல்; தமிழிற் பற்று தமிழைக் காட்டி மேற்கு நாடுகளில் வசதியாக வாழ ஓடுகிறதில் மட்டும் இல்லை, இயலுமானவரை தமிழை அடுத்த நூற்றாண்டுக்குப் பதமாக்கி மேம்படுத்திக் கொண்டுபோவதிலும் இருக்கிறது என்று என் சில மின்வலை நண்பர்கள் சொல்வதோடு நானும் உடன்படுகிறேன்; அதனால், ரேட்மார்க்குக்கெல்லாம் தமிழ்ப்படுத்தலா என்று நக்கலடிக்கக்கூடாது) கேட்டபடி, இந்தக்கட்டிடம் (63 அறைகள் + 10 மலசலகூடங்கள்+4 விலாசமான நடைபாதைகள் + 108 மடிப்படிகள் + ஏனைய சந்து பொந்துகள் = நான்கு தளங்கள்) கூட்டி, வெற்றிடச்சுத்தமாக்கி போட்டு தூசு உறுஞ்சி, பிறகு நீரடித்து அழுத்தி, பிற்பகல் ஒருமணிக்கு (முறைப்படி) வீட்டிற்குப் போகவேண்டும். அவர், பத்துமணிக்கு வந்து- அங்கே பாருங்கள், தெரியவில்லையோ; மன்னிக்கவேண்டும், படமும் இங்கே கதைக்குப் போட்டால், பக்கங்கள் கூடிவிடுமல்லவோ? தவிர, நீங்களும் இன்னும் முத்து 'கொமிக்ஸ்' சித்திரக்கதை வாசிக்கும் சின்னப்பிள்ளைகள் இல்லைத்தானே?- பல கணினி காவி வந்த பெட்டிகள் இருக்கிறனவே, சின்ன வயதில் நாங்கள் சிகிரெட் பெட்டிகள் ஆக்கி விளையடியதுமாதிரி, அவற்றுக்கிடையில், பலமான கோட்டை அவை என்று எண்ணிக் கொண்டு, அவரின் கறுப்பு மேற்பார்வையாளருக்குத் தெரியாமல், படுத்து நித்திரை கொண்டுவிட்டு, ஒரு பன்னிரண்டரை போல எழும்பி வெளியே வந்து, ஒரு சாட்டிற்கு வாங் லீ இன் மேசையையும் என் மேசையையும் (நான் ஏற்கனவே செய்ததுபோல) ஈரத்துண்டாற் துடைத்து விட்டு, " ஹே Chief (அதுதான், எங்கள், 'தலைவரே')! நாளைக்குச் சந்திக்கிறேன்;இன்றைய நாளை இனிதே நகர்த்து" என்று விட்டு என் பதில் வரமுன் அறை கடந்து விடுவார். நான் அதிக சந்தர்ப்பங்களில் காலை ஏழு மணிக்கு என் அறைக்கு நித்திரை கொள்ளப்போய் மீளப் பிற்பகல் இரண்டு மூன்று அளவிலேயே திரும்பி வருவது வழக்கமாததால், இந்த இறுதிச்சந்திப்புகள் நிகழ்வது மிக அருமை. தற்செயலாக இருந்தால், அவரின் நித்திரையின் இடையே அவரைத் தேடி மேற்பார்வையாளர் வந்தால், ஓடிப்போய், தட்டியெழுப்பி, (காதிற் கிடக்கும் நடைமனிதன்-தலைபேசியை எடுக்கும்வரை காத்திருந்து) விபரம் சொல்லும் தற்காலிக திருநந்திதேவன் பணியும் 'Simulink' இல் மென்பொருளில் செயின்ற் லூயிஸ் கழிவுத்தண்ணீர் சுத்திகரிப்பு மாதிரி ஆக்குதலுடன், வாங் லீ இற்கு வரும் தனி ஸிசுவான் வட்டாரச் சீனத் தொலைபேசி அழைப்புகளுக்கு 'தா பூ ஸாய்" என்று அவனில்லாதது சீனத்திற் சொல்லும் வேலையுடன் கூடவிருந்தது. இப்படி அடிக்கடி கந்தசாமிப்பிள்ளைக்குக் கடவுள் கொடுத்தமாதிரி, திடீர்த் தோன்றுதல் தருவதால், கறுப்பு மேலதிகாரியை வெள்ளையரின் பிருஷ்டம் நக்கும் வெள்ளைப் புள்ளிகள் விழுந்த ஒரு கறுப்புநாய் என்றும் அவருக்கு மேலுள்ள வெள்ளை அதிகாரிப் பெண்மணி முன்னர் 'மொண்டனா' மாநிலத்தில் 'Ku Klas Klan' இல் இருந்த நிறவெறியள் என்று நம்பிக்கைக்குரிய வட்டாரங்கள் மேற்கோள் காட்டிக்கூறியதாகவும் சொல்வார். (எனக்கு எப்போதுமே இப்படிப்பட்ட எதேச்சை எடுகோள்களும் தகர்க்கமுடியாத் தர்க்கங்களும் ஒத்த நிகழ்வு ஒப்புவமைகளும் அவற்றிலிருந்து உய்த்தறிவுகளும் சரியாக விளங்குவதில்லை என்பதை இங்கே நான் குறிப்பிடாவிடின், வெற்றுப்பொய்யன் ஆகுவேன்) ஒருமுறை, ஒரு மாதகாலம் வேலைநேரத்தூங்குதல் கண்டுபிடிக்கப்பட்டு வேலையிலிருந்து விலக்கவும்பட்டிருந்தார். ஆனால், பின்னர் இனப்பாகுபாட்டுப்பாரபட்சமே காரணம் என்று எப்படியோ எடுத்துக்காட்டி வேலைக்கு வந்துவிட்டார். எனக்கு 70களில் நாவலப்பிட்டித் தோட்டப்பாடசாலை ஒன்றிற்குப் படிப்பிக்கிறேன் என்று போய்விட்டு, ஊர்க்கடைகளுக்குத் தேயிலை மொத்தவியாபாரமும் தன் சீதன நிலங்களில் வெங்காயத்தோட்டமும் போட்டிருந்த (உங்களுக்கு வேறு பெயரில் அறிமுகமான) இரகுநாதன் 'மாஸ்ரரே' ஞாபகத்திற்கு வருவார். அவரும் தனது முக்கோணக்குன்றில் இருப்பு பண்ணுகையில் நாவலப்பிட்டியில் வரவு வைத்து எங்கும் பரந்து வாழ் தனது அரிதாரமில்லா அவதாரத்திற்காகப் பிடிபட்டு வேலையிலிருந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டபோது, 'எளிய வடக்கத்திப் பிரின்ஸிப்பலும்' 'துவேசம் பிடிச்ச மோட்டுச்சிங்கள சி ஈ ஓ (வட்டாரக்கல்வி அதிகாரி)' உமே தமிழர்மீதான இனவெறி அழுத்தத்தின்பேரில் இதைச் செய்துவிட்டனர் என்ற பரிதாபத்தைச் சனத்திடம் ஏற்படுத்தி 77 தேர்தல் வரும்போது அன்றைய தமிழ் அரசியற்கட்சியன்றின் எங்கள் ஊர் அமைப்பாளர் ஆகிப்போனார். (பிறகு, மீள வேலை கிடைத்தவுடன், பின்தங்கியமக்களுக்குச் சேவைசெய்யத் தன் பழிவாங்கு உணர்வையும் விட்டுவிட்டு மகாத்மா ஆகிப்போய் பாதுகாப்பாய் நாவலப்பிட்டியிலேயே உருளைக்கிழங்குத் தோட்டம் போட்டு, பள்ளிப்பிள்ளைகளைக் கொண்டு பிடுங்கிவிற்றது இங்கு விபரமாகச் சொல்லப்படவில்லை என்பதற்கு நீங்கள் வருத்தப்படவில்லைத்தானே?)

அப்துல் போய்விட்டார். இன்றைக்கு அவரின் இரண்டாவது மகனின் கூடைப்பந்து விளையாட்டு பார்க்க அவனது பாடசாலைக்குப் போகவேண்டும் என்று ஆவலோடு இருந்தார். மூத்தமகன், பக்கத்து மாநிலப் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் வருட மருத்துவம் படிக்கிறான். நான்கு நூற்றாண்டு முன் அடிமைகளாக வந்தவர்கள் அடுத்த நூற்றாண்டிற்கும் பந்து விளையாடிக் கொண்டும் பாட்டுப்பாடிக் கொண்டும் வீதிச்சந்திகளில், சகோதரர்களிடம் காற்பணம் கேட்டுப்பெற்று, போதை ஏற்றிக் கொண்டும் இருக்கமுடியாது என்று அடித்துச் சொல்வார். மூத்தமகன் அவருடன் வசிப்பதில்லை. அவனது ஓஹையோ க்ளிவ்லாண்டிற் பிறந்த வெள்ளை நண்பியுடன் தனியே வசிப்பதாகவும் வார இறுதிச் சனி காலைகளில் அவர் வீட்டிற்கு ( = அவர் - சுத்தம் செய்ய்யும் வேலை + மனைவி - 'Pick `n Save' இல் விற்பனைப்பணி வேலை + கடைசி மகன் -பாடசாலையிற் பந்து + இரண்டு 'எருதுநாய்கள்' + ஊர் குழப்பும் குரைப்புகள்) வந்து பார்த்துப் போவதாகவும் கா(¨)லப்பனியும் கார்ப்புகையும் படிந்து கிடந்த -நான் தினம் முகம் கீறி என் பெயரெழுதி, ஈழம் எழுதி விளையாடும்- அறைப்பின் புறக்கண்ணாடி ஈரத்துண்டாற் துடைத்தபடி கூறினார். சனி காலை தவறினால், அடுத்த கிழமைதானாம். ஏனெனில், சனி மாலைகள், நிறம், நாட்டுமூலமென்ற பேதமின்றி எல்லோரும் கொஞ்சம் தத்தம் சுதந்திரம் கண்டு உல்லாசமாக இருக்கும் நேரங்களாம்; இரவு நடன விடுதிகள், காலாற நடைகள், கூடிவாழப்பொருத்தங்கள் வாய்ப்புப் பார்க்கும் நேரங்கள். ஞாயிறு, அவர் மனைவிக்கு வடக்கு இருபத்தைந்தாம் வீதியிலுள்ள 'கறுப்பு மக்களின் மீட்பர் ஆலயக் கௌரவ காரியதரிசி' வேடம் மிகப் பொருத்தும் மும்முரம். ஆகவே, அவருக்கு அதுவே இரண்டு நாய்களையும் 'எடுத்துச்செல்' வாகனத்தின் பின் இருக்கைகளிற் தூக்கிப்போட்டுக் கொண்டு அவை அவர் பின் கழுத்தை நக்க, அரைமணிநேரம் மேற்காகப் பிரதான சாலையில் ஓடி, பிறகு, அடைக்கப்படவேண்டிய குறுக்கெழுத்துப் போட்டிக்கட்டங்களாக அங்கும் இங்கும் அலையும் ஒழுங்கற்ற ஒழுங்கைத்தனமான பாதைகளில் பண்பலை வரிசை 104 மெகாஹேட்ஸினைச் சுற்றி சுட்டுச் செத்த துபக் சகூருடனும் Notorious Big உடனும் பெரிதாகத் தானும் சேர்ந்து கூவி, வளையத்துள்ளாற் பாயும் வீதி வேடிக்கைக் குரங்கின் இலாவகத்துடன் வளைந்துபோய் இரண்டு வருடப் பனிகால நிறந்தீட்டுகை காணா ஆறுமாடி ஆர்தர் மன்றோ முதியோர் இல்லத்தின் நாலாம் மாடி பூச்சியம்-பூச்சியம்-ஆறாம் அறையினை இருமுறை தட்டி "மா..ஆ..மா! நான் சின்ன பொஞ்சோ (அவரின், குடும்பச் சிறுவயதுச் செல்லப்பெயர்)" என்று சொல்லி, தன் தாயுடன் -அறுபதுகளின் மார்ட்டின் உலூதர்கிங்குடனும் இலினோய் கெய்ரோ நகர் நிறப்பாகுபாடுப்போராட்டத்துடனும்- ஓர் இரு மணிநேரங்கள் பின்தங்கி இருக்க ஒரு சந்தர்ப்பம்.

மகன் வெள்ளை நண்பி ஒருவருடன் வாழ்ந்துவருவது பற்றி அவரின் கருத்து என்ன என்று ஒருநாட்காலை ஐந்து மணிக்கும் ஐந்தேகாலுக்கும் இடைப்பட்ட -37 பாகை பரனைட் வெப்பநிலை+ 100% ஈரப்பதன்+3 மைல்/மணி கிழக்கிலிருந்து வடகிழக்கு என மாறு காற்று+30.05 அங்குல இரச வளியமுக்கம் கொள் (மன்னிக்கவேண்டும், இன்னமும் நாங்கள் இங்கு பிரித்தானிய அலகுகளிலேயே நாளாந்தவாழ்வு)- ஒரு சோர்வுகொ(ள்)ல்குளிர்காலவேளையிலே, 'தமிழ் வட்டம்- இலங்கைத்தமிழர் ஈடுபாடு கொள் செய்திகள்' வாசிக்கையிலே கேட்டுவைத்தேன். கதவு இடுக்குகளுக்கு, தும்புமுகத் தூசு உள்ளுறுஞ்சு வெற்றிடத்துடைப்பானாற் கீச்சுக்கீச்சுமூட்டும் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தவர், நிறுத்திவிட்டு நிதானமாகச் சொன்னர், "அ·து ஒரு பரஸ்பரம் உதவி. நாலைக்கு அவன் அவளைத் திருமணம் செய்தால் அவர்களின் குழந்தைகளுக்குக் கறுப்புத்தன்மை, அதனால் கஷ்டங்கள் குறையும். அதனால், அவளுக்கு என்ன பயனெனில்...." - ஒரே கணினிக்கோப்பிலிருந்து எடுக்கப்பட்ட வேறு பதிப்பியின் வெளியீடு கணக்கில் நீங்கள் முன்னர் சிரித்துவைத்ததுபோலவே ஒரு 'நமுட்டுச்சிரிப்பு'- "தலைவரே, உனக்குத் தெரியாதா எதற்காக வெள்ளைப்பெண்கள் கறுப்பர்களை அதிகம் விரும்புதல் என்று...?" இன்னமும் தனிக்கட்டையானவனும் பாலியல்ரீதியாக உயிர்ப்பான செயற்பாட்டில் இல்லாதவனுமான நான் அதைக் கண்டுகொள்ளாமலே, "அப்படியானால், உங்கள் நிறம் உங்களுக்கே கேவலம், விலக்கப்படவேண்டியது எனப்படுகிறதோ? பிறகு ஏன் நிறவேறுபாட்டுக்கு எதிராகப் போராட்டம்?" என்று கேட்டுவைத்தேன். 'தலைவர், நான் ஒரு நிலத்தில் நடக்கும் மனிதன்; வானத்திற் பறக்கும் பட்சி என்று என்னை எண்ணிக்கொள்வதில்லை. கனவிற் கண்ணிருந்தாலும், கால்கள் நிலத்திற் கிடக்கவேண்டுமென்று கவனமாக இருக்கிறேன். என் அடுத்த தலைமுறையும் அப்படியே என்னைப்போலவே இந்த நோக்குடன் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். மற்றவரைப் பாதிக்காமல், எப்படி முன்னேறினாற்றான் என்ன?" அடுத்த கதவுக்குக் கிளுகிளுப்பு மூட்டப்போய்விட்டார்.

அவரது பத்துமில்லியன் மனிதர் நிலைப்பாடும் மகனின் வெள்ளைநண்பி விரும்பு வாழ்க்கைத்தத்துவமும் முரண்பட்டது, எங்கள் ஊர் பழைய தாழ்த்தப்பட்ட மக்கள் 60ம் ஆண்டுகளின் எழுச்சிப்போராட்டப் பிரமுகர் ஒருவர், ஒரு புறம் "என் தந்தை ******** தொழிலாளி என்பதிற் பெருமைப்படுகிறேன்" என்று சொல்லிக்கொண்டு, தன் மகனுக்கு மேல்சாதி எனப்பட்டதொரு குடும்பத்திற் திருமணம் செய்து வைத்ததை ஞாபகப்படுத்தியது. திரும்பம் ட்-மொ கூட்டணிச்சிரிப்பு, உங்கள் கடவாயில் ஒழுகுகிறது; "தம்பி; நீர் ஒரு உயர்/கீழ் சாதிக்காரர்; அதுதான் ஒரு யதார்த்தத் திருமணப்பந்தத்தின் எதேச்சை நிகழ்வினை உமது கோணற்- தற்செயலாக, குருட்டு அல்லாவிடில்- கோழியின் தலைசாய்த்த பார்வையினால் வக்கிரப்படுத்துகிறீர்." அடுத்த சிகிரெட்டுக்கோ, அல்லது அடிமைவாழ்க்கை தரும் அந்நியநாட்டில் உங்கள் 'நான்' இனைத் திருப்திப்படுத்த அடுத்த, மனைவி மீதான உங்கள் எசமானத்தன்மையை உறுதி செய்ய ஒரு சந்தர்ப்பத்திற்கோ அவசரப்பட்டு இப்படி ஒரு முடிவுக்கு வந்து என்னையும் அதை ஏற்றுக்கொள்ள வற்புறுத்தாதீர்கள். நேரம் ஐந்தரைதான் இங்கு. இன்னுமொரு, ஒன்று ஒன்றரை மணிநேரம் இங்கு இருப்பேன். அதனால், நீங்கள் என் ஹம்லட்டின் தனிப்பேச்சு வகைத் தொய்வு உரைநடையிலிருந்து விலகி, மேலே சொன்ன எதையாவது செய்தோ, அல்லது இந்தத் தொகுப்பிலிருக்கும் வேறொரு சுவராசியமான கதைசொல்லி, கவிதை எழுதியின் ஆக்கத்தை வாசித்து மீள வருவதாலோ, நான் ஒன்றும் குறைந்துபோகப் போவதில்லை. DOOM II இன்னும் நான்காம் கட்டத்தில் 'தயக்கமுனைப்பிலேயே (pause mode) கிடக்கிறது. எனக்கும் என் 89ம் ஆண்டு கண்டி-முக்கோணக்குன்று வைகாசி வெசாக் விடுமுறை வீட்டுப்பயணத்தில், கணதெய்யோபுர இராணுவப்பரிசோதனைமுகாமில் பிபிஸி தமிழோசை கேட்டுவிட்டு அப்படியே வானொலிக்குள் தவறுதலாக மறதியில் விடுபட்டுக் கிடந்த இரட்டை AA மின்கலத்தின் காரணமாக மேனிக்கலமெல்லாம் விழுந்த மின்னல்களுக்காக, கொஞ்ச கமஸாக்கிக்காரர் கொல்ல அவகாசம் வேண்டிக் கி(¨)டக்கிறது.

ஓ... நீங்களோ? வந்து மிகுந்த நேரம் காத்துக்கிடக்கின்றீர்களோ? கண்டு நான்கு மாதங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். எப்படி நலமோ? மகள் எப்படி புதியமொழியில் படிக்கக் கஷ்டப்படுகிறாளோ? மகன்... என்னை மாதிரித்தான் உங்களுக்கு விழுந்த அடிக்கெல்லாம், தன் வயதொத்த ஈழத்திலிருக்கும் பையன்களின் அடிகளுக்கெல்லாம், தான் கணினி விளையாட்டுகளில் தான் காணாத இராணுவம் கொன்று விளையாடுகிறான் போலும். அன்றைக்கு நீங்கள் போன பிறகு ஏழு மணிவரை (கமஸாக்கிக்)கொலையும் (உங்களுக்குக்) காவலுமாய் இருந்துவிட்டு, பிறகு போய்விட்டேன். மன்னிக்கவேண்டும். இன்றைக்குக் கொஞ்சம் தாமதமாகிவிட்டது. நேற்று, ஸ்ரீபன் ஸ்பீல்பெர்க்கின் 'அமிஸ்ராட்' பாக்கப்போய் வந்து உருளைக்கிழங்கு அவித்து உப்பும் மிளகும்போட்டு ஓர் என் பாணி 'பிரட்டல்' வைத்து எலுமிச்சம்புளி விட்டுப் 'பாணுடன்' சாப்பிட்டு, படுக்க நேரம் இரவு 11:00. படம் பரவாயில்லை. ஒருமுறை பார்க்கலாம். ஆனால், திரையரங்கிற் பின்னுக்கு இருந்த சில கறுப்பு இளம் நண்பர்கள் (பல்கலைக்கழகமாணவர்கள் என நினைக்கிறேன்) சோளப்பொரி, பெப்ஸிக்குடி, அவர்களின் யாரோ ஒருவரின் பேரு பெண்நண்பியின் ஒரு வாரம் முந்திய துரோகம் இடையில் "ஏன் எல்லா 'ஹொலிவுட்' படங்களிலும் கறுப்பரைக் காப்பாற்ற,அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்யப் போராட வெள்ளைமனிதரே வருகிறார்கள்?" என்று ('The Ghosts of Mississippi’ படத்தினையும் மேற்கோள் காட்டி) தமக்குள் கேள்வி எழுப்பிக் கொண்டார்கள்; எனக்கு, கறுப்பு எடி மெர்பி ஒரு படத்தில் தீபெத்திய சிறுவனைக் காப்பாற்றியதைப் பற்றியும் டென்ஸில் வோஷிங்டன் எங்கேயோ ஒரு படத்தில், முடிவதற்கு மூன்று நிமிடங்கள் முன் தங்கமுடியழகி மெக் ரையனுக்காகப் போராடியதும் சம்பந்தமில்லாமல் ஞாபகம் வந்தன. அவர்களிடம் கேட்கவில்லை. எல்லாம் குழப்பமாக இருந்தது. சிறிதோ பெரிதோ எதற்கும் மறுபக்கம் இருந்தே செய்கிறது. அவையும் பார்க்கும் கண், கண்ணாடி என்பனவற்றினைப் பொறுத்து பரிமாணங்கள் பெரிது சிறிது ஆகிறன.....

..............................இது யார் புதிதாக என் பின்னால், பொப்மாலியின் 'இரஸ்த·fராரி' தொங்குமுடியுடன் வாங் லீயின் மேசை துடைப்பது என்றா கேட்கிறீர்கள்? ஜேம்ஸ் 'சிறுத்தைப்புலி' ஒனுனுங்கா; அப்துலின் நண்பரும் ஓர் இரண்டு மாதங்களாக அப்துலின் முன்னைய வேலையைச் செய்பவருமான கறுப்பு- இலத்தீன் கலப்பினத்தவர். அப்துல், செயின்ற் லூயிஸ் கறுப்பு முஸ்லீம் இயக்கத்தில்/சங்கத்தில்/ஒன்றியத்தில் (சரியானதன் கீழ்க் கோடிட இன்னும் மேலதிகவிபரம் தேவை) இணைக்காரியதரிசி பதவி கைக்கெட்டியதால் போய்விட்டதாயும் நியூ யோர்க்கில் உள்ள மேலிட விருப்புதற் சமிக்ஞையின்பேரில் மகனின் வெள்ளைப்பெண் ச(சு)கவாசத்தினை விடும்படி வற்புறுத்துவதாகவும் இது மகனுக்குப் பிடிக்காமற் போக, இப்போது தந்தையும் மகனும் ஒரு மாதமாகப் பேசிக் கொள்வதிலை என்று தகவல் என்றும், ஆனால், அப்துல் தங்கள் சேரிக்கும் அவரது பதவிக்கும் கொஞ்சம் கௌரவ இடைவெளி இருப்பதால், கறுப்பின எழுதுவிளைஞர், காப்புறுதிமுகவர் வாழும் மத்தியகுடிப்பிரதேசத்திற்கு இடம் பெயர்ந்துவிட்டதால், தொடர்பு துண்டிக்கப்பட்டு மேலதிக விபரம் தனக்குத் தெரியாது என்றும் ஜேம்ஸ் சொல்கிறார். என்ன......? எங்கள் ஊர்ப்பிரமுகரின் செயல் மீது அன்று நான் உங்களுக்குச் சொல்லவந்த குற்றச்சாட்டின் மீதான என் விளக்கமோ? பெரிதாய் ஒன்றுமில்லை. அந்தப்பிரமுகர் சாதாரணமாக மகனுக்கு, அந்தக் குறிப்பிட்ட மேல்சாதியென்று சொல்லப்பட்ட குடும்பத்திற் சம்பந்தம் பண்ணியிருந்தால், எனக்கு ஆட்சேபணை இல்லை ("உன், இல்லை , இருக்கிறது பற்றி யார் கேட்டார்?" என்கிறீர்களா? <புன்னகை>). ஆனால், எனக்கும் அவருக்கும் ஊரிலுள்ள தெருநாய்கள் உட்பட்ட எல்லாச் சீவராசிகளுக்கும் தெரிந்து, எனக்கு மூன்று வருடங்கள் முன் பல்கலைக்கழகத்திற் படித்த அவர் பொறியியற்பீட மாணவ மகனுக்கு, அவர் தங்களிலும் 'கொஞ்சம் இளக்காரமான சாதி' என்று நினைக்கிற சமூகத்தைச் சேர்ந்த ஒரு விவசாயபீடக் காதலி இருந்ததுதான், எனக்கு எங்கோ தவறு இருக்கிறது என்று பட்டது. உங்களுக்கும் சொன்னேன். அன்றைக்கு இருந்ததுபோல் என் இந்தக் காரணவிளக்கம் கேட்க, உங்களுக்கு இன்றைக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை எனத் தெரிகிறது.

ஜேம்ஸைப் பற்றிக் கொஞ்சம் தெரிய ஆசையோ....? அதுதானே பார்த்தேன், 'எங்கையடா, எங்கட, ஊர்விடுப்புக் கேக்கிற கல் தோண்டி மண் தோண்டாக் காலத் தமிழ்க்கலாச்சாரம் ஊர் விடுத்துப் போனதாலை விட்டுப்போயிட்டுதோ எண்டு.' இருபத்தைந்து வயது ஜேம்ஸ் அப்துலிலும் வயதாலும், அதானாலோ என்னவோ, ஈடுபாடுகளிலும் வித்தியாசம். நேற்றைக்குக்கூட, நான் மின்வலையில், 'தமிழ்ச்சினிமாப்பக்கங்களில்' ஏதோ ஒன்றில் தாயின் மணிக்கொடியின்கீழ் இரத்தம் சிந்தியதாற் பெற்ற இந்தியநாட்டுப் பொன்விழாச் சுதந்திரதினத்திற்கு வாழ்த்திப் போட்டிருந்த ரம்பாவின் சுதந்தர மேல்மலைநாட்டைச் சுதந்திரமாக மேய்ந்துகொண்டிந்தபோது (ஹி... ஹி..ஹி. வயது அப்படி என்று விட்டுவிடுங்களேன் <பின்/இடப்பக்கவாட்டுத்தலை சொறிதல்>), எட்டிப்பார்த்தவன், "ச்உய்ய்ய்....இய்.. உய்ய்ய்..இய்!" என்று சீட்டியடித்து, "உப்...பூஊ.." என்று காற்று கன்னம் உப்ப ஊதி வெளியிட்டிச் சுருக்கி, "மனிதா ("Hey man!" என்று உணர்க நண்பரே), உங்கள் இந்தியப்பெண்கள் (அவனுக்குத் தெற்காசியமுகங்கள் எல்லாம் இந்தியர்கள்தான்; ஸ்ரீலங்கா என்பது, தனக்குச் சரியாக வாயிற் பெயர் நுழையாக் கிழக்கு ஐரோப்பியநாடொன்றின் மொச்சைச்சோளம் ஆறுமாதம் ஊறப்போட்டுத் தயாரித்த குடிவகை என்ற அவனின் அபிப்பிராயம் எனக்கு அவ்வளவு திருப்தி தராததால், மேற்கொண்டு பங்களாதேசம், பாக்கிஸ்தான்... விளக்கங்கள் அவனுக்குக் கொடுக்காமல், தெற்காசியா என்றால் அவனளவில் இந்தியா என்றே எனக்கும் என்று விட்டுவிட்டேன்) அபூர்வ அள்ளிக் கொண்டுபோகும் அழகு. @%$#*)_+_+)^%*&& (பண்பட்ட தமிழ்மண் பண்பாட்டிற்கு இன்னும் அதிர்ச்சி தரக்கூடிய ஆண்-பெண் உடலுறுப்புகள், உடலுறவுகள் சம்பந்தப்பட்ட வர்ணனைகள் தொகுப்பாசிரியருக்குத் தொல்லை இல்லாமல் என்னாலேயே இலங்கைப்பத்திரிகைச்செய்திகள் கதிக்கு உள்ளாக்கப்படுவதை மன்னிப்பீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் மன வக்கிரத்திற்கேற்ப விரும்பியதை நிரப்பிச் சூழ்(ல்)நிலையைச் சிருட்டித்துக் கொள்ளுக. வாசகனையும் தன் சிந்தனைத் தளத்திற்குக் கொண்டுவந்து, கதாசிரியனும் வாசகனும் கூட்டுமுயற்சியாகப் படைக்கும் தரமான இலக்கியத்தில் ஓர் எல்லைக்கல்லாக என் இந்தக்கதையை தோண்டிப் புதைத்துவைக்க எனக்கும் ஒரு வாய்ப்பு நீங்கள் தந்ததாக இருக்கும்). ஒரு நாளைக்கு - பொறுத்திருந்துபாரேன்- காசு கையிற் சேர்ந்தபிறகு, ரினிடாட்டுக்கோ டுபாக்கோவுக்கோ போய் அங்கு ஓர் அழகு இந்தியவம்சாவழி #^%*&^ (மீள உங்களுக்கு ஓர் இலக்கியபடைப்பாக்க வாய்ப்பு) உடன் மிகுதி வாழ்க்கையைக் கழிக்கிறேனா, இல்லையா என்று?" என்றான். இந்த முற்றுப்புள்ளி தொட நேரத்துக்காய் மூன்று நிமிடம் கரம் நீண்ட மனோகரா, பராசக்தி வசனத்திற்கு அர்த்தம், அவன் இதே சொற்தொடர்க் குவியலை, இந்தியாவிற்குச் சீனாவையும் (தூரகிழக்கு என்று அல்ல) ரினிடாட்டுக்கு கனடிய பிரிட்டிஷ் கொலம்பியாவையும் இடப்பிரதியீடு செய்து, வாங் லீ இற்கு வசதிப்பட்ட இன்றைக்கோ, நாளைக்கோ, அல்லது வேறு என்றைக்கோ எடுத்துச் சொல்ல,வாங் லீ வழமைபோல பயந்து ஆறடி தூரத்தில் நின்று அரையும் குறையும் புரிந்து, மேலே இந்தப்பந்தியில் நான் சிரித்ததுபோல ஓர் அசட்டுச் சிரிப்பு அள்ளித் தெளித்துவிட்டு, மீள தனது, ஷங்காய் பங்குச்சந்தை முதலீடு கடைசி ஒரு நிமிடத்தில் எவ்வளவு மாறியிருக்கிறது என்று வையவிரிவுவலையிற் பார்க்கப்போய்விடுவான் (காசு முதல்; கல்வி தொடரும்; பிறகு அமெரிக்கா வந்து இறங்க விமானநிலையத்திற் கண்டுபிடித்த கர்த்தர்; பிறகு நேரமிருந்தால், சீனாவில் பேசமறுத்த தியனான்மென் படுகொலையில் அமெரிக்க அரசாங்கம் எவ்வளவு சீன மக்கள் பேசுச்சுதந்திரத்திற்காகப் போராடுகிறது என்பது பற்றி வேறு சீன மாணவர்கள், விஜயம்செய் சீன ஆய்வாளர்கள் இல்லாத நேரத்திற் பேசுவேனாம்).

இவற்றை எல்லாம் விடுங்கள். எனக்கும் முன்னர் பின்னர் கதை எழுதியோ அளந்தோ பழக்கம் இல்லாததால், அச்சுக்குத் தொகுக்கும் கடைசி நாளுக்கு முதல் எதையாவது சொல்லவேண்டும் என்று உங்களுக்கு ஈடுபாடு (தேவை) அற்ற பெருக்கிய அப்துல், கூட்டிய ஜேம்ஸ் பற்றியெல்லாம் சொல்லிக் கொண்டு இருக்கிறேன். அவர்களின் கூட்டித்தள்ளலோடு அவர்களையும் கூட்டித்தள்ளி விட்டு, நான் சும்மா உதாரணத்திற்க்குச் சொன்ன, 'கனடா எல்லையிற் கடவுட்சீட்டுக் கிழித்தலும் கத்திரிக்கோல் கொண்டுபோகமறுப்பும்', 'இரகுநாதன் ஆசிரியரின் கற்பிப்பும் கிழங்கு கிளறலும்', 'ஊர்ப்பிரமுகரின் மகனின் தாலிகட்டுகை' எல்லாவற்றிலும் மிக அவதானமாக இருந்ததை உங்கள் முகம் அடிக்கடி ஆங்காங்கே என் பேச்சிடையே எடுத்துச் சொன்னதால், எங்கே என்னைத் தமிழ் இனக்கோடரிக்காம்பு, கீழ்/மேல்சாதிவெறியன் என்று என்று எண்ணி விடுவீர்களோ என்று ஒரு பயம். இப்படித்தான்,அரசமரம் நிழலுக்கு வளர்க்க, புத்தர் சிலையாய் வந்தமர்வதாய், பக்தியால் பிள்ளையார் ஊர்வலம் போக, ஹிந்து-முஸ்லீம் கலவரம் வருகிறதுபோல, வழமையாக, நான் ஏதும் யதார்த்தமாய்ச் சொல்ல, சனம் ஏதும் தப்பார்த்தமாய் விளங்கிக் கொள்கிறது. என் சொல்கிற தோரணை சரியில்லையென்று நினைக்கிறேன். அதனால், இங்கே என் பக்க விளக்க....

....அட, நீங்கள் நித்திரையோ? குழப்பவிருப்பமில்லை. சொல்லாமற் கொள்ளாமற்போகிறது சரியில்லை என்பதால், எழும்பினால், வாசிக்க மட்டும் இந்தக்கடைசிக் குறிப்பு:

'அன்பு பெயரறியா முகந்தெளிவிலா நண்பருக்கு, இதுவரை இந்தவரி வரை வந்திருந்தால் நன்றி. பிறகொரு முறை -வாய்ப்பிருந்தால்-, வேறு ஒரு சஞ்சிகையிற் சந்திப்போம். அப்போது, உங்களை நித்திரையில் ஆழ்த்தாத, ஈடுபாடு தருகிறமாதிரி எழுத புலம்பெயர்ந்தபுலம்பல் கொஞ்சம் தேட அவகாசம் அதற்குள் அகப்படுமென்று நினைக்கிறேன்.
நட்புடன்,
-/சுகுணன்.'

'97~’98

3 பின்னுதை:

Blogger ஈழநாதன்(Eelanathan) said...

பழசு சரி,படம் சரி,புதுசு????

9:10 PM  
Blogger சன்னாசி said...

//கறுப்பு எடி மெர்பி ஒரு படத்தில் தீபெத்திய சிறுவனைக் காப்பாற்றியதைப் பற்றியும்//
The Golden Child. மலையாளத் தழுவல்: மோகன்லால் நடித்த 'அசோகன்'

1:33 AM  
Blogger -/பெயரிலி. said...

/புதுசு????/
ஹி ஹி ஹி! வருது

/The Golden Child/
அதுதான்

3:14 PM  

Post a Comment

<< Home